பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்க உறுதுணையாக இருப்பது குறித்தும் ட்ரம்ப்பின் ஆட்சி குறித்தும் பல அமெரிக்கர்கள் துணுக்குற்றிருப்பதற்கு சாட்சியாக வெளியாகி இருக்கும் படம்தான் Superman.
அமெரிக்காவின் நேசநாடு பொரேவியா. பொரேவியாவுக்கு அண்டைநாடு, ஜாரான்பூர். பொரேவிய அதிபர், ஜாரான்பூர் மக்களை சர்வாதிகார ஆட்சியாளரிடமிருந்து காப்பதாக சொல்லிக் கொண்டு அந்த நாட்டின் மீது படையெடுக்கிறான். பாலைவன நாடான ஜாரான்பூரின் மக்கள் அம்பு, கத்தி, கற்கள் போன்ற எளிய ஆயுதங்களுடன் பொரேவியாவின் படையெடுப்பை எதிர்க்கிறார்கள். பொரேவியா, எந்த கவலையுமின்றி ஜாரான்பூர் மக்களை கொன்று குவிக்கிறது. இதை தடுக்க கிளம்பும் சூப்பர்மேன் இரு நாடுகளுக்குமான போரை, பொரேவியாவை விரட்டியடித்து நிறுத்துகிறான். இது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்புகிறது.
அமெரிக்காவின் நேசநாட்டுக்குள் அத்துமீறி சூப்பர்மேன் நுழைந்தது குறித்து அமெரிக்க அரசு தொடங்கி, ஊடகங்கள் வரை கடும் விமர்சனங்களை வைக்கின்றன. அமெரிக்க அரசு, சூப்பர்மேனை விசாரிக்கும் கட்டத்துக்கு செல்கிறது.
அமெரிக்காவில் லுதார் எனவொரு தொழிலதிபர் இருக்கிறான். அவன் ஆயுத தயாரிப்பு தொழில் செய்பவன். சூப்பர்மேனை வீழ்த்தக் கூடிய ஆயுதங்களை செய்வதாக அமெரிக்க அரசுக்கு உறுதி அளிக்கிறான். சூப்பர்மேனை வீழ்த்தும் வகையில் ராட்சத உருவங்களை உருவாக்கி சூப்பர்மேனை பல முறை மக்களின் முன்னாலேயே வீழ்த்திக் காட்டுகிறான். மேலும் சூப்பர்மேன் மீதான நன்மதிப்பு போக வேண்டுமென்பதற்காக அவன் வெளிகிரகத்திலிருந்து பூமியை அழிக்க அனுப்பி வைக்கப்பட்டவன் என்ற பொய்க் கதையைக் கட்டி விடுகிறான். எனவே 'புலம்பெயர்ந்த' சூப்பர்மேனுக்கு எதிராக மக்கள் திரும்புகின்றனர்.
லுதாருக்கு எதிராக செயல்படும் சூப்பர்மேன் மற்றும் குழு, ஒரு கட்டத்தில் தன்னுடைய ஆயுதங்களை விற்பதற்கு மட்டுமின்றி, ஜாரான்பூரை முற்றாக பொரேவியா பிடித்து விட்டால், அங்கிருக்கும் வளங்கள் தனக்கு கொடுக்கப்பட வேண்டும் என்கிற ஒப்பந்தத்திலும்தான் பொரேவிய அதிபரின் இனப்படுகொலைக்கு லுதார் ஆதரவாக நிற்கிறான் என்கிற உண்மை வெளிவருகிறது.
இவற்றையெல்லாம் முறியடித்து ஜாரான்பூர் மக்களை காத்து பொரேவிய அதிபரை கொன்று லுதாரையும் அழித்து பிரச்சினைகளுக்கு சூப்பர்மேன் முற்றுப்புள்ளி வைப்பதுதான் மிச்ச படம்.
வழக்கமான சூப்பர்மேன் படம் போலன்றி கதையென ஒன்றை - குறிப்பாக தற்கால அரசியல் நிலையை - முயன்றிருக்கிறார்கள். அதிலும் குழந்தைகளுக்கான படத்துக்குள் இத்தனை விஷயங்களை பேசுவது நல்ல விஷயம்தான்.
எனினும் மொத்த இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கும் தொழிலதிபரும் ஆயுத வியாபாரமும் மட்டும்தான் காரணம் என சொல்லி, அமெரிக்க அரசை படம் காப்பாற்றி விடுவதை மன்னிக்க முடியவில்லை.
மேலும் சூப்பர்மேன் என்பது அடிப்படையில் அமெரிக்கா அரசு, ஆளுமை ஆகியவற்றின் அடையாளம். அந்த அடையாளமே இன்று வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாகி இருப்பதாக படத்தில் காட்டப்படுவதில் இருந்து, வியட்நாம் போர் காலத்தில் அமெரிக்கர்களுக்கு இருந்த குற்றவுணர்வு போன்று, ட்ரம்ப் அரசின் மீது ஒரு வெறுப்புணர்வு இருப்பதை உணர முடிகிறது.
ஒருகாலத்தில் வடகொரிய கிம் மீது காரணமே இன்றி இருக்கும் வெறுப்பை அடிப்படையாக வைத்து Interview என்றும் லிபியாவின் கடாபி, ஈரானிய அதிபர் போன்றவர்களின் மீதான வெறுப்பை கொண்டு Dictator என்ற சல்லித்தன வெறுப்பு படங்களையும் எடுத்துக் கொண்டிருந்த அமெரிக்க வெகுஜன திரையுலகம், தற்போது தனக்குள் இருக்கும் சல்லித்தனத்தை பார்க்கத் தொடங்குகிறது. ஆனால்.அதையுமே முழுமையாக பார்க்க மறுக்கிறது என்பதுதான் சோகம்.
நெதன்யாகு பாத்திரம் கொல்லப்படுவதை திரையில் காட்டுமளவுக்கு ஹாலிவுட் வந்து நிற்கிறது.
-தோழர் ராஜசங்கீதன் #superman #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை


