ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.5K views
3 months ago
சிவமணியம் கேள்வி: அது எப்படி ஞானத்தை கூட்டுவிக்கும்? பகவான்: 'ஈஸ்வரோ குருரத்மேதி'. ஒருத்தனுக்கு முதல்லே அதிருப்தி ஏற்படும். உலகத்திலே திருப்தி இல்லாமே இறைவன்கிட்டே போனா ஆசைப்பட்டது கிடைக்கும்ன்னு கடவுள்கிட்டே பிரார்த்திப்பான். மனசு மெதுமெதுவா சுத்தமாகும். இப்போ உலக ஆசையைவிட இறைவன் மேலே பிரியம் ஜாஸ்தியாகும். இறைவனை அறிய விரும்புவான். உடனே இறையருள் வேலை செய்ய ஆரம்பிக்கும். கடவுள் குரு ரூபம் எடுத்து அவனுக்குத் தோன்றுவார். உண்மையைச் சொல்லிக் கொடுப்பார். அவருடைய சகவாசத்தாலேயும், போதனையாலேயும் மேலும் அவன் சித்தத்தைச் சுத்தம் பண்ணுவார். இப்போ மனசுக்குப் பலம் கிடைக்கும். உண்முகமா நிக்கப் பழகும். தியானத்தாலே மேலும் மனம் சுத்தப்பட்டு கடைசிலே சின்ன சலனமும் இல்லாமே சும்மாயிருக்கும். அந்தச் சும்மாயிருக்கும் ஸ்திதிதான் ஆத்மா. குரு உள்ளேயும் வெளியேயும் இரண்டிலேயும் இருப்பார். வெளியேயிருந்து மனத்தை உண்முகமா தள்ளுவார். உள்ளேயிருந்து ஆன்மாவை நோக்கி இழுப்பார். மனதை அமைதி அடையச் செய்வார். குரு அருள் இதுதான். குரு, கடவுள், ஆத்மா மூணும் வேறு, வேறு இல்லை. கேள்வி: எங்களுக்கு எப்படி உண்மையை உணர்றதுன்னு தெரியலை. எங்களுக்கு ஞானம் ஏற்பட கருணை புரியணும். பகவான்: எப்படித் தியானிப்பேள்? கேள்வி: நான் யார்ன்னு கேப்பேன். நான் உடம்பு இல்லை; நான் பிராணன் இல்லை; மனம் நான் இல்லை; அதுக்கு மேல போக முடியலை. பகவான்: நல்லது. அவ்வளவுதான் புத்தியாலே முடியும். புத்திபூர்வமா செய்றேள். எல்லா சாஸ்திரங்களும் வழி காட்டத்தான் முடியும். நேரடியாக் காட்டமுடியாது. நான்இது இல்லைன்னு எல்லாத்தையும் தள்ளிவிடறவனாலே அவனைத் தள்ள முடியாது. 'நான் இது இல்லை'; 'நான் இது இல்லை'; சொல்றதுக்கு ஒரு நான் வேணும். அந்த 'நான்'தான் அகந்தை அல்லது அஹம் விருத்தி. நான்கற எண்ணம் வந்த பிறகுதான் எல்லா எண்ணமும் வரும். அதனாலே இதுக்குப் பெயர் அஹம்விருத்தி. முதல் எண்ணம். இந்த முதல் எண்ணத்தை வேரறுத்தா எல்லாத்தையும் வேரறுத்த மாதிரி. அதனாலே இந்த நான்கற எண்ணம் எங்கிருந்து வர்றது? நான் யார்?ன்னு அதோட மூலத்தைத் தேடணும், இப்படித் தேடினா அந்த எண்ணம் மறைஞ்சு ஆத்மா ஒளிரும், அதாவது எப்பவும் இருக்கறது விளங்கும். கேள்வி: அதை எப்படிச் செய்யறது ? பகவான்: நான்கறது தூங்கும்போதும், கனவிலேயும், விழிப்பிலேயும் எப்பவும் இருக்கு. தூங்கும்போது இருந்த அதே நான்தான் இப்போ பேசறது. நான்கற உணர்வு எப்பவும் இருக்கு. நாம இருக்கறதை நம்மளாலே மறுக்க முடியுமா? யாரும் நான் இல்லேன்னு சொல்ல முடியாது. நான்ன்னு சொல்றேள் இல்லையா... அது யார்? கேள்வி: எனக்கு புரியலை. நான்கறது போலின்னு சொல்றீங்க. அதை எப்படி நீக்கறது? பகவான்: போலி 'நான்' கறதையெல்லாம் நீக்க வேண்டாம். போலி எப்படிப் போலியை நீக்கும்? நீங்க செய்ய வேண்டியது எல்லாம் நான்கறது எங்கிருந்து வர்றதுன்னு பாக்கணும். அங்கேயே இருங்கோ, உங்க முயற்சி இது வரைக்கும்தான் முடியும், அப்புறம் அது பாத்துக்கும். அங்கே ஒண்ணும் செய்ய முடியாது. எந்த முயற்சியும் அந்த இடத்தை அடையாது. கேள்வி: இங்கேயே இப்போவே நான் இருக்கேன்னா அது ஏன் எனக்கு தெரிய மாட்டேங்குது ? பகவான்: தெரியலேன்னு சொல்றது யாரு? எப்பவும் இருக்கற நான் சொல்றதா? இல்லை போலியா? விசாரிங்கோ! அது போலியா ஒருத்தன் கிளம்பி எனக்குத் தெரியலேங்கறான். அதுவே தடை. அதை நீக்கினாத்தான் எப்பவும் இருக்கறது துலங்கும். 'நான் இன்னும் உணரலே'ங்கற நினைப்புதான் பெரிய தடை.... உண்மையை உணர்றதுக்கு. உண்மை எப்பவும் உணரப்பட்டே இருக்கு. புதுசா எதையும் உணரத்தேவையில்லை. இல்லேன்னா... ஞானம்ங்கறது புதுசா எதையோ அடையறதுன்னு ஆயிடும். எது புதுசா வருதோ அது போயிடும். ஞானம் எப்பவும் இருக்கறதாயிருக்கணும். இல்லேன்னா அதுக்கு முயற்சி பண்றதுலே பிரயோஜனமில்லே. நாம தேடறது இனிமே புதுசா நமக்குத் தெரியப்போற விஷயம் இல்லை. ஏதோ நடக்கப்போறதும் இல்லை. எப்பவும் இருக்கறது... அஞ்ஞானத்தாலே மறைக்கப்பட்ட மாதிரி இருக்கு. அந்த அஞ்ஞானமே தடை. அஞ்ஞானம் நீங்கினா எல்லாம் சரியா வரும். அஞ்ஞானமும் நான்கற எண்ணமும் ஒண்ணுதான். அதோட மூலத்தைக் கண்டுபிடிங்கோ... ! அது மறைஞ்சிடும் நான்கற எண்ணம் பேய் மாதிரி. உடம்பு வர்றப்போவே பிடிச்சுக்கொண்டு கூடவே வரும். நல்லா வளரும், உடம்பு மறையறப்போ மறைஞ்சுடும். உடம்பை நான்னு நினைக்கறதுதான் போலி நான், தேகாத்ம புத்தின்னு சொல்றது. தேகாத்ம புத்தியை விடுங்கோ! மூலத்தைத் தேடறதாலேதான் இது நடக்கும். உடம்பு நான்ன்னு சொல்றது இல்லை. நாமதான் உடம்ப நான்ன்னு சொல்றோம். இந்த நான் யார்ன்னு கண்டுபிடிங்கோ! அது எங்கிருந்து வர்றதுன்னு பாத்தா மறைஞ்சுடும். கேள்வி: பிறகு ஆனந்தம் ஏற்படுமா? பகவான்: எப்பவும் இருக்கற நான்கற உணர்வு ஆனந்தமேதான். இருப்பு, உணர்வு, ஆனந்தம் இந்த மூணும் எப்பவும் இருக்கற நான்கறதோட அம்சம்தான். அப்போ ஆனந்தந்தான் நம்மளோட இயல்பே. அஞ்ஞானத்தாலே ஆனந்தம் மறைபட்ட மாதிரி தெரியறது. அஞ்ஞானம் நீங்கினா ஆனந்தம் தானே தெரியும். பக்கம்: 189 - 192. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #மண்ணில் வாழ்ந்த மகான்கள்