எமது சமரசமற்ற களப்போராளி தோழர் மகாலிங்கத்தின் நான்காம் ஆண்டு நினைவுநாள். தருமபுரியிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு போராட்ட களங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். சென்னையில் நடக்கும் அனைத்து போராட்டங்களிலும் முன்னனியில் நிற்பவர்.
2019ல் மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் திருப்பூரில் எழுச்சியுடன் நடந்த கொண்டிருந்ததில் பங்கெடுத்தார், அதற்கு முன்னைய வாரம் மதுரையில்.மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்திலும் பங்கெடுத்தார். இச்சமயத்தில் அவரிடம் நான் கேட்டேன், ' ஏன் தோழர், வெய்யில் மிகக்கடுமையாக உள்ளது. இப்போராட்டத்தை ஒடுக்க அரசு பலவேறு வழிகளை செய்யலாம். நீங்கள் இவற்றை தவிர்த்திருக்கலாமே..' என்றேன்.
புன்னகையுடன் சொன்னார், '.. இந்த எதிர்ப்பை கூட காட்ட வலு இல்லாம போயிடக்கூடாது தோழர். என்ன ஆனாலும் சங்கி கூட்டத்துக்கு கருப்பு கொடி காட்டியாக வேண்டும்..' என்றார்.
இதை அவரிடம் நான் சொல்ல காரணம், மகாலிங்கத்திற்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து செயலற்று போய், உடல்நிலை மிக மோசமாக இருந்த காலகட்டத்தில் கடும் வெய்யிலில் பங்கெடுப்பது மிக ஆபத்தானது எனும் கவலை எங்களுக்கெல்லாம் இருந்தது. 2-3 நாட்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யும் நிலை இருந்ததென சொன்னார். கைகளில் ஊசிகுத்திய வடுக்களோடும், வீக்கத்தோடும், சில சமயம் ரத்த கசிவோடும் போராட்ட களங்களில் நிற்பார். எப்பொழுதும் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் தோழர்களிடத்தில் தமிழர் விடுதலை குறித்து உரையாடுவார், புத்தக குறிப்புகளை பகிர்வார், தொடர்ந்த வாசிப்பில் இருப்பார். ஏதேனும் அரசியல் நடப்புகளில் கவனம் செலுத்தி, நமது இயக்கம் என்னவகையான எதிர்வினை செய்யப்போகிறோம் என கேட்பார். போராட்ட மனநிலையே இறுதி மூச்சுவரை அவரை வழிநடத்தியது. கொரோனா காலத்தில் இறுதி வணக்கம் செலுத்த இயலாத நிலையில் எம்மைவிட்டு பிரிந்தார். தான் காணவிரும்பிய தமிழர்களுக்கான தேசத்தை என்றாவது ஒருநாள் இந்த இனம் மிட்டெடுக்கும் நம்பிக்கையுடன் அவர் விடைபெற்றார்.
போராளிகளுக்கு எதுவும் ஒரு தடையல்ல என்பதற்கு முன்னுதாரணமாய் எமது இயக்கத் தோழர்களுக்கு வழிகாட்டியாய் இன்றும் வாழ்கிறார். தோழர் மகாலிங்கம் போன்ற சமரசமற்ற போராளிகளே எமக்கான தலைமையாக இந்த இயக்கத்தை நெறிப்படுத்துகிறார்கள். அவர் புகழ் என்றும் நிலைபெறும். எமது அன்பிற்கினிய தோழனுக்கு எங்கள் வீரவணக்கம்.
திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்
11/06/2025 #வீரவணக்கம் #📰தமிழக அப்டேட்🗞️ #💪 மே17 இயக்கம்