*ஆருத்ரா தரிசனம்-என்ன செய்ய வேண்டும்*🌹
ஒவ்வொரு தமிழ் மாதப் பெளர்ணமியும், பெரும்பாலும் ஒரு நட்சத்திரத்தை ஒட்டி வரும். மார்கழி மாதத்தின் பெளர்ணமி திருஆதிரையை ஒட்டி வருகையில், ஆருத்ரா அபிஷேக நாளாக முதல் நாளும், ஆருத்ரா தரிசனமாக மறுநாளும் அமையும். ஆருத்ரம் என்பது அக்னி பூர்வமான ருத்ர சக்திகளை ஜீவன்கள் தரிசிக்கும்படியாக இளகித் தருகின்ற தெய்வீகத்வமும் ஆகும். மேலும், ஆருத்ரத்தில்தான் வேத பீஜ கோஷ சக்திகள் ஜீவன்களை வந்தடையும் வண்ணம் நன்கு பரிமளிக்கின்றன. இதில் ஒரு வகையாகத்தான் ஸ்ரீஆர்த்ர கபாலீஸ்வரராக கொடுமுடியில் சிவபெருமான் அருள்கின்றார்.
ஆருத்ர சக்திகள், ஈஸ்வரனுக்கு வலப் புறமாக அமைவது திருமணக் கோலமன்றோ! இவ்வாறு இறைவன் ஆர்த்ர, ருத்ராம்பத சக்திகளோடு, வலப்புற அம்பிகைச் சன்னதியோடு அனைத்துலக, அண்ட சராசர ஜீவன்களுக்காக அருள்கின்ற கோலமே மயிலை ஸ்ரீகபாலீஸ்வர அவதாரமாகும். அதனால்தால் இத்தல வழிபடுதல் சிரசில் தேவசக்திகளின் விருத்தியை மேம்படுத்தும்.
அனைவருக்கும் தொப்புள் போல தலைச் சுழி நிச்சயமாக அமைந்திருக்கும். எவ்வாறு நாபியாகிய, தொப்புளானது அன்னையின் மணி வயிற்றில் அமர்ந்து வளர்ந்ததை நினைவுறுத்துகின்றதோ, இதே போல கபால நாபி எனப்படும் தலைச் சுழியானது தந்தையின் விந்து பிம்பத்தைக் குறிப்பதாகும். இதனால்தான் தலைக்கு எண்ணெயைத் தடவும் போது உள்ளங்கையில் நம் வீட்டுப் பெரியோர்கள் தைலத்தை ஊற்றி, உச்சந் தலையில் வைத்து சூடு பறக்கத் தேய்ப்பார்கள்.
தலைச் சுழியிலும் நிறைய ரேகைகள் உண்டு. உள்ளங்கை ரேகைகள் நன்கு படிய தலைச் சுழியில் அழுத்தி ரேக ஸ்பரிசத்துடன் தேய்க்கும்போது, ஒரு விதமான சூடு உண்டாகும். இந்தச் சூடு எழும் கபாலப் பகுதியே ஆர்த்ர கபாலமாகும். சிவபெருமான் பிரம்மனுடைய ஐந்தாவது சிரசின் பிரம்ம கபாலத்தை மறைத்த போது அது ஈஸ்வரனின் உள்ளங்கையில்தான் ஒட்டிக் கொண்டது. எனவே, பிரம்ம கபாலத்திற்கும் உள்ளங்கைக்கும் நெருங்கிய ஆன்மீகப் பிணைப்பு உண்டு.
திருவாதிரை தினத்தன்று வலது உள்ளங்கையை தலைச் சுழியின் மேல் வைத்து அதில் ஒருவிதமான ஆகர்ஷண ஓட்டமும், மிதமான உஷ்ணமும் தோன்றுவதை நன்கு கவனித்திடுங்கள். கபாலீஸ்வரர், குடுமீஸ்வரர் (குடுமியான்மலை), அபிமுகேஸ்வரர் (கும்பகோணம்), கூந்தலூரில் ஸ்ரீரோம மகரிஷி போன்ற கபால சக்தி நிறைந்த ஆலயங்களில் திருவாதிரை நட்சத்திர தினங்களில் வழிபடுதல் கபால நாளங்களை நன்கு ஆக்கப்படுத்தும். மேலும், எந்த ஆலயத்தில் சுவாமிக்கோ மூல லிங்கத்திற்கோ குவளை, கிரீடம், தலைப் பாகை சார்த்தப்படுகின்றதோ, இத்தகைய ஆலயங்களில் கபாலக் கனி என்று அழைக்கப்படும் தேங்காய்கள், பன்னிரெண்டால் ஆன மாலைகள் சார்த்தி வழிபடுதல் விசேஷமானது. மேலும் எவ்விதப் பிரார்த்தனையும் இன்றி சிதறு காய்களை அவ்வாலயங்களில் உடைத்தலும் கபால சக்திகள் விருத்தி அடைய வழிவகுக்கும்.
ஆருத்ரா தரிசனத் திருநாள் :
ஆருத்ரா அபிஷேக தினத்திற்கு அடுத்த நாள் வரும் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று திருஆதிரைக் களி என்பதாக, ஏழு அல்லது ஏழுக்குமேலான காய்கறிகள் கலந்த கூட்டுடன் இறைவனுக்குப் படைத்தளிக்க வேண்டிய முக்கியமான திருநாள். மோதகத்தின் ஒரு வகையான திருவாதிரைக் களி மிகவும் சுவையுடையது. மோதகக் குடும்பத்தைச் சார்ந்த இனிப்பு வகை ஆதலால், பிள்ளையாரின் ஆசீர்வாதமும் சேர்ந்து வருவதாகும்.
ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோச மங்கையில் உள்ள மரகத நடராஜர், எப்போதுமே சந்தனக் காப்பில் திளைப்பார். ஆருத்ரா அபிஷேக நாளில் மட்டும் சந்தனம் களையப் பெறும். வேதாரண்யத்தில், மூலத்தானத்தில் லிங்கத்திற்குப் பின்புறம் உள்ள கல்யாணக் கோல மூர்த்திகளும், சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் சிவலிங்க மூர்த்தியும் சந்தனக் காப்பை அணியும் ஒரு நாள் தவிர, வருடம் முழுதும் சந்தனக் காப்பில் திளைக்கும் மூர்த்திகள் ஆவர். இதே போன்று லால்குடி அருகே சாத்தமங்கலம் (சென்னிமங்கலம்), செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் இடையே உள்ள திருவடிச்சுரம் (திருவடிசூலம்) மற்றும் திருஈங்கோய்மலை ஆகிய இடங்களிலும் உள்ள மரகத லிங்க மூர்த்திகளுக்கான ஆருத்ரா அபிஷேக, ஆருத்ரா தரிசனங்கள் மிகவும் விசேஷமானவை.
மேலும், திருக்காறாயில், நாகப்பட்டிணம், திருவாரூர் போன்ற ஏழு சப்தவிடத் தலங்களில் உள்ள மரகத லிங்கத் தரிசனத்தோடு ஆருத்ர வழிபாடுகளை மேற்கொள்வது விசேஷமானது. திருஆதிரை நட்சத்திரத் தலமான அதிராம்பட்டினம் ஸ்ரீஅபய வரதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா வழிபாடுகளை மேற்கொள்தல், திருஆதிரை நட்சத்திர தேவதா மூர்த்திகளின் நேரடி அனுகிரகத்தைப் பெற்றுத் தருவதாகும்.
ஒவ்வொருவரும் தம் வீட்டில் சிறிய எளிமையான அளிவிலாவது சிறு சிறு இறைத் துதிகளை ஓதி, அபிஷேக ஆராதனைகளை மேற்கொண்டு வர வேண்டும்.
தினசரி இயலா விட்டாலும் வாரம் ஒரு முறையாவது நன்னீர், தேன், பால், தயிர், சந்தனக் குழம்பு போன்ற 12 வகையான அபிஷேக ஆராதனைகளை, சிறு லிங்க வடிவம், குரு பாதம், சிறு பிள்ளையார் மூர்த்திகளுக்கு உங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து செய்தலால், குடும்பத்தில் நல்ல மன அமைதி கிட்டும்.
சிறு அளவில் கைக்குள் அடங்குகின்ற மாக்கல் பிள்ளையாருக்குக் கூட அபிஷேக ஆராதனைகள் செய்வதும் சிறப்பானதே. மாவு லிங்கம், புஷ்ப லிங்கம், அன்ன லிங்கம் என்பதாக அரிசி மாவு, கோதுமை மாவு, பூக்கள், அரிசிச் சாதத்தால் லிங்க வடிவு அமைத்தும் வழிபட்டிடலாம். தரிசன நாளன்று விடியற்காலை, சூரிய உதயத்திற்கு முன்பே பிரம்ம முகூர்த்த காலத்தின் நிறைவுப் பகுதியில் சிவபெருமானை, நடராஜப் பெருமானைத் தரிசிப்பது ஆருத்ரா தரிசனமாகும். ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தைக் கண்ட பின், வீட்டிற்கு வந்து உடனேயே, வீட்டிலும் சிறிய அளவிலாவது அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்திட வேண்டும். ஆனால் வழக்கில் இதைப் பலரும் கடைபிடிப்பது கிடையாது.
ஆருத்ரா தரிசனத்தின் போது கபாலத்தில் தலைச் சுழியில் அபூர்வமான ஆகர்ஷண சக்திகள் எழுகின்றன. இவற்றை விரயம் செய்து விடாமல் உடல் நாளங்களில் ஈர்த்துக் கொள்ளவே ஆலய வழிபாட்டிற்குப் பிறகு, இல்லத்திலும் பூஜையைத் தொடர்வதாகும். உள்ளத்தில் ஆத்ம லிங்கம் ஒளிர்வதால், தினசரி தலைக்கு நீராடுவதையும் கூட ஆத்ம லிங்க அபிஷேகமாக, உத்தமத் தெய்வீக நிலைகளில் போற்றப்படுகின்றது.
அகமர்ஷண மந்திரங்கள் எனப்படுபவை நீராடும்போது ஓதப் பட வேண்டிய மிகவும் முக்கியமான மந்திரங்கள் ஆகும். நீராடும்போது கபால சக்திகள் விருத்தியாகும்படி மந்திரங்களை ஓதுதல் விசேஷமானது. தேங்காய், பூசனிக்காய், பரங்கிக்காய், சுரைக்காய், விளாம்பழம் போன்ற ஓட்டு வகை காய், கனிகளை, உணவுப் பண்டங்களை ஆருத்ரா தரிசன தினத்தன்று சிவலிங்கத்திற்குப் படைத்துத் தானமளித்தால், தன் சொல் பேச்சைக் கேட்காது எதிர்த்துப் பேசுகிறார்களே என்று தன் பிள்ளை, பெண்ணைப் பற்றிக் கவலைப்படும் தாய்மார்களுக்கு, நல்ல மன அமைதி கிட்ட வழி பிறக்கும்.🙏🌹
##ஆன்மீக தகவல்கள் 🕉️ #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்