கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 16.11.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
துவாபர யுகம் தொடர்ச்சி
===========================
ஆயர்குடிக்கு அபயமளித்த கண்ணன்.
======================================
ஆயர் குடியில் அரியோன் மிகவளர்ந்து
மாயன் விளையாடி மடந்தையோடுங் கூடி
வென்றுபால் வெண்ணெய் மிகப்பொசித்துக் காடதிலே
கன்றாவு மேய்த்துக் காளியன் தனைவதைத்துக்
கஞ்சனுட ஏவலினால் காட்டில்வந்த சூரரையும்
துஞ்சிவிடக் கொன்று தொலைத்தனர்கா ணம்மானை
ஆயருக்கு வந்த ஆபத்து அத்தனையும்
போயகற்றி நந்தன் பிள்ளையெனவே வளர்ந்தார்
.
விளக்கம்
==========
இந்நிலையில் காண்போரின் கவனத்தைக் கவரும்வண்ணம் வளருகிறார் கண்ணபிரான். அவருடைய கருமேகத் திருமேனி, தாமரை போன்ற நீண்ட கண்கள், கோவைக் கனியைப் பழிக்கும் உதடுகள், வில் நாண் போல் வளைந்த புருவங்கள், பூரணச் சந்திரனைப் போட்டிக்கு அழைக்கும் திருமுகம், நாகத்தையொத்த மிருதுவான கைகள், சங்குபோல் நீண்ட கழுத்து பூப்போன்ற திருவடிகள் அத்தனைக்கும் மெருகூட்ட யசோதை அணிவித்திருக்கும் நவரத்தின ஆபரண அணிகலன்கள்.
.
ஆகா... இந்த மாயக் கண்ணனிடம் மயங்காத மனமே இல்லை. கண்ணாரக் கண்டு களிக்க எண்ணாத பெண்களுமில்லை. அக்குழந்தையின் திவ்விய லீலைகளை நேரில் கண்டு களிப்பதையே பேறு என நினைத்து பெருமிதம் கொண்டனர் அந்தக் கோபியர்கள்.
.
ஆயர்குடியினர் அனைவரின் உள்ளத்தைக் கவர்ந்த கண்ணன், அவர்களின் வீடுதோறும் சென்று அங்கிருக்கும் வெண்ணெய், தயிர் முதலியவைகளையும் களவாடித் தன் நண்பர்களுடன் பகிர்ந்து உண்டான். வீடுகளில் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கிள்ளி எழுப்பிவிடுவான். தயிர்ப் பானைகளை உடைத்து விடுவான். கன்றுகளை அவிழ்த்து பசுக்களிடம் விட்டு விடுவான். இப்படியே கண்ணனின் குறும்பைப் பொறுக்க முடியாமல் ஊரார் யசோதையிடம் புகார் கூறும்போது யசோதை அடிப்பாள். அதையும் நமட்டுச் சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் கண்ணன் ஒரு நாள் தெருவில் கிடந்த மண்ணை வாரி தின்று விட்டான்.
.
கூடி விளையாடிய குழந்தைகளெல்லாம் கண்ணன் மண்ணை வாரித் தின்னுகிறான் என்று யசோதையிடம் தெரிவித்தனர். யசோதையோ குழந்தைக்கு இதனால் தீங்கு ஏற்பட்டு விடலாகாதே எனப் பயந்து கண்ணனை மிரட்டுகிறாள். கண்ணனோ, அம்மா இவர்களெல்லாம் பொய் சொல்லுகிறார்கள், நான் மண்ணைத் தின்னவே இல்லை, வேண்டுமானால் என் வாயைப் பாரேன் என்று யசோதையிடம் கண்ணன் தன் வாயைத் திறந்து காட்டுகிறான்.
.
யசோதையோ, கண்ணனின் வாயினுள் உலகம் முழுவதையும், அந்த உலகத்துள் தம்மையும், கண்ணனையும் கண்டாள். வியந்தாள், விழி பிதுங்கினாள். விடை வேண்டி நின்றாள். முடிவில் பரமனே இக்கோலத்தில் தமக்கு மகனாக வந்திருக்கிறான் எனத் தெளிந்தாள். தான் வளர்க்கும் கண்ணனின் காலடியில் என்னைப் பிறப்பித்த பரம்பொருளே எனப் பணிந்தாள்.
.
கண்ணனோ, இவர்கள் நம்மை உள்ளபடியே உணர்ந்து அறிந்துகொண்டார்களேயானால் இந்த யுகக் காண்டத்தை நிறைவேற்ற வேண்டிய தம் விருப்பமான கைங்கரியங்கள் நிறைவேறத் தடை ஏற்பட்டுவிடும் என்றெண்ணி, யசோதைக்கு அப்போது ஏற்பட்ட ஞான உணர்வைப் போக்கித் தன்னுடைய மாயையால் பழையபடி தன்னைச் சாதாரணக் குழந்தையாகவே நினைப்பதற்கான புத்தியை அருளினான். எனவே, யசோதைக்கு அப்போது அங்கே நிகழ்ந்த சம்பவங்கள் மறந்து போயின.
.
இப்படி அவ்வப்போது எண்ணற்ற அற்புதங்களைப் புரிந்து கொண்டிருக்கும் கண்ணபிரானுக்கு இப்போது ஆறு வயது. ஒரு நாள் யமுனா நதிக்கரையில் கன்றுகளை மேய விட்டு விட்டு ஏனைய சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். வெயிலின் தாக்கத்தால் கன்றுகள் முதலான சிறுவர்களுக்கெல்லாம் தாகம் ஏற்பட்டு விட்டது. எனவே, அருகிலிருந்த பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை அருந்தச் சென்றனர்.
.
அந்தப் பள்ளத்தின் அருகிலுள்ள பெரியதோர் குகைக்குள் ஆயிரம் தலையுடைய காளியம்பாம்பு தன் மனைவி மக்களோடு நீண்ட நாள்களாக வசித்து வந்தது. ஆகவே அந்தப் பள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் நீர் குடிக்கப் பயனற்றதாகிவிட்டது. அது மட்டுமல்ல ஆகாய மார்க்கமாக அப்பகுதியில் பறந்து செல்லும் பறவைகளுக்கும் கூட அதன் விஷக்காற்று பட்டு அந்த நீர்நிலையில் இறந்து விழுவது வழக்கம்.
.
இந்நிலையை உணராக சிறுவர்களும், கன்றுகளும், அந்த தண்ணீரைக் குடித்து அங்கேயே மாண்டு கிடந்தனர். இதைக் கண்ட கண்ணன், தன் கடைக்கண் பார்வையால் எல்லாவற்றையும் உயிர்பெறச் செய்தான். இன்னும் இந்த பாம்பினால் யாருக்கும் உயிரழிவு ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி, அருகிலிருந்த கடம்ப மரத்தில் ஏறி நீர்நிலையினை நோக்கி குதித்தான். அதனால் நீர்நிலை அலம்பி பாம்பு வசித்த குகைக்குள் நீர் புகுந்தது.
.
குகைக்குள்ளிருந்த பாம்பு கோபத்தோடு வெளியே வந்து, கண்ணனின் உடலைச் சுற்றிக் கொண்டு இறுக்கி நெரித்தது. இதைக் கண்ட சிறுவர்களெல்லாம் செய்வதறியாமல் திகைத்தனர். கண்ணீர் விட்டுக் கதறினர். துக்கம் தாங்காமல் எல்லாச் சிறுவர்களும் மூர்ச்சையடைந்து விழுந்தனர்.
.
அந்நேரம் ஆயர்குடியில் சிற்சில ஆபத்துக் குறிகள் தென்பட்டன. அதையுணர்ந்த ஆயர்கள் கன்று மேய்க்கச் சென்ற சிறுவர்களுக்கு ஏதோ ஆபத்து வந்திருக்கக்கூடும் என்றெண்ணி கோகுலவாசிகள் அனைவரும் ஆங்காங்கே தேடிச்சென்று இறுதியில் சிறுவர்கள் மங்கிக்கிடக்கும் நீர் நிலையின் அருகில் வந்தனர். கண்ணன் காளியம் என்னும் காம்பால் கட்டுண்டுக் கிடப்பதையும் ஏனய சிறுவர்கள் மயங்கிக் கிடப்பதையும் பார்த்துப் பரிதவித்தனர்.
.
யசோதையோ, என் அருமை மகனை இழந்து இனி நான் எதற்காக வாழவேண்டுமென்று சொல்லிக்கொண்டே அந்த நீர் நிலையில் விழுந்து தன் உயிரை மாய்க்க முயலுகிறாள். அப்போது அந்த மாயக் கண்ணன் பாம்பின் பிடியில் இருந்து கொண்டே பெரியதோர் உருவத்தை எடுக்கிறான்.
.
காளியம் என்ற பாம்போ கண்ணனை வளைத்து இறுக்க முடியாமல் விட்டு விட்டு தனது ஆயிரம் படங்களையும் எடுத்துக் கொண்டு கண்ணனைச் சீறுகிறது. மாயக்கண்ணனோ அந்தப் பாம்பின் படங்களின் மேல் ஏறி நின்று ஆனந்தக் கூத்தாடுகிறான். பாம்போ, கண்ணனின் பாரத்தைத் தாங்க முடியாமல் தன் ஆயிரம் வாய்களிலிருந்தும் இரத்தத்தையும், விஷத்தையும் கக்கி மடியும் தருணத்தில், அதிலிருந்து இறங்கிய கண்ணபிரான் அந்தப் பாம்பின் விஷத்தன்மையை அகற்றி அதை இரமணகம் என்னும் தீவுக்குப் போகுமாறு பணித்தார். அன்று முதல் அந்த நீர் நிலை புனிதமாக புவனத்திற்குப் பயனானது.
.
இவ்வண்ணமாகக் கண்ணன் எல்லாருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டு வளர்ந்து வரும்போது, அந்த கண்ணனைக் கொல்வதற்காகக் பல்வேறு அரக்கர்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தான். கண்ணனோ, அந்த அரக்கர்கள் வந்த சுவடே தெரியாமல் அவர்களை எல்லாம் அழித்து ஆயர்களுக்கு வந்த ஆபத்து அனைத்தையும் தடுத்து, நந்தகோபனின் சொந்த மகன்போல் வளர்ந்து கொண்டிருந்தான்.
.
.
தொடரும்… அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008}


