⛪️➕புனித அந்தோனியார் பாடல்கள்🎶
10K Posts • 4M views
Y MARIA AROCKYAM
9K views
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪️➕புனித அந்தோனியார் பாடல்கள்🎶 10 சனவரி 2026, சனி திருக்காட்சி விழாவுக்குப் பின் சனி முதல் வாசகம் நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21 அன்பார்ந்தவர்களே, நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு. பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச் செய்வோருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என நான் சொல்லவில்லை. தீச்செயல் அனைத்துமே பாவம். ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல. கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும். இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு. பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஆண்டவரின் அருள்வாக்கு. பதிலுரைப் பாடல் திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a) பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா. 1 அல்லேலூயா, ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக. - பல்லவி 3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப் படுத்துவார். - பல்லவி 5 அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6a அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும். 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா! - பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 4: 16 அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா. நற்செய்தி வாசகம் மணமகனின் தோழர் அவர் சொல்வதைக் கேட்டு பெருமகிழ்வடைகிறார். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30 அக்காலத்தில் இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார். யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்று வந்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது. ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது. அவர்கள் யோவானிடம் போய், “ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்” என்றார்கள். யோவான் அவர்களைப் பார்த்து, “விண்ணிலிருந்து அருளப்படா விட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. ‘நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்” என்றார். ஆண்டவரின் அருள்வாக்கு.
120 likes
1 comment 152 shares