D Muthu Prakash, Kanchipuram 💐
1K views • 17 days ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 23.10.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்:
========
திரேதா யுகம் தொடர்ச்சி
===================
அகிலம்:
========
இராவணனின் கொடுமை தாங்காமல் தேவர்கள் திருமுறையம்:
=====================================
அப்படியே அரக்கன் ஆண்டிருக்கு மந்நாளில்
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவாதி தேவர் தினமேவல் செய்திடவே
மூவாதி மூவர் ஊழியங்கள் செய்திடவே
முறுக்கம தால்பாவி ஊழியங்கள் கொண்டதினால்
பொறுக்க முகியாமல் பூலோகத் தார்களெல்லாம்
தெய்வ ஸ்திரீயும் தேவாதி தேவர்களும்
அய்யா திருமாலுக்(கு) அபயம் முறையமென
அபயமிடு மொலியை அச்சுதருந் தானமர்த்திக்
கபயமிடும் வேதன் கயிலையது தானேகி
.
விளக்கம்:
==========
இராவணன் கொலையாட்சி செய்துகொண்டிருக்கும் போது, அவனுடைய முன் பிறவி விதிப்பயனால் ஏற்பட்ட துர்ச்செயல்களுக்கெல்லாம் ஏற்புடைய தீர்ப்பு நிர்ணயிக்கும் நேரம் நெருங்கிவிட்ட காரணத்தால், தேவாதி தேவர்களும், மூவாதி மூவர்களும் இராவணன் இட்ட கட்டளைகளுக்கிணங்கி ஏவலர்களாய், காவலர்களாய் ஊழியம் செய்யலாயினர்.
.
மூவாதி மூவரையும், தேவாதி தேவர்களையும் கொத்தடிமைகளைப் போல் பயன்படுத்தி இராவணனாகிய அரக்கன் மமதையோடு மகிழ்ந்திருந்தான். இராவணனின் அராஜகச் செயல்களைப் பொறுக்க முடியாமல் பூலோகத்து மக்களும் தேவ மாதர்களும், வானுலகத் தேவர்களும், மகாவிஷ்ணுவுக்கு இராவணனின் கொடுமைகளை விண்ணப்பிக்கும் விதமாக அபயக்குரல் கொடுத்தார்கள். இவர்களின் அபய ஒலியை உற்று உணர்ந்த மகாவிஷ்ணு அவர்களுக்கெல்லாம் ஆறுதல் கூறி அவர்களின் அந்த அபயக்குரலுக்கான காரண காரியங்களையெல்லாம் விவரமாக அவர்களிடம் விசாரித்தறிந்து விட்டு, அச்செய்திகளோடு சிவ பெருமான் வீற்றிருக்கும் கைலாசத்திற்கு மகாவிஷ்ணு எழுந்தருளினார்.
.
.
அகிலம்:
========
மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் இராவண வதம் பற்றி ஆலோசித்தல்:
======================================================================
ஆதி பரமன் அடியைமிகப் போற்றி
சோதித் திருமால் சொல்லுவா ரம்மானை
பத்துத் தலையுடைய பாவி யரக்கனுக்கு
மற்றும் பலகோடி வரங்கள்மிக ஈந்ததினால்
தேவரையும் மூவரையும் தேவேந்தி ரன்வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை
ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட
ஈனமாய்க் கேட்டு இருக்க முடியுதில்லை
பள்ளி யுறக்கம் பரிவாய் வருகுதில்லை
தள்ளினால் தேவரையும் தற்காப்பா ராருமில்லை
என்ன வசமாய் எடுப்போஞ் சொரூபமது
தன்னிகரில் லாதவனே சாற்றுவீ ரென்றனராம்
.
விளக்கம்:
==========
தேவர்களின் அபயஒலி அமரவேண்டி, அரனார் வீற்றிருக்கும் கைலைக்குச் சென்ற ஜோதிமயமாகிய மகாவிஷ்ணு, ஆதிபரனாகிய சிவபெருமானின் பாதார விந்தத்தைப் பணிந்து போற்றி தாம் கைலைக்கு எழுந்தருளிய காரணத்தை எடுத்துரைத்தார்.
.
சிவபெருமானே பத்துத் தலைகளுடன் பிறப்பிக்கப்பட்ட பாவி அரக்கனுக்கு பலகோடி வரங்களைத் தாங்கள் கொடுத்து விட்டீர்கள். எனவே அந்த அரக்கனாகிய இராவணன், வானுலகத் தேவர்களையும், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய நம் மூவரையும் ஏன் தேவேந்திரனையும் சேர்த்து நாம் நான்கு பேரையும் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடிமைகளைப்போல் பாவித்து நாட்டை அரசு புரிந்து கொண்டிருக்கிறான்.
.
ஆகவே, அரக்கனின் இக்கொடுமையைப் பொறுக்க முடியாமல் தேவர்களெல்லாம் என்னை வேண்டி முறையிடுகிறார்கள். தேவர்களின் அந்தக் குமுறல் நிறைந்த முறையத்தைக் கேட்டுக்கொண்டு இரக்கமில்லா ஈனனாக இருக்க என்னால் இயலவில்லை. அறிதுயில் கொள்ளவும் அடியேனால் முடியவில்லை.
.
இந்த இக்கட்டான நிலையில் தேவர்களைக் காப்பாற்ற நாம் முன் வராவிட்டால் அவர்களை வேறு எவராலும் காப்பாற்ற முடியாது. ஆகவே, அரக்கன் இராவணனை அழித்தாக வேண்டும். தேவர்களையெல்லாம் இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியாக வேண்டும்.
.
அதற்கு நாம் இப்போது என்ன உபாயம் செய்யலாம்? எவ்விதமாக அவதாரமெடுக்க வேண்டும்? என்பது பற்றி தன்னிகரில்லா தயாபரனாகிய ஈஸ்வரரே தாங்கள்தான் அருள வேண்டுமென்று சிவபெருமானிடம் மகாவிஷ்ணு வேண்டினார்.
.
.
அகிலம்:
========
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மங்கே சொல்லுவா ரம்மானை
பாவி யரக்கனுக்குப் பண்டுநா மீந்தவரம்
தாவிப் பறிக்கத் தானாகா தென்னாலே
என்றரனார் சொல்ல எம்பெருமா ளச்சுதரும்
அன்றெம் பெருமாள் ஆலோ சனையாகி
என்னை மகவாய் எடுக்கத் தசரதரும்
முன்னே வரங்கேட்டு உலகி லவரிருக்க
அன்னுகத்தி லுள்ள அரசன் தினகரனும்
பொன்னு திருவைப் பிள்ளையென வந்தெடுக்க
நெட்டையா யரசர் நெடுநாள் தவசிருக்க
சட்டமதைப் பார்த்துத் தானனுப்பு மீசுரரே
.
விளக்கம்:
==========
மகாவிஷ்ணுவின் மனஓட்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட சிவபெருமான் மகாவிஷ்ணுவைப் பார்த்து, திருமாலே, இராவணன் தம் தவவலிமையால் எம்மிடம் பெற்றுக்கொண்ட வரங்களைத் திருப்பி எடுக்க என்னால் இயலாதே. அதற்கு என்ன செய்யலாம் என்று சற்றுக் குழப்பம் அடைந்தார்.
.
அதை உணர்ந்த மகாவிஷ்ணு சற்று ஆலோசனைக்குப் பின் சிவபெருமானைப் பார்த்து, ஈஸ்வரா என்னைத் தம் மகனாகப் பெற வேண்டும் என்று தசரதரும், திருமகளாகிய லட்சுமி தேவியைத் தன் மகளாகப் பெற வேண்டும் என்று தினகரனும் பூவுலகில் நீண்ட நெடுந்தவம் செய்த வண்ணமுள்ளார்கள்.
.
ஆகவே, தாங்கள் முன்னாகம விதிகளைச் சற்று ஆராய்ந்து பார்த்து, என்னைப் பூலோகத்திற்கு அனுப்புங்கள் என்று சிவபெருமானிடம் மகாவிஷ்ணு தன் அபிப்பிராயத்தை ஆலோசனையாகத் தெரிவித்தார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩
22 likes
1 comment • 32 shares