சிபிஐ டைரி குறிப்புகள்!
வழக்கறிஞர் விஜயன் தாக்குதல் வழக்கு!
’’எனக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்’’ என்பது போல சிபிஐ விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றம் வரையில் சென்று முறையிட்டு, சிபிஐ விசாரணைக்கு போன வழக்கு விஜய் பங்கேற்ற கரூர் நெரிசல் மரணம். கரூர் நெரிசல் மரணத்தை சிபிஐ விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முன்பு சிபிஐ விசாரித்த வழக்குகளின் லட்சணத்தை பார்க்கலாம்.
1991 – 1996 ஜெயலலிதா ஆட்சியில் 69 சதவிகித இடஒதுக்கீடுக்கு பிரச்னை ஏற்பட்டது. ’இடஒதுக்கீடு அளவு 50 சதவிகிதத்திற்குள்தான் இருக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அரசியல் சாசனப் பாதுகாப்பை ஏற்படுத்த சட்டமன்றத்தில் ஜெயலலிதா அரசு 9.11.1993 அன்று தீர்மானம் நிறைவேற்றியது. அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து அமலில் இருக்கத்தக்க வகையில், இந்திய அரசியல் சட்டத்தில் விரைவில் உரிய திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேறியது.
69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அரசியல் சாசனப் பாதுகாப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட முயன்றார் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன். தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் தந்ததை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்யவும் அவமதிப்பு வழக்கு தொடரவும் தயாராகி கொண்டிருந்தார் விஜயன். 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் அதிமுக அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக 1994 ஜூலை 21-ம் தேதி புதுடெல்லி புறப்பட்ட போது ஆயுதமேந்திய கும்பல் அவரை கடுமையாகத் தாக்கியது.
தந்தை கல்யாணம், தாய் காந்திமதி ஆகியோருடன் சென்னை கோடம்பாக்கம் ராம் தியேட்டர் பின்புறம் வ.உசி 4-வது தெருவில்தான் விஜயன் வசித்து வந்தார். அவரது அடையாறில் உள்ள இன்னொரு வீட்டிற்கு மனைவியும் இரண்டு மகள்களுடன் சென்றிருந்தால் சம்பவம் நடந்த போது அவர்கள் வீட்டில் இல்லை. அதிகாலை 4.30 மணிக்கு செல்லும் விமானத்தில் போவதற்காக காரை வெளியே எடுத்து வந்து விட்டுவிட்டு, வீட்டின் கேட் கதவை மூடினார். அப்போது அங்கே மறைந்திருந்த கும்பல் பின்புறமாக வந்து விஜயனை தாக்கியது. உருட்டை கட்டைகளால் விஜயனின் தலை, கை, கால்களில் பலமாக தாக்கினார்கள்.
அடி தாங்காமல் விஜயன் கத்தியதும் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். அவர்கள் துரத்திய போது கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. வீட்டிலிருந்து அவரது அப்பாவும், அம்மாவும் வெளியே வந்து பார்த்த போது விஜயனின் தலை மற்றும் கை. கால்களில் ரத்தம் கொட்டி கொண்டிருந்தது. வலி தாங்காமல் விஜயன் துடித்தார். அதே ஏரியாவில் வசிக்கும் விஜயனின் அக்கா மகன் டாக்டர் சுகுமாரனுக்கு போன் செய்தார்கள். அவர் வந்து அருகே உள்ள பெஸ்ட் மருத்துவமனையில் விஜயனை சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர் வீரபத்திரன், ’'தலையில் பலத்த காயமுள்ளது. உடனே ஸ்கேன் எடுக்க வேண்டும். கை, காலில் எலும்பு முறிவு உள்ளது. டாக்டர் மோகன்தாஸிடம் அழைத்துச் செல்லலாம்'’ எனக்கூறி தன்னுடைய வேனில் விஜயனை விஜயா மருத்துவமனைக்கு வீரபத்திரன் அனுப்பி வைத்தார். தலை, கை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த விஜயன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
வழக்கறிஞர் விஜயன் மீதான தாக்குதல் கடுமையான எதிர்விணைகளை ஏற்படுத்தியது. விஜயன் தாக்குதலுக்கு பொறுப்பேற்று சரணடைந்தவர்கள் போலி குற்றவாளிகள் என சர்ச்சை எழுந்தது. இதற்கு போலீஸாரே உடைந்தாக இருந்தார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கை சிபிஐ விசாரித்த போது உதவி போலீஸ் கமிஷனர் ஒருவரே சரணடைய நால்வருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கியது அம்பலத்திற்கு வந்தது. தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது. அ.தி.மு.க.வின் தென் சென்னை மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத் தலைவருமான ஆதிராஜாராம் எனவும் தென் சென்னை அதிமுக இளைஞரணி செயலாளர் மாதவன் தலைமையிலான 12 பேர் கொண்ட குழு இந்த தாக்குதலை நடத்தியதாக சிபிஐ அறிக்கை அளித்தது. கைதான மாதவன், ராஜாராமன் இருவரும் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரத்துக்கு நெருக்கமானவர்கள். ஆதிராஜாராம், எஸ்.டி.சோமசுந்தரம் ஆகியோர் எந்த நேரத்திலும் கைதாவார்கள் என பேச்சுகள் கிளம்பின.
விசாரணை தீவிரமடைந்த நிலையில் 1995 ஆகஸ்டு 31-ம் தேதி ஆதிராஜாராம் சென்னை அரசு பொது மருந்துவமனையில் சிகிச்சைககாக சேர்ந்தார். முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 1995 அக்டோபர் 17-ம் தேதி அவருடைய ஜாமீன் மனு நீராகரிக்கப்பட்டது. அதே நாளில் மருத்துவமனையில் இருந்து வெளியேறி சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆதிராஜாராம் சரண் அடைந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டதால் சென்னை அரசு பொது மருந்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை விசாரணைக்கு ஒப்படைக்குமாறு சிபிஐ மனு தாக்கல் செய்தது. அதனை ஏற்றுகொண்ட மாஜிஸ்திரேட் அவரைக் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். ஆனால், ஆதிராஜாராம் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதய பிரச்னை இருப்பதால் அவரால் பயணம் செய்ய இயலாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் இதனை சிபிஐ ஏற்கவில்லை. ஆதிராஜாராமின் உடல்நிலையை வெளிமாநில டாக்டர்களைக் கொண்டு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மறுநாள் சிபிஐ அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று ஆதிராஜாராமிடம் விசாரனை நடநதினர்.
எழும்பூர் 10-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஆதிராஜாராம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆதிராஜாராமின் கூட்டாளி மாதவன் உள்பட 13 பேர் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டனர். இந்திய தண்டனை சட்டம் 143. 147, 148, 449, 324, 320 367, 120பி ஆகிய பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டது.
1996 ஜனவரி 2-ம் தேதி ஆதிராஜாராமை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி எம்.கோபாலசாமி ஜாமில் விடுவித்தார். ஆதிராஜாராமுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆதிராஜாராமுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
ஆதிராஜாராம் ஜாமீனை உயர் நீதிமன்ற நீதிபதி சி.சிவப்பாதான் ரத்து செய்தார். ’’வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்டதற்கு முன்பாக 1992-ம் ஆண்டில் சென்னையில் ஒரு கொள்ளை சம்பவத்தில் ஆதிராஜாராம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒருவரது அந்தஸ்து அவரது குற்ற நடவடிக்கைக்கு கேடயமாக ஆகி விடக்கூடாது. விஜயன் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்பில்லாத சிலரை போலீஸார் கைது செய்தனர். அந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கு உள்ள ஆதிராஜாராமை ஜாமீனில் வெளியே விட்டால், ஆதாரங்களை அழிக்க எதையும் செய்யத் துணிவார். மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்கும் அது இடையூறாக இருக்கும். இதையெல்லாம் கவனிக்காமல், முதன்மை செஷன்ஸ் நீதிபதி, ஜாமீன் உத்தரவு வழங்கியுள்ளார். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்ட மரபுகளுக்கு மாறாக நடந்து கொள்வது முதன்மை செஷன்ஸ் நீதிபதியின் வழக்கமாகிவிட்டது. ஆதிராஜாராமுக்கு ஜாமீன் கொடுத்தது மூலம் நீதிக்குப் புறம்பாக அவர் நடந்து கொண்டுள்ளார்’’ என சொன்னார் உயர் நீதிமன்ற நீதிபதி சிவப்பா.
வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்ட வழக்கில் முதல் எதிரியான ஆதிராஜாராமை காப்பாற்றும் நோக்கில் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு ராஜ்யசபா எம்.பி வாய்ப்பை வழங்கினார். இது கடும் எதிர்ப்பை கிளப்பியது. வழக்கறிஞர் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். கடற்கரை காந்தி சிலை முன்பு போராட்டம் நடந்தது. இன்னொரு பக்கம் அதிமுக தரப்பு விஜயனுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள்.
ராஜ்யசபா தேர்தலுக்கு ஆதிராஜாராம் பெயர் அறிவிக்கப்பட்டது. அதற்கு கருத்து தெரிவித்த விஜயன், ‘’ஆதிராஜாராமைப் பற்றி தவறான எண்ணம் எதுவும். எனக்கு கிடையாது. நாடாளுமன்றத்தின் தகுதியை அடையாளம் காட்ட ஒருவர் வருவது பற்றி அந்த நாடாளுமன்றம்தான் பெருமைப்பட வேண்டும். வோரா கமிட்டி அளித்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கமும் பெருமிதம் கொள்ளலாம்’’ என்றார் விஜயன்.
’’மாநிலங்களவைக்கு வேட்பாளராக ஆதிராஜாராம் அறிவிக்கப்பட்டுள்ளது நியாயமானதுதான்’’ என்று வருவாய்த் துறை அமைச்சரும் அதிமுக துணைப் பொதுச் செயலருமான எஸ்.டி.சோமசுந்தரம் சொன்னார். ’’ஆதிராஜாராம் குற்றமற்றவர் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் மீது வழக்கு உள்ளது என்பதற்காக அவருடைய வாய்ப்பு ஏன் தடைப்பட வேண்டும்? தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தில் 99 சதவிகித வாக்குகள் பெற்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர் விஜயன் வழக்காடச் சென்றார். அதற்கு முந்தைய ஆண்டும் அவர் தடையாணை பெற்றுள்ளார். தடையாணை பெறுவது 90 சதவிகித மக்களுக்கு விரோதமான செயல். பாதிக்கப்பட்ட 90 சதவிகித மக்கள் விஜயன் மீது வருத்தப்படவோ, கோபப்படவோ ஆத்திரப்படவோ நியாயம் உண்டு என்றே நான் கருதுகிறேன்.
69 சதவிகித இடஒதுக்கீட்டை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. ஆகையால் விஜயன் மீது தனிப்பட்ட முறையில் யார் யார் கோபப்பட்டார்கள், எந்தெந்த கட்சி கோபப்பட்டது என்று யாருக்கும் தெரியாது. விஜயன் மீதான தாக்குதலை ஆதிராஜாராம்தான் செய்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நாடு தழுவிய இடஒதுக்கீட்டு பிரச்னையில், நாட்டு மக்களுக்குப் பாதகமான செயலில் ஒருவர் மீது ஆதிராஜாராம் தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் அவர் ஏன் அரசு பதவி வகிக்கக் கூடாது? அவருக்குரிய வாய்ப்பை ஏன் அவர் இழக்க வேண்டும்?’’ என கேள்வி எழுப்பினார் எஸ்.டி.சோமசுந்தரம்.
’’விஜயன் மீதான தாக்குதல் மட்டுமின்றி, பல வழக்குகளில் ஆதிராஜாராம் சம்பந்தப்பட்டுள்ளதாக சி.பி.ஐ கூறியுள்ளதே’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ’’சி.பி.ஐ ஒன்றும் கடவுள் அல்ல; நீதிமன்றம் அல்ல. அவர்கள் ஒரு போலீஸ்’’ என்று பதில் சொன்னார் எஸ்.டி.சோமசுந்தரம். ’’விஜயனை தாக்கியவர்கள் யார்? என்று எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் விஜயன் வழக்கறிஞர் என்பதற்காக தாக்கப்படவில்லை. அவர் தொடர்ந்து 69 சத இடஒதுக்கிடுக்கு எதிரானவர் என்பதால் அவர் தாக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.
அன்றைக்கு எதிர்க் கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி ’அகர முதல எழுத்தெல்லாம் ஆதிராஜாராம் முதற்றே உலகு என்று திருக்குறளே திருத்தப்படலாம்’’ என ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்தார்.
இப்படி ஆதிராஜாராமுக்கு இன்னொரு பக்கம் ஆதரவு இருந்தும் ராஜ்யசபா எம்.பி பதவி அளிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஆதிராஜாராமுக்குப் பதிலாக தளவாய் சுந்தரத்தை ஜெயலலிதா அறிவித்தார். ஆதிராஜாராமுக்கு வக்காலத்து வாங்கி பேசிய எஸ்.டி.சோமசுந்தரமே விஜயன் வழக்கில் கைதானார்.
’சமூகக் குற்றவாளி’ என விஜயனுக்கு எதிராக அதிமுக பிரசாரம் மேற்கொண்டது. ’சமூகக் குற்றவாளி" என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரங்களை நீதிமன்றத்தில் விநியோகித்தார்கள். இதற்குப் பதில் அளித்த விஜயன், ‘’என்னைச் சமூகக் குற்றவாளி என்று சொல்வது அடிபடை இல்லாத குற்றச்சாட்டு. உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் தகுதி வாய்ந்த ஒரு மாணவனுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அந்த மாணவனுக்கு நியாயம் கிடைப்பதற்காக நான் வழக்குத் தொடர்ந்தேன். வழக்கறிஞர் என்ற முறையில் அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு வழக்கு தாக்கல் செய்வது எனது தொழில் தர்மமாகும். இந்தச் செயலை சமூக குற்றம் என்று கூறினால் 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய 8 நீதிபதிகளையும் அதே குற்றத்துக்கு உட்படுத்துவது போன்றாகும். உண்மையில் எனது வழக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது என்பது மேம்போக்கான வாதமாகும். எனது வழக்கைத் தீர ஆராயும்போது அது. தகுதியுள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பது தெரிய வரும்’’ என்றார் விஜயன்.
அந்த வழக்கு என்ன ஆனது?
வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்ட வழக்கில், அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், ஆதிராஜாராம் உள்ளிட்ட 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லாததால், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 15 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் 2012 ஆகஸ்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. சிபிஐ-யின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிபிஐ விசாரித்த வழக்கின் லட்சணம் இதுதான்.
வழக்கில் விடுதலை ஆனதும் நீதிமன்றத்தில் எஸ்.டி.சோமசுந்தரத்தையும் ஆதிராஜாராமையும் வாழ்த்தி கட்சியினர் முழக்கம் எழுப்பினார்கள்.பெரியார், அண்ணா சமாதிகளில் ஆதிராராஜாம் சென்று வணங்கினார்.
அதன் பிறகு என்ன நடந்தது?
2006 சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் 2021 சட்டசபைத் தேர்தலில் கொளத்தூரிலும் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு ஆதிராஜாராம் தோற்று போனார் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி காலத்தில் ஆதிராஜாராம் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என எந்த பதவியிலும் அமர முடியவில்லை.
வழக்கறிஞர் விஜயனுக்கு ’சமூகக் குற்றவாளி’ என அன்றைக்கு எப்படி பட்டம் கொடுத்தார்களோ அதே போல 30 ஆண்டுகள் கழித்து ‘சமூக நீதி போராளி’ என ஆதிராஜாராமுக்கு பட்டம் அளித்தார்கள். இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பான விவகாரத்தில் வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்ட வழக்கில் சிறை சென்று விடுதலை ஆனதால் ஆதிராஜாராமுக்கு ‘சமூக நீதி போராளி’ என்ற பட்டத்தை சூட்டி 2024-ம் ஆண்டு அதிமுகவின் ஆண்டு விழாவில் அவரது ஆதரவாளர்கள் பேனர் வைத்தார்கள். ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என ஜெயலலிதாவுக்கு அவரது கட்சியினர் ஏற்கெனவே பட்டம் சூட்டினார்கள். ஜெயலலிதா இருக்கு வரையில் ஆதிராஜாராமுக்கு அப்படி பட்டம் சூட்டவில்லை. எடப்பாடி இருக்கும் போதுதான் பட்டம் சூட்டப்பட்ட்து. ஆனால், அதுவும் கொஞ்ச நேரம்கூட நீடிக்கவில்லை.
அதிமுகவின் 53-ம் ஆண்டு தொடக்க விழாவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராமுக்கு ‘சமூக நீதி போராளி’ என்ற அடைமொழியுடன் வைத்த பேனரை எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பாக அவசர அவசரமாக அவரது ஆதரவாளர்கள் மறைத்தனர்.
’’சாமி... அர்ச்சனை என் பெயருக்கு இல்லை. சாமி பெயருக்கு. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐயா பெயருக்கு" என மாற்றுத்திறனாளிகளின் கடவுளாக தன்னைப் பொருத்திப் பார்த்து விளம்பரம் வெளியிட்ட பழனிசாமி, புரட்சித் தமிழர் என பட்டம் போட்டுக் கொண்ட பழனிசாமி எப்படி இன்னொருவருக்கு ‘சமூக நீதி போராளி’யை விட்டுத் தருவாரா?
-எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி #🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல் #தமிழ்நாடு அரசியல் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴
எலக்ஷன் என்சைக்ளோபீடியா!
1980 சட்டமன்றத் தேர்தலில் வென்று 2-வது முறையாக ஆட்சி பிடித்தார் எம்.ஜி.ஆர். #📺அரசியல் 360🔴 #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️
உசுரு மசுருக்கு கூட சமம் இல்லை. #🙋♂️தமிழக வெற்றி கழகம் #அரசியல் #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #📺அரசியல் 360🔴
*சிரஞ்சீவி கட்சி சீரழிந்த கதை part 3 ஆந்திராவுக்கு போன தமிழ்நாட்டு வியாதி சிரஞ்சீவி மீது பாய்ந்த ஜெ!*
சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்ததும் ’ஆந்திராவுக்கு போன தமிழ்நாட்டு வியாதி’ என விமர்சித்தார் ஜெயலலிதா. அதற்கு காரணம் விஜயகாந்த். அப்போது நடந்த விஷயங்களை விவரிக்கிறது சிரஞ்சீவி கட்சி சீரழிந்த கதையின் பகுதி 3.
https://www.youtube.com/watch?v=LkVVWWOt6P4 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #அரசியல்
’’விஜய்க்காக என் மகன் செத்தாலும் பரவாயில்லை’’ என சொல்லும் அளவுக்கு மோசமான ஒரு சமூகத்தை உருவாக்க நினைக்கிறார் விஜய். அவர் அளிப்பதாக சொன்ன 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வைத்தே சாவு வீட்டுக்காரர்கள் நாக்குகள் பேச வைக்கப்படுகின்றன. ’சிபிஐ விசாரணை வேண்டாம்’ என யாராவது கிளம்பி வந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த தொகையை பினையாக வைத்தே உச்ச நீதிமன்றம் வரை படியேறினார்கள். ’மாதம் 5 ஆயிரம் ரூபாய் வாழ்நாள் முழுவது வழங்கப்படும்’ என சொல்லி செத்தவர்களின் வீட்டு வாய்களை நிரந்தரமாக மூடுகிறார்கள். சினிமாவில் வில்லன் செய்யும் அத்தனையும் ஹீரோ செய்து கொண்டிருக்கிறார். #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🎥Trending வீடியோஸ்📺 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ்
பில்கிஸ் பானுவுக்கும் உஷாராணிக்கும்
கரூர் நெரிசல் மரணத்திற்கும் என்ன தொடர்பு?
கரூர் நெரிசல் மரணத்தின் விசாரணையில் குஜராத்திற்கும் மதுரைக்கும் பங்கு இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? பில்கிஸ் பானுவும் உஷாராணியும் ஏன் கரூர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? பில்கிஸ் பானுவும் உஷாராணியும் யார்? கரூர் வழக்கை விசாரித்த அஸ்ரா கார்க்குக்கும் சிபிஐ விசாரணையைக் கண்காணிக்கும் அஜய் ரஸ்தோகிக்கும் என்ன தொடர்பு?
முதலில் நாம் குஜராத்திற்குப் போவோம்.
2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து, குஜராத்தில் மிகப் பெரியளவில் வன்முறை, கலவரம் ஏற்பட்டது. இந்துத்துவ அமைப்பினர் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொடூரத் தாக்குதல்களை நடத்தினர். பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தில் இருந்த 3 வயதுக் குழந்தை உட்பட 14 பேர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். 3 மணி நேரம் மயங்கிக்கிடந்த பில்கிஸ் பானு ஆதிவாசிப் பெண்களிடம் ஆடை வாங்கி அணிந்து கொண்டு போலீஸில் புகார் கொடுத்தார்.
வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. ஆனாலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடவடிக்கைகள் அமைந்தன. சாட்சியங்களை அழித்ததாகச் சொல்லி வழக்கை மகாராஷ்டிராவுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம். குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் 2008-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை 2018-ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் உறுதியும் செய்தது.
குற்றவாளிகள் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்ததாலும் நன்னடத்தையைக் காரணம் காட்டியும் குஜராத் அரசு அவர்களை 2022 ஆகஸ்ட்டில் சிறையிலிருந்து விடுவித்தது. குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட போது, அவர்களை ஆரத்தி எடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா, 15 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளதால், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் குஜராத் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் 2022-ஆம் ஆண்டு மனு செய்தார். அதனை விசாரித்த நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் விக்ரம் நாத் அமர்வு, ’குஜராத்தில் குற்றம் நடந்துள்ளதால் தண்டனையைக் குறைப்பது அல்லது முன்கூட்டியே விடுதலை செய்வது என்பது குஜராத் அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதுபற்றி குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்து இவர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்கலாம். 11 பேரை விடுவிக்கக் குஜராத் அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பிறகுதான் பில்கிஸ் பானு வழக்கிலிருந்து குற்றவாளிகள் தண்டனைக் காலம் முடியும் முன்பே நன்னடத்தையைக் காரணம் காட்டி விடுவிக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் கொண்ட அமர்வு, குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை 2024 ஜனவரியில் ரத்து செய்தது. அப்போது உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகள் முக்கியமானவை.
’பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக் குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு விசாரணை மகாராஷ்டிராவில்தான் நடைபெற்று குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனால், 11 பேரை விடுவிப்பது குறித்த முடிவை வழக்கு விசாரணை நடந்த மகாராஷ்டிர அரசே எடுக்க முடியும்’ என உச்ச நீதிமன்றம் சொன்னது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலையாக முறையீடு செய்யலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி அமர்வு 2022 மே 13-ம் தேதி சொன்னது. இந்தத் தீர்ப்பை வைத்தே குற்றவாளிகள் முறையீடு செய்தனர். இதுபற்றியும் உச்ச நீதிமன்றம் கருத்துகளைச் சொன்னது. ’2022-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு என்பது உண்மைகளை மறைத்து, தவறான கருத்துகளை உருவாக்கி குஜராத் அரசு குற்றவாளிகள் விடுதலையைப் பரிசீலிக்கும் உத்தரவு பெறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விடுதலை குறித்து குஜராத் பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது ஒரு மோசடி செயல்’ என்று நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் தெரிவித்தனர்.
அடுத்து நாம் மதுரைக்குப் போவோம்!
காவல்துறை வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு புரட்சி மதுரையில் நடந்தது. மதுரையை அடுத்துள்ள திருப்பாலையில் 2012 பிப்ரவரி 9-ஆம் தேதி மாலை ஒரு கொலை நடக்கிறது. கணவர் வீரணனை கொலை செய்கிறார் மனைவி உஷாராணி.
நான்கு பிள்ளைகள் பிறந்த பிறகும்கூட, குடித்துவிட்டு வருவதும், கொடுமைப்படுத்தி அடிப்பதையும் வீரணன் நிறுத்தவே இல்லை. ஒரு சமயம் உஷாராணியைக் கட்டிப்போட்டு, அரிவாளால் காலை வெட்டி, துடிப்பதைப் பார்த்து இன்பம் காணும் வக்கிர மன நிலைக்குப் போனார். பொறுக்க முடியாத உஷாராணி காவல் நிலையத்துக்குப் போனார். வீரணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் மகளிடமே தகாத முறையில் வீரணன் நடந்து கொள்ள, தடுக்க முயன்றார் மனைவி உஷாராணி. கடும் சண்டைக்கு பிறகு மகளைப் பாதுகாக்கக் கணவர் வீரணனை உஷாராணி கிரிக்கெட் பேட்டால் தாக்கினார். சம்பவ இடத்திலேயே வீரணன் இறந்தார்.
’வீரணன் மரணத்தில் மர்மம் இருக்கிறது. உஷாராணிக்கு வேறு ஒருவர் கொலை செய்ய உதவியிருக்கிறார்’ எனச் சொல்லி வீரணன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். விவகாரம், பூதாகரமானது.
அப்போது மதுரை மாவட்ட எஸ்.பி-யாக இருந்தவர் அஸ்ரா கார்க். அவர் நேரடியாக விசாரணையில் இறங்கினார். கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், உஷாராணி கைது செய்யப்பட்டார். மறுநாள் உஷாராணியிடமும் கொலை நடந்தபோது வீட்டில் இருந்த அவரது இரண்டாவது மகள் கோகிலப்பிரியாவையும் தனியாக அழைத்து விசாரணை நடத்தினார்.
''வழக்கம் போல குடிபோதையில் தகராறு செஞ்ச மனுஷன், திடீர்னு வெறிபிடிச்ச மிருகமா மாறிட்டார். எதிர்ல நிக்கிறது தான் பெத்த மகள்னுகூட பாக்காம அவளைப் பலாத்காரம் பண்ண ஆரம்பிச்சிட்டார். எம் புள்ளயும் நானும் கையில கால்ல விழுந்து எம்புட்டோ கெஞ்சிப் பார்த்தோம்; கேக்கல. இதுக்கு மேலயும் தாமதிச்சா, புள்ளய நாசம் பண்ணினாலும் பண்ணிருவான்னு தோணுச்சு. பக்கத்துல கெடந்த கிரிக்கெட் மட்டையால மண்டையில ஓங்கி அடிச்சுட்டேன். அந்தாளு செத்துப்போகணும்னு நெனச்சு நான் அடிக்கலை. ஆனா, அந்த நேரத்துல அதைத்தவிர எனக்கு வேற வழி தெரியலை சார்'' என்று எஸ்.பி-யிடம் கதறி இருக்கிறார் உஷாராணி. கோகிலப் பிரியாவும் தன் தகப்பனின் அரக்கத்தனத்தை திக்கித்திக்கி விவரித்து இருக்கிறார். இருவரின் வாக்குமூலங்களிலும் கண்ணீரிலும் உண்மை இருந்தது.
உஷாராணி அளித்த வாக்குமூலத்தை உறுதி செய்யும் வகையில் அவருடைய மகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பெண்ணின் மீது கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அதனை அவரது தந்தை வீரணன்தான் ஏற்படுத்தினார் எனத் தெரியவந்தது. உஷாராணியை வீரணன் பல வருடங்களாகக் கொடுமைப்படுத்தியதற்குச் சாட்சியங்கள் காவல்துறையிடமே இருந்தது. இதன்பிறகுதான் அஸ்ரா கார்க், அந்த முடிவை எடுத்தார். ’’உஷாராணி மேல எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம்; வீட்டுக்கு அனுப்பிடுங்க'' என்று தடாலடியாய் சொன்னார்.
வழக்கமாக இது போன்ற வழக்குகளில் கொலைக் குற்றவாளி என்ற முறையில், கொலையாளி கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்தியத் தண்டனை சட்டம் 100, 120 பிரிவுகளின் படி, பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளக் கொலை செய்தால், அது கொலையாகாது. அந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி கொலை வழக்கிலிருந்து உஷாராணியை விடுவித்தார் அஸ்ரா கார்க். ‛‛பெண்களின் தற்காப்புக்காக அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமை இது. குற்றத்திற்கான முகாந்தரம் உறுதியாகத் தெரிந்ததால், இந்த முடிவுக்கு வந்தோம். சட்டத்தின் படிதான் அவர் விடுதலை செய்யப்பட்டார்’’ என்று அன்றைக்குச் சொன்னார் அஸ்ரா கார்க். அதன்பிறகுதான் இப்படி ஒரு சட்டம் இருப்பதும், போலீஸாரே கொலையாளியை விடுவிக்கலாம் என்பது தெரியவந்தது.
’மகளைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற கணவனைக் கொலை செய்தாலும் குற்றம் இல்லை’ என சொன்ன அஸ்ரா கார்க்கும், பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகளை முன்விடுதலை செய்ய முறையிடலாம் எனச் சொன்ன அஜய் ரஸ்தோகியும் கரூர் என்ற ஒரு புள்ளியில் இணைந்தார்கள்.
தவெக தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பரப்புரை செய்தபோது, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு முதலில் விசாரித்தது. அந்த விசாரணைக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் அஸ்ரா கார்க். அவரும் விசாரணையைத் தொடங்கிய நிலையில் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அஸ்ரா கார்க் சிறப்பு விசாரணைக் குழு கலைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழுவை அமைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்தக் குழுவில் இவருடன் இரண்டு அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். அவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் குழுவை வழிநடத்தப் போகும் நீதிபதி அஜய் ரஸ்தோகி யார்? என்பதை பில்கிஸ் பானு வழக்கில் பார்த்தோம். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 67 வயதாகும் இவர், 1982-ம் ஆண்டு வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். 2018-ல் திரிபுரா மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்ந்தார். அதே ஆண்டு நவம்பரில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நான்கரை ஆண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்தவர், 506 அமர்வுகளில் கலந்துகொண்டு 158 தீர்ப்புகளை எழுதியிருக்கிறார். தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் அஜய் ரஸ்தோகியும் ஒருவர்.
கலைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக இருந்த அஸ்ரா கார்க் யார் என்பதை உஷாராணி வழக்கில் தெரிந்து கொண்டோம். நெல்லை மாவட்ட எஸ்.பி-யாக இரண்டு வருடங்கள் பணியாற்றி, 2010-ல் மதுரை மாவட்ட எஸ்.பி-யாகப் பொறுப்பேற்றார். இடையில் சி.பி.ஐ பணிக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஐ.ஜி-யாகப் பதவி உயர்வுபெற்று தமிழகப் பணிக்கு வந்தார்.
பில்கிஸ் பானுவுக்கும் உஷாராணிக்கும் நடந்த விஷயங்களைப் பார்த்தோம். அஜய் ரஸ்தோகியும் அஸ்ரா கார்க்கின் கதைகளையும் கேட்டோம். இந்த இரண்டும் கரூர் நெரிசல் மரணங்கள் விவகாரத்தின் ஒன்றிணைந்தன.
வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும் விஜய்யும் அவரது ரசிகர்களும் ’நீதி வெல்லும்’ என்று கோரஸ் பாடினார்கள்.
கடந்த ஜனவரியில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தவில்லை? கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவ நீதி விசாரணைக்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஹர்ஷ்குமார் தலைமையில் விசாரணை கமிஷனை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார். ஆனால், கரூருக்கு அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தைகூட உச்ச நீதிமன்றம் கலைத்துவிட்டது.
2024 ஜூலையில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்வின் போது நெரிசலில் சிக்கி உத்தரப்பிரதேசத்தில் 116 பேர் உயிரிழந்தார்கள். இதற்கும் சிபிஐ விசாரணை நடைபெறவில்லை.
நீதி வெல்லும் என்கிறார் விஜய். நீதி வெல்லுமா?
- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி #🙋♂️தமிழக வெற்றி கழகம் #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல்
இதே நாளில்தான்..!
தமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் கட்டற்ற ராஜாவாக வலம் வந்த 'சந்தன மரக் கடத்தல் மன்னன்' வீரப்பன், 2004 அக்டோபர் 18-ம் தேதி அதிரடிப்படையால் சுட்டு கொல்லப்பட்டான். #😎வரலாற்றில் இன்று📰 #அரசியல் #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️
ஆயுத பூஜை கொண்டாடலாம்; டேராடூனில் கூடைப்பந்து விளையாட்டில் மகிழலாம்; ஜாமீனில் வெளியே வந்தால் மாலை போட்டு வரவேற்கலாம்; இனிப்புகள் வழங்கலாம்; காலில் விழுந்து ஆசி பெறலாம். ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது. அரசன் மனநிலையிலேயே வாழ்கிறார்கள்! #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #அரசியல்
*பில்கிஸ் பானு, உஷாராணி... கரூர் நெரிசல் மரணத்திற்கும் என்ன தொடர்பு?*
கரூர் நெரிசல் மரணத்தின் விசாரணையில் குஜராத்திற்கும் மதுரைக்கும் பங்கு இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? பில்கிஸ் பானுவும் உஷாராணியும் ஏன் கரூர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? பில்கிஸ் பானுவும் உஷாராணியும் யார்? கரூர் வழக்கை விசாரித்த அஸ்ரா கார்க்குக்கும் சிபிஐ விசாரணையைக் கண்காணிக்கும் அஜய் ரஸ்தோகிக்கும் என்ன தொடர்பு? பின்னிப் பிணைந்திருக்கும் பழைய வரலாற்றை விவரிக்கிறது!
https://youtu.be/yJ9GLxoDBiM?si=Mz07u3DdLUTWh4yL #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️
பராசக்தி திரைப்படம் வெளியான தினம் இன்று! #😎வரலாற்றில் இன்று📰 #அரசியல் #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴