சிவமணியம்
ஆச்ரமத்தில் கட்டப்படும் கட்டடங்களுக்கு எல்லாம்,
பகவான் தரிசனத்துக்கு வரும், எத்தனையோ எஞ்சினியர்கள்,
எத்தனையோ விதமா பிளான்
போட்டு கொடுப்பார்கள்.
அதை எல்லாம் நடைமுறைப்படுத்த முடிவதில்லை. ஒரு முறை பகவானிடம் ப்ளான்களை காட்டி, எப்படி கட்ட வேண்டும் என்று கேட்டதற்கு பகவான் பிளான்களை பாத்தும்
பாக்காமலும்:
பகவான்: எந்தப் பிளான் படி எது நடந்தது ? இந்த வேலைகள் எல்லாத்துக்கும், எல்லாப் பிளானும் போட்டுதான் இருக்கு. அது, அது, அந்தந்த வேளை வரும்போது எல்லாப் பிளானும் அப்போ தீர்மானம் பண்ணி நடக்கப்போறது.
கேள்வி: முன் ஜென்மத்துல நாங்க யார்? எப்படி இருந்தோம் ? பூர்வ ஜென்ம வரலாறு ஏன் தெரியலை?
பகவான்: போன ஜென்மத்தோட கதை இருக்கட்டும். இந்த ஜென்மத்திலே நான் யார்ன்னு தெரிஞ்சுகொண்டா போதும்.
ஜென்ம வரலாறுகளை எல்லாம் கடவுள் ஜீவர்கள் மேலே இருக்கற கருணையாலே மறைச்சு வச்சுருக்கார். ஏன்னா ஒருத்தனுக்கு நான் புண்ணியவான்னு தெரிஞ்சா... இப்போ ரொம்ப கர்வம் வரும். நான் பாவின்னு தெரிஞ்சா... ஐயோ! நான் பாவி, எப்படிக் கடைத்தேறுவேன்னு ஏங்கி, மேலே போகமாட்டான். அதனாலே பூர்வ ஜென்ம வரலாறு தெரியாம இருக்கறதே நல்லது. உள்ள ஏற்பாடே உயர்ந்த ஏற்பாடுதான்.
ஒருநாள் காலையில் பகவான் சொன்னது.
பகவான்: ஒரு காரியத்தை ஒருத்தன், ஒரு தடவை பாத்ததனாலேயோ, கேட்டதனாலேயோ மட்டும் சரியா செய்ய முடியாது. சின்னக் காரியத்துக்கே விடாம நல்லா செஞ்சு வந்தாலும், சில சமயம் தப்பாகறது. சாதாரண காரியத்துக்கே இப்படின்னா ஒரு தடவை மாத்திரம் நான் ஆன்மான்னு தெரிஞ்சுக்கறதனாலேயோ, குருகிட்டே கேட்டதனாலேயோ மட்டும் ஒருத்தன் தன்னைத் தெரிஞ்சுக்க முடியாது.
கேள்வி: புருவ மத்தியில லட்சியம் வச்சு தியானம் பண்ணச் சொல்றாங்களே! அது சரியா?
பகவான்: எல்லோருக்கும் நான்கறது நல்லாத் தெரியும். அதை விட்டுட்டு இறைவனைத் தேடறா. புருவமத்தியிலே தியானம் பண்றதாலே என்ன பிரயோஜனம்? புருவமத்தியிலேதான் கடவுள் இருக்கார்ன்னு சொல்றது முட்டாள்தனம். அதோட நோக்கம் ஏகாக்கிரத்துக்காக இருக்கலாம். ஆனாலும் அது முரட்டு வழி 'நான் யார்? விசாரணைதான் ஞானத்துக்கு சிறந்தது.
கேள்வி: ஏதும் நியமம்.
பகவான்: மித சாத்விக ஆகாரம்.
கேள்வி: எந்த ஆசனம் சிறந்தது?
பகவான்: நிதித்தியாசனம்.
கேள்வி: வாழ்க்கையோட அர்த்தம் என்ன?
பகவான்: வாழ்க்கைக்கு அர்த்தம் என்னன்னு தேடறதே பூர்வ புண்ணியத்தாலேதான். இதைத் தேடலேன்னா வாழ்க்கை வீண்.
கேள்வி: விசார சங்கிரகம் நூல்ல ஒருத்தன் ஒரு முறை ஆத்மாவை இன்னதுன்னு தெரிஞ்சனாலையே முக்தனாக மாட்டான். வாசனைகள் அவனை விடாதுன்னு எழுதியிருக்கீங்க.
நீங்க அந்த நூல்லே குறிப்பிடறது ஞானியோட அனுபவம் தானே! ஏன் பலன்ல வித்தியாசம் ஏற்படுது?
பகவான்: அனுபவம் ஒண்ணுதான். எல்லாரும் தெரிஞ்சோ, தெரியாமலோ ஆத்மாவையேதான்
அனுபவிக்கறோம். அஞ்ஞானியோட ஆத்மானுபவம் அவனோட வாசனைகளாலே மறைக்கப்பட்டிருக்கும். ஞானிக்கு அப்படி இல்லை. அதனாலே ஞானியோட அனுபவம் தனி. அது நித்யம்.
ஒரு சாதகனுக்கு நீண்ட அப்பியாசத்துக்கு பிறகு ஆத்மானுபவத்தோட சாயல் தெரியும். அது கொஞ்ச நேரந்தான் இருக்கும். அவனோட பழைய வாசனைகளாலே அலைக்கழிக்கப்பட்டு, அந்த அனுபவம் போயிடும். அவன், அவனோட மனனத்தையும், நிதித்தியாசனத்தையும் எல்லா வாசனையும் அழியற வரைக்கும் தொடரணும். அப்புறம் தன்னோட ஸ்வபாவ ஸ்திதியிலே அவனாலே எப்பவும் நித்தியமா இருக்க முடியும்.
கேள்வி: ஒருத்தன் எதுவும் தெரியாம அஞ்ஞானியா இருக்கான். இன்னொருத்தன் இப்போ சொன்ன மாதிரி ஒரு முறை ஆத்மானுபவம் கிடைச்சும், அஞ்ஞானியா இருக்கான். இரண்டு பேருக்கும் என்ன வித்தியாசம் ?
பகவான்: ஒருமுறை ஆத்மானுபவம் கிடைச்சவனிடம் முழுமையான ஞானம் வர்ற வரைக்கும் முயற்சி இருந்துகொண்டே இருக்கும்.
கேள்வி: பிரம்மத்தை ஒரு முறை உணர்ந்தா அந்த ஞானம் எப்பவும் இருக்கும்ன்னு சுருதிகள் சொல்லுதே!
பகவான்: முழுமையான ஞானத்தையே சொல்றது.
கேள்வி: மனசை எப்படி நல்ல வழியிலே வச்சுக்கறது?
பகவான்: அப்பியாசத்தாலே... நல்ல சிந்தனையாலே... மனசை நல்ல வழியிலே பழக்கறதுனாலே...
கேள்வி: ஆனாலும் அது நிலையாயில்லையே!
பகவான்: பகவத் கீதை மெல்ல மெல்ல கொண்டு வரச் சொல்றது.
அப்பியாசம் அவசியம்.
பலன் காலக்கிரமத்திலே மெதுவா வரும்.
கேள்வி: ஆத்ம ஸமஸ்தம்ன்னா என்ன? யார் இந்த ஆத்மா?
பகவான்: உங்களை உங்களுக்குத் தெரியுமா?
நீங்க இருக்கேளே...! இல்லே... நீங்க இருக்கறதை மறுக்கறேளா?
நீங்க இல்லேன்னா... யாரு இந்த ஆத்மான்னு கேக்கலாம்.
நீங்க இல்லாமே எதையும் கேக்க முடியாது.
உங்களோட கேள்வியே நீங்க இருக்கறதைச் சொல்றது.
நீங்க யார்ன்னு கண்டுபிடிங்கோ! அவ்வளவுதான்.
கேள்வி: நான் வேத சாஸ்திரங்களை நிறைய படிச்சுட்டேன். என் மனம் ஆத்மாவிலே அடங்கலே. எனக்கு ஏன் ஆத்மஞானம் வரலை?
பகவான்: சாஸ்திரத்திலே ஆத்மஞானம் இருந்தாத்தானே ஆத்ம ஞானம் வரும். சாஸ்திரத்தைப் படிச்சா சாஸ்திர ஞானம்தான் வரும். ஆத்மாவை படிச்சா ஆத்ம ஞானம் வரும்.
பக்கம்:542 - 545
அப்பனே
அருணாசலம்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய.! 🚩🕉🪷🙏🏻
#பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #🙏ஆன்மீகம் #மண்ணில் வாழ்ந்த மகான்கள்