#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 6
சந்திரலேகா (நடனக்கலைஞர்) பிறந்த நாள் டிசம்பர் 6
சந்திரலேகா (முழுப்பெயர்: சந்திரலேகா பிரபுதாஸ் படேல்; 6 டிசம்பர் 1928 – 30 டிசம்பர் 2006) பரத நாட்டியத்தை நவீன முறையில் மேம்படுத்திய நடனக்கலைஞர். மேலைநாட்டு நடனக்கலைகளையும் இந்திய நாட்டு களரி போன்ற போர்க்கலைகளையும் பரதநாட்டியத்துடன் இணைத்தார். இந்திய நடனத்தை முன்னெடுத்தவர் என்றும் அவர் புகழப்படுகிறார்.
நடனக்கலைஞர் சந்திரலேகா - சுதந்திரத்தின் எல்லைகளை விஸ்தரித்தவர்
20 ஆம் நூற்றாண்டு, உலகளவில் பல மாற்றங்களையும், உடைப்புகளையும் கண்ட நூற்றாண்டாகும். அடிமைப்பட்ட தேசங்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்ததும், சிந்தனை மற்றும் கலைகள் ஜனநாயகப்படுத்தப்பட்டு, மரபின் தடைகள் உடைந்து நவீனத்துவம் கொண்டதும் இக்காலகட்டத்தில்தான். செய்யுளாக இருந்த கவிதை வடிவம், நவீன கவிதையாகியது. நவீன ஓவியமாக மாற்றம் கொண்டது. அந்தப் பின்னணியில் இந்தியாவில் மரபாக இருந்த நடனவடிவை அதன் பழைய அலங்காரங்களைக் களைந்து நவீன வடிவமாக்கியவர் சந்திரலேகா. இவர் நடனம் என்ற வடிவத்தோடு தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. இந்தியாவில் உருவான பெண்ணிய இயக்கத்துக்கு முக்கிய தூண்டுவிசையாக இருந்தவர். நெருக்கடி நிலை காலகட்டத்தில்,கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் உருவான நிலையில் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர். போஸ்டர் வடிவமைப்பாளர், ஓவியர் மற்றும் கவிஞர். இந்திய வாழ்க்கை முறை மற்றும் கலைமரபின் நல்ல அம்சங்களைப் புறக்கணிக்காமலேயே தனது கலையை நவீனப்படுத்திய முக்கியமான ஆளுமை சந்திரலேகா.
1928 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மகாராஷ்டிர மாநிலமான வாடாவில் செல்வச்செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர் சந்திரலேகா பிரபுதாஸ் படேல். சிறுவயது முதலே நடனம் மற்றும் கலைகளில் ஈடுபாடு மிக்க அவர், சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, தனது வருங்காலம் நடனம்தான் என்று முடிவுக்கு வந்தார். பெண்கள் தனியாக, அருகில் உள்ள ஊருக்கே பயணம் செய்யமுடியாத ஒரு காலகட்டத்தில், பரதம் பயில்வதற்காக தனியாக காஞ்சிபுரத்துக்கு வந்தார். தேர்ந்த பரதநாட்டிய குருவான எல்லப்ப பிள்ளையிடம் மாணவியாகச் சேர்ந்தார். 20 வயதில் எப்படி சொந்த ஊர் மற்றும் பெற்றோரைப் பிரிந்து தனியாக சென்னை வந்தார். தனது தொப்புள்கொடி உறவுகளைத் துறக்க விரும்பிய அவர் தன் குடும்பப் பெயரைத் துறந்து வெறும் சந்திரலேகா ஆனார். சென்னையில் ஜெமினி பாலம் இப்போது அமைந்திருக்கும் இடம் முழுமையாக வயல்கள் மற்றும் சுமைதாங்கிக் கற்களுடன் காணப்பட்டதாக ஒரு நேர்காணலில் நினைவுகூர்ந்துள்ளார் சந்திரலேகா.
குரு எல்லப்ப பிள்ளையிடம் பரதநாட்டியத்தை முறையாகப் பயின்ற அவர், அப்போதைய பிரபல பரதநாட்டியக் கலைஞர்கள் ருக்மணி தேவி மற்றும் பால சரஸ்வதி போன்ற ஆளுமைகளின் நேரடித் தாக்கத்தையும் பெற்றார். 1950 களின் மத்தியிலேயே இந்தியாவின் முக்கியமான நடனக்கலைஞராக புகழ்பெற்றார். விமர்சகர்களின் பாராட்டுகள் குவிந்தன. அவரது தனி நடன நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்களின் வரவேற்பு அமோகமாக இருந்தது. பத்தாண்டுகளிலேயே தனது நடனத்தில், அவருக்குச் சலிப்பு ஏற்படத் தொடங்கியது. “ நான் யாருக்காக ஆடுகிறேன். ஏன் ஆடுகிறேன். எனக்கு சரியான அளவில் இடுப்பும், உடல் அளவுகளும் உள்ளன. என்னை ஒரு இந்திப்பட நடிகையின் உடலைப் பார்ப்பது போலத்தானே பார்வையாளர்கள் பார்க்கின்றனர்” என்றெல்லாம் கேள்விகள் தோன்றியதாக ருஸ்தம் பரூச்சா இவர் குறித்து எழுதிய நூலில் பகிர்ந்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் மதுரா நகரில் என்ற பாடலுக்கு அபிநயிக்கிறார் சந்திரா. அப்போது அவரது மனக்கண்ணில் காலிக்குடங்களுடன் வறண்ட முகங்கள் நாடெங்கும் அலைந்து கொண்டிருப்பதைக் காண்கிறார். அப்போது இந்தியா முழுவதும் வறட்சி நிலவிய காலகட்டம். “யமுனை நதியில் நடக்கும் நீர் விளையாட்டு மற்றும் நீர் செழுமையை நான் பாவமாகக் காட்டி நடனமாடிக் கொண்டிருந்தேன். ஒரு வறட்சியான சந்தர்ப்பத்தில், பஞ்ச நிலையில், நான் எதை என் நடனத்தில் சித்திரித்துக் கொண்டிருக்கிறேன்?” என்ற கேள்வி அவரிடம் எழுந்தது.
ஒரு கட்டத்தில் பரதநாட்டியத்தில் அலுப்படைந்த அவர் நடனத்தையே கைவிட்டார். அக்காலத்தில் தான் இந்தியாவில் பெண்ணிய இயக்கம் அரும்புவிடத் தொடங்கியிருந்தது. சந்திரலேகா அவர்களுடன் இணைந்து தனது ஓவியங்கள் மற்றும் போஸ்டர்களை வரையத் தொடங்கி தனது படைப்பாற்றலை வேறு திசைகளில் மடைமாற்றினார். அவர் 1980 களில் வரைந்த சுவரொட்டிகள் அப்போதைய பெண்ணியக்குரலை மிகச் சிறப்பாக பிரதிநிதித்துவம் செய்தவை. இந்தியா பெண்களைக் கடவுளாகவும் வணங்குகிறது. அவர்களை அதிகபட்சமாக வன்முறைக்குள்ளாக்குவதும் இந்தியாதான் என்ற செய்தியுடன் இருபக்கமும் பத்து கைகள் உள்ள காளியை ஒருபக்கம் கைகள் உடைந்தவராக சித்தரித்த சுவரொட்டி அக்காலத்திய பெண்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருந்தது.
ஓவியம், கவிதை மற்றும் நண்பர்களுடனான பயணங்களில் நடனம் பக்கம் வராமலேயே சந்திரலேகாவால் பல ஆண்டுகளை உற்சாகத்துடன் கழிக்க முடிந்தது. நடுவில் நவகிரஹா என்ற ஒரே ஒரு நாட்டிய நிகழ்ச்சியை மட்டுமே செய்தார்.
1985 இல் அங்கீகா என்ற நடன நிகழ்வுடன் மீண்டும் சந்திரலேகா நடனத்தை நோக்கித் திரும்பினார். இந்திய நடன வரலாற்றில் இது முக்கியமான திருப்பம். யோகா, களறி போன்ற உடல்பயிற்சி மரபையும் நடனக்கலையையும் அங்கீகாவில் சரியான விகிதத்தில் கலந்து புதுமையான வடிவைக் கொடுத்தார். அங்கீகா, பரதநாட்டியம் என்னும் வடிவம் தொடர்பாக உள்ள மரபார்ந்த கருத்துகளைக் கேள்விக்குள்ளாக்கியது.
அடுத்து சந்திரலேகாவின் தயாரிப்புகளான லீலாவதி, எந்திரா போன்ற படைப்புகள், இந்திய வேருடனேயே இங்குள்ள நடனம் நவீனமுகம் கொள்ள முடியும் என்பதைக் காட்டின.
1991 இல் அவர் இயக்கிய ஸ்ரீ, பெண்களின் படைப்பாற்றலுக்கான அர்ப்பணிப்பாக இருந்தது. முதுகுத் தண்டுவடத்தைப் படிமமாக கொண்ட இந் நடன நிகழ்வு, காலம் காலமாக பெண்களின் தண்டுவடம் நொறுக்கப்படுவதையும், அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு எடுக்கும் முயற்சிகளையும் நடனவடிவில் காட்டியது.
சந்திரலேகாவின் படைப்புகள் அனைத்தும் பெண் என்ற சக்தியைக் கண்டறியும் பயணம் தான். ஒருகட்டத்தில் அவரது படைப்புப் பயணம் ஒரு உடலுக்குள்ளேயே இருக்கும் ஆண்மையையும், பெண்மையையும் கண்டறிந்து முழுமைகொண்டது. “ பெண்கள் நடக்கும்போதும், அமரும் போதும், ஒரு குழந்தையை இடுப்பில் தாங்கியிருக்கும்போதும் உடலை ஒரு ஆற்றால் வடிவமாய் நான் பார்க்கிறேன். பெண்கள் தண்ணீர் குடத்தை அல்லது குழந்தையை இடுப்பில் தாங்கியிருக்கும் நிலை அழகான் ஒரு நிலை. நம்முடைய உபயோகத்துக்கும் உடலின் வடிவத்துக்குமான பொருத்தம். நம் உடலுள் எவ்வளவு ஆற்றல் பொதிந்திருக்கிறது என்று நம்மால் அறிய முடிவதில்லை. அதனால் தான் நான் நடனத்தில் எது செய்தாலும் அதை உடல் தொடர்பான அறிதலுக்காகவே செய்கிறேன்.”
சந்திரலேகா நடனத்தை வாழ்விலிருந்து தனியான பொழுதுபோக்கு வடிவமாகப் பார்க்கவில்லை. உடலுக்கும் இயற்கைக்கும் உள்ள உயிரோட்டமான உறவு, உடலுக்கும் உடல் செய்யும் வேலைகளுக்கும் உள்ள தொடர்பு, உடலுக்கும் சடங்குகளுக்கும் உள்ள உறவுகள் எல்லாம் போய் நடனம் ஒரு காட்சிப் பொருளாக மாறிவிட்டதாக அவர் உணர்ந்தார். முழுமையான மரபுவாதம், நவீனம் இரண்டுமே அவருக்கு சிக்கலாகத் தெரிந்தன. அதனால் தன் படைப்பாற்றலைப் பயன்படுத்தி அவற்றிலிருக்கும் தடைகளைச் சிதறடித்து தற்கால வடிவமாக தன் நடனத்தை மாற்றினார்.
தன் வாழ்க்கை முழுவதும் சந்திரலேகா, திருமணம் போன்ற எந்த சம்பிரதாய உறவுகளிலும் சிக்கிக்கொள்ளாமல் சுதந்திர ஜீவியாகவே கழித்தார். ஒரு நடன ஆளுமையாக அறியப்பட்ட அவர், தன் நடனத்தில் சலிப்பு வந்தபோது கூட அச்சப்படாமல் அதைத் துறந்து வேறு காரியங்களில் ஈடுபடும் துணிச்சல் கொண்டவர் அவர். பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் அவர் உருவாக்கியிருந்த வீடு, வேப்ப மரங்களால் சூழப்பட்டது. தனது படைப்புகளை விட அதிகம் அவர் 75 வேப்பமரக்கன்றுகளை தன் கையால், நட்டு வளர்த்த வகையில் அதிகம் பெருமை கொண்டிருந்தார். இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கூடி இளைப்பாறி உரையாடும் பொதுவெளியாக இருந்தது. அவரது சிறந்த நண்பர்களாக உலகப்புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர் ஹென்றி கார்ட்டியர் ப்ரெஸ்சானும், ஓவியர் தசரத் பட்டேலும் இருந்தனர். வங்கக்கவி ஹரீந்திர சட்டோபாத்யாயா இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர். எழுத்தாளரும் கலைவிமர்சகருமான சதானந்த் மேனன் சந்திரலேகாவின் பிற்காலத்தில் தோழராக அவரது இறுதிக்காலம் வரை வாழ்ந்தவர்.
தனது இறுதிக்காலம் வரை வயோதிகம் கொடுக்கும் முதுமையை, மன அளவில் அடையாமல் ஒரு குழந்தையின் உற்சாகத்துடனும், எழிலுடனும் இருந்தார். அவரின் அழகுக்கு முன்னால் வயது என்பது ஓடிப்போய்விட்டது என்று அவரைப் பற்றிய நினைவுக்கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் ந.முத்துசாமி நினைவுகூர்கிறார். சந்திரலேகா 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி காலமானார். சந்திரலேகாவுக்கு தமிழ் சினிமா தன் வகையில் அவரது வாழ்நாளிலேயே நினைவுகூர்ந்திருக்கிறது . மணிரத்னத்தின் திருடா திருடா படத்தில் வரும் கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு பாடலில் வரும் சந்திரலேகாஆஆஆஆஆஆஆஆ….இவர்தான்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 6, 1922
இங்கிலாந்திலிருந்து பிரிந்து, ஐரிய விடுதலை நாடு(அயர்லாந்து) உருவான நாள் டிசம்பர் 6
1066இல் இங்கிலாந்துக்குள் நுழைந்து, பெரும்பகுதியைக் கைப்பற்றிய நோர்மன்கள், 1169இல் அயர்லாந்தையும் கைப்பற்றினர். ஃப்ரான்சின் நோர்மண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் நோர்மன் என்றழைக்கப்பட்ட இவர்கள் நோர்ஸ் மொழி பேசிய வைக்கிங்குகளின் வழிவந்தவர்கள். ஆங்கிலேயர்களுடன் கலந்து ஆங்கிலோ-நோர்மன்களாக அயர்லாந்துக்குள் நுழைந்து, அங்கிருந்த தொல்குடிகளான கேயலிக் மொழிகள் பேசிய கேயல்களுடன் கலந்து, ஹைபர்னோ-நோர்மன்கள் என்ற இனத்தை உருவாக்கியிருந்தனர். 1350களுக்குப்பின் கேயல்கள் மீண்டும் எழுச்சி பெற்றாலும், அயர்லாந்தைக் கவனிக்கும் நிலையில் இங்கிலாந்து முடியரசு இல்லை. ரோஜாக்களின் போர்களுடன் உள்நாட்டுக் குழப்பங்கள் முடிவுக்கு வந்ததால், போர்க்களத்திலிருந்து விடுவிக்கப்பட்ட மனிதவளம், கடல்கடந்த விரிவாக்கங்களை நோக்கித் திரும்பியது. கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்திருந்த நிலையில், அமெரிக்காவுக்குச் செல்லும் வழி என்ற வகையில் அயர்லாந்து முக்கியத்துவம்பெற, அதனைக் கைப்பற்றும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே 1541இல் இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி, தன்னை அயர்லாந்தின் அரசராக அறிவித்துக்கொண்டார். 1601இல் கேயல்கள் வீழ்ந்ததையடுத்து, இங்கிலாந்தின் ஆளுகையின்கீழ்வந்த அயர்லாந்தில் ஏராளமான ஆங்கிலேயர்கள் குடியேறினர். அயர்லாந்திலிருந்தவர்கள் கத்தோலிக்கர்களாக இருந்த நிலையில் குடியேறிய ஆங்கிலேயர்கள் ப்ராட்டஸ்ட்டண்ட்கள் என்கதால், நிலவுடைமையிலிருந்த ஏற்றத்தாழ்வுகள் மத மோதல்களாக வெடித்து, அதிகாரம் ப்ராட்டஸ்ட்டண்ட்கள் கைக்கு வந்தது. 1801இல் கிரேட் பிரிட்டன், அயர்லாந்து ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முடியரசு என்ற பெயரில், இங்கிலாந்தின் பகுதியாகவே அயர்லாந்தை இணைத்துவிட்டு, எதிர்த்த கத்தோலிக்கர்களுக்கு சில சலுகைகளை வழங்கி முடித்தனர். 1840களில் அயர்லாந்தில் ஏற்பட்ட கடும் பஞ்சங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிர்ப்பை வலுப்படுத்தியதில்;, 1860களில் தன்னாட்சி இயக்கம் உருவானது. இங்கிலாந்துக்குக் கட்டுப்பட்ட தன்னாட்சி நான்கு முறை வழங்கப்பட்டாலும், 1919இல் ஐரிய விடுதலைப்போர் வெடித்ததைத் தொடர்ந்து, அயர்லாந்தைத் தனி நாடாக்க இங்கிலாந்து ஒப்புக்கொண்டது. இங்கிலாந்துக்கு ஆதரவானவர்களான, பழைய ஆங்கிலேயர்கள் என்றழைக்கப்பட்ட ஹைபர்னோ-நோர்மன்கள் அதிகமிருந்த ஆறு கவுண்ட்டிகள்(கவுண்ட் ஆளுவது கவுண்ட்டி, ஃப்ரான்சில் நடைமுறையிலிருந்த இச்சொல்லை நோர்மன்கள் இங்கிலாந்துக்குக் கொண்டு வந்தனர்!) இதை ஏற்காததால் மீதமுள்ள 26 கவுண்ட்டிகள் அயர்லாந்து என்ற தனி நாடாகிவிட, கிரேட் பிரிட்டன், வடஅயர்லாந்து ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முடியரசு என்ற தற்போதைய வடிவத்தை இங்கிலாந்து பெற்றது. 1922இல் டொமினியனாகி, 1937இல் இங்கிலந்தின் மேலாதிக்கத்திலிருந்து விடுபட்ட அயர்லாந்து, 1949இல் முழுமையான குடியரசாகியது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 6
1917 - சோவியத் ஒன்றியத்திடமிருந்து விடுதலைப் பெற்றுவிட்தாக ஃபின்லாந்து அறிவித்த நாள் டிசம்பர் 6!
ரஷ்யாவின் ஜார்தான் ஃபின்லாந்தின் அரசராகவும்(க்ராண்ட் ப்ரின்ஸ்) இருந்ததால் இது ஒரு தனிப்பட்ட ஒன்றியமாக இருந்தது. தனிப்பட்ட ஒன்றியம்(பர்சனல் யூனியன்) என்பது, ஒரே முடியரசரால் ஆளப்படும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தனித்தனி நாடுகளைக் குறிக்கிறது. அரசர் ஒருவராக இருந்தாலும், இரு நாடுகளுக்கும் எல்லைகள், சட்டம் என்று அனைத்துமே தனித்தனியாகத்தான் இருக்கும். 1.2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வசித்த பகுதியான ஃபின்லாந்தில், கி.மு.5200களைச் சேர்ந்த மட்பாண்டங்களே கிடைத்துள்ளன. பால்ட்டிக் கடலின் கிழக்குக் கடற்கரைப் பகுதி நாடுகளைக் கிறித்துவமயமாக்குவதற்காக 1200களில் மேற்கொள்ளப்பட்ட வடபகுதி(அல்லது பால்ட்டிக்) சிலுவைப் போர்களின் காலத்தில், ஃபின்லாந்து ஸ்வீடனின் கட்டுப்பாட்டின்கீழ் வந்ததுடன், ஸ்வீடிய மக்களும் ஏராளமாகக் குடியேறினர். 18ஆம் நூற்றாண்டில் ஸ்வீடனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே நடைபெற்ற பல போர்களில், மோதிக்கொள்ளும் களமாக இரண்டுக்கும் இடையில் ஃபின்லாந்து அமைந்து, பெரும் இழப்புகளைச் சந்தித்தது. ஆக்கிரமித்திருந்த ஸ்வீடனிடமிருந்து விடுபடவேண்டுமென்ற உணர்வு ஃபின் மக்களிடையே மேலோங்கியிருந்த நிலையில், 1809இல் ரஷ்யாவின் ஜார் முதலாம் அலெக்சாண்டர் ஃபின்லாந்தைக் கைப்பற்றி, ரஷ்யாவுடன் இணைந்த தன்னாட்சிகொண்ட நாடாக்கினார். அப்போதிருந்து ஃபின்லாந்தின் அரசராகவும் ரஷ்யாவின் ஜார் இருந்துவந்த நிலையில், 1917 ஃபிப்ரவரிப் புரட்சியைத் தொடர்ந்து, ஜார் இரண்டாம் நிக்கோலஸ் முடிதுறக்க, ஃபின்லாந்தின் ஆட்சியாளர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையில், அக்டோபர் புரட்சிக்குப்பின் சோவியத் அரசு அமைந்துவிட, அதனிடமிருந்து விடுதலை பெறுவதாக ஃபின்லாந்து அறிவித்தது. இந்த விடுதலையை ஒரே மாதத்தில் லெனின் அங்கீகரித்தது மட்டுமின்றி, ஃபின்லாந்தில் பொதுவுடைமையைத் திணிக்கவும் சோவியத் ஒன்றியம் முயற்சிக்கவில்லை. ஃபின்லாந்தின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக அமெரிக்காவும், ஜெர்மெனியும் இருந்ததால், இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மன் படைகளுடன் சேர்ந்து லெனின்க்ராட் முற்றுகைவரை வந்த ஃபின்னியப் படைகள், சோவியத் ஒன்றியத்தின் பதில் தாக்குதலுக்குப்பின் அணி மாறியதால், ஜெர்மன் படைகளுடனேயே மோதவும் நேர்ந்தது. போருக்குப்பின், சோவியத்துக்கு எதிரான நடவடிக்கையாக அமெரிக்கா அளித்த மார்ஷல் திட்டத்தின் உதவிகளை ஏற்க ஃபின்லாந்து மறுத்துவிட்டது. இவ்வளவுக்கும் பின்னர், உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் முதலிடம் உட்பட, பல குறியீடுகளில் மிகவும் முன்னேறிய நாடாக இன்று ஃபின்லாந்து விளங்குகிறது!
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 6 ,1897
உலகின் முதல் அரசு உரிமத்தின்மூலம் முறைப்படுத்தப்பட்ட டாக்சி சேவை லண்டனில் தொடங்கிய நாள் டிசம்பர் 6.
வாடகை வாகனச் சேவை, ஹேக்னி கேரேஜ் என்ற பெயரில் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே லண்டனிலும், பாரிசிலும் உருவாகிவிட்டது. 1605இல் ஹேக்னி கேரேஜ் குதிரை வண்டிச் சேவை லண்டனில் இருந்ததாகப் பதிவுகள் கூறுகின்றன. இச்சேவையைச் சட்டப்பூர்வமாக்க, 1635இல் சட்டம் இயற்றப்பட்டது. தங்க வருபவர்களை அழைத்துச் செல்ல, விடுதிகள் இச்சேவையை அதிகம் பயன்படுத்தியதால், முதல் டாக்சி ரேங்க் (ஸ்டாண்ட்), மேபோல் விடுதியில் 1636இல் தொடங்கப்பட்டது. 1654இல் மற்றொரு சட்டம் இயற்றப்பட்டு, ஹேக்னி கேரேஜ் உரிமம் 1662இல் வழங்கப்பட்டது. ஹான்சம் கேப் எனும் மேம்படுத்தப்பட்ட குதிரை வண்டி 1834இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1897இல் பேட்டரியால் இயங்கும் மின்சார டாக்சிகள் அறிமுகமாயின. அக்கால செல்வந்தர்களின் வண்டிகளில் அவர்கள் உள்ளேயும், குளிர், மழையானாலும் ஓட்டுனர் வெளியேயும் இருப்பார்கள். அதைமாற்றி, ஓட்டுனரை தங்களுடன் அமரச் செய்ய அவர்கள் தயாராக இல்லாததாலேயே, ஓட்டுனரின் பகுதி தனியாக உள்ள லிமோசீன் வகை டாக்சிகள் உருவாயின. டாக்சி மீட்டர் மூன்று ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர்களால் 1897இல் உருவாக்கப்பட்டது. உலகின் முதல் மீட்டர் பொருத்தப்பட்ட, பெட்ரோலால் இயங்கும் டாக்சி டெய்ம்லர் நிறுவனத்தால் 1897இல் ஜெர்மெனியில் அறிமுகப்படுத்தப்பட்டது. வரி, கட்டணம் என்று பொருள்படும் இடைக்கால லத்தீன் சொல்லான டேக்சா என்பதிலிருந்து, டேக்சாமீட்டர் என்று மீட்டருக்குப் பெயரிடப்பட்டதால் டாக்சி, கேப்ரியோலெட் என்ற குதிரைவண்டியின் பெயரிலிருந்து கேப் ஆகிய சொற்கள் உருவாயின. லண்டனில் டாக்சி ஓட்டுனர் ஆவதற்கு, 'லண்டனைப் பற்றிய அறிவு' என்ற மிகக் கடுமையான தேர்வு முறை இன்றுவரை நடைமுறையில் உள்ளது. லண்டன் குறித்த தகவல்கள், பயணிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய அணுகுமுறை ஆகியவைகுறித்து 3-4 ஆண்டுகளுக்குப் பயிற்சியெடுத்து, பலமுறை முயற்சித்தால்தான் இதில் தேர்ச்சியடையமுடியும் என்பதால், லண்டனின் டாக்சி சேவை இன்றுவரை உலகின் மிகச்சிறந்ததாக விளங்குகிறது
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 6
கிடைத்தற்கரிய உலோகமாக இருந்த அலுமினியத்தை கண்டுபிடித்த சார்லஸ் மார்ட்டின் ஹால் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 6, 1863).
சார்லஸ் மார்ட்டின் ஹால் (Charles Martin Hall) டிசம்பர் 6, 1863ல் அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் தாம்ப்சன் எனும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ஹிமேன் பேசட் ஹால். தாயார் சோப்ரொனியா ஹெச்.புரூக் ஹால் ஆவர். 1873ல் இவருடைய குடும்பம் ஓபெர்லின் பகுதிக்குக் குடியேறியது. அங்கு மார்ட்டின் ஹால் தனது உயர் கல்வியைத் தொடங்கினார். இசையில் ஆர்வமிருந்ததால், இசையை ஒரு துணைப்பாடமாக எடுத்துப் படித்தார். 1880ல் ஓபெர்லின் கல்லூரியில் சேர்ந்து 1885ல் கலைப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். கலைப்பாடத்தில் பட்டம் பெற்ற போதும் அறிவியல் சோதனைகளிலும் ஆய்வுகளிலும் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தார். ஒரு முறை தனது பேராசிரியர் பிராங்க் பன்னிங் ஜூவெட்ட் (Frank Fanning Jewett) ஒரு சிறிய அலுமினியத் துண்டினைக்காட்டி இதனை யார் எளிதான முறையில் தயாரிக்கிறார்களோ, அவர்கள் மிகப் பெரும் செல்வந்தராவார்கள் என விளக்கினார். இதனால் உந்தப்பட்ட மார்ட்டின் அதனை ஆராயும் சோதனையில் ஈடுபட்டார்.
தனது ஆய்வுக்கு ஓபெர்லின் கல்லூரியின் ஆய்வகத்தை மார்ட்டின் பயன்படுத்தி வந்தார். பின்னர் அவரது வீட்டின் பின்புறம் மரத்தால் அமைக்கப்பட்டிருந்த ஒரு அறையே அவருடைய ஆய்வகம். அவருடைய சகோதரி மற்றும் பேராசிரியர் ஜூவெல்ட் ஆகியோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்ததால் தனது அறிவியல் சோதனைகளைத் தொடர்ந்து செய்து வந்தார். எட்டு ஆண்டுகள் ஓயாது செய்த ஆய்வின் பயனாக பிப்ரவரி 23, 1886ல் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். அலுமினாவை, கிரியோலைட்டில் கரைத்து அதன் வழியே மின்சாரத்தைச் செலுத்தி அலுமினிய உலோகத்தைப் பிரித்தெடுத்தார். தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்கான காப்புரிமைக்காக 1886ல் விண்னப்பித்தார்.காப்புரிமை எண் Patent Number(s) 400, 665. இதே ஆண்டில் பிரான்சு நாட்டின் பால் ஹெரௌல்ட் என்பவர் இதே முறையில் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார்.
பிட்ஸ்பெர்க் சென்ற மார்ட்டின் ஹால் அங்கு சில முதலீட்டாளர்களின் துணையால் 1888ல் 'பிட்ஸ்பர்க் ரிடக்சன் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் வணிகமுறையில் அலுமினியத் தயாரிப்பில் ஈடுபட்டது. மார்ட்டின் ஹாலின் உற்பத்தி நடவடிக்கை காரணமாக அலுமினியம் உற்பத்தி பன்மடங்கு பெருகியது. எளிதாகப் பெறப்பட்டதால் அலுமினிய விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிறுவனம் 1907 முதல் 'அமெரிக்க அலுமினிய நிறுவனம்' (Aluminum Company of America (Alcoa) என்ற பெயரில் இயங்கி வருகிறது. மார்ட்டின் தனது 25 ஆண்டுகால கடின உழைப்பால் அலுமினியத் தொழில்துறையில் ஒரு மாபெரும் வளர்ச்சியை ஏற்படுத்தினார்.
இவருடைய பணிகளைப் பாராட்டி இவருக்கு பெர்கின் பதக்கம் வழங்கப்பட்டது. இவர் பட்டம் பயின்ற ஓபெர்லின் கல்லூரியில் இவருக்கு அலுமினியத்தாலான சிலையை நிறுவி கிரானைட் கல்லில் பதித்து கல்லூரி நிர்வாகம் சிறப்பு செய்துள்ளது. மக்கள் ஆதியில் இருந்தே பயன்படுத்தி வரும் இரும்புக்கு மாற்றாக தற்போது பரவலாகப் பயன்பட்டுவரும் அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது பற்றிய மார்ட்டின் ஹாலின் கண்டுபிடிப்பு உலோகங்களின் வரலாற்றை மாற்றியமைத்தது. கிடைத்தற்கரிய உலோகமாக இருந்த அலுமினியத்தைத் தனது கண்டுபிடிப்பின் மூலம் விலை மலிவாக மாற்றிய மார்ட்டின் ஹால் டிசம்பர் 27, 1914ல் தனது 51வது அகவையில் புளோரிடா, டைட்டோனா கடற்கரையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று.டிசம்பர். 6
நடிகையர் திலகம் சாவித்திரி பிறந்த தினம் இன்று(1935).
சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். சிஸ்டா பூர்ணையா சாஸ்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார்.
நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்த சாவித்திரிக்கு நடிப்பின்மீது ஆசை. அதற்காக சென்னை வந்த அவருக்கு கிடைத்ததெல்லாம் சிறுசிறுவேடங்கள்
நாடகத் துறையில் அறிமுகமாகி அங்கிருந்து சினிமாவிற்கு வந்த சாவித்திரி எல்.வி.பிரசாத் இயக்கிய தெலுங்கு படமான சம்சாரம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.. அடுத்ததாக எல்.வி.பிரசாத் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் இயக்கிய கல்யாணம் பண்ணிப்பார் படத்தில் நடித்தாலும் தொடர்ந்து அவருக்கு கிடைத்ததென்னவோ தெலுங்குப்பட வாய்ப்புகள்தான்.
அதன்பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரான தேவதாஸ் படத்திலும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்தார். 1955இல் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வெளியான ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் சாவித்திரி. அத்தனை அற்புதமாக காதல், குறும்பு, கோபம், தாபம் என அத்தனை பக்கங்களிலும் அசத்தியிருந்தார் சாவித்திரி.
மிஸ்ஸியம்மா என்ற திரைப்படம் திரையிட்ட இடங்களில் திருவிழா கூட்டம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு போனார் சாவித்திரி.
மிஸ்ஸியம்மா தந்த புகழால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் சாவித்திரி.
தமிழில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி ஆந்திராவில்
என்.டி. ஆர், நாகேஷ்வரராவ் என ஜோடி சேர்ந்த சாவித்திரியின் புகழ் அடுத்த இருபது வருடங்களில் கொடிகட்டிப் பறந்தது திரையுலகில்.
அதன் பிறகு ‘அமரதீபம், மாயாபஜார், கடன் வாங்கி கல்யாணம்’ என நடித்துக் கொண்டிருந்தவருக்கு 1959இல் ஜெமினி கணேசனுடன் நடித்த ‘களத்தூர் கண்ணம்மா’ படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கமல்ஹாசன் சிறுவனாக நடித்த முதல் படமும் இதுதான்.
1960இல் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, ஜெமினியுடன் சாவித்திரி இணைந்து நடித்த ‘பாசமலர்’ படம் சாவித்திரிக்கு மட்டுமல்லாமல் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிச் சென்றுவிட்டது. சிவாஜியும் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக நடித்திருந்தனர் என்று சொல்வதைவிட பாசமலர்களாகவே வாழ்ந்திருந்தனர் என்றே சொல்லலாம். இன்றும் பாசமுள்ள அண்ணன் தங்கை என்றால் என்ன பாசமலரா என்று கேட்கும் அளவிற்கு மக்களின் மனதில் சாவித்திரி சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்.
இந்தப் படத்திற்குப் பிறகு சிவாஜியும், சாவித்திரியும் காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்தார்கள். அந்த நாட்களில் சிவாஜி மற்றும் ஜெமினியோடுதான் அதிக படங்களில் நடித்திருந்தார் சாவித்திரி.
சிவாஜிக்கு நிகரான அந்தஸ்து, நடிகைககளில் சாவித்திரிக்கு மட்டுமே ரசிகர்களால் வழங்கப்பட்டது. இதற்கு ஒரு சிறு உதாரணமாக நவராத்திரி படத்தைக் கூறலாம். அதில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்து மிரட்டியிருந்தாலும் சாவித்திரியும் அந்த ஒன்பது கதாபாத்திரங்களுக்கு ஈடுகொடுத்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி
இருப்பார்.
ஆனால் எம்.ஜி.ஆரோடு பரிசு, வேட்டைக்காரன், மகாதேவி என மூன்று படங்களில் மடடுமே சேர்ந்து நடித்திருக்கிறார். அந்த மூன்று படங்களிலும் சாவித்திரி மற்ற கதாநாயகிகள் போலின்றி மிக துணிச்சலும் தனித்துவமும் கொண்டவராக தன்னை வெளிப்படுத்தி
இருப்பார். அதேபோல ‘ஜக்கம்மா’ திரைப்படமும் சாவித்திரியின் வித்தியாசமான நடிப்பைப் பறைசாற்றியது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 318 படங்களில் நடித்திருக்கிறார் சாவித்திரி. நடிப்போடு சேர்த்து டைரக்சனிலும் சாவித்திரிக்கு ஆர்வம் எட்டிப் பார்க்கவே அதிலும் ஒரு கை பார்த்துவிடுவதென்று துணிச்சலுடன் இறங்கினார்
தெலுங்கில் நான்கு படங்களையும் தமிழில் குழந்தை உள்ளம், பிராப்தம் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கினார்.. தமிழில் அவரே இரண்டு படங்களைத் தயாரிக்கவும் செய்தார். ஆனால் அவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அதுவே கடைசிக் காலகட்டத்தில் அவரைப் பொருளாதார ரீதியாக பாதித்துவிட்டது என்றுகூட சொல்லலாம்..
திரையுலகில் 1950, 60 மற்றும் 70களில் சகாப்தமாக வாழ்ந்தவர், நடிகை சாவித்திரி. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்து வைத்து இருந்தார்.
பாசமலர் படத்தில் பாசக்கார தங்கையாகவும், திருவிளையாடலில் சக்தியே பெரிது என்று வாதாடும் ஈசனின் மனைவியாகவும், படித்தால் மட்டும் போதுமா படத்தில் அன்பான மனைவியாகவும் கவர்ந்தார்.
பாவமன்னிப்பு, நவராத்திரி, கர்ணன், களத்தூர் கண்ணம்மா, பரிசு, கந்தன் கருணை, மாயாபஜார் உள்ளிட்ட பல படங்கள் சாவித்திரியின் திறமையான நடிப்பில் வெளிவந்து வசூல் சாதனை படைத்தன.
சிறந்த நடிப்பால் ‘நடிகையர் திலகம்’ என்ற பட்டம் அளித்து பாராட்டப்பட்டார்.
சென்னையில் மாளிகை போல் வீடு கட்டி அதற்குள் நீச்சல் குளம் அமைத்த முதல் நடிகை இவர்தான்.
தமிழ் சினிமா பேச ஆரம்பித்த காலம் தொட்டு எத்தனையோ நடிகைகள் தனித்துவமான நடிப்புத் திறமையால் தங்களது பெயரை நிலைநாட்டிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் தனது மிகச் சிறந்த நடிப்பின்மூலம் ‘நடிகையர் திலகம்’ என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடிகையென்றால் அனைவரும் ஏகமனதாக கூறுவது சாவித்திரியைத்தான்
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 6
1877 – தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.
On this day, December 6, 1877, the Washington Post published its first edition.
தி வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) என்பது அமெரிக்க நாளிதழ் ஆகும். இது 1877இல் துவக்கப்பட்டு, வாசிங்டன், டி. சி.யில் இருந்து வெளியிடப்படுகிறது.
அமெரிக்காவின் தலைநகரில் அமைந்துள்ள இந்த செய்தித்தாள் தேசிய அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இது வாசிங்டன், டி. சி., மேரிலாந்து, வர்ஜீனியா பகுதிகளில் இருந்து பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. இது விரிதாளாக பிரசுரிக்கப்படுகிறது.
இந்த செய்தித்தாள் 47 புலிட்சர் பரிசுகளை வென்றுள்ளது. 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஆறு தனித்திறன் புலிட்சர்களும் இதில் அடங்கும், 2002 ஆம் ஆண்டில் தி நியூயார்க் டைம்ஸ் ஏழு விருதுகள் பெற்றது. ஒரு ஆண்டில் ஒரே ஒரு செய்தித்தாளுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கையிலான பரிசுகளில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்தது. போஸ்ட் பத்திரிகையாளர்கள் 18 நிமேன் பெல்லோஷிப்ஸையும் 368 வெள்ளை மாளிகை செய்தி ஒளிப்பட சங்க விருதுகளையும் பெற்றுள்ளனர். 1970 களின் முற்பகுதியில், செய்தித்தாள் வரலாற்றில் மிக பிரபலமான புலனாய்வு, நிருபர்களான பாப் உட்வார்ட் மற்றும் கார்ல் பெர்ன்ஸ்டைன் ஆகியோர் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு 'வாட்டர்கேட் ஊழல்' என்று அறியப்பட்ட விசாரணைக்கு தலைமைத் தாங்கினர்; இந்த பத்திரிக்கை அந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததால் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் பதவிவிலகும் நிலை ஏற்பட்டது.[9]
2013 ஆம் ஆண்டில், அதன் நீண்டகால உரிமையாளர் குடும்பமான, கிரஹாம் குடும்பமானது செய்தித்தாள் நிறுவனத்தை அமேசான்.காம் நிறுவனர் ஜெப் பெசோசுக்கு 250 மில்லியன் டாலர் விலைக்கு விற்றது.
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை 1877 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் நகரத்தில் ஸ்டில்சன் ஹட்சின்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. பத்திரிக்கை துவங்கிய பிறகு, 1889 முதல் 1933 வரை, பலரிடம் கைமாறி யூஜீன் மேயர் என்பவரிடம் வந்து சேர்ந்தது. 1946 இல், அவர் பத்திரிகையைத் தன் மருமகன் பிலிப் கிரஹாமிடம் ஒப்படைத்தார்.
பிலிப் கிரஹாம் தலைமையில் பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட கிரஹாமால் பத்திரிகையின் மீது தனது கவனத்தைச் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டு பத்திரிக்கை சரிவை சந்திக்கத் தொடங்கியது. 1963 இல் கிரஹாம் தற்கொலை செய்துகொண்டதால், பத்திரிகை கிரஹாமின் மனைவி கேத்தரின் கிரஹாமின் கைகளில் வந்து சேர்ந்து பின் தலை நிமிர்ந்தது. அதன் பிறகு அவர்களின் குடும்ப சொத்தாக இருந்த இந்த இதழ் அக்கடும்பத்தால் 2013 ஆம் ஆண்டில், அமேசான்.காம் நிறுவனர் ஜெப் பெசோசுக்கு விற்கப்பட்டது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 6
விடுதலை நாள் (பின்லாந்து, உருசியாவிடம் இருந்து 1917)
வடகிழக்கு ஐரோப்பிய குடியரசு நாடு.
பின்லாந்து (Finland; பின்னிய மொழி: Suomi [ˈsuomi] சுவீடிய மொழி Finland [ˈfɪnland] அதிகாரபூர்வமாக பின்லாந்துக் குடியரசு (Republic of Finland) என்பது வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நோர்டிக் நாடுகளில் ஒன்றாகும். இது வடமேற்கில் சுவீடன், வடக்கில் நோர்வே, கிழக்கில் உருசியா, மேற்கில் பொத்னியா வளைகுடா, தெற்கில் பின்லாந்து வளைகுடா, மற்றும் எசுத்தோனியாவின் குறுக்கேயும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. 5.6 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பின்லாந்து 338,455 சதுர கிலோமீட்டர்கள் (130,678 சதுரமைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. எல்சிங்கி இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். மக்கள்தொகையின் பெரும்பாலானோர் பின்னிய இனத்தைச் சேர்ந்தவர்கள். பின்னியம், சுவீடியம் ஆகியன அதிகாரபூர்வ மொழிகள் ஆகும். 5.2% மக்கள் சுவீடிய மொழி பேசுகின்றனர். பின்லாந்தின் காலநிலை தெற்கில் ஈரப்பதத்தில் இருந்து வடமுனக் காலநிலை வரை மாறுபடும். நிலப்பரப்பு முதன்மையாக 180,000 க்கும் மேற்பட்ட ஏரிகளைக் கொண்ட ஒரு ஊசியிலைக் காடுகளைக் கொண்டுள்ளது.
பின்லாந்தில் இறுதிப் பனிப்பாறைக் காலத்திற்குப் பிறகு ஏறத்தாழ கிமு 9000 ஆண்டுகள் முதல் மக்கள் வசிக்கின்றனர். கற்காலம் பல்வேறு வெண்களிமண் பாணிகளையும் மற்றும் கலாச்சாரங்களையும் அறிமுகப்படுத்தியது. வெண்கல, இரும்புக் காலங்கள் பெனோசுக்காண்டியா மற்றும் பால்ட்டிக் பிராந்தியத்தில் உள்ள பிற கலாச்சாரங்களுடனான தொடர்புகளால் வகைப்படுத்தப்பட்டன.13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, வடக்கு சிலுவைப் போரின் விளைவாக பின்லாந்து சுவீடனின் ஒரு பகுதியாக மாறியது. 1809 இல், பின்னியப் போரின் விளைவாக, பின்லாந்து உருசியப் பேரரசின் ஒரு தன்னாட்சிப் பகுதியாக மாறியது, இதன் போது பின்னியக் கலை செழித்து வளர்ந்தது, விடுதலை பற்றிய உணர்வும் தொடங்கியது. 1906 இல், பின்லாந்து பொது வாக்குரிமையை வழங்கிய முதல் ஐரோப்பிய நாடானது. அத்துடன் அனைத்து வயது வந்த குடிமக்களுக்கும் பொது அலுவலகத்திற்குப் போட்டியிடுவதற்கான உரிமையை வழங்கிய உலகின் முதல் நாடாக மாறியது. 1917 உருசியப் புரட்சியை அடுத்து, பின்லாந்து உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. புதிதாக உருவாகியிருந்த இந்நாடு 1918 இல் பின்னிய உள்நாட்டுப் போரால் பிளவடைந்திருந்தது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், பின்லாந்து பனிக்காலப் போரில் சோவியத் ஒன்றியத்துடனும், நாட்சி செருமனியுடன் இலாப்லாந்துப் போரிலும் ஈடுபட்டது. அதன் பின்னர் தனது பிரதேசத்தின் சில பகுதிகளை இழந்தது, ஆனால் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
1950கள் வரையிலும் பின்லாந்து பெரும்பாலும் ஒரு வேளாண்மை நாடாகவே விளங்கியது. இரண்டாம் உலகப் போரின் பின்னர், அது விரைவாகத் தொழில்மய நாடாக மாறியதோடு, மேம்பட்ட பொருளாதாரத்தையும் உருவாக்கியது. அதே வேளையில் நோர்டிக் மாதிரியின் அடிப்படையில் ஒரு விரிவான நலன்புரி அரசை உருவாக்கியது; நாடு விரைவில் பரவலான செழிப்பையும் அதிக தனிநபர் வருமானத்தை அனுபவித்தது. பனிப்போரின் போது, பின்லாந்து அதிகாரப்பூர்வமான நடுநிலைக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. பனிப்போர் முடிவில், 1995 இல் பின்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலும், 1999 இல் யூரோ வலயத்திலும், 2023 இல் நேட்டோவிலும் இணைந்தது. கல்வி, பொருளாதாரப் போட்டித்தன்மை, குடியியல் உரிமைகள், வாழ்க்கைத் தரம், மனித மேம்பாடு உள்ளிட்ட தேசிய செயல்திறனின் எண்ணற்ற அளவீடுகளில் பின்லாந்து முன்னணியில் உள்ளது.
பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர், 6
சார்லஸ்_மார்ட்டின்_ஹால்
பிறந்ததினம்.
அலுமினியம் பிரித்தெடுக்கும் முறையைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் தாம்சன் என்ற நகரில் (1863) பிறந்தார். தந்தை மதபோதகர். வீட்டிலேயே ஆரம்பக் கல்வி கற்றார்.
6 வயதில் அப்பாவின் பட்டப்படிப்பு வேதியியல் புத்தகத்தைப் படித்து முடித்தார்.
பிரபல கண்டுபிடிப்புகள் குறித்த ‘சயின்டிபிக் அமெரிக்கன்’ என்ற இதழைத் தொடர்ந்து படித்தார். வீட்டிலேயே சோதனைக்கூடம் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொண்டார்.
உயர் கல்வியில் இசையையும் ஒரு பாடமாகப் பயின்றார். 1885-ல் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
ஒருமுறை இவரது பேராசிரியர் ஒருவர், #ஒருஅலுமினியத்துண்டைக் காட்டி, ‘இதை எளிதான முறையில் தயாரிப்பவர் பெரும் செல்வந்தர் ஆவார்’ என்று கூறினார்.
#அங்கேவிழுந்ததுவிதை.
உடனே அதுதொடர்பான சோதனையில் இறங்கினார்.
ஆரம்பத்தில் ஓபெர்லின் கல்லூரி ஆய்வகத்தைத் தனது சோதனைகளுக்குப் பயன்படுத்தி வந்தார். பின்னர், தனது வீட்டில் ஓர் அறையை ஆய்வுக்கூடமாக மாற்றினார். வேதியியலாளரான சகோதரி மற்றும் அறிவியல் பேராசிரியர்களின் ஒத்துழைப்புடன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்தார்.
எட்டு ஆண்டுகள் ஓய்வின்றிப் பாடுபட்டார்.
1886-ல் ரசாயனக் கலவைகளை மின்பகுப்புக்கு உட்படுத்தி #அலுமினியத்தைப்பிரித்தெடுத்தார். இதற்கு காப்புரிமையும் பெற்றார்.
#வேடிக்கை
ஏறக்குறைய இதே சமயத்தில், பிரான்ஸ் விஞ்ஞானி #பால்ஹெரால்டு இதே முறையில் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். எனவே, இந்த முறை ‘#ஹால்_ஹெரால்டு_செய்முறை’ என்று குறிப்பிடப்பட்டது.
பிட்ஸ்பர்க் சென்றவர், அங்கு சில முதலீட்டாளர்களின் உதவியுடன் #பிட்ஸ்பர்க்_ரிடக்ஷன் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் இது ‘அலுமினியம் கம்பெனி ஆஃப் அமெரிக்கா’ எனப் பிரபலமடைந்தது. இந்நிறுவனம் குறைந்த செலவில் வர்த்தக ரீதியாக அலுமினியத் தயாரிப்பில் ஈடுபட்டது. இதனால் அலுமினிய உற்பத்தி பெருகியது. விலையும் குறைந்தது.
இரும்புடன் சேர்ந்து உலகிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய உலோகங்களில் ஒன்றாக இது மாறியது.
மொத்தம் 22 கருவிகளுக்கு காப்புரிமை பெற்றார். இவற்றில் பெரும்பாலானவை அலுமினியத்தால் ஆனவை.
அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் நுட்பத்தைக் கண்டுபிடித்ததன் மூலம், மனித வரலாற்றில் உலோகங்களின் பயன்பாட்டு வரலாற்றையே மாற்றியமைத்த சார்லஸ் மார்ட்டின் ஹால் 51-வது வயதில் (1914) மறைந்தார்..
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 6
ருக்மிணி லட்சுமிபதி பிறந்த தினம்
டிசம்பர் 6
இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி. இந்திய தேசிய காங்கிரசில் இருந்தவர். சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்எல்ஏ மற்றும் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமை பெற்றவர்.
சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். இவரது கணவர் டாக்டர் அசண்ட லட்சுமிபதி. கடந்த 1926-ல் பாரிசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை மாநாட்டில் கலந்து கொண்டார். உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் இவர்தான். சென்னை எழும்பூரில் உள்ள மார்ஷல் சாலைக்கு ‘ருக்மிணி லட்சுமிபதி சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் நினைவாக 1997-ல்அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*













