D Muthu Prakash, Kanchipuram 💐
10K views • 1 months ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை-1ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 14.10.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=======
நெடிய யுகம் தொடர்ச்சி
===================
சிவபெருமானிடம் தில்லைமல்லாலனும் மல்லோசிவாகனனும் வரம் பல பெற்று நெடிய யுகத்தை ஆளுதல் :
----------------------------------------------------------------------------
உடனே சிவனாரும் உற்ற அசுரருக்கு
அடமா யவன்கேட்ட அவ்வரங்கள் தாங்கொடுத்து
நீச னிருக்க நெடிய யுகம்வகுத்துப்
பாசனுக்குப் பேரு பகர்ந்தே விடைகொடுத்தார்
.
விளக்கம்
=========
திறம் பெருத்த அந்த தேவத்திரு அரங்கில் இருந்தோர் எவரும் எதிர்பார்த்திராத விகற்பமான வரங்களை அவ்வசுரர்கள் விரும்பி வேண்டியபடியே கொடுத்தருளிய சிவபெருமான், அந்த இருபெரும் அரக்கர்களும் ஆட்சிபுரிவதற்கேற்ற நெடியதோர் யுகத்தைப் படைத்து, உடன் பிறப்பென உருப்பெற்று நிற்கும் அந்தக் கொடியவர்களில் ஒருவனுக்கு மல்லோசி வாகனன் என்றும் இன்னொருவனுக்குத் தில்லை மல்லாலன் என்றும் பெயரிட்டு அனுப்பி வைத்தார்.
.
.
அகிலம்
=======
விடைவேண்டிப் பாவி விமலன் தனைத்தொழுது
மடைப்பாவி யான மல்லோசி வாகனனும்
தில்லைமல் லாலனுமாய்ச் சேர்ந்தங் கிருபேரும்
வல்ல சிவன்வகுத்த வையகத்தில் வந்தனராம்
.
விளக்கம்
=========
சிவபெருமானை வணங்கி வரம்பல பெற்றும் புறப்பட்ட அறிவுகெட்ட அந்தப் பாதகர்கள் இருவரும், எல்லாவற்றிலும் வல்லவனாம் தில்லை நாதன் வகுத்த எல்லையாகிய, நெடிய யுகம் நிகழும் நிலவுலகை வந்தடைந்தார்கள்.
.
.
அகிலம்
=======
வந்தார் சிவன்வகுத்த வையகத்தி லம்மானை
அந்த அசுரர் அவரிருக்கு மந்நாளில்
உதிர மதுசூரர் ஒக்க உதித்தெழுந்து
செதிர்சூரப் படையாய்ச் சேர்த்தங் கிருந்தனராம்
இப்படியே சூரர் இவர்சேர்க்கை தன்னுடனே
அப்படியே அந்தயுகம் ஆண்டிருந்தா ரம்மானை
விளக்கம்
=========
சிவபெருமானின் மனத்தயவால் சிருஷ்டிக்கப்பட்ட மண்ணுலகில் அந்த மகா பாதகர்களான மல்லோசிவாகனனும், தில்லை மல்லாலனும் வந்து சேர்ந்த உடனேயே, அவ்வரக்கர்கள் இருவரையும் பிறப்பிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அதாவது நீடிய யுகத்தில் வதை செய்யப்பட்ட குறோணியின் உடலிலுள்ள இரண்டாவது துண்டத்தோடு புதைக்கப்பட்டு உறைந்திருந்த குறோணியின் இரத்தத் துளிகளெல்லாம் நூற்றுக்கணக்கான அசுரர்களாக உருப்பெற்று மல்லோசிவாகனனையும், தில்லை மல்லாலனையும் அந்தச் சூரப்படைகள் நாலாப்புறமும் சூழ்ந்திருந்தன.
.
எல்லா அசுரர்களும் ஒருமித்திருந்து நெடிய யுகத்தை நிலைகுலையும் வித்தில் கொலையாட்சி புரியத் தொடங்கினார்கள்.
.
.
அகிலம்
=======
ஆண்டிருந்த சூரர் அவரிருக்க மேடைகளும்
தாண்டிநின்ற வானத் தடாக உயரமதே
சூரப் படைகள் தொழுது அடிபணிந்து
பாதக ருக்குநித்தம் பணிந்தேவல் செய்திடுவார்
ஊழியங்கள் செய்து உற்றயிறை யிறுத்துப்
பாளையங் களாகப் பணிந்திருந்தா ரம்மானை
.
விளக்கம்
=========
அந்த அரக்கர்கள் அமர்ந்து ஆட்சி புரிவதற்கென அமைத்திருந்த ஆட்சிக் கட்டிலோ ஆகாய கங்கையையும் தாண்டுமளவில் உயரமாக இருந்தது.
மல்லோசிவாகனனையும், தில்லை மல்லாலனையும் சூழ்ந்திருந்த சூரப்படைகளெல்லாம் தினந்தோறும் அந்தப் பொல்லாத பாவிகளுக்குப் பணிவிடைகள் புரிந்து அவர்கள் இருவரையும் போற்றித் தொழுது அடிபணிந்து அவர்களிடம் கட்டளைகளையெல்லாம் அவ்வப்போது நிறைவேற்றும் ஏவலர்களாயிருந்தனர். அவ்விரு அரக்கர்களுக்கும் தொண்டு செய்வதையே தம் கடமையாக கொண்டு கடன் செலுத்திய அந்த அசுரப்படைகளெல்லாம் தம் அரசனுக்குப் பயந்து பணிந்து கும்பலாக அமைந்தனர்.
.
.
அகிலம்
=======
நெடிய யுகம் தொடர்ச்சி
===================
சூரர் கொடுமுடியைச் சூட்டி யரசாண்டு
பாரமுள்ள கோட்டைப் பண்ணினா ரம்மானை
இப்படியே சூரர் இவர்வாழு மந்நாளில்
முப்படியே சூரர் ஊழி விதிப்படியால்
இறப்ப தறியாமல் எரியைமிகக் கண்டாவி
உறப்பொசிக்கச் சென்ற விட்டி லிறந்தாற்போல்
தம்பி தமையன் சந்ததிகள் மந்திரிமார்
மும்பிலுள்ள சூரர் முடுக்கமதைக் கண்டாவி
நம்பிபத மறந்து நாம்தாம் பெரிதெனவே
கெம்பினார் சூரர் கெட்டனர்கா ணம்மானை
விளக்கம்
=========
மல்லோசிவாகனனும், தில்லைமல்லாலனும் கொடுமைகளே கோலோச்சும், கேடான கிரீடத்தைத் தரித்த மன்னர்களாக மண்ணகத்தை ஆட்சிபுரிந்தார்கள். அவர்கள் வாழ்வதற்காக அமைத்திருந்த அரண்மனைகளும் அது சார்ந்த கோட்டைகளும் யூகிக்கவே முடியாத உறுதியும், உயரமும், அகலமும் உடையதாக இருந்தது.
.
இவ்வண்ணமாக அவ்விரு அரக்கர்களும் வாழந்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கென்று முன்பே எழுதப்பட்ட தலையெழுத்தின் காரணத்தால் அவர்களின் உயிரிழப்பைப் பற்றி உணர முடியாதவராயினர்.
.
எனவே நெருப்பு எரிவதைக் கண்ணுற்ற விட்டில் பூச்சிகள், அந்த நெருப்பைத் தனக்கு உகந்த உணவு இதுவென்றெண்ணி, அதை உண்ணும் ஆசைகொண்டு அந்த நெருப்பிலே விழுந்து சாவதுபோல், தம்முடைய தம்பியர்கள், தமையன், தனயன் மற்றுமுள்ள சந்ததிகள், ஏனைய அமைச்சர்கள், படைகள் ஆகியோரின் அடாத செயல் கண்டு அதையே வீரமென்றும், விவேகமான பாதுகாப்பென்றும் நம்பி மகிழ்ந்து, அந்த அவலமான நம்பிக்கையின் விளைவால், அண்ட சாராசரத்தையும் படைத்து ஆண்டுகொண்டிருக்கும் ஆதிப்பரம்பொருளை மறந்து நாம்தான் பெரியோன், நமக்குமேல் எவருமில்லை என்ற ஆணவத்தால் அகந்தையால் அகம்பாவத்தால், ஆங்காரத்தால், விறைப்பால், வீறாப்பால், இறுமாப்பால், செருக்கால், திமிரால், மதிமயக்கமாகித் தமக்கு ஏற்படப்போகும் இடையூறுகளையும், இடப்பையும் இம்மியும் எண்ணிப்பாராமல் கெம்பினான் சூரன் கெடுவது அறியாமல்.
.
.
மல்லோசிவாகனன், தில்லைமல்லாலன் அழிவும் நெடியயுகத்தின் முடிவும்:
-----------------------------------------------------------------------------------
அகிலம்
=======
சூர ரவர்செய்த துட்டம் பொறுக்காமல்
வீர முள்ளதேவர் விரைந்தே முறையமிட
தேவர் முறையம் சிவனார் மிகக்கேட்டுக்
காவலாய் நித்தம் கைக்குள் ளிருக்குகின்ற
பெண்ணமுதைப் பார்த்துப் புகல்வாரங் கீசுரரும்
கண்ணே மணியே கருத்தினுள் ளானவளே
பூலோகந் தன்னிலுள்ள புருடரா யுதத்தாலும்
மேலோகம் வாழும் விமலரா யுதத்தாலும்
மலைமேலே வாழும் மாமுனிவர் தம்மாலும்
அலையா வரங்கள் அச்சூரர்க் கேகொடுத்தோம்
தரியா முடுக்கம் தான்பொறுக்காத் தேவரெல்லாம்
அரியோ யெனமுறையம் அநேகம் பொறுக்கரிதே
.
விளக்கம்
=========
கொலையாட்சி புரிந்துகொண்டிருக்கும் அந்தக் கொடூர புத்தியுடைய அரக்கர்கள் செய்யும் பொல்லாங்குகளையெல்லாம் பொறுக்கமுடியாமல், வானுலகத் தேவர்களெல்லாம் இறைவனிடம், அந்த அரக்கர்களின் குறைகளைப் பற்றி ஆவேசமாக எடுத்துரைத்தார்கள்.
.
தேவர்களின் அந்த முறையீட்டை முழுமையாகக் கேட்டறிந்த சிவபெருமான், எப்பொழுதும் தம் கைவசம் பாதுகாப்பாக இருந்து கொண்டிருக்கும் துஷ்டநிக்கிரக இஷ்டப்பரிபாலன கிருத்தியமாகிய சக்தியை நோக்கி, கண்ணே! கண்களுக்கெல்லாம் ஒளியாக விளங்கும் பிரகாசமே, நிலவுலக உயிரினங்களுக்கெல்லாம் அபிப்பிராயமாகவும், ஆழமான சிந்தனையாகவும் தாற்பரியம், எண்ணம், கவனம், சித்தம் நினைப்பு, விருப்பு, விவேகம் ஆகியவற்றுள் தற்பொருளாய், சொற்பொருளாய் நிலவுகின்ற தாய்நிலையே, பூலோகத்தில் வாழுகின்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட எத்தகைய புருடாயுதங்களாலும் விண்ணுலகிலுள்ள வானவர்களின் தவ கிருத்தியங்களால் தோற்றுவிக்கப்பட்ட விமலராயுதங்களாலும் மலைமேலே வாழும் மாமுனிவர்களாலும், அழிவு ஏற்படுத்த முடியாத அரிய வரங்களை, மல்லோசி வாகனனுக்கும், தில்லை மல்லாலனுக்கும் கொடுத்தனுப்பி விட்டோம்.
அப்பெரிய வரங்களை நம்மிடம் பெற்றுச் சென்ற அவ்விரு அரக்கர்களும், யாராலும் சகித்துக் கொள்ள முடியாத துன்பங்களை உலகோருக்கு உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அநியாயச் செயல்களை அங்கீகரிக்க முடியாத விண்ணவர்களெல்லாம் தம் வேதனைக்குரலை விம்மல் திருமுகமாய் நமக்குத் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் அபயக்குரலை எம்மால் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லையே என்று சக்தியிடம் சிவபெருமான் தெரிவித்தார்.
.
.
அகிலம்
=======
என்றீசர் சொல்ல இயல்கன்னி யேதுரைப்பாள்
மலைலோகம் மேலோகம் வையமதி லாகாட்டால்
அலைமேல் துயிலுமொரு ஆண்டியுண்டு கண்டீரே
முன்னேயச் சூரருக்கு முற்சாப மிட்டதொரு
வன்னச் சுருதிமுனி மந்திரபுரக் கணையாய்
வளர்த்தங் கிருப்பான்காண் மாயருட பக்கலிலே
கிளர்ந்த மொழிகேட்டுக் கிருபைகூர்ந் தேயீசர்
மாலை வரவழைத்து வளப்பமெல் லாமுரைக்கச்
சாலப் பொருளும் சம்மதித்தாங் காரமுடன்
அலையில் வளர்ந்த அதிகக் கணையெடுத்துச்
சிலையேற்றி யம்பைச் சிரித்து மிகத்தொடுக்க
அம்புப் பகையாலும் அதிகமால் பகையாலும்
பம்பழித்துச் சூரனூர் பற்பம்போல் தானாக்கிச்
சூர ரிருவருட சிரசை மிகஅறுத்து
வாரிதனில் விட்டெறிந்து வாளி சுனையாடி
மலரோ னடிபணிந்து வைகுண்டங் கேட்டிடவே
பலமான குண்டப் பதவி மிகக்கொடுத்தார்
.
விளக்கம்
=========
கூத்தபிரானின் அந்த கூற்றைக் கூர்மையாகக் கேட்டுணர்ந்த அந்த ஆகமப் பொதுவிதியாள், இயற்கை என அமைந்த என்றென்றும் அழிவே இல்லாத அன்னை பார்வதியாள் பரமனை நோக்கிப் பகர்கிறாள். சுவாமி, விண்ணகத்தாராலோ, மண்ணகத்தாதைலோ, மலை மீது வாழுகின்ற மாமுனிவர்களாலோதானே மல்லோசி வாகனனுக்கும், தில்லை மல்லாலனுக்கும் மரணம் ஏற்படாது என்கிறீர்கள்.
அலை கடலையே தன் படுக்கையாகக் கொண்டு உலகையே ஆண்டு கொண்டிருக்கும் மகாவிஷ்ணு தங்கள் நினைவுக்கு வரவில்லையா? இந்த இரு சூரர்களையும் படைத்து, சுருதி முனிவரின் சாபத்தை அவர்கள் இருவரும் ஏற்பதற்காகவே அன்று அவர்கள் இருவரையும் சுருதி முனி தவமேற்றும் தலத்திற்கு அனுப்பிவைத்தீர்களே அதையாவது நினைத்துப் பாருங்கள்.
.
அந்தச் சூரர்களுக்கு அன்று சாபமிட்ட சுருதிமுனி அவர்களைக் கொல்லுவதற்காகவே மந்திரபுரக் கணையாக மகாவிஷ்ணுவின் அருகில் வளர்ந்து கொண்டிருக்கிறான். நீங்கள் எதற்கும் கலங்காதீர்கள். விண்ணிலோ, மண்ணிலோ மலையிலோ இருப்பவர்களால் எங்களுக்கு இறப்பு வரக்கூடாது என்று தான் அந்த அசுர்கள் வரம் வாங்கினார்களே தவிர அலை கடலில் வாசம் செய்யும் ஆதிநாராயணன் தம்மைக் கொல்லக் கூடாது என்று அந்த அரக்கர்கள் வரம் வாங்கவில்லையல்லவா என்றாள்.
.
உமயவளின் உயர்வான அந்தக் கிண்டல் மொழி கேட்டு கருணை கூர்ந்த கருணாகரத்தோன், உலகை உய்விக்கும் அச்சனாராகிய மகாவிஷ்ணுவை அக்கணமே வரவழைத்து நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலவரங்களையெல்லாம் எடுத்துரைத்தார்.
.
பெருமைகளையே தன் உடமையாக் கொண்ட மகாவிஷ்ணு அந்த அரக்கர்களை அழிப்பதற்கு ஆவேசமாக புறப்பட்டார். சுருதி முனியோ தன் தலைவிதியால் அலை கடலுக்குள்ளே மந்திர புரக் கணையாக வளர்ந்து கொண்டிருப்பதைக் கண்டார். சக்தி மிகுந்த அக்கணையை கையிலே எடுத்தார். அந்தக் கணைக்கு உருவேற்றினார். உள்ளம் உலகை பொங்க அம்பைத் தொடுத்தார்.
.
அம்பாக உருமாறியிருக்கும் சுருதிமுனிவரின் பகையாலும் உலக ரட்சகைனாகிய மகாவிஷ்ணுவின் பகையாலும் அந்தச் சூரர்கள் ஆண்ட நாடு சுடுகாடாக்கப்பட்டது. சர்வமும் அழிந்தது. சாம்பலே மிஞ்சியது. மல்லோசிவாகனன், தில்லைமல்லாலன் ஆகிய இருபெரும் அரக்கர்களின் அகங்காரம் மிகுந்த தலைகள் அறுக்கப்பட்டு கடலிலே வீசப்பட்டது.
.
இப்பெரும் அரக்கர்களையும் அவர்கள் ஆட்சி புரிந்த நாட்டையும் அழிப்பதற்காக மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து விடைபெற்றுச் சென்ற மந்திரபுரக் கணையோ தம் கடமை நிறைவேறியதும் கடலிலே நீராடி மாயோன் மலரடியில் மண்டியிட்டுப் பணிந்து சுவாமி எனக்கு வைகுண்டலோகத்தில் வாழவுதர வேண்டுமென்று வேண்டிற்று.
.
கயமைகளை கபளிகரம் செய்வதற்குத் தமக்குக் கைக்கருவியாகப் பயன்பட்ட மந்திரபுரக் கணையை, மீண்டும் சுருதி முனியாக உருமாற்றம் செய்த மகாவிஷ்ணு அந்தச் சுருதி முனிவருக்கு கைமேல் பலனான வைகுண்டப்பதவி கொடுத்தருளினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #❣️அய்யா வைகுண்டர்❣️ #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் # #❣️அய்யா வைகுண்டர்❣️
84 likes
110 shares