ராமனோடு நடப்போம்...(69)
"...இப்படி எனது விருப்பத்தை மட்டும் இவனிடம் சொன்னால் போதாது..
என்னை மணப்பதால் இவன் அடையவிருக்கும் நன்மைகளையும் எடுத்துச் சொன்னால்தான் இவன் இணங்கிவருவான்..."
...என்றெண்ணிய ஸூர்ப்பணகை ராமனை நோக்கி,
"ஹே அழகனே!..
என்னை நீ ஏற்றாயானால், நீ எண்ணற்ற நன்மைகளை அடைய முடியும்..
முதலில் எனது ஸஹோதரன் ராவணன் உனக்கு உறவினனாவான்...
...அவன்மட்டும் உனக்கு உறவினன் ஆனால், இந்த மண்ணுலகையும், விண்ணுலகையும் நீ ஆட்சி செய்யலாம்..
...இந்த உலகமே உனக்கு அஞ்சி நடக்க ஆரம்பிக்கும்..
கேள்வி...விசாரணை இன்றி...உன் கட்டளைக்கு அனைவரும் கட்டுப்படுவர்.."
....என்று வார்த்தை சொன்னாள்..
...இதைக் கேட்டு...
இரண்டு கருமேகங்களுக்கு இடையே தோன்றுகிற மின்னல் கீற்று போல இருக்கின்ற தன் வெண்பற்களின் வரிசை தெரிய அழகாகச் சிரித்தான் ராமன்..
"நல்ல வார்த்தை சொன்னாய் பெண்ணே!..
உன்னை மணப்பதால், இத்தனை நன்மைகளா என்னைத் தேடி வரவிருக்கின்றன?..
எனில்...இந்தக் கானகம் வந்ததிலிருந்து நான் செய்து வந்த தவத்தின் பலனை, இனி நான் முழுமையாக அனுபவிக்க இருக்கிறேன் என்று சொல்..."
...என ஏளனமாய்ப் பதில் சொன்னான் ரகுவரன்..
அவனது இந்தப் பதில் எந்த நோக்கத்தில் சொல்லப்பட்டது என்று ஸூர்ப்பணகை யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
...பர்ணஸாலையினின்றும் வெளிப்பட்ட ஜானகி, ராமனின் அருகில் வந்து நின்றாள்...
...அவளின் பேரழகைக் கண்ட ஸூர்ப்பணகையின் கண்கள் கூசின...
"...யார் இவள்?..
....யாராக இருக்கக்கூடும்?..
அந்தப் பாற்கடல்வாஸனின் பத்னியானவள், இந்தப் பார் மீதுவந்து பாதம் பதித்தாளோ?..
மின்னல் இடை..
பின்னல் ஜடை...
...எல்லாமும் இந்த வனத்திலுள்ள அழகிய கொடிகளைக் கண்முன்னே கொண்டு நிறுத்துகின்றனவே!..
அடடா...இது என்ன?..
அந்த நயவஞ்சகனான ப்ரம்மன், இந்த ப்ரபஞ்சத்திலுள்ள அத்தனை அழகையும் திரட்டித்திரட்டி இவளைச் செய்திருப்பானோ?..
தாமரையை நாணச் செய்யும் முகமும்..
தரைமீது வரைந்த கோலமாய் இவள் இருபாதமும்...
...அரக்கியான என்னையே ஏதோ செய்கின்றனவே!..
பெண்களையே பித்தாக்கச் செய்கிற இந்தப் பேரழகியை...
இந்த அழகன் ஒருவேளை, தன் சொத்தாக்கிக் கொண்டிருப்பானோ?..
இல்லை..அப்படிஎல்லாம் இருக்காது!...
...என்னைப் போலவே இவனை அடைய ஆசைப்பட்டு, எனக்கு முன்னதாக இந்தக் கொடுங்கானகத்திற்குள் நுழைந்தவளாகத்தான் இவள் இருக்க வேண்டும்!..
எனக்குப் போட்டியாக வந்திருக்கும் இவளைப்பற்றி ஏதேனும் அவதூறு சொல்லி, இப்பொழுதே இங்கிருந்து இவளைத் துரத்தியாக வேண்டும்..
அப்பொழுதுதான் இவன் பார்வை என்பக்கம் திரும்பும்..."
..என்று தனக்குள் பேசிக்கொண்ட ஸூர்ப்பணகை, தற்சமயம் ராமனிடம்...
"ஹே மன்மதா!..
உன்னருகில் இருக்கிற இப்பெண்ணைப் பார்க்கும்போதே, இவள் மாயச் செயல்களில் வல்லவள் என்று தெரிகிறது...
மாமிசத்தை உணவாகக் கொள்ளும் அரக்கியாகத்தான் இவள் இருக்க வேண்டும்..
உன்னை மயக்குவதற்காகவே அழகுருவம் எடுத்து வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது...
இவளைக் காணும்போது, எனக்கு மிகுந்த அச்சம் உண்டாகிறது..
இவளை முதலில் இங்கிருந்து விரட்டு..."
...என்று சொல்லி, மிரண்டவள்போல் நடித்தாள்..
இப்பொழுதும், ஸூர்ப்பணகையைக் கேலி செய்தான் ராமன்..
"அடடே, பெண்ணே!..
உனக்குத்தான் எத்தனை அறிவு!..
உள்ளது உள்ளபடியே ஒருவரை எடை போடுவதில் நீ வல்லவளாக இருப்பாய் என்று நினைக்கிறேன்..
நீ சொன்ன பிறகுதான், இவள் ஒரு அரக்கியாக இருக்கக்கூடும் என்று எனக்கும் தோன்றுகிறது..
இப்போது இவளை என்ன செய்யலாம் என்று நீயே சொல்.."
...மேற்படி ராமன் சொன்ன வார்த்தைகளில் ஒளிந்திருக்கிற ஏளனத்தை உணராத ஸூர்ப்பணகை,
...ராமன் தனது கருத்தை ஆதரிப்பதாக எண்ணி, ஸீதையைச் சாடினாள்..
"ஏ ராக்ஷஸீ....
எங்கிருந்தடி வந்தாய்?..
தம்பதியர் நாங்கள் அன்யோன்யமாய் வார்த்தையாடும்போது,
தடையாக இருக்கக்கூடாது என்ற இங்கிதம் அறியாதவளா நீ?..
இங்கிருந்து நீயாகப் போய்விடுவதுதான் உனக்கு நல்லது..
இல்லையெனில்...
உன்னை எப்படி விரட்டுவது என்றறிந்திருக்கும் நான்...அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியிருக்கும்..."
....அனலாய் வந்து விழுந்த அச்சமூட்டும் இந்த வார்த்தைகளைக் கேட்டு நடுங்கியவளாய்,
தன் அஞ்சன விழிகளிலிருந்து கண்ணீர் பெருக,
....ஜானகி, தனது ஒரே ஆதரவான ராமனின் திரட்சிமிகுந்த தோள்களை இறுகத் தழுவி,
...ஈருருவமும் ஓருருவம் ஆனதுபோல் தன்னவனோடு ஒன்றி நின்றாள்...
வளரும்... 🚩🕉🪷🙏🏻
#🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏சீதா ராமர் #ராமாயணம் #பக்தி கதைகள் #புராண கதைகள்