சுதந்திரப் போராட்ட வீரர்கள்
8 Posts • 19K views
mariappan kumaravel
590 views 15 hours ago
#சுதந்திரப் போராட்ட வீரர்கள் இதே நாளில்,சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் செப்டம்பர் 28, 1907ல் பிறந்தார். இவர் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது. முன்னதாக, 1919இல், தனக்கு பன்னிரெண்டு அகவையாகும்போது, பகத்சிங் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிட்டார்.தனது பதினான்காம் அகவையில் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 2௦ஆம் தேதியன்று குருத்வாரா நானா சாஹிபில் பல ஆயுதமற்ற மக்கள் கொல்லப்பட்டதை எதிர்க்க போராட்டக்காரர்களை வரவேற்றார். பகத்சிங் இளைய புரட்சி இயக்கத்தில் (Young revolutionary movement) இணைந்து அகிம்சைக்கு மாறாக தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முனைந்தார். பகத்சிங்கின் தாக்கம் இந்திய இளைஞர்களுக்கு தெம்பேற்றுவதைப் பார்த்து மே 1927இல் பகத்சிங்கை ஆங்கிலேய அரசு முந்தைய ஆண்டு அக்டோபரில் நடந்த குண்டு வெடிப்பில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாற்றி கைது செய்தது. பிறகு அவர் ஐந்து வாரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் ஒர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் ராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928இல் காலமானார். இச்செய்தி ஆங்கிலேய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, ஆங்கிலேய அரசு ராயின் மரணத்தில் எந்த பொறுப்பும் ஏற்கவில்லை. பகத்சிங் இச்சம்பவத்தை நேரில் காணவில்லை. என்றாலும் பழி வாங்க உறுதி பூண்டு சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரிடம் ஸ்காட்டைக் கொல்லக் கூட்டு சேர்ந்தார். இருந்தபோதிலும் , சிங்கிற்கு தவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர். மகாத்மா காந்தி இக்கொலைச்சம்பவத்தைக் கண்டனம் செய்தார். ஆனால் நேரு கூறியதாவது, "பகத்சிங் பிரபலமடைந்தது அவரின் பயங்கரவாதச் செயலுக்காக அல்ல, ஆனால் அவர் லாலா லஜுபது ராயின் மரியாதையை, மேலும் அவர் மூலம் நம் நாட்டின் மரியாதையையும் நிலைநிறுத்த முயற்சித்ததற்காகவே. அவர் செயல் மறக்கப்பட்டது, ஆனால் அவர் ஒரு விடுதலை போராட்ட சின்னமாக உருமாறினார்." சில மாதங்களிலேயே பஞ்சாபின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் மற்றும் சற்று சிறிய வீரியத்துடன் பிற வடக்கு இந்தியப் பகுதிகளிலும் அவரது பெயர் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. பகத்சிங்கின் தூக்குத்தண்டனை : பகத்சிங்கின் தூக்குத்தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குத்தண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார். "தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங்' என்ற இந்தி திரைப்படத்தில் இந்தத் தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையைப் பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குத்தண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.
10 likes
9 shares
mariappan kumaravel
586 views 5 days ago
#சுதந்திரப் போராட்ட வீரர்கள் இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார் - போரில் குயிலி என்ன ஆனார்? வேலு நாச்சியார், ஹைதர் அலியை 18 ஆம் நூற்றாண்டில் திண்டுக்கல் நகரில் சந்தித்தார். பூட்டுகளுக்கும், பிரியாணிக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டின் இந்த நகரம் அப்போது தென்னிந்தியாவின் மைசூர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வடக்கில் கிருஷ்ணா நதி, கிழக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கில் அரபிக் கடல் வரை நீண்டிருந்த மைசூர் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளராக ஹைதர் அலி இருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் பெரும்பாலான பகுதிகள் இப்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ளன. 1773 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் தனது கணவர் முத்து வடுகநாத பெரியஉடைய தேவர் மற்றும் தங்கள் சமஸ்தானமான சிவகங்கையை இழந்த பின்னர் வேலு நாச்சியார் தனது இளம் மகள் வெள்ளச்சியுடன் அடைக்கலம் மற்றும் ஆதரவைத் தேடிக் கொண்டிருந்தார் .ஹைதர் அலி மற்றும் வேலு நாச்சியாரின் சந்திப்பு பரஸ்பர மரியாதை நிரம்பிய காலகட்டத்தின் தொடக்கமாக இருந்தது. அதை அடுத்த தலைமுறையில் திப்பு சுல்தானும் பின்பற்றினார். வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலியின் உதவி கிடைத்தபோது, என்றென்றும் மறக்க முடியாததாக மாறிய மதிப்பும் மரியாதையும் அவருக்கு கிடைத்தது. இந்த மதிப்பு மரியாதை என்ன என்ற கேள்வியை விட்டுவிட்டு, வேலு நாச்சியார் யார், என்னென்ன சவால்களை எதிர்கொண்டார் என்ற தகவலை நாம் முதலில் பெறுவோம். இளவரசியில் இருந்து மகாராணியாக ஆன கதை; வேலு நாச்சியாரின் பெற்றோர், ராமநாதபுரம் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர்கள். 1730 இல் பிறந்த தங்கள் ஒரே குழந்தையான வேலுவுக்கு அவர்கள் குதிரை சவாரி, வில்வித்தை, வளரி மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி அளித்தனர். ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் உருது உட்பட பல மொழிகளில் அவருக்கு ஞானம் இருந்தது. வேலுநாச்சியாருக்கு 16 வயதான போது சிவகங்கை இளவரசருடன் அவருக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதியர் 1750 முதல் 1772 வரை அதாவது இருபதாண்டுகளுக்கும் மேலாக சிவகங்கையை ஆட்சி செய்தனர். கணவரின் கொலை மற்றும் ஹைதர் அலியுடன் சந்திப்பு; 1772-ஆம் ஆண்டு ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சிவகங்கையைத் தாக்கி 'காளையார் கோவில் போரில்' வேலு நாச்சியாரின் கணவரைக் கொன்றார். தாக்குதலின் போது ராணி வேலு நாச்சியாரும் அவரது மகளும் அருகில் உள்ள கோவிலில் இருந்ததால் உயிர் தப்பினர். வீரத்துடன் கூடவே விசுவாசமும் நிறைந்த மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் அவர்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். வேலு நாச்சியாரால் தன் கணவரின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை. ஹைதர் அ லியுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்க்க வேலு நாச்சியார் தீர்மானித்தார். அவர் வேலுநாச்சியாருக்கு மாதாந்திர உதவித்தொகையாக 400 பவுண்டுகள் மற்றும் ஆயுதங்களையும் கூடவே சையத் கர்க்கியின் தலைமையின் கீழ் 5,000 காலாட்படை மற்றும் குதிரைப்படையின் ஆதரவையும் வழங்கினார். "ராணி வேலு நாச்சியார், இந்தப் படையின் உதவியுடன் சிவகங்கையின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றத் தொடங்கினார். ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருச்சிராப்பள்ளி கோட்டையை 1781-இல் அவர் அடைந்தார்," என்று ஷூபேந்திரா எழுதுகிறார். "ஆங்கிலேயர்களுக்கு கூடுதல் ராணுவ உதவி கிடைக்காமல் ஹைதர் அலி தடுத்தார். ஆனால் ராணி வேலுநாச்சியாருக்கு கோட்டைக்குள் நுழைய வழி இருக்கவில்லை. உடையாளின் தியாகத்தின் நினைவாக, ராணி வேலுநாச்சியார் அவர் பெயரில் ஒரு மகளிர் படையை உருவாக்கினார். இந்த படையின் தளபதி குயிலி, கோட்டைக் கதவுகளைத் திறக்க ஒரு திட்டத்தை முன்வைத்தார்." என்கிறார் அவர். "விஜயதசமி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அருகில் உள்ள ஊர் பெண்கள் அனைவரும் கோவிலுக்கு செல்வார்கள். அவர்களுடன் கலந்து நாங்களும் உள்ளே செல்கிறோம். நான் ஆயுதங்களை மறைத்து வைத்தபடி உடையாள் படையின் சிறிய பிரிவுக்கு தலைமையேற்று கோட்டைக்குள் நுழைவேன். பிறகு நாங்கள் கோட்டையின் கதவை உங்களுக்காக திறந்துவிடுகிறோம் என்று குயிலி சொன்னார்.” என்று அவர் குறிப்பிடுகிறார். ராணி வேலுவின் முகத்தில் புன்னகை பரவியது. "குயிலி, நீ எப்பொழுதும் ஏதோ ஒரு வழியை கண்டுபிடித்து விடுகிறாய். நீ உடையாளுக்கு பெருமை சேர்த்திருக்கிறாய் என்று வேலு நாச்சியார் கூறினார். போரில் குயிலி என்ன ஆனார்? விஜயதசமி நாள் வந்ததும் குயிலியும், அவருடைய குழுவும் சுற்றுவட்டார ஊர் பெண்களுடன் உள்ளே சென்று பெரிய கோவிலில் திரண்டனர். சடங்கு ஆரம்பித்தது. குறித்த நேரத்தில் குயிலி “சகோதரிகளே! எழுந்திருங்கள்” என்று குரல் எழுப்பினார். 'உடையாள்' பெண்கள் உடனே எழுந்து வாள்களை உருவி காவலுக்கு நின்றிருந்த ஆங்கிலேயர்களை கீழ்படிய வைத்து வாயிலை நோக்கி நகர்ந்தனர். வாயிலில் வைக்கப்பட்டிருந்த தீ பந்தத்தை எடுத்து தங்களுக்கு தாங்களே தீ வைத்துக்கொண்டு, வீரர்களைப் பிடித்தவாறு வெடிமருந்து கிடங்கிற்குள் நுழைந்தார்கள். திடீரென கோட்டையில் இருந்து பெரிய வெடிச் சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டன. இரண்டு 'உடையாள்' பெண்கள் குதிரைகளில் ஏறி ராணி வேலுநாச்சியாரின் படை மறைந்திருந்த இடத்தை அடைந்தனர். "ராணி! கதவுகள் திறந்திருக்கின்றன. பிரிட்டிஷ் வெடிமருந்து கிடங்கு தகர்க்கப்பட்டுவிட்டது. தாக்குவதற்கு இதுவே சரியான நேரம்,” என்று ஒரு பெண் வேலுநாச்சியாரிடம் சொன்னாள். "அது சரி, என் மகள் குயிலி எங்கே?" என்று வேலு நாச்சியார் கேட்டார். 'உடையாள்' பெண்கள் கண்களைத் தாழ்த்தினர். "எங்கள் தளபதி பிரிட்டிஷ் வெடிமருந்துகளை அழிக்க உயிர் தியாகம் செய்துவிட்டார்," என்று அவர்கள் பதில் அளித்தனர். குதிரையில் அமர்ந்திருந்த ராணி வேலு நாச்சியார் இந்த செய்தியைக் கேட்டதும் உறைந்து போனார். அப்போது சையத் கர்க்கி அவரிடம், "அவரின் தியாகத்தை நாம் வீணடிக்க முடியாது. இப்போது தாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது. உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார். ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணி ராணி வேலுநாச்சியார் மனதை திடப்படுத்திக் கொண்டு தாக்குதலுக்கு உத்தரவிட்டார். கோட்டையின் உள்ளே கர்னல் வில்லியம்ஸ் ஃப்ளேட்டர்டன் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவம், பொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றாக்குறையை எதிர்கொண்டது. 1781 ஆகஸ்ட் மாதம் வேலு நாச்சியார் மற்றும் ஹைதர் அலியின் கூட்டுப் படைகள் இறுதியாக கோட்டையைக் கைப்பற்றியதாக எழுத்தாளர் சுரேஷ் குமார் குறிப்பிடுகிறார். முதல் இந்திய சுதந்திரப் போருக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போரில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் ராணி என்ற பெருமையை வேலு நாச்சியார் இதன் மூலம் பெற்றார். "”படையை வலுப்படுத்த திப்பு சுல்தான் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் வேலு நாச்சியாருக்கு கொடுத்தார்,” என்று எழுதியுள்ளார். திப்பு சுல்தான் வேலு நாச்சியாருக்கு ஒரு வாளை அனுப்பினார். அதை அவர் பல போர்களில் பயன்படுத்தினார். வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி 1790 முதல் 1793 வரை ஆட்சி செய்தார். வேலு நாச்சியார் 1796 ஆம் ஆண்டு சிவகங்கையில் காலமானார். தமிழ் கலாசாரத்தில் வேலு நாச்சியார் ’வீர மங்கை’ என்று அழைக்கப்படுகிறார் என்று ஹம்சத்வனி அழகர்சாமி எழுதுகிறார். 2008 ஆம் ஆண்டில் அவரது நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு சிவகங்கையில் வீர மங்கை வேலு நாச்சியார் நினைவிடத்தை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். ராணியின் 6 அடி வெண்கலச் சிலையும் அங்கு நிறுவப்பட்டது. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் வீரத்தை போற்றும் வகையில் ஜெயலலிதா ஆட்சியில், மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னம் கடந்த 5 ஆண்டுகளாக திண்டுக்கல் நகரில் ஒரு பிரபல சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. இதே திண்டுக்கல்லில்தான் ஹைதர் அலிக்கும் வேலு நாச்சியாரும் இடையிலான நீண்டகால நட்பு துளிர் விட்டது.
17 likes
11 shares
mariappan kumaravel
709 views 23 days ago
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #சுதந்திரப் போராட்ட வீரர்கள் இன்று (5-ந்தேதி) வ.உ.சி.யின் 154-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் நாள் உலகநாதர் -பரமாயி அம்மாள் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். வ.உ.சி.ஓட்டப்பிடாரத்திலும், நெல்லை மாவட்டத்திலும் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஓட்டப்பிடாரத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகள் வேலை செய்த பிறகு சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பை படித்து முடித்தார். தந்தை போலவே தானும் மிகச்சிறந்த வழக்கறிஞராக வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த வ.உ.சி.க்கும், அவரது தந்தையின் செயல்பாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அவரது தந்தை பணக்காரர்கள் பிரச்சினைகளுக்கு மட்டுமே வாதாடுவார். ஆனால் வ.உ.சி. ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக, பல நேரங்களில் தனது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக வாதாடி இருக்கிறார்.தனது சிறப்பான வாதத் திறமையினாலும் பல வழக்குகளில் சிறப்பாக வாதாடி வெற்றி கண்டதால் பலராலும் ஈர்க்கப்பட்டு மிகச்சிறந்த வழக்கறிஞர் என்ற பெயர் பெற்றார் வ.உ.சிதம்பரனார். அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் 1905-ஆம் ஆண்டு தன்னை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைதூக்கிய அந்த நேரத்தில் தலைவர்களான லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்து வந்தனர். அதே காரணத்திற்காகவும், இந்திய பாரம்பரிய கைத்தொழில்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அரவிந்தோ கோஷ், சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதி ஆகியோர் சென்னை மாகாணத்தில் இருந்து போராடினர். இதுதான் வ.உ.சியை இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாண உறுப்பினர்கள் உடன் இணைந்து போராடவும் தூண்டியது. அதன்பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வின் சேலம் மாவட்ட அமர்வை தலைமை தாங்கினார். வ.உ.சியின் சுதந்திர போராட்ட முறை மற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாணியில் இருந்து மாறி காணப்பட்டது. தமிழகம்- இலங்கை இடையிலான ஆங்கிலேய கப்பல் போக்குவரத்து கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார். இதையறிந்த ஆங்கிலேயே நிறுவனத்தினர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர். ஆனாலும் அதற்கு அஞ்சாத வ.உ.சி. கொழும்பு சென்று ஒரு கப்பலை வாங்கி வந்தார். வ.உ.சி கப்பல் போக்குவரத்தை ஒரு வணிகமாக மட்டும் பார்க்காமல் எதில் கைவைத்தால் ஆங்கிலேயனுக்கு வலிக்கும் என்பதை தெரிந்து வைத்திருந்தார். அவர்கள் வணிகம் செய்யத்தான் வந்தவர்கள் என்பதால் அவர்களின் வணிகத்தில் கைவைத்து அதில் இருந்து மக்கள் மத்தியில் சுதந்திர போராட்ட எண்ணத்தை ஊக்குவித்தார். வ.உ.சி.யின் "சுதேசி கப்பல்" வந்ததும் அது மக்களிடம் அதிக செல்வாக்கை பெற்று வளர்ந்தது. வ.உ.சி. ஆங்கியேலர்களை எதிர்த்து கப்பல் விட்ட தகவல் நாடு முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதனால் ஆங்கிலேயர்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டது. அப்போது இருந்த திருநெல்வேலி கலெக்டர் மேலிடத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இந்த பகுதியில் குறிப்பாக வ.உ.சி. கப்பல் போக்குவரத்தை தொடங்கிய பின்பு, மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வு அதிகரித்து உள்ளது என்று தெரிவித்தார். அது ஆங்கிலேயர்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது. ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தை தாண்டியும் வ.உ.சி கப்பல் தூத்துக்குடி- கொழும்பு இடையில் வழக்கமான சேவையை தொடங்கியது. சுதேசி நிறுவனம், ஆங்கிலேயே கப்பல் நிறுவனத்துக்கு கடும் போட்டியாக உருவெடுத்தது. ஆங்கிலேயர்கள் இந்த போட்டியை சமாளிக்க முடியாமல் கட்டணத்தை குறைக்க முடிவு செய்து சுதேசி கப்பல் கட்டணத்தை விட குறைவாக அறிவித்தனர். அதற்கு பதிலடி கொடுக்க வ.உ.சியும் தனது கட்டணத்தை மேலும் குறைத்தார். கடைசியில் ஆங்கிலேய கப்பல் கம்பனி பயணிகளை இலவசமாக அழைத்து செல்வதாக கூறி கூடுதலாக பயணிகளுக்கு குடைகளை பரிசாக வழங்கியது. வ.உ.சியால் இலவசமாக வழங்க முடியாததால் சுதேசி கப்பல் நிறுவனம் திவால் ஆகும் நிலைக்கு சென்றுவிட்டது. அதன் பிறகு நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும் ஆங்கிலேயர்களின் தவறான வியாபார கொள்கையை மக்களுக்கு எடுத்து சொல்லவும், ஆங்கில அரசுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொழிலாளர்களை ஒன்று திரட்டினார். ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்டிருந்த வெறுப்பினால், அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டி, 1908 மார்ச் 12-ந்தேதி அவரை கைது செய்தனர். பின்னர் கோயம்புத்தூரில் உள்ள மத்திய சிறைக்கு 1908-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி மாற்றப்பட்டார். சிறைச்சாலையில் மாட்டிற்கு பதிலாக வ.உ.சியை செக்கு இழுக்க செய்து ஆங்கிலேயர்கள் சித்ரவதை கொடுத்தனர். அதனால் அவருக்கு "செக்கிழுத்த செம்மல்" என்ற பெயரும் உண்டு. இப்படி பல தொல்லைகளை சிறையில் அனுபவித்த போதும் அவர் சும்மா இருக்கவில்லை. தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளை தொடர்ந்து வந்தார். மேலும் தனது சுயசரிதையையும் எழுத ஆரம்பித்தார். சிறையில் இருக்கும் போதே தத்துவ எழுத்தாளரான ஜேம்ஸ் ஆலன் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்தார். அதுமட்டுமில்லாமல் திருக்குறள், தொல்காப்பியம் போன்ற தமிழின் மிக முக்கியமான காவியங்களுக்கு விளக்க உரை எழுதி உள்ளார். சிறையில் கடின உழைப்பை வெளிப்படுத்தியதால் அவருடைய உடல்நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சியை விடுதலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அதன்படி டிசம்பர் 1912-ம்ஆண்டு 12-ந்தேதி அவரை விடுதலை செய்தனர். வழக்கறிஞர் உரிமம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டதால் அவரால் தொடர்ந்து வாதிட முடியவில்லை. சுதேசி கப்பல் நிறுவனமும் ஒழிக்கப்பட்டதால் மிக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார். அங்கு மண்எண்ணை வியாபாரத்தை தொடங்கினார். ஆனால் அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. செல்வந்தரான குடும்பத்தில் பிறந்தும் வசதியான வாழ்க்கை வாழாமல், சிறை, போராட்டம் என தன் வாழ்நாள் முழுவதும் இந்திய மக்களின் விடுதலைக்காகவே உழைத்த அந்த மாமனிதர் 1936, நவம்பர் 18-ம் நாள் காலமானார். தற்போது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒவ்வொரு வீரர்களையும் பெருமைபடுத்தி வருகிறோம். அந்தவகையில் வ.உ.சி.யை என்றென்றும் நினைப்போம். நினைவில் கொள்வோம்.
11 likes
7 shares
mariappan kumaravel
885 views 27 days ago
#சுதந்திரப் போராட்ட வீரர்கள் இன்று ----செப்டம்பர் 1 பூலித்தேவன்-- 1715 ஆம் ஆண்டு இதேநாளில் பிறந்தார். நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பூலித்தேவன் ஒரு பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர்.--- இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு ஆறு மண்டலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதில் மதுரை, திருவில்லிப்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 18 மறவர் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு முழுமரியாதையும், தனி அதிகாரங்களும் வழங்கப்பட்டன. இத்தகைய பாளையங்களில் ஒன்று நெற்கட்டுஞ்செவ்வல் பாளையம் ஆகும். பூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர் சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715இல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், 'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்' என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர். சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி அளிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார். பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப்பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற அனைத்துவகையான வீரவிளையாட்டுகளிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை முடிவுசெய்வது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது. செம்ம நாட்டு மறவர்கள்: செம்ம நாட்டு மறவர் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். செம்ம நாட்டு மறவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்தவர். மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள். மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர். காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726இல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள். பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய (அக்கா) மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார் . கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவாச்சி , சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர். பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது. இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன. 1750இல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றார் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது. பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது. 1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார். 1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றார். 1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால் பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார். நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார். பூலித்தேவர் ஆட்சி செய்த காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள், அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது. ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோர் முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள். இத்தகு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின் உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர். பாளையக்காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல் கீரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய் படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது. மாபூஸ்கான், கர்னல் கீரானுக்குச் செய்தி அனுப்பி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது. இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார். ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள். இதன் மூலம் "சுதேசிப்படை" என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை "யூசுப்கான்" என்பவனிடம் ஒப்படைத்தனர். இந்த யூசுப்கான் பிறப்பால் "மருதநாயகம்" என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான். 1755ஆம் ஆண்டு தொடங்கி 1767ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது. 1761ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடியும் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் இரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவர் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார். ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர். 1767 மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், காப்டன் ஹார்பர் ஆகியோர் வாசுதேவ நல்லூர் கோட்டையைத் தாக்கினர். இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும் வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்துக் காத்தனர். ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச்சென்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மறைந்து கொண்டார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர். மறைவு: பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும், அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் "பூலித்தேவர் மறைந்த இடம் "என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை இரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழ்நாட்டு அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.
15 likes
9 shares