D Muthu Prakash, Kanchipuram 💐
611 views
4 days ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 19.01.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== இப்படியே சான்றோர் இவர்தேடுந் தேட்டையெல்லாம் அப்படியே நீசன் அவன்பறித்துத் தின்றாலும் ஞாயமுள்ளச் சான்றோர் நாமமது கேட்டதுண்டால் நீசக்குலத் தோர்விரட்டி நெடுந்தூரங் கொண்டடிப்பார் பின்னுமந்தச் சான்றோரைப் பொல்லாதான் கொள்ளுகின்ற அன்னீத மெல்லாம் அருளக்கே ளாயிளையே உப்பா லுவரா உபய மெடுத்தவரை ஒப்பமுள்ள சான்றோரை ஊழியங்கள் கொண்டடிப்பான் குளம்வெட்டச் சொல்லிக் கூலி கொடுக்காமல் களம்பெரிய சான்றோரைக் கைக்குட்டை போட்டடிப்பான் சாணார்கள் தம்பனையில் தான்முளைத்த ஓலையெல்லாம் வீணாக நீசன் வெட்டித்தா என்றடிப்பான் வெட்டிக் கொடுத்தாலும் வெற்றியுள்ளச் சான்றோரைக் கட்டிக் சுமவெனவே கைக்குட்டை போட்டடித்து சுமந்து போனாலும் தொகையெண் ணமுங்கேட்டுப் பவந்து மொழிபேசிப் பணமுமிகக் கேட்டடிப்பான் ஐயையோ சான்றோரை அந்நீசன் செய்ததெல்லாம் வையமது கொள்ளாதே மாதேவுன் னோடுரைத்தால் . விளக்கம் ========== நீண்ட காலமாக சான்றோர்களின் சம்பாத்தியத்தை அந்த நீசக் குலத்தோர் உண்டு கொணடிருந்தும் நியாயம் நீதிகளில் நிலை புரளாத சான்றோர்களின் பெயரைக் கேட்டாலே அந்த நீச குலதோர்கள் ஓட அடித்து விரட்டினார்கள். . இதுமட்டுமல்ல, இன்னும் அந்தச் சான்றோர் மக்களை பொல்லாத நீசக் குலங்கள் படுத்திய பாட்டையெல்லாம் இங்கே எடுத்துரைக்கிறேன். அதையும் கேள். உப்பு மூட்டைகளை ஊழியமாக சுமக்கச்செய்து அதற்கு இதுதான் கூலி என்று சவுக்கால் சான்றோரை அடித்து அனுப்பினார்கள். குளம் குட்டைகளை வெட்டச் சொல்லி, வெட்டி முடித்ததும் கூலி கொடுக்காமல் கூலிக்குப் பதிலாக சவுக்கால் அடித்தனர். . சான்றோர்களி்ன் நிலங்களில் நிற்கும் பனைமரத்திலுள்ள ஓலைகளையெல்லாம் முளைக்க முளைக்க வெட்டித் தர வேண்டும் என்று கேட்டனர். அப்படியே வெட்டிக் கொடுத்தால் அதை தலைச் சுமையாக எங்கள் வீட்டிற்கு கொண்டுவா என்று அடித்தனர். அவர்களின் உத்தரவுப்படியே சுமந்து கொண்டு கொடுத்தாலும் அந்த ஓலைகளை எண்ணிப் போடு என்றடித்தனர். எண்ணிப்போட்டால் என்னமோ அவனுடைய தோட்டத்திலிருந்த ஓலையைச் சான்றோர்கள் திருடிவிட்டது போன்ற பாவனையில், தொகை சேரவில்லை, குறைந்த ஓலைக்கு உண்டான பணத்தை தந்துவிட்டுப்போ என்று தரங்கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்தனர். . ஐயகோ அந்த அடாவடித்தனமான அந்தப் பாதகர்கள் சான்றோர்களுக்குச் செய்த கொடுமைகளை வரிசைப்படுத்திச் சொல்வதானால் இந்த வையகத்தில் நம்முடைய வாழ்நாள் பற்றாது. . அகிலம் ======== ஈசருக்கும் வேதா இவர்களுக்குந் தேவாதி வாச முடன்பதறி வணங்கிநின்ற வேலையைப்போல் நேசமுள்ள சான்றோர் நெடுநாளு மேபதறி நீசனுக்குச் செய்த நிசவேலை யொக்குமல்லோ . விளக்கம் ========== சிவபெருமானுக்கும், பிரம்மதேவருக்கும் தேவ லோகத்தவர்களெல்லாம் எவ்வண்ணமாக பயபக்தியோடு பணிவிடை செய்வார்களோ, பணிந்து நடப்பார்களோ, அதற்குச் சமமாக ஆண்டாண்டு காலமாக அந்த நீசக் குலத்தோருக்கு இறைவன் மீது பக்தியும், தேசத்தின்பேரில் நேசமும், கொண்ட சான்றோர்கள் பணிவிடை பலபுரிந்து பயந்து, பதுங்கி பணிந்து நடந்தார்கள். . . அகிலம் ======== ஈப்புலிபோல் நீசன் ஈயைப்போ லேசான்றோர் நாய்ப்புலிபோல் நீசன் நல்லாடு போல்சான்றோர் கீரியைப்போல் நீசன் கிராணம்போ லேசான்றோர் பாரியைப்போல் நீசன் படுத்தினான் சான்றோரை . விளக்கம் ========== கோபத்தால் உறுமும் வாய் பிளந்த புலியைப் போன்று நீச குலத்தோரும், அந்த வாய்க்குள் அகப்பட்ட ஈக்களைப்போல் சான்றோரும், வேட்டைக்கு விரைகின்ற நாயைப் போலும், உணவுக்காக உயிர்ப்பலி கொள்ளும் புலியைப் போன்றும், செயல்பட்ட கலிநீசகுலத்தோரின் மத்தியில், ஆடு பதுங்குவதைப் போல் சான்றோர்கள் பம்மினார்கள். மனதால் விம்மினார்கள். கீரியைப்போல் நீச குலத்தோரும், கீரியைக் கண்ட சர்ப்பம் நிலை குலைவதைப்போல் சான்றோர்கள் நிலை குலைந்தனர். நிம்மதி இழந்தனர். தாலி கட்டிய மனைவியை தரங்கெட்ட தறுதலைக் கணவர்கள் அடிமையென நினைத்து அராஜகம்புரிவதைப் போல் சான்றோர்களை அந்த நீசக் குலத்தோர் கசக்கிப் பிழிந்து அவர்களின் வியர்வையில் குளித்தனர். இரத்தத்தை மூட்டைப் பூச்சிபோல் உறுஞ்சினர். . . தொடரும்... அய்யா உண்டு.