ShareChat
click to see wallet page

திரைப்படம் என்கிற பெயரில் ஒரு மகாகலைஞனின் மாசற்ற திறமைகளை நமக்கு முன் திரையிட்டுக் காட்டிய "தெய்வ மகன்" பார்த்த போது... அதில் "கண்களால் பேசுதம்மா" என்கிற உன்னதப் பாடலைப் பார்த்த போது... "அழ வைப்பவர்களைப் பிடிக்காது" என்கிற எனக்குள் திண்மையாய் இறுகிக் கிடந்த அனுபவ தத்துவம், தூள் தூளாய் நொறுங்கிப் போனது. ஒற்றை ஆள் ஒரு முறை அழ வைத்தாலே ஜென்மத்துக்கும் பிடிக்காமல் போகுமே.. முன்பெல்லாம்? இங்கே... ஒருவரல்ல.. இருவரல்ல..ஆறு பேர் நம்மை கதறக் கதற அழ வைக்கிறார்கள். ஆனால்... அத்தனை பேரையும் பிடிக்கிறது. 'காலம் சென்ற' அல்ல... 'காலம் வென்ற' நம் கவியரசர் தன் இதயப் பேனாவுக்குள் உண்மைப் பாசத்தை மையாய் ஊற்றிக் கொண்டு எழுதி, எழுதி அழ வைக்கிறார். பிடிக்கிறது. பாடலில் காட்டப்படும் விரிந்து பரந்த அந்த ஆலயத்தில் ஒரு அன்னையின், ஒரு பிள்ளையின் மனசுகளை இசையால் பேச வைத்து, மெல்லிசை மன்னர் அழ வைக்கிறார். பிடிக்கிறது. "பெண்ணோடு பேசுதம்மா..பெற்றெடுத்த வயிறு.." -அந்த "வயிறு" எனும் சொல்லைப் பாடும் போது நடுங்க விடும் குரலில், "இனம் புரியா.." என்று உச்சஸ்தாயியில் உயர்த்தும் குரலில் அமரர் சீர்காழியார் அழ வைக்கிறார். பிடிக்கிறது. இப்படி ஒரு உணர்ச்சிமயமான உருக்கும் பாடலை, கற்பனை செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், அதைக் காட்சியாக நம் கண்களில் விரித்து இயக்குநர் அமரர் ஏ .சி . திருலோக்சந்தர் அழ வைக்கிறார். பிடிக்கிறது. அம்மா வேஷமே போடுவதால் "பண்டரிபாய்" இல்லை, " பண்டரித்தாய்" என்று நண்பர்கள் சிலர் கேலி செய்வார்கள். இந்தப் படம் பார்த்த பிறகு அவர்களைக் கண்டித்திருக்கிறேன். சொல்லத் தெரியாத பிள்ளைப் பாசத்தை,நொண்டியடிக்கும் ஒரு தவிப்பு நடையால் விளக்கி பண்டரிபாய் அம்மா அழ வைக்கிறார். பிடிக்கிறது. ஊமையில்லை.. ஆனால் பேச, பாட வார்த்தையில்லை. ஒரு இயக்குநரின் சிந்தனையில் உதித்த பாத்திரத்தை அப்படியே தன்னிலிருந்து வெளிக்காட்டும் திறமைக்கு ஈடு இணையில்லை. நம் நடிகர் திலகம்- படத்தின் தலைப்பை நிஜமாகவே நிரூபிக்கும் தெய்வ மகன். தெய்வ மகன்- பிறப்பிலிருந்தே பெற்ற தாயைப் பிரிந்திருக்கிறவன் இவ்வாறுதானிருப்பான் என்று காட்டுகிறார். பிடிக்கிறது. அகல விரித்த கண்களின் வழியாக, அன்பே உருவான அன்னையை விழுங்கப் பார்க்கும் செயலால் அய்யன் அழ வைக்கிறார். பிடிக்கிறது. சுடர் மினுக்கும் தூணுக்குப் பின்னால் நின்று உதடு பிதுக்கி அழுது அழ வைக்கிறார். பிடிக்கிறது. அய்யன் தன் முகத்தை ஒரு பாத்திரம் போலாக்கி, அன்பை யாசித்து அழ வைக்கிறார். பிடிக்கிறது. வரிசையில் கடைசியில் நின்று கை நீட்டி யாசிக்கையில், அன்னை கை நிறைய அள்ளித் தந்த நாணயங்களை சிதற விட்டு, அன்னையின் திருமுக அழகை மனசுள் சேகரிக்கிற பாச யதார்த்தத்தில் அய்யா அழ வைக்கிறார். பிடிக்கிறது. #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥

1.6K ने देखा
10 घंटे पहले