கர்த்தாதி கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி- நாள் 19.12.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=========
கலியன் கேட்ட வரங்கள்
==========================
அப்படியே ஈசர் அவனை முகம்நோக்கி
இப்படியே உன்றனக்கு ஏதுவரம் வேணுமென்றார்
என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன்
தெண்டனிட்டு ஈசர் திருவடியைத் தான்பூண்டு
கேட்பான் வரங்கள் கீழுமேலும் நடுங்க
வீழ்ப்பாரங் கெட்ட விசைகெட்ட மாநீசன்
மாயவனார் தன்னுடைய வாய்த்த முடிதனையும்
தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாருமென்றான்
அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தன்பிறப்பும்
வரமுடைய சத்தி வலக்கூறுந் தாருமென்றான்
.
விளக்கம்
==========
சிவபெருமான் கலிநீசனைப் பார்த்து, இப்போது உனக்கு என்ன வரம் வேண்டுமென்றார். உடனே அந்தக் கபடனாகிய கலிநீசன் சிவபெருமானின் பாதங்களைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, மேலுலகாகிய பூலோகம், புவலோகம் சுவலோகம், சனலோகம், தபோலோகம், மகலோகம், சத்தியலோகம் ஆகிய ஏழு லோகங்களும் கீழுலகாகிய அதலம், விதலம், சுதலம், தராதலம், இராசாதலம், மகாதலம், பாதலம் ஆகிய ஏழு லோகங்களும் அதிரும்படியான பல வரங்களைக் கேட்க முனைந்தான்.
.
முதல் வரமாக மகாவிஷ்ணுவின் சிறப்புப் பொருந்திய திருமுடியையும், அவருடைய சக்கராயுதத்தையும், தேரையும் தர வேண்டும் என்றும், அத்துடன், சிவபெருமானாகிய தங்களை நான் நினைக்கும்போதெல்லாம் என்னுடைய புருவ மத்தியில் வெள்ளொளிப் பிளம்பாய்க் காணுதற்குரிய பேராற்றலையும் வேதாந்த தத்துவங்களைத் தோற்றுவிக்கும் யுத்தியையும், தாங்கள் தரப்போகும் வரத்தின் வலிமையால் எங்கும், எதிலும் நானே முதன்மையானவனாக இருப்பதற்கான வாய்ப்புகளையும் தாரும் என்றான்.
.
.
அகிலம்
=========
சிவமூலஞ் சத்தித் திருமூல மானதுவும்
தவமூலம் வேதாவின் தன்னுடைய மூலமதும்
மாலுடைய மூலம் வாய்த்தலட்ச மிமூலம்
மேலுடைய தெய்வ விதமூலமுந் தாரும்
காலனின் மூலம் காமாட்சி தன்மூலம்
வாலைச் சரசோதி மாகாளி தன்மூலம்
கணபதி யின்மூலம் கிங்கிலியர் மூலம்
துணையதிப னான சுப்பிரமணியர் மூலமதும்
ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மூலமெல்லாம்
வாயிதக் கண்ணே வரமாகத் தாருமென்றான்
.
விளக்கம்
==========
மேலும் சிவபெருமான், உமையவள், பிரம்மதேவன், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, காலன், காமாட்சி, சரஸ்வதி, மகாளி, விநாயகர், முருகர், கிங்கிலியர், தவநிலை, தெய்வநிலை மற்றும் பிரபஞ்ச சுழற்சிகளுக்குக் காரணமான அடிப்படை ரகசியங்கள் அனைத்தையும் எனக்கு வரமாக அருளும் என்றான்.
.
.
அகிலம்
========
அல்லாமற் பின்னும் அந்நீசன் கேட்டவரம்
பொல்லாத வித்தை புகலக்கே ளொண்ணுதலே
கூடுவிட்டுக் கூடு குதிக்கக் கருவதுவும்
நாடு பாழாக்கி நகரிகொள்ளை யாக்கிடவும்
துயில்வோர் போலுலகம் துஞ்சவைத்துக் கொள்ளைகொண்டு
அயதிமோ கினிக்கருவும் அரனேநீர் தாருமென்றான்
.
விளக்கம்
===========
இவ்வரங்களைத் தவிர இன்னும் பல வரஙகளை அந்த பொல்லாக்கலிநீசன் கேட்டான். அவை யாவும் மிகக் கொடுமையான விளைவுகளை உண்டாக்கத் தக்க வல்லமை பொருந்திய வித்தைகளேயாகும். அவற்றையும் வரிசையாகச் சொல்லப்பட்டுள்ளது.
.
கூடுவிட்டுக் கூடு பாய்வதற்கான காரக்கருவாகிய மூடுமந்திரம், உலகத்தை உருப்படாமலாக்கி மக்களின் மனநிலையைச் சீரழிப்பதற்கான மந்திரம் முதலான தந்திரங்களையும், நோய் நொம்பலங்களிலிருந்து விடுபடுவதற்கான வைத்திய வாகடங்களையும், உலகிலுள்ள மாந்தர்கள் யாவரையும் ஏதோ ஒரு காரணத்தால் மயக்க நிலைக்குள்ளாளக்கி அவர்களின் அறிவு நிலை தடுமாறும்போது அவர்களையெல்லாம் என் வயமாக்கும் மோகினி வைசியமும் ஈசனே எனக்கருளும் என்றான்.
.
.
அகிலம்
=========
ஆவடக்கு மோகினியும் அழைக்கவெகு மோகினியும்
நாவடக்கு மோகினியும் நருளழைக்கும் மோகினியும்
ஆண்பெண் பிரிக்க அதிகவெகு மாரணமும்
கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுக்கும் மாரணமும்
கொல்ல உச்சாடனமும் குடிகெடுக்க மாரணமும்
தொல்லை வருத்தி சோலிசெய் யுச்சாடனமும்
லோகமது வாழாமல் உள்ளமுங்கித் தாழ்ந்திடவும்
ஏகமாய்த் தம்பனமும் இதின்கரு வுந்தாரும்
கொட்டிக் கலைக்க கூறுகெட்டச் சல்லியமும்
ஒட்டியமுந் தாரும் உள்ளகரு வுந்தாரும்
பூசை முறையும் புவனச்சக்க ரமுடனே
தீட்சை விதிமுறையும் சிவவிதியுந் தாருமையா
.
விளக்கம்
==========
அத்துடன், பெண்களுக்கு ஆசையை அடக்கவும் அதிகரிக்கவும் ஏதுவான மோகன வைசியம், வேண்டத் தகாதவர்களின் பேச்சைறாற்றலைக் குறைப்பதற்கான மந்திர வித்தை, உலகோரை என் இச்சைக்கு இசைய வைக்கும் மோகன மந்திரம், ஆணையும், பெண்ணையும் பிரித்து வைப்பதற்கான மாரண வித்தை, கொடுங்கோன்மையினால் குடும்பங்களைக் கெடுப்பதற்கான மாரண வித்தை, என்னை எதிர்ப்போரை துஷ்டதேவதைகளை ஏவிவிட்டுக் கொல்வதற்கான மந்திரம், அவர்களுக்குப் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து தொலைத்துக்கட்டுவதற்கான வழி முறையும், இந்த உலகத்தைத் தாட்வுறச் செய்வதற்கான தந்திர வித்தைகளும், எல்லா வகையானதையும் ஈடழிக்கும் வல்லமையும், மக்களின் ஒற்றுமையில் மன வேறுபாட்டை உண்டாக்கி அவர்களின் உயர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் ச்சரவு உபாயங்களும், அஷ்ட கரும மந்திர வித்தைகளும் அவற்றிற்கான கருப்பொருளையும் தருவதோடு, அதற்கான பூசை விதிகளையும், அப்பியாச முறைகளையும் அட்சர இந்திரங்களையும், அதற்கான உபதேசங்களையும், தங்களுக்கே உரித்தான நியதிகளையும் எனக்குத் தாங்கள் அருள வேண்டும்.
.
.
அகிலம்
=========
சலமேல் கனல்மேல் தானிருக்கு மோடிகளும்
கலைமேல் குடைபிடிக்கக் கருவது வுந்தாரும்
மிருக மதைவருத்தி வேலையது கொண்டிடவும்
இறுக்கமுள்ள வாதை எனக்குவிட்டுத் தாருமையா
அட்டகர்ம மெட்டும் அடக்கிவரந் தாருமையா
மொட்டக் குறள்களையும் முன்னேவலாய்த் தாரும்
மந்திர சாலம் மாய்மாலத் தந்திரமும்
இந்திர சாலம் எனக்கருளு மென்றுரைத்தான்
நோவுக் கிரகம் நுழையாம லென்றனக்குத்
தாவுகெவுனக் குளிகை தாருமென்றான் மாநீசன்
வந்த பிணிதீர்க்க வைத்திய வாகடமும்
தந்துதந் தாகப்பல சாஸ்திர முந்தாரும்
மூவருட வடிவும் உதித்துவந்த முற்பிறப்பும்
தேவருட பிறப்பும் தெளிந்தெழுதித் தாருமென்றான்
.
விளக்கம்
===========
நீரிலும், நெருப்பிலும் அமர்ந்திருப்பதற்கான வித்தைகளும், நிலவிலே உலவி, அந்த நிலவுக்கே நிழலுண்டாக்குவதற்கான யுத்திகளும், மிருகங்களை வசப்படுத்தி வேலை வாங்குவதற்கான வித்தைகளும், கட்டுக்குள் அடங்காத வாதை முதலான பேய்களையும் என் வயமாகும் வகையில் வயப்படுத்தி தாருமையா !
.
அட்டமா சித்தி எனப்படும் எட்டு வகைக் கருமங்களை எனக்கிசையச் செய்யும், கூர்மையற்ற பிசாசுகளெல்லாம் நானிடும் கட்டளைப்படி எனக்குப் பணிபுரிய வையும், மந்திர வித்தை, மாய வித்தை, தந்திர வித்தை, இந்திரவித்தை ஆகிய அனைத்தையும் எனக்குத் தந்தருளுமையா !
.
கேடு விளைவிக்கக்கூடிய எந்தக் கிரகங்களும் என்னுடைய வாழ்க்கைக்குள் புகுந்துவிடாமலும், அப்படியெ அந்தக் கிரகங்களால் ஒரு வேளை எனக்கு இன்னல் ஏற்படும் பட்சத்தில் அதிலிருந்து மீளுவதற்கான அறிவையும் எனக்குத் தாங்கள் அருள வேண்டும்.
.
எனக்கு ஏதேனும் நோய்கள் ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்கான வைத்திய சாஸ்திரமும், இன்னும் பல்வேறு விதமான சாஸ்திரங்களையும் எனக்குத் தருவதோடு, மும்மூர்த்திகளின் உருவ அமைப்பையும், அவர்களின் உற்பத்தியைப் பற்றியும், ஏனைய தேவர்களுடைய பிறப்பு பற்றிய விவரங்களையும் தெளிவாக எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றான்.
.
.
தொடரும்….. அய்யா உண்டு.
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚