கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 18.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
--------------
நாரணரு மெச்சி நன்றா யகமகிழ்ந்து
காரணம தாகக் களிகூர்ந் தினிதாக
வைகுண்ட நாதனுக்கும் வாழ்மடந்தை மாதருக்கும்
கைகண்ட நல்ல கலியாண முமுகித்து
மணிவை குண்டருக்கு மாமகுட முஞ்சூட்டி
அணியா பரணம் அநேக மெடுத்தணிந்து
தங்கக் குல்லாவம் தளிருநிறச் சட்டையிட்டுப்
பெண்கள் குரவையிடப் பொன்மா லையுஞ்சூடிப்
.
விளக்கம்
----------------
நாராயணராகிய வைகுண்ட மாமணி காளி தேவியை புகழ்ந்து இனிது மகிழ்ந்தார். இவ்வாறாக வைகுண்ட மாமணிக்கும் அங்கே வாழ்ந்து வந்த ஏழு தெய்வக் கன்னிப் பெண்களுக்கும் நல்ல திருமணம் முடித்தும் கிரீடம் சூட்டி வாழ்ந்து வந்தபோது அவரைப் பொன்னம்பதியில் அமர்ந்து ஆட்சி புரிய அழைத்துச் செல்ல வேண்டி பொன்னாலாகிய ஆபரணங்கள் பல எடுத்து அணிவித்து தங்கத்தாலாகிய குல்லாவும், தளிர் போன்ற மென்மையான பச்சை நிறச் சட்டையும் இட்டு, பெண்கள் குரவையிட பொன் மாலையும் சூட்டிக் கொண்டு வந்தனர்
.
.
அகிலம்
--------------
பன்னீர் பரிமளமும் பவளநிறப் பொட்டுமிட்டு
நன்னீர்க ளாடி நாரணக் கண்மணிக்கு
ஆலத்தி வன்னி ஆகாயத்தீ வெட்டமுடன்
கோல மடவார்கள் குக்குளித்து நீராடிப்
பட்டுப் பணிகள் பரிமளங்க ளும்புரிந்து
.
விளக்கம்
----------------
பன்னீர் தெளித்து பரிமளம் வீச பவள நிறத்தில் பொட்டு இட்டு, நல்ல நீரில் குளிப்பாட்டி, நாராயணருடைய குழந்தை வைகுண்டமாமணிக்கு ஆலத்தி காட்டி ஆகாயத் தீவெளிச்சமும் காட்டினர். கன்னியர் சந்தோசமாகக் குளித்து நீராடி பட்டும், தங்க ஆபரணங்களும் பரிமளங்களும் தங்களுக்கு அணிவித்து, திருமணம் முடிக்கும் பெண்ணைப் போன்று முறையாக ஒயிலாக வந்தனர்.
.
.
அகிலம்
-------------
கட்டு முறையாய்க் கன்னியர்கள் தாமொயிலாய்
தேவர்களு மூவர்களும் திசைவென்ற மன்னர்களும்
மூவர்களும் நல்ல முழித்தபல செந்துகளும்
நான்முகனும் வேத நல்ல மறையோரும்
வானுகமு மண்ணகமும் மன்னகமு மொன்றெனவே
எல்லோரும் நன்றாய் ஏக மகிழ்ச்சையுடன்
.
விளக்கம்
-----------------
தேவர்களும், மூவர்களும், எல்லா திசை வீர்ர்களையும் வென்ற சான்றோர்களும், ஆன்மீக விழிப்புற்ற சீவசெந்துகளும், நான்முகனும், வேதம் தெரிந்த பிரம்மனும், வானுலகமும், மண்ணுலகமும், ஆகிய எல்லா உலகமும் ஒரே உலகு போன்று இருந்த்தால் அங்கிருந்த எல்லாரும் நன்றாய் மன மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
.
.
அகிலம்
---------------
நல்லோர்க ளெல்லாம் நாரணனார் பொற்பதிக்குள்
தெருப்பவிசு வந்து சிங்கார பொற்பதிக்குள்
மருப்புகழுஞ் சிங்கா சனத்தில் மகிழ்ந்திருக்க
போவோ மெனவே பெரியவை குண்டரையும்
கோவேங் கிரிபோல் அருவைரத மீதேற்றி
.
விளக்கம்
----------------
அங்கிருந்த நல்லவர்கள் எல்லாரும் வைகுண்டராகிய தாங்கள் நாரயணருடைய பொன்பதித் தெருவில் மகிழ்ச்சியாகச் சென்று அந்தச் சிங்காரப் பொன்பதிக்குள் வாசனை பொருந்திய சிங்காசனத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்க வேண்டும் வாருங்கள் போவோம் என்று கூறி மேன்மையான வைகுண்டமாமணியையும் கயிலை மலையில் அமர்ந்திருக்கும் சிவனையும், இரத்தின் மீது ஏற்றினர்.
.
.
அகிலம்
--------------
தேவாதி யெல்லாம் சிவசிவா போற்றியெனச்
சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுக் கூறிவரத்
தெய்வ மடவார்கள் திருக்குரவை பாடிவர
மெய்வதிந்த சான்றோர் மொகுமொகென வேகூடிக்
கட்டியங்கள் கூறிக் கனகப்பொடி யுந்தூவிக்
கெட்டிகெட்டி யென்றுக் கீர்த்தனங்கள் பாடிவர
.
விளக்கம்
-----------------
தேவாதிகள் உயர்வான பாட்டைப் பாடிவரவும், சீவசெந்துகள் எல்லாம் சிவசிவா என்று போற்றி வரவும், தெய்வ பெண்டிர் எல்லாரும் குரவை பாடி வரவும், உண்மையான சான்றோர்கள் எல்லாரும் திரள்திரளாக அங்கே கூடி வந்தனர். பிறகு வைகுண்ட மாமணிக்கு வணக்கங்கள் கூறியும் வாசைனையான பொடிகளை வழிகளில் எல்லாம் தூவியும் திடீர் திடீர் என்று அழகான கீர்த்தனங்களைப் பாடியும் வந்தனர்.
.
.
அகிலம்
--------------
வாரி சங்கூத வாயு மலர்தூவ
நாரி வருணன் நல்லந்தி மலர்தூவ
இந்தக் கொலுவாய் எழுந்துரத மீதேறி
சிந்தர் மகிழச் சிவமுந் திருமாலும்
கூட ரதமீதில் கூண்டங் கினிதிருந்து
.
விளக்கம்
----------------
கடல் சங்கு ஊதியது. காற்று மலர் தூவியது. வருணனின் தேவி நல்ல அந்தி மலர் தூவினாள். இப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் வைகுண்டமாமணி எழுந்து இரதம் மீது ஏறினார். சித்தர்கள் புகழ்ந்தும் கண்டும் மகிழுகின்ற சிவனும், திருமாலும், அந்த இரத்தின் மீது வைகுண்ட மாமணியோடு சேர்ந்து இனிது இருந்தனர்.
.
.
அகிலம்
--------------
லாடர் மகிழ நல்ல தெருப்பவிசு
நேராக வந்து நெடியோன் பதிதவிலே
சீராய்ப் பதிமுடுகச் செகலதுவே தானீங்கி
அமைத்து அலைகொண்டிருந்த அழகுபதி கோபுரமும்
சமைத்து இருந்த தங்கமணி மண்டபமும்
.
விளக்கம்
----------------
ஆக்ஞை நிலையில் அமர்ந்திருக்கும் நாராயணராகிய வைகுண்டமாமணி மகிழ, தெருவுலா வந்து நேராக நெடியோனாகிய நாராயணருடைய பதி நோக்கிச் சென்றனர். பதியை நெருங்க நெருங்க ஒரே சீராகக் கடல் நீர் நீங்கி நீங்கி இடம் அமைத்துக் கொடுத்துக் கொண்டே வந்தது. வைகுண்டரைக் கண்டு கடல் நீங்க நீங்க அழகான பொன்னம்பதி கோபுரமும், அங்கிருந்த தங்கமணி மண்டபமும் தோன்றின.
.
.
அகிலம்
-------------
மண்டபமும் மேடைகளும் மணிவீதி பொற்றெருவும்
குண்டரைக் கண்டந்தக் கொடிமரங்க ளுந்தோன்ற
வாரியது நீங்கி வைத்தலக்கில் போயிடவே
சாதிவை குண்டர் சாபம் நிறைவேற்றிச்
சாபம் நிறைவேற்றித் தானாய் நினைத்ததெல்லாம்
யாம முறையாய் அங்கே குதித்திடுமாம்
.
விளக்கம்
----------------
மேடைகளும், மணி வீதியும், பொன் தெருவும், கொடி மரங்களும் வைகுண்ட மாமணியைக் கண்டதும் வெளியே தோன்றின. இவ்வாறு கடல் நீங்கி வைகுண்டமாமணி குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றிடவே, வைகுண்டராக இருந்தபோது இட்ட சாபம் முடிந்த காரணத்தால் வைகுண்டரை நினைத்த பொருள்கள் எல்லாம் தாம் தாமாகச் சுயரூபமாகி முன் சாப முறை நீங்க அங்கே தோன்றி வந்து வைகுண்டமாமணியை வணங்கின.
.
.
அகிலம்
-------------
என்னென்ன யாமம் ஏலமே யிட்டதெல்லாம்
பொன்னம் பதிதான் புரந்தாள வந்ததினால்
நிறைவேறி நானும் நிச்சித்த மெய்வரம்போல்
குறைபடிகள் வராமல் குணமாக வாழுமென்றார்
.
விளக்கம்
-----------------
வைகுண்டமாமணி இப்போது தருமபதியில் எல்லாரையும் காத்து அரசாள வந்ததால் உங்களுக்கு முன்பு கூறிய சாபம் எல்லாம் முடிவடைந்து வந்து விட்டீர்கள். இனி நான் கூறப் போகின்ற உயர்ந்த உபதேசப்டி எந்த குறையும் வராவண்ணம் நல்ல குணத்துடன் வாழ்ந்து வாருங்கள் என்றார்.
.
.
தொடரும்.... அய்யா உண்டு. #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩