கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 15.11.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
துவாபர யுகம் தொடர்ச்சி
===========================
மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரப் பெருமை
============================================
அய்யோ மறையோன் அன்று சபிபத்தபடி
சையோ இடையர் தம்பதியில் போகறியேன்
தங்கை வயிற்றில் செனித்தபிள்ளை யானதுண்டால்
பங்கம்வரு மென்றனக்குப் பதறுதடா என்னுடம்பு
என்று மனங்கருகி இயலழிந்த கஞ்சனுந்தான்
அன்றுஒரு தூதனையும் அனுப்பினன்கா ணம்மானை
வாராய்நீ தூதா மற்றோ ரறியாமல்
பாராய்நீ தூதா அயோதைப் பதியேகி
என்றுஅந்தத் தூதனையும் ஏகவிட்டான் கஞ்சனுமே
நன்றுநன்று என்று நடந்தானே தூதனுந்தான்
.
விளக்கம்
=========
அய்யகோ அன்று நம்மைப் பிரம்மதேவன் சாபமிட்ட காரணத்தால் யாதவர்கள் வாழுகின்ற ஆயர்ப்பாடிக்குள் நுழைய வழியற்று வாடுகிறேன், ஒரு வேளை ஆயர்ப்பாடியில் வளருகின்ற குழந்தை என் தங்கை தெய்வகியின் வயிற்றில் தரித்துப் பிறந்ததாக இருந்தால் என்னுடைய இறப்பு நிச்சயமாகி விடுமே என்று உடல் நடுங்கி, உருமாறி வேதனைத்தீயால் மனம் வெந்து மறுகணம் என்ன செய்வதென யோசிக்கச் செயலிழந்த நிலையில் தன்னுடைய ஏவலன் ஒருவனை அழைத்து ஏவலா நீ இப்போது என் தூதுவனாக யாருக்கும் தெரியாமல் ஆயர்ப் பாடிக்குச் சென்று யசோதை என்கிற பெண்ணின் வீட்டில் வளரும் குழந்தையை உற்று நோக்கி வா என்று கம்சன் கட்டளையிட்டான். உடனே நன்று மன்னா என்று தூதுவன் ஆயர்ப்பாடி நோக்கி விரைவாக நடந்தான்.
.
.
அகிலம்
=======
தூதன் மிகநடந்து தோகைஅயோ தைமனையில்
புகுந்தந்தப் பிள்ளை பொன்தொட்டிலி லேகிடக்கக்
கண்டுஅந்தத் தூதன் கஞ்சனுக்கு நஞ்செனவே
விண்டு பறையாமல் விரைவாகப் போயினனே
.
விளக்கம்
==========
வேந்தனின் உரையேற்று விரைந்து சென்ற தூதுவனோ, யாருக்கும் தெரியாமல் ஆயர்ப்பாடிக்குள் புகுந்து, யசோதையின் வீட்டிற்குள் நுழைந்தான். ஆங்கே நந்தகோபனின்ன மகனாக நாராயணத் தேகனாக நளினமிகு குழந்தையொன்று தங்கத் தொட்டிலில் அறிதுயில் புரிவதைக் கண்டான்.
.
ஆகா! இக்குழந்தை நம்முடைய மன்னனை மாய்க்கப் பிறந்த மாயக்குழந்தை என்பதை உணர்ந்தான். உற்று உற்றுப் பார்த்தான். வேறு விடை அவனுக்குத் தென்படவேயில்லை. எனவே, இந்தக் குழந்தை கம்சனின் வம்சத்திற்கு வாய்த்த நஞ்சு என்ற எண்ணத்தோடு யாருடைய பார்வையிலும் பட்டுவிடாமல் எவரிடமும் எதுவும் சொல்லாமல் மௌனமாக மதுராவை நோக்கி விரைந்தான்.
.
.
அகிலம்
=======
போயந்தத் தூதன் பொறையுள்ள கஞ்சனுக்கு
வாயயர்ந்து சிந்தை மறுகியே சொல்லலுற்றான்
காமனோ சீவகனோ கண்ணனோ சந்திரனோ
மாமதனோ சூரியனோ மறையவனோ இறையவனோ
நாமத் திறவானோ நாரா யணன்தானோ
சோமத் திருவுளமோ தெய்வேந் திரன்தானோ
ஈசனோ வாசவனோ இந்திரனோ சந்திரனோ
மாயனோ வுன்னை வதைக்கவந்த மாற்றானோ
ஆரோ எனக்கு அளவிடவுங் கூடுதில்லை
பேரோ அயோதைப் புதல்வனெனக் காணுதில்லை
தெய்வகியாள் தேகத் திருச்சுவடு தோணுகொஞ்சம்
மெய்யதிப னான விட்டிணுபோல் முச்சுவடு
என்றந்தக் கஞ்சனுக்கு இத்தூதன் சொல்லிடவே
அன்றவன் கேட்டு அயர்ந்திருந்தா னம்மானை
.
விளக்கம்
=========
கம்சனின் அரண்மனையை வந்தடைந்த தூதுவனோ, பொறாமையின் மொத்த உருவமான கம்சனிடம், நந்தகோபன் வீட்டில் தாம் கண்ட விந்தையான குழந்தையைப் பற்றித் தன் உள்ளுணர்வு உணர்த்திய உண்மைகளை உரைப்பதனால் தனக்கு என்ன நேரப்போகிறதோ எனப் பயந்து, சிந்தை மறுகி சொல்லுகிறான். மன்னா! அங்கு நான் கண்டது அதிசயிக்கத் தக்கதோர் ஆண் குழந்தை. அக்குழந்தையின் அங்க அமைப்புகளை உவமைகளால் கூட உரைத்திட முடியாது மன்னா என்றான். மன்னனோ சீறினான். இனியும் மீறினால் நம் தலை தப்பாது என உணர்ந்த தூதுவன் உண்மையைக் கூறினான்.
.
மன்னா ! ஆயர்பாடியில் அடியேன் கண்ட ஆண்குழந்தையைப் பார்க்கும்போது அழகோடு கூடிய, ஆணையும் பெண்ணையும் ஒருசேரும்படியாக, காமக் கிளர்ச்சி செய்து ஜனவிருத்திக்கு உபகாரம் செய்யும் மன்மதன் இவன்தானோ? என்றும், உலகத்து உயிரினங்களுக்கெல்லாம் உற்ற பலாபலனைக் கணக்கெடுத்து முத்தி அருளுகின்ற ஜீவன்முக்தன் இவன் தானோ? என்றும் பிரபஞ்ச உற்பத்திக்கு அச்சாகவும், அப்பிரபஞ்சத்தை இயக்குவோனுமாகிய திருமாலோ, அல்லது நீலவானத்து நின்ற மதியோ? என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது மன்னா.
.
அதுமட்டுமல்ல அரசே ! அக்குழந்தையின் அங்க லட்சணங்களை ஆராயும் போது இவன் விஷ்ணுவின் அவதாரமோ? பகலவனே இவன் தானோ? ஒரு வேளை பற்றற்ற முனிவனாகயிருப்பானோ? அல்லது கடவுளே மனிதனாகப் பிறந்து விட்டானோ? இவன் பெயர்களுக்குள் அடங்காப் பெரியானோ? நீர் நிலைகளையெல்லாம் படுக்கையாகக் கொண்ட பரந்தாமனோ? லோகநாயகியாகிய உமையவளுக்கு உடலில் சரிபாதியைக் கொடுத்தருளிய சோமநாதன் இவன் தானோ? தேவலோகத்தின் அதிபதியாகிய தேவராஜனோ? மூவரின் முதல்வனாகிய சிவபெருமானோ? கந்தர்வ குலத் தோன்றனோ? மாய்கைகளை மாய்க்க வந்த மாயவனோ? வேந்தே ! உம்மை வேரோடு பிடுங்க வந்துள்ள பகைவன் இவனாகத்தான் இருக்குமோ? எனபன போன்ற வினாக்களுக்கு விடை காண முடியவில்லை கொற்றவா.
.
அரசே ! அந்தக் குழந்தையை உற்று நோக்கும்போது யசோதையின் மகனெனத் தோன்றவில்லை. தங்களுடைய தங்கை தெய்வகியின் தேகச் சாயல் சற்று தெரிகிறது. அவனுடைய முன் பகுதியோ, வைகுண்டவாசனாகிய விஷ்ணுவைப் போல் தோற்றமளிக்கிறது என்று கம்சனிடம் தூதுவன் சொல்லி முடித்தான். அதைக் கேட்ட கம்சனோ எழுந்து நிற்க முடியாமல் அயர்ந்து அமர்ந்து விட்டான்.
.
.
அகிலம்
========
என்செய்வோ மென்று இருக்குமந்த நாளையிலே
முன்செறியும் பூத மூரிதனை யேவியவன்
கொல்லவென்று விட்டான் குழந்தைதனை யம்மானை
வல்ல பெலமுள்ள மாபூதம் பட்டபின்பு
பின்னுமே தானும் பிலஅரக்கரை யேவிக்
கொன்றுவா வென்றான் குழந்தைதனை யம்மானை
கொல்லவந்த பேரையெல்லாம் கொன்றதுகா ணக்குழந்தை
வெல்லவிட்டப் பேரிழந்து மெலிந்திருந்தான் கஞ்சனுமே
.
விளக்கம்
==========
நாள்கள் சில நகர்ந்தன. கம்சனோ, அந்தக் குழந்தையை கொல்வதற்கு என்ன உபாயம் என யோசித்தான். முடிவு, குழந்தையைக் கொல்ல கோபத்தில் கொடியவனான பூத அரக்கனை ஏவி விட்டான். விடிவு, அதிக பலமுள்ள அப்பூதம் அக்குழந்தையால் அழிக்கப்பட்டது.
.
மீண்டும் பல அரக்கர்களை கம்சன் அழைத்தான். அக்குழந்தையை அழித்து வாருங்கள் என்று ஆணையிட்டான். குழந்தையோ கம்சனின் கட்டளையை ஏற்று தன்னைக் கொல்ல வந்த கொடியவர்களையெல்லாம் கொன்று, கொன்று குவித்தது. குழந்தையைக் கொன்று வென்று வரச் சென்றவர்கள் யாருமே மிஞ்சவில்லை. கம்சனோ, சஞ்சலத்தால் மனம் அஞ்சி எஞ்சுவோமா? நாம் என எண்ணி ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தான்.
.
.
தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚


