D Muthu Prakash, Kanchipuram 💐
696 views
7 days ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 16.01.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== மெய்க் காப்பாளர்களாகச் சான்றறோர். ===================== வைக்கும் பொழுதில் மாயவரைத் தானோக்கிச் செய்க்கும் பெரிய திருமாலே யென்றனக்குக் கைக்குள்ளே ஏவல் கருத்தாகச் செய்வதற்கு மெய்க்குணம்போ லுள்ள விதமான சாதியொன்று வருவித்து என்றனுட மணிவாசல் காத்திருக்கத் தருவித்து நல்ல சாதியொன் றென்றுரைத்தான் அப்போது மாயன் அதற்கேது சொல்லலுற்றார் இப்போது உன்றனக்கு ஏவல் தொழில்கள்செய்ய ஆகின்ற பேரை அழைத்துக்கோ என்றுரைத்தார் வேகுன்ற நீசன் விளம்புவா னமைச்சருடன் ஆரைக் கொடுவரலாம் அருகில்விட்டு வேலைசெய்ய ஏரையொத்த மந்திரியே இயம்பு மெனக்கேட்டான் அப்போது மந்திரிகள் அந்நீசனுக் குரைப்பார் இப்போது வேறொருவர் இருந்தாலா காதெனவே நல்லவகை யான நாடுஞ்சான் றோர்களைத்தான் வல்லவகை யாலும் வருவித்து வைப்பீரால் ஆகுமந்தச் சாதியென்று அந்நீசனுக் குரைத்தார் வேகும் பொழுதில் வெற்றிசான் றோர்களுக்கு ஆள்விட்டு வருத்தி அதிக நிதிகொடுத்து வாள்கொடுத்து ஆயுத பாணி மிகக்கொடுத்துப் பட்டயமுங் கொடுத்துப் பாரயிறை கூலிவிட்டுச் சட்டைக்குல் லாகொடுத்துத் தலைப்பா மிகக்கொடுத்து வாசல் மணிமேடை வகையாகக் காரெனவே வாசமொழிக் கலியன் மாய்கையால் சான்றோர்கள் ஊழி விதியால் உடையோனை நெஞ்சில்வைத்துக் காளி வளர்த்த கண்மணிகள் காத்திருந்தார் . விளக்கம் ========== இப்படி நாட்டு மக்களுக்குக் கேடு விளைவிக்கும் பல திட்டங்களை வகுத்து வைத்த கலிநீசன், மகாவிஷ்ணுவை நினைத்து எல்லா வகையான வெற்றிகளுக்கும் வித்தகனாகத் திகழுகின்ற திருமாலே, என்னுடைய உத்தரவுகளை மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்டு, எனக்கு விசுவாசமாக உழைக்கின்ற சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட வம்மிசத்தார் யாரேனும் இருந்தால் அவர்களை என்னுடைய மாளிகையைக் காவல்புரிவதற்கு வருவித்து தந்தருளும் என்று வேண்டினான். . அப்போது அவனுக்குத் தரிசனம் கொடுத்த மகாவிஷ்ணு, மன்னவனே இப்போது உனக்கு ஏவல் புரிவதற்கு ஏற்றவர்களை நீயே அழைத்துக்கொள் என்று அருளினார். உடனே அந்த நீசன், தன் அமைச்சர்களை அழைத்து, கலப்பை நிலத்தைப் பண்படுத்துவதுபோல் அரசுக்குப் பண்பான ஆலோசனைகளை வழங்கிப் பண்படுத்தும் அமைச்சர்களே, எனக்கு மெய்க் காப்பாளர்களாக யாரை நேமிக்கலாம் என்று கூறுங்கள் என்றான். . உடனே அமைச்சர்கள் அனைவரும் சேர்ந்து, மன்னவா, இது பகைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கும் நேரம். எனவே, இப்பணிக்கு ஏனோதானோ என்று யாரையும் நேமித்துவிடலாகாது. ஆகவே, எப்பொழுதும் நல்லவற்றையே நாடுகின்ற சான்றோர்களே இந்த வேலைக்கு ஏற்புடையவர்கள். அவர்களை எப்படியாவது வருவித்து இந்த வேலையைக் கொடுத்தால் அவர்கள் தங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று அமைச்சர்கள் கலிநீசனிடம் சொன்னார்கள். . அமைச்சர்களி்ன் ஆலோசனைக்கு உட்பட்ட நீசன் உடனே ஆள் அனுப்பி சான்றோர்களை வருவித்து பெருமளவில் சம்பளம் கொடுத்து, உடைவாள் முதலான ஆயுதங்களையும் அதிக அளவில் கொடுத்து, சிறப்பான பட்டயமும் கொடுத்து அவர்கள் அது காலம் வரை அரசாங்கத்திற்குச் செலுத்திக் கொண்டிருந்த வரி முதலியவற்றையும் ரத்து செய்து, சான்றோரே இன்று முதல் என்னுடைய அரச மணிமேடைக்கு மெய்க் காவலர்களாக முறையாக வாசலில் காவல்புரியுங்கள் என்றான். . வசியமொழி பேசுங் கலியனின் மாயசால வார்த்தைகளால் மனம் உருகிய சான்றோர்கள் இதுவும் நம்முடைய தலைவிதிதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டு, இறைவனை நினைத்தவண்ணம் காளி வளர்த்த கண்மளிகள் கலிநீசனின் மணியரங்கைக் காத்து வந்தனர். . . அகிலம் ======== கலிநீசன் மரணமும் சான்றோருக்கு சாபமும் அப்படியே காத்திருந்து அவர்வருகும் வேளையிலே முப்படியே வந்த முழுக்கலியன் தோசமதால் அந்தநீ சன்தனக்கு அழிவுவரும் வேளையிலே இந்தச் சான்றோர்கள் இவர்தூக்கம் வைத்திடவே நீசனுட வம்மிசத்தோர் நேரக்கூறே யறிந்து வாசமிட்டு நீசனையும் வதைத்தாரே யவ்வினத்தோர் சீவன்போ கும்வேளைச் செப்புவான் சாபமொன்று . விளக்கம் ========= மகாளி வளர்த்த மக்கள், மன்னனின் மணியரங்கைக் கண் துயிலாமல் காத்து வந்தனர். சான்றோர்களின் கடமை உணர்வும், சான்றோர்களிடம் மன்னன் வைத்திருந்த மகத்தான நம்பிக்கையும் மன்னனின் உறவினர் மற்றும் குலத்தினரின் கண்களை உறுத்தியது. எனவே மெய்க்காப்பாளர்களாக இருக்கும் சான்றோர்களின் மீது ஏதேனும் ஓர் பெரும்பழியைச் சுமத்த வேண்டும் எனக் கங்கணங் கட்டிக் காத்திருந்தனர். . முப்பிறவிப் பயனால் அம்மன்னன் அகால மரணம் அடைய வேண்டிய விதியும் இருந்தது. அதற்கான வேளையும் வந்தது. கடமை தவறாத மெய்க்காப்பாளர்களான சான்றோரின் கண்களை நித்திராதேவி முத்தமிட்டாள். எனவே சான்றோர்கள் தம்முடைய கடமை நழுவி தூக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டு ஆழ்ந்த நித்திரையில் மூழ்கினர். . இத்தருணம், காத்திருந்த கலிநீச மன்னின் குலத்தவருக்கு ஏதுவாகிவிட்டது. சான்றோர்கள் அணிந்திருந்த ஆடைபோன்று தாமும் ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு, மன்னனின் உறவினர் சிலர் மன்னன் நித்திரை செய்து கொண்டிருக்கும் மணியரங்கினுள் நுழைந்து மன்னனை உடைவாளால் வெட்டினர். வெட்டுண்ட மன்னன் வேதனையால் துடித்தான். சீவன் போகும் வேளையில், தன் மரணத்திற்குக் காரணம் சான்றோர்தான் என்று நினைத்தான். சாபத்தினை விதைத்தான். . . தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar