ShareChat
click to see wallet page
search
#💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 29.11.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== சப்தகன்னியரும் சான்றோர் பிறப்பும் தொடர்ச்சி ========================= கேட்டுஸ்ரீ கிருஷ்ணரும் கிளிமொழியோ டேதுரைப்பார் ஒட்டி லிரந்துண்ண ஊர்வழியே தான்திரியும் ஆண்டிக்கே யல்லாது அரவணையி லேதுயிலும் காண்டீபனுக் கேவல் கருதோ மெனவுரைத்தீர் தோகையரே கங்கையினிச் சுருட்டுவ தைப்பார்ப்போம் ஆகட்டு மென்று அச்சுதருங் கோபமுற்று மேலோக மாயிருக்கும் வேதயேழு வுகத்தில் சாலோக மான சத்திபர லோகமதில் ஆருரூ மில்லாத ஆகாச சத்தியொன்றும் சீருரூப மான சிவலோக மானதிலே மெய்கொண்ட வானோர் வித்தொன்று ஆனதுவும் வைகுண்ட லோகமதில் வாய்த்ததர்மி யானதிலே தன்மியொரு வித்துத் தானெடுத்து வேதாவின் சென்மித் தெடுத்தார் சிவயிருஷி யொன்றதிலே தபோதனராய்ச் சண்டன் தன்னுகத்தில் வாழுவரில் சகோதரரா யொன்று தானெடுத்தா ரம்மானை சொர்க்கலோ கமதிலே ஸ்ரீராமர் தன்றனக்கு பக்குவங்க ளாகப் பணிவிடைகள் செய்வோரில் நல்லகுல மான நயனவித் தொன்றெடுத்து வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகமதில் புத்தியுள்ள நாதன் பின்யுகத்தை யாளுதற்கு சத்தியுள்ள வித்தொன்று தானெடுத்தா ரம்மானை இப்படியே மேலோகம் ஏழு லோகமதிலும் அப்படியே நல்ல ஆர்க்கமுள்ள வித்தேழு எடுத்துத் திருமால் இருதயத்தி லேயடக்கிக் கொடுத்துநின்ற தாதாவைக் குவித்துப் பதம்போற்றிக் கன்னியுட கற்பதுக்குக் கருத்தேது செய்வோமென்று உன்னி மனதில் ஒருமித்துப் பார்த்தனரே பார்த்தனரே கற்பதுக்குப் பக்குவம்வே றில்லையென்று தீத்தழலாய்ப் போகத் திருவுருவங் கொண்டனரே . விளக்கம் ---------------- சப்தமாதர்களின் சஞ்சலமற்ற இந்த உறுதிப்பாடு, அதாவது தெய்வ வழிபாடு, மகாவிஷ்ணுவின் மனதைக் கவர்ந்தது. மகத்துவமான இந்த மாதர்களின் மணிவயிற்றின் மூலமாக மாசற்ற மேலோக வாசிகளைப் பூலோகத்தில் பிறக்கச் செய்வதென்றும் இந்த சப்தமாதர்களின் மூலமாக மண்ணகத்தில் பிறந்த சான்றோர்களே கலியுகத்தை முடிக்கவும், கட்டான தர்மயுகம் மலரவும் வகை செய்தார்கள் என்ற பெருமையை இந்த மங்கையர்களுக்கு அருள வேண்டும் என்றும் தம் மனதில் நிச்சயித்தார். . என்றாலும் அவ்வெண்ணத்தை அந்த நங்கையர்களிடம் காட்டிக்கொள்ளாமல், சொல்லி வைத்தாற்போல் ஏழுபேரும் ஒரே கருத்திற்கு உட்பட்டு உரைத்த அந்த உன்னதமான பாவையர்களைப் பார்த்து மகாவிஷ்ணு சொல்லுகிறார், அரம்பையர்களே, அன்றாடம் திருவோட்டில் இரந்து உண்ணுவதற்காக ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கும் ஆண்டியாகிய அரனுக்கே என்றென்றும் நாங்கள் பணிவிடை செய்வோமே அல்லாமல், பாம்பு மெத்தையிலே பவுசாகப் படுத்துறங்கும் பரந்தாமனுக்குக் கூட பணிவிடை செய்ய வேண்டுமென்று மனதாலும் நினைக்கமாட்டோம் என்று அச்சமின்றி என்னிடம் கூறிவிட்டீர்கள். ஆனால், இனிமேல் நீங்கள் கங்கையை எவ்வாறு திரட்டுகிறீர்கள் என்பதை நான் பார்க்கிறேன் என்று சப்தமாதர்களைப் பயமுறுத்தினார். சப்தமாதர்களோ தம் நாள் வழிக் கடமையைச் செய்ய கங்கையில் இறங்கினார்கள். . அவ்வேளை மகாவிஷ்ணு மேலோகம் எனப்படும் பரலோகம், சிவலோகம், வைகுண்டலோகம், சத்தியலோகம், எமலோகம், சொர்க்கலோகம், தெய்வலோகம் ஆகிய ஏழு லோகத்திலிருந்து, அந்தந்த லோகத்தில் அபரிமிதமான சக்திவாய்ந்தவர்களைத் தம் மன உபாயத்தால் வித்தாக்கி தன் எண்ணத்துள் ஆக்கியவாறு பரம்பிரம்மத்தை துதித்துக் கொண்டிருந்தார். . அப்போது தாம் உபாயமாக உள்ளடக்கி வைத்திருக்கும் ஏழுலோக வித்துக்களையும் இந்த மங்கையர்களின் மணிவயிற்றில் பிறக்கச் செய்ய வேண்டுமானால், அவர்களின் கற்புநிலை தம்மால் கவரப்படவேண்டுமே அதற்கு என்ன உபாயம் என்று யோசித்தார். . விடிவு, தாம் அயோக அமிழ்த கங்கையில் தீத்தழலாய் நிற்பதென மகாவிஷ்ணு திருவுள்ளமானார். . . அகிலம் ======== சான்றோர் பிறப்பு ================== பிரமா உபதேசம் பிறப்பு உருவேற்றி குரமாய் வருணன் குளிரத் தொளிந்திடவே காமத் தழலாய்க் கருமேனி யானதிலே வேமக் கனல்போல் விழிகொழுந் திட்டெரிய சாந்தணியுங் கன்னி தையல்தெய்வ மாமணிகள் கூந்தல் விரித்துக் கூபந் தனிலிறங்கி அரிஓம் எனவே ஆடிக் கரையேறி தரிதோம் மெனவே சலக்கரையை விட்டவர்கள் உயர வரவே உள்ளுதறத் துள்ளல்கொண்டு அயரக் கரங்கால் அங்கமெல்லாந் தொங்கலிட கிடுகிடெனத் தேகம் கிளிமொழிவாய் கொட்டிடவே திடுதிடென அக்கனியைத் திரைபோல் வளையலுற்றார் . விளக்கம்: ========== அயோக அமிழ்தகங்கையில் நீராடிக் கொண்டிருக்கும் ஏழு மாதர்கள் மூலமாக, விண்ணுலக வாசிகளையெல்லாம் மண்ணகத்தில் பிறப்பிப்பதற்குரிய ஏழுலோக வித்துக்களை தம் மனத்தகத்தில் கருவாக்கிய மகாவிஷ்ணு, அந்த ஏழு லோக வித்துக்களையும், அந்த ஏழு மாதர்களின் மணிவயிற்றில் உருவாக்கும் விதமாக, படைப்புத் தன்மையாகிய உற்பத்திப் பிரயோகத்தை உருவேற்றினார். . இதையுணர்ந்த வருண பகவானோ, அயோக அமிழ்த கங்கையில் இனம் புரியாத ஓர் குளிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார். அப்போது, கருந்திருமேனியரான மகாவிஷ்ணு வீரியமான அக்கினி குண்டமாக அயோக அமிழ்த கங்கையின் அருகிலே நின்றார். . அவ்வேளை கங்கையிலே நீராடிக்கொண்டிருந்த ஏழு மாதர்களையும் தாங்கொணாக் குளிர் ஆட்கொண்டது. பதறியடித்துக் கொண்டு ஏழு மாதர்களும் கங்கையை விட்டு கரையிலே ஏறினார்கள். . கரையேறிய பின்பு, இன்னும் அதிகமாகவே அவர்களைக் குளிர் நடுங்கவைத்தது. அகக்குளிர் அவர்கள் ஏழு பேரையும் ஆட்டிப் படைத்தது. அந்த கடுமையான குளிரைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கால்களும், கைகளும் தளர்ந்து போயின. உடலோ கிடு கிடு என்று ஆடியது. கிளி போன்று இனிமையாகப் பேசும் உதடுகளோ உதறியது. பற்களோ ஒன்றோடு ஒன்று உரசி ஓசை எழுப்பிது. இந்த இன்னலிலிருந்து எப்படி விடுபடுவது என்று ஏழு மாதர்களும் யோசித்தனர். மறுகணமே கங்கைக் கரையில் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கும் நெருப்புச் சுவாலையைக் கண்டார்கள். ஏழுபேரும் மின்னலெனப் பாய்ந்து சென்று அக்கினியைச் சுற்றித் திரைபோல் வளைந்து நின்று குளிர் காய்ந்தனர். . . அகிலம் ======= கன்னி யேழுபேரும் கனலை மிகஆவ உன்னித் திருமால் ஓங்கார மோகமதால் மங்கை யேழுபேர்க்கும் வயிற்றிலுற்ற தம்மானை சங்குவண்ண மாலோன் தற்சொரூபங் கொண்டனரே உடனே ஸ்திரீகள் உள்தரித்த பிள்ளைகளை தடமேலே பெற்றுச் சஞ்சலித்து மாமடவார் வெருவிப் பயந்து விழிமடவா ரெல்லோரும் கருவிதொண்ணூற் றாறும் கலங்கியே தானோடி துகிலை யெடுத்துடுத்துச் சுருட்டினார் கங்கைதனை . விளக்கம் ========= அக்கினி சொரூபமாக நின்று கொண்டிருப்பவர் மாயன் என்பதை அறியாத அந்த மங்கையர்கள், தம்மை ஆட்கொண்டிருந்த குளிரைப் போக்கும் நோக்கிலே அந்த அக்கினி சுவாலையை சுகமாக அனுபவித்தார்கள். . அந்த ஏழு மாதர்களின் இந்நிலைப்பாட்டினால் மகிழ்ச்சியடைந்த மகாவிஷ்ணு, அவர்களுக்கு தேவையான அனலாக அவர்களைத் தழுவினார். அதனால் அவர்களுக்கோர் பிரணவ ஓசை எழுவது போன்ற உணர்வு உண்டானது. அவ்வுணர்வே அவர்கள் மயங்கும் நிலையை ஏற்படுத்தியது. அக்கணத்தில்தான் மகாவிஷ்ணுவின் மனத்தகமிருந்த ஏழுலோக வித்துக்களும் அந்த மங்கையர்களின் மணிவயிற்றில் கருவாக உருவானது. . உடனே, அக்கினி சொரூபமாக நின்ற மகாவிஷ்ணு, தம் எண்ணம் ஈடேறிய மகிழ்ச்சியில் தம் சுயரூபங்கொண்டார். அந்த வேளை, ரிசி கர்ப்பம் இரா தங்காது என்பதற்கிணங்க, ஏழு மாதர்களும் அந்த இடத்திலேயே ஏழு ஆண் குழந்தைகளைப் பெற்றனர். கன்னியர்களான தமக்குப் பிள்ளை பிறந்ததால் பெரிய சஞ்சலத்திற்கு ஏழு பேரும் ஆளானார்கள். அவர்களின் உடலில் உண்டான தொடு வர்ம ஸ்தானங்களெல்லாம் துவண்டு போயின. செய்வதறியாது செயலிழந்த நிலையில் அவரவர் ஆடைகளை எடுத்தணிந்து கொண்டு கங்கையைத் திரட்ட முற்பட்டார்கள். . . அகிலம் ------- கையில் சலந்தான் கட்டித் திரளாமல் கலங்கி யழுது கண்ணீர் மிகச்சொரிந்து மலங்கி யழுது மண்ணிலவர் புரண்டு அய்யோ பொருளை அறியாமல் விட்டோமே மெய்யோடே குத்தி விழுந்தழுதா ரம்மானை . விளக்கம் --------- வழக்கம் போல் கங்கை நீர் கட்டியாகத் திரளவில்லை. எனவே சப்தமாதர்களின் மனம் சஞ்சலமடைந்தது. காலங்காலமாகச் செய்து வந்த கடமையைச் செய்ய முடியாமலாகி விட்டதே என நினைத்து, நினைத்து கண்ணீர் சொரிந்தார்கள். மாறாத மனக் குழப்பத்தோடு மண்ணிலே புரண்டு கதறி அழுதார்கள். . அய்யகோ, நெருப்பாக நின்றவர் நெடிய திருமால் என்ற உண்மையை உணராமல், அது அக்கினிதான் என்று அணைந்து குளிர் காய்ந்து இக்கதிக்கு ஆளாகிவிட்டோமே என்று, தன் கைகளாலேயே தன்னுடலை ஓங்கி அடித்து, விழுந்து, விழுந்து அழுதார்கள். . . அகிலம் ======== விருத்தம் ========== கனலைத் துணையா மென்றாவிக் கற்பை இழந்தோங் கன்னியரே புனலைத் திரட்டப் பெலமின்றி புத்தி யழிந்தோம் பூவையரே அனலைத் தரித்த அரன்முன்னே அங்கே சென்றால் பங்கம்வரும் இனத்தைப் பிரிந்த மானதுபோல் இருப்போம் வனத்தி லென்றனரே . விளக்கம் ========= நமக்கு ஏற்பட்ட குளிர் நடுக்கத்தைப் போக்குவதற்குக் கனலே கதியென்று அந்த நெருப்புச் சுவாலையை ஆரத் தழுவியதால் நமக்குக் கவசமாக இருந்த கற்பை இழந்து விட்டோம். அதனால் இப்போது வழக்கமாகத் திரட்டுகின்ற நீரைத் திரட்டக் கதியற்று கட்டழிந்து நிற்கிறோம். இந்நிலையில் அக்கினியையே தன் ஆடையாகக் கொண்ட சிவபெருமானின் இருப்பிடமாகிய கயிலைக்குச் சென்றோமேயானால் நிச்சயமாக இன்னும் ஏதேனும் தீங்கு ஏற்படக் கூடும் எனவே, தம் கூட்டத்தைவிட்டுப் பிரிந்து தவிக்கும் மானைப் போல நம்முடைய சுற்றத்தையும், சுகத்தையும் துறந்து, இந்த வனத்திலே தங்கி விடுவோம் என்று ஏழு மாதர்களும் ஒருமித்தக் கருத்தைக் கூறினார்கள். . தொடரும்… அய்யா உண்டு.
💚Ayya 💗 Vaikundar💚 - 11/29/2020 06.53 pm 11/29/2020 06.53 pm - ShareChat