*இன்று* (11-5-2025) *நரசிம்ம*
*ஜெயந்தியை* *முன்னிட்டு*
*சிறப்பு பதிவு*!
“சுமார் 300 வருடங்களுக்கு முன்பு வரை சிங்க கர்ஜனை செய்து வந்த 16 திருக்கரங்களுடன் கூடிய அபூர்வ நரசிம்மரை தரிசனம் செய்ய விரும்புகிறீர்களா?
வாருங்கள் கீழப்பாவூருக்கு”!
இந்தியாவில் மூன்று இடங்களில் தான் நரசிம்மர்
16 திருக்கரங்களுடன் காட்சி தரும் ஆலயங்கள் உள்ளது.
ஒரு ஆலயம் இராஜஸ்தான் மாநிலத்திலும் மற்றொரு ஆலயம் பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி என்ற இடத்தில்
சிறு குன்றின் மீதும் உள்ளது.
மூன்றாவது கீழப்பாவூரில் மட்டுமே சமதளப் பகுதியில்
16 திருக்கரங்களுடன் அருள்புரியும் நரசிம்மர்
ஆலயம் அமைந்துள்ளது.
இந்தியாவிலுள்ள
16 திருக்கரங்களுடன்
காட்சி தரும் நரசிம்மர் ஸ்தலங்களுள் முதன்மையானது
கீழப்பாவூர்.
இங்கு நரசிம்மர் நிரந்தரமாக குடிகொண்டு அருள் பாலித்து வருவதே அதற்கு காரணம்.
நரசிம்மர் எப்படி இங்கே வந்தார்?
அது, தெய்வ சங்கல்பம்!
அரியாய் அவதரித்து
அசுரனின் கதை முடித்து,
பக்த பிரகலாதனை ரட்சித்த நரசிம்மப் பரம்பொருள், கால காலமாய் பூவுலகிலேயே வீற்றிருந்து உலக மாந்தர்களையும் ரட்சிக்கத் திருவுளம் கொண்டது.
ஒரு கணம் தரிசிக்க, உன்னத பலன்களை அள்ளித் தரும் அற்புதமாம் தமது ஸ்ரீநரசிம்மத் திருமேனியை பூவுலகமெங்கும் நிலைநிறுத்த முடிவுசெய்தது.
பில்லி சூனியம் அகற்ற, பிறவிக்கடனும் பொன்
பொருள் கடனும் இன்றி தம் அன்பர்கள் யாவரும் வாழ்வில் சுபிட்சம் பெற, பூதலத்தில் பல்வேறு தலங்களில் கோயில்கொண்டு அருள்மாரிப் பொழிவது எனத் தனக்குள் சங்கல்பித்துக்கொண்டது.
அதற்காக, 'அகோபிலம்' முதற்கொண்டு... இந்தப் புண்ணிய பூமியில் பரம்பொருள் தேர்ந்தெடுத்த திருத்தலங்களும் கோயில்களும் ஏராளம்.
முன்பொருமுறை பிரகலாதவரதனாய் பெருமாளைத் தரிசிக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான
ஆண்டுகள் தவமியற்றிய மகரிஷி காச்யபர், தேவரிஷி நாரதர், மழைக் கடவுள் வருணன் மற்றும் சுகோஷன் ஆகிய நால்வருக்கும் காட்சி தந்த பெருமாள், ''பொதிகை மலைக்கு 40 கல் தொலைவில் வடக்கே உள்ள சித்ரா நதிக்கரைக்குச் சென்று தவத்தைத் தொடருங்கள்; உங்கள் விருப்பம் நிறைவேறும்'' என்று அருளியிருந்தார்.
அதன்படியே, இந்தத்
இடத்துக்கு வந்து
மகரிஷி காச்யபர்,
தேவரிஷி நாரதர்,
மழைக் கடவுள் வருணன் மற்றும் சுகோஷன் ஆகிய நால்வரும் கடுந்தவத்தில் லயித்திருந்தார்கள் !
புலனடக்கி மெய்தவத்தில் ஆழ்ந்துபோன இந்த நால்வரது மனதிலும் ஸ்ரீமந் நாராயணனே நிறைந்திருந்தார்.
ஒருமுறை சொல்ல பலகோடி புண்ணியம் தரும் எட்டெழுத்து மந்திரத்தைப் பிசிறின்றி அவர்களின் உதடுகள் உச்சரிக்க... பொதிகை மலைச் சாரலெங்கும் எதிரொலித்த அந்த மந்திர ஒலி, வைகுண்டத்தின் கதவுகளையும் தாண்டி பரந்தாமக் கடவுளின் திருச்செவிகளை எட்டியது!
நால்வரது தவத்தைக் கண்டு மனமிரங்கிய மாலவன், மண்ணில் இறங்கினார்... ஸ்ரீநரசிம்மமாக!
ஆமாம்... பிரகலாதவரதனாய் பெருமாளைத் தரிசிக்க வேண்டும் என்பதுதானே அவர்களது ஆசையும் விருப்பமும்!
அதற்காகத்தானே இந்தக் கடுந்தவம்!
இதோ, அவர்களது விருப்பம் நிறைவேறி விட்டது!
விண்ணும் மண்ணும் அதிரும்படியான சிம்ம கர்ஜனையை கேட்டுக்
கண்விழித்த நால் வரும்,
மண் தோய வீழ்ந்தனர்.
நெடுஞ்சாண் கிடையாக நெடுமாலை வணங்கி
எழுந்த வர்கள், மீண்டும்
ஒரு வரம் கேட்டனர்.
''பரம்பொருளே! எங்களுக்குக் கிடைத்த இந்த பாக்கியம்,
உலக மாந்தர்களுக்கும் கிடைக்கவேண்டும்.
இந்தத் திருவுருவத்துடன் இங்கேயே கோயில்
கொள்ள வேண்டும்.''
இப்போது பகவானின் விருப்பம் நிறை வேறியது அடியவர்களது வேண்டுதல்படி...
இல்லை இல்லை...
தனது ஆசைப்படி அந்தத் தலத்திலேயே திருக்கோயில் கொண்டார் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி.
அந்தத் திருத்தலம் தான், கீழப்பாவூர்.
காச்யப மகரிஷி, தேவரிஷி நாரதர்,வருண பகவான், சுகோஷன் முனிவர் ஆகிய ரிஷிகளின் தவத்தை ஏற்று ஸ்ரீதேவி, பூதேவிகளுடன்
மகா உக்ர மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் தரிசனம் தந்தார்.
மேலும் ரிஷிகளுக்கு காட்சி கொடுத்த இடத்திலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார்.
(இந்த சிறப்பு வேறெந்த ஸ்தலத்திற்கும் கிடையாது).
இப்படிபட்ட அதிக புண்ணியம் நிறைந்த ஷேத்திரம் கீழப்பாவூர் ஆகும்.
சுமார் 300 வருடங்களுக்கு முன்பு இவர் மிகுந்த ஆக்ரோஷத்துடன் திகழ்ந்த தாகவும், அந்திசாயும் நேரத்தில் இந்த ஆலயப் பகுதியில் சிம்மம் கர்ஜிக்கும் ஓசையை தங்களின் முன்னோர்கள் பலர் கேட்டிருக்கிறார்கள் என்றும் பயபக்தியுடன் விவரிக்கிறார்கள்
உள்ளூர் பக்தர்கள்.
நாளடைவில் ஸ்ரீமகாலட்சுமித் தாயாரை ஸ்வாமியின் மார்பில் ஆவாஹனம் செய்து, தினமும் அபிஷேகம் ஆராதனைகள் எனச் செய்துவர, சீற்றம் குறைந்து, கருணா மூர்த்தியாக அருள்பாலிக்கிறாராம் இந்த ஸ்வாமி.
இந்தத் தலத்தை பாண்டிநாட்டு அகோபிலம் எனப் போற்றுகிறார்கள் பக்தர்கள்!
ஸ்ரீநரசிம்மர் ஆலயம்
என்றே வழங்கப்பட்டாலும்,
ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதியையும் இங்கே தரிசிக்கலாம்.
கருவறையில், பத்மாவதித் தாயாருடன் அருள்பாலிக்கிறார் இந்தப் பெருமாள்.
ஆதிகாலத்தில் அலர்மேலுமங்கைத் தாயார் மற்றும் பத்மாவதித் தாயாருடன் இவர் அருள்பாலித்தவராம்.
தற்போது, அருகில் பத்மாவதித் தாயாரை மட்டுமே தரிசிக்கமுடிகிறது.
கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அலர்மேலுமங்கைத் தாயாரின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யவும் முயற்சிகள் நடைபெறுகின்றனவாம்.
ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி பெருமாளுக்கு திருவோண நட்சத்திரத் திருநாள் விசேஷம்.
இந்த தினத்தில் இங்கு வந்து பெருமாளைத் தரிசிக்க, எண்ணிய காரியம் ஈடேறும் என்பது நம்பிக்கை.
கருடாழ்வார், ஸ்ரீவிஷ்ணுதுர்கை
ஆகிய தெய்வத் திருவுருவங்களையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம்.
ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதிக்குப்
பின்புறம் அதாவது மேற்குத் திசை நோக்கி தனி சந்நிதியி்ல் அருள்புரிகிறார் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி.
புடைப்புச் சிற்பமாக, பதினாறு திருக்கரங்களுடன் திகழும் ஸ்ரீநரசிம்மரைத் தரிசிக்கும்போதே, உடலும் உள்ளமும் சிலிர்க்கிறது.
இந்த நரசிம்ம மூர்த்தி, ஆக்ரோஷத்துடன் இரண்யனை தன் மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
ஸ்வாமியின் தலைக்கு மேல் வெண்குடை மற்றும் சாமரம்.
ஸ்ரீநரசிம்மருக்கு அருகில் பிரகலாதன், அவனுடைய தாயார், காச்யப முனிவர் மற்றும் காசி மன்னன் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகியவற்றாலும் சிறப்பு
பெற்ற இவ்வாலயத்தில்
வருடம் முழுவதும் தரிசனம் செய்யலாம்.
எந்த வித பயமும் சிரமும் தயக்கமும் இன்றி நேரில்
வந்து தரிசனம் செய்யும் விதத்தில் கோவில் அமைந்துள்ளது.
வயல்கள், தென்னந்தோப்புகள், குளங்கள் சூழ்ந்த வேளாண்மைப் பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த, தென்றல் தவழும் பசுமையான, அமைதியான பகுதியில் நரசிம்மர் வீற்றிருக்கிறார்.
இந்த இடத்தில் நரசிம்மருக்கு எப்போது, யாரால் ஆலயம் அமைக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
எனினும் 1200 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளது.
சோழ, பாண்டிய மன்னர்கள் இத்திருக்கோவிலுக்கு நிலங்கள் வழங்கிய தகவலை இக்கோவிலில் உள்ள
42 கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
மாற வர்மன் திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டியன் தான் ஆட்சிக்கு வந்த ஏழாவது ஆண்டில் இத்திருக்கோவிலுக்கு நித்ய பூஜைகளுக்கு நிலங்கள் வழங்கியுள்ளான்.
சடையவர்மன் ஸ்ரீவல்லப தேவன்,முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன், முதலாம் மாறவர்ம குலசேகர பாண்டியன் ஆகியோரது பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
சோழர் காலத்தில் இவ்வூர் ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்றும் சோழ மன்னனின் மனைவியான அறிஞ்சிகை பிராட்டியின் பெயரில் அறிஞ்சிகை பிராட்டி சதுர்வேதி மங்கலம் என்றும் குறுமரை நாடு, முனைமோகர் பாகூர், சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டுள்ளது.
நரசிம்மர் தீர்த்தம்
நரசிம்மர் சன்னதி முன்பாகவே அவருடைய உக்ரத்தை தணித்த மாபெரும் தெப்பக்குளம் உள்ளது.
சன்னதி முன்பாகவே தெப்பக்குளம் அமைந்திருப்பது தனிப்பெருஞ்சிறப்பாகும்.
இது நரசிம்மர் தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.
வைகானஸ பகவத் சாஸ்திரப்படி கங்கையாக கருதப்படும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் கங்கையில்
குளித்த பலன் கிட்டும்.
மேலும் மனக்கவலை, பதற்றம், கோபம், தோல் வியாதியும் குணமாகும்.
கல்யாணத் தடை, கடன் தொல்லை, கோர்ட் வழக்கு, நீண்ட நாள் நோய் ஆகியவற்றுக்கு இங்கே பரிகாரம் செய்து பலன் பெறுகிறார்கள்.
சுவாதி நட்சத்திரந்தோறும் இங்கே விஷேச பூஜை நடத்தப்படுகின்றது.
நரசிம்மர் அவதரித்தது சுவாதி நட்சத்திரம் ஆகும்.
சுவாதி நட்சத்திரத்தன்று வழிபட்டால் வாயுவேகத்தில் வந்து பாதுகாத்து அருள்புரிவார் நரசிம்மர்.
சுவாதி நட்சத்திரந்தோறும் மாலை வேளையில்
தொடர்ந்து வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கி, செல்வச் செழிப்பு ஏற்படும்.
வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும்.
மேலும் ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும்
தடைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
பில்லி, சூனியம், ஏவல், செய்வனை, எதிரி தொல்லை ஆகியவை நீங்கும் .
சுவாதி நட்சத்திரத்தன்று மாலை 3.30 மணிக்கு 16 வகை மூலிகைகளால் நரசிம்மரின் மூலமந்திர ஹோமம் நடக்கிறது.
அடுத்து விஷ்ணு சூக்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெறுகிறது.
மாலை 4.30 மணிக்கு பால், இளநீர், திரவியப் பொடிகளில் அபிஷேகம் நடக்கிறது.
ஹோமத்தில் கலந்து கொண்டால் வாழ்வில் ஏற்படும் அனைத்து கஷ்டங்களும் நீங்கி விடும்.
கடன் தொல்லை அகற்றும் நீராஞ்சன தீப வழிபாடு.
செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியை தரிசிப்பதுடன், தாம்பூலத் தட்டில் பச்சரிசி பரப்பி வைத்து,
அதன் மீது உடைக்கப்பட்ட தேங்காயின் இரு மூடி களிலும் நெய் நிரப்பி நீராஞ்சனம் என்னும் தீபம் ஏற்றி வைத்து,
16 முறை வலம் வந்து வழிபட விரைவில் கடன் பிரச்னைகள் நீங்குகிறது.
வழிபட உகந்த நாள்
செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும், மாலை வேளையும் நரசிம்மரை வழிபட உகந்ததாகும்.
பிரதோஷம், திருவோணம், வளர்பிறை சதுர்த்தி, நரசிம்ம ஜெயந்தி, தமிழ்மாத கடைசி சனிக்கிழமை, புரட்டாசி சனிக்கிழமை ஆகிய
நாட்களில் நடைபெறும்
விஷேச பூஜைகளிலும் வழிபடலாம்.
ஆலய இருப்பிடம் : திருநெல்வேலி – தென்காசி சாலையில், திருநெல்வேலியில் இருந்து மேற்காக 40 கி.மீ தூரத்திலும் தென்காசியில் இருந்து கிழக்காக 10 கி.மீ.தூரத்திலும் உள்ளது,பாவூர்சத்திரம்
என்னும் ஊர்.
இங்கிருந்து சுரண்டை
செல்லும் வழியில் 2 கி.மீ அருகில் கீழப்பாவூர் அமைந்துள்ளது.
நடைதிறப்பு
காலை 7.30–11.30மாலை 5.00–8.00
தொடர்புக்கு
இரா.ஆனந்தன் அர்ச்சகர்
9442330643,கி.ஸ்ரீமுருகன் 994117896
நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்
நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் ஏதோ தடங்கல், இடைஞ்சல் வந்து அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டதா?
அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்.
இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.
பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!
தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!
நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே!
லட்சுமி நரசிம்மனே!
உனது திருவடியைச் சரணடைகிறேன்.
16 திருக்கரங்களுடன்
காட்சி தரும் நரசிம்மர் ஸ்தலங்களுள்
முதன்மைத்தலமான
கீழப்பாவூர் அபூர்வ நரசிம்மர் படம் கீழே!👇🚩🕉🪷🙏🏻
#🙏 லட்சுமி நரசிம்மர் #நரசிம்மர் ஜெயந்தி #ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி #நரசிம்ம ஜெயந்தி #🙏 ஸ்ரீ லெட்சுமி நரசிம்மர்🕉️💛💙