D Muthu Prakash, Kanchipuram 💐
659 views
3 days ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 20.01.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== பண்டுநீ சன்பித்த படுசாபந் தன்னாலே விண்டுரையா வண்ணம் விசையடக்கித் தாழ்ந்திருந்தார் இப்படியே ஊழியங்கள் எண்ணலக்கில் லாதபடி அப்படியே சான்றோர் அவனூழி யங்கள்செய்து அல்லாமல் நீசன் ஆர்க்கமுள்ள சான்றோர்க்கு வல்லாண்மை யான வரிசை யிறைகள்வைத்துக் கரிவிறை பாட்டஇறை கண்டபாட் டஇறையும் தரிசிறை காணாத தரைப்பாட் டஇறையும் ஆமிசங்க ளில்லாத அன்னீத வம்பிறையும் நேமித்து வைத்து நிலையுள்ளச் சான்றோரை அடித்துக் கைகெட்டி ஆண்பெண் வரைக்குமிட்டு இடித்தடைத்துப் பட்டினிகள் இரவுபகல் போட்டுப் பெண்ணா ணுடைய பெருமை மிகக்குலைத்து மண்ணாண்ட சான்றோரை வரம்பழித்து மாநீசன் சாணாரைக் கண்ணில் தான்காண வொட்டாமல் வீணாட்டஞ் செய்து விரட்டி யடித்துமிகப் பம்பழித்துச் சாணாரைப் பலசாதி யின்கீழாய்த் தும்பழித்து வேலை தூறுபடக் கொண்டனனே பறையன் புலையன் பகல்வரான் போகுமிடம் மறையொத்த சான்றோர் வந்தால் பிழையெனவே முக்காலி கட்டி முதுகி லடித்துமிக மிக்கான பொன்பணங்கள் வேண்டினான் பிழையெனவே சாணான்தன் வஸ்து தரணி தனக்குயிராம் ஆனாலுஞ் சான்றோர்க்கு அடியொருநாள் மாறாது . விளக்கம் ========== முன்னாளில் ஆண்ட நீசன் சபித்த கொடூரமா சாபத்தினால், விளக்கிச் சொல்ல முடியாத அளவில் பலதரப்பட்ட கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருந்த சான்றோர்கள் தம்முடைய விவேகத்தையும், வீரத்தையும் ஏனைய எல்லா சக்திகளையும் அட்கிவைத்த வண்ணம், பொறுமையாக இருந்து நீசனிடும் வேலைகளையெல்லாம் ஊழியமாகச் செய்து கொடுத்தனர். . நடுத்தர வசதி வாய்ப்போடும், வறுமைக்கோட்டிற்குக் கீழேயும் வாழுகின்ற சான்றோர் மக்களை இப்படியெல்லாம் வாட்டி வதைத்தனர் கலி நீசக் குலத்தோர். அதே சமயம் கலிநீச மன்னனோ அன்றைய நாளில் வசதி வாய்ப்புகளோடு சீமானாக வாழ்ந்து கொண்டிருந்த சான்றோர்களுக்கெல்லாம் வலுக் கட்டாயமாக வரி விதித்தான். . அவர்கள் வளர்க்கும் குதிரைகளுக்கு அதை வாங்கும் விலையைவிட அதிக வரி. தோட்டத்தில் விளையும் தேங்காய் மாங்காய் போன்ற பொருள்களை வியாபாரிகளுக்குப் பாட்டம் கொடுத்து வருகின்ற வருமானத்தில் பாதி தொகையை வரியாகச் செலுத்த வேண்டும். . விளைந்தவற்றைப் பாட்டம் கொடுக்காதிருந்தால் அதற்கு மதிப்பீடு செய்து, அந்த மதிப்பீட்டில் முக்கால் பங்கு தொகையை வரியாகச் செலுத்த வேண்டும். இதற்குக் கண்டபாட்ட வரி என்று பெயர். . வருமானமே வராத தரிசு நிலத்திற்கும் வரி, சான்றோர்கள் தம் நிலத்தை விவசாயம் செய்ய யாருக்கேனும் கொடுத்திருந்தால் அதற்கு வருமானத்தில் கால் பகுதியை வரியாகச் செலுத்த வேண்டும் இந்த வரிக்கு தரைப் பாட்ட வரி என்று பெயர். . இப்படி எந்த வித நியாயமும் இல்லாமல் தட்டிக் கேட்பார் எவருமில்லை என்ற வில்லஙகமான துணிவோடு ஏறுக்கு மாறான வரிகளையெல்லாம் விதித்தான். இந்த வரிகள் பற்றிய விளக்கங்களையும் விவரத்தையும் கேட்கும் சான்றோரை ஆண் பெண் என்று பாராமல் அடித்து, இரவும் பகலும் உணவு கொடுக்காமல் பட்டினிப் போட்டு அவர்களின் மதிப்பையும், மரியாதையையும், பெருமையையும் சீர்குலைத்தான். . நாடாண்ட சான்றோர்கள் நயவஞ்சகனின் ஆட்சியினால் கடுந்துயரப்பட்டனர் என்றாலும் அவர்கள் தம் கண்களில் பட்டாலே பாவம் தொட்டாலே தீட்டு என்ற நிலையினை உருவாக்கி விரட்டி அடித்தனர். எல்லாக் குலத்தை விடவும் சான்றோர்கள் தாழ்மையுற்றவர்களைப் போன்று துன்புறுத்தப்பட்டனர். . கலிநீசக் குலத்தோரால் தாழ்ந்த சாதி, அடிமை இனம், பகலில் ஊருக்குள் உலவக்கூடாத பிறவி என ஒதுக்கப்பட்டவர்களெல்லாம் நடமாடும் இடத்தில் கூட வேதங்களுக்கு நிகரான சான்றோர்கள் சென்றால் குற்றம் என்று கூறி முக்காலிக்குள் கட்டி வைத்து முதுகில் அடித்து, அதற்கு அபராதமாக பொன்னையும் பணத்தையும் மிக அதிகமாக வசூலித்தனர். இப்படி எத்தனையோ வழிகளில் சான்றோர்களைத் துன்புறுத்தி வாங்கிய பணத்தாலும் பொருளாலும் உலகில் கலிநீசக் குலங்கள் வயிறு வளர்த்து வாழ்ந்தபோதிலும் அந்த நீசகுலத்தோரால் சான்றோர்களுக்கு அடி மட்டுமே ஓயவேயில்லை. . . அகிலம் ======== கோவில் சிவாலயங்கள் கூடங்கள்சிங் காசனங்கள் நாவுலகுங் கள்ளாய் நாடி யிருந்தாலும் சாணான்கள் ளேறியெனச் சண்டாள நீசனெல்லாம் வீணாகச் சாணாரை விரட்டி யடிப்பான்காண் சாணுடம்பு கொண்டு தரணிமிக ஆண்டாலும் வீணுடம்பு கொண்டோர் விரித்துரைத் தோராமல் சாணான்சா ணானெனவே சண்டாள நீசனெல்லாம் கோணா துளத்தோரைக் கோட்டிசெய் தேயடித்தான் . விளக்கம் ========== கோயில்கள் முதலாக மாட மாளிகை, கூட கோபுரம் நாட்டை ஆளுகின்ற அரவசைகள் என்று உலகில் எந்த நிலையில் வாழ்பவர்களானாலும் பதனீரையும், அதன் மூலமாகும் கள்ளையும் குடித்துக் குடித்தே கொண்டாடிக்கொண்டிருக்கும் நீசர்கள் அந்த பதனீரைப் பக்குவமாகப் பனையிலிருந்து இறக்குகின்ற சான்றோர்களை மட்டும் களளேறி என்று பழித்துக் கூறினர். பனையேறி என விரட்டியடித்தார்கள். . உலகில் மனிதனாகப் பிறவி எடுத்தவர்களெல்லாம் எண் சாண் உடம்புடையோராகவே இருந்தபோதிலும், வீணர்களாகிய அந்த மாமிசப் பிண்டங்கள் தம்முடைய உடல் கூறு தத்துவத்தையும், சாணான் என்ற சொல் மனித பிறவி அனைத்தையும் குறிக்கும் வார்த்தையல்லவா என்பதைப் பற்றியும் சற்று கூட பகுத்து உணர்ந்து பாராமல், சான்றோர்களைக் கண்டால் மட்டுமே அவர்களை சாணான் சாணான் என்று வசையாகப் பேசி, நீதி நெறிமுறைகளிலிருந்து சற்றும் வளைந்து கொடுக்காத சான்றோர்களை அந்த நீசர்கள் பரிகசித்தே அடித்தனர். . . அகிலம் ======== தரணிதனில் வந்து தலையெடுத்த யாவருக்கும் மரணம் வரைக்கும் வந்துதித்த அன்றுமுதல் சேனைமிக வூட்டுதற்கும் தெய்வச்சான் றோரமிர்தம் ஈனம தில்லாமல் யாபேர்க்கு மீந்தாலும் பொல்லாத நீசன் பொறுதியுள்ளச் சான்றோரை கல்லாதான் கூடிக் காணவிடா தேயடித்தான் நீசன் குடியிருக்க நிறைந்தமணி மேடையெல்லாம் வாசமுடன் சான்றோர் வஸ்துவல்லா லாகாது அப்படியே சான்றோர் அவருதவி செய்திடினும் எப்படியுஞ் சான்றோர் இடுக்கமது மாறவில்லை எவரெவர்க்குஞ் சான்றோர் ஈந்துமிக வந்தாலும் அவர்களுக்கு நீசன் அனுப்போ லுறவுமில்லை . விளக்கம் ========== உலகில் குழைந்தைகள் பிறந்தவுடன் முதல் உணவாகச் சேனை ஊட்டுவதற்கும், அவர்கள் இறப்பதுவரை அருந்துவதற்கும், விண்ணவர்களாகயிருந்து மண்ணகத்தில் பிறந்த சான்றோர்கள் பூலோகச் சொரபானமாகிய பதனீர் என்னும் அமுதத்தை அந்த நீச குலத்தோருக்குக் கொடுத்தாலும் கற்றறிவோ இல்லாத கலிக் குலத்தோர் பொறுமையின் புகலிடமான சான்றோர்களைத் தம் கண்களில் காணவிடாதபடி கதறக் கதற அடித்தார்கள். . அந்த நீசர்கள் குடியிருக்கும் வீடுகளை உருவாக்குவதற்கு, சான்றோர்களின் பொருட்கள் இல்லாமல் முடியாது. எந்த நிலையிலும் சான்றோர்களின் உதவி இல்லாமல் வாழ வழியற்றி அந்த நீசக் குலத்தோரின் நிலையுணர்ந்த சான்றோர்கள், நீசர்கள் செய்யும் அட்டூழியங்களைச் சகித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அந்த நீசர்கள் கேட்கும் பொருளையெல்லாம் கொடுத்தாலும் சான்றோர்களின் சங்கடங்கள் மாற்றப்படுவதாக இல்லை. . இப்படி எந்த நிலையில், எந்த அளவில் யாருக்குச் சான்றோர்கள் உதவினாலும், கொடுத்தாலும் அந்த நீசர்களுக்கும் சான்றோர்களுக்கும் எள் முனை அளவுகூட எவ்வகை உறவுமே இல்லை. . . தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar