ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views • 6 months ago
*ஆனித்திருமஞ்சனம்* *தொடர்பான அரிய* *ஆன்மீகத்தகவலகள்*
இன்று(2-7-25)
ஆனித் திருமஞ்சனம் சிறப்பு பதிவு
சிவ பெருமானுக்கு ஆனித் திருமஞ்சனம் நடைபெறுவது ஏன் தெரியுமா?
சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும்.
மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதை கண்டத்தில் நிறுத்தியதால் நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது.
மேலும், வெம்மையுள்ள சுடலையின் சூடான சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால் சிவபெருமான் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார்.
இந்த வெப்பத்தைத் தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
இதில் ஆனித் திருமஞ்சனம் மாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது.
அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலம். இந்தக் காலத்தில் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறான்.
அடுத்து வருவது தட்சிணாயன காலம்.
அப்போது தன் பாதையை சூரியன் மாற்றிக்கொள்கிறான்.
கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலம் ஆரம்பம்.
இதையே "*ஆனி இலை* *அசங்க*' என்பார்கள்.
கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து இதமான நாட்கள் தொடங்கும் மாதம் ஆனி.
தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி.
இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர்.
தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம்; காலைப்பொழுது மாசி மாதம்; உச்சிக் காலம் சித்திரை; மாலைப்பொழுது ஆனி;
இரவு ஆவணி;
அர்த்த சாமம் புரட்டாசி என்பர்.
வைகறை பூஜை மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திலும்; காலைச்சந்தி பூஜை மாசி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்; உச்சிக்கால பூஜை சித்திரை திருவோணத்திலும்; மாலை (சாயரட்சை) பூஜை ஆனி மாத உத்திர நட்சத்திரத்திலும்; இரண்டாம் கால பூஜை
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்; அர்த்தஜாம பூஜை புரட்டாசி மாத
வளர்பிறை சதுர்த்தியிலும் நடைபெறுகிறது.
ஆனித் திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீநடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சில ஆலயங்களில் இந்த
ஆனி மாத திருமஞ்சனத்தை விழாவாகவும் கொண்டாடுகிறார்கள்.
இது நடராஜப் பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், சிதம்பரம் திருத்தலத்தில் பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.
மேலும் திருவாரூர், உத்தரகோசமங்கை, ஆவுடையார் கோவில் போன்ற திருத்தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
"அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி சலஞ்சல சலஞ்சல அரவம்!
முந்த விதி ஹஸ்தக தமத்தல லய த்வநி திமித்திமி நர்த்தந பதம்!
சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கிரிடிஸங்க நிகடம்!
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜே!”
கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல் பதஞ்சலி பதம் பாட, பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, தந்திமுகன், ப்ருங்கிமுனிவர், சனகாதிமுனிவர்கள், தேவாதிதேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை “ஜல் ஜல்” என ஒலிக்க ஆனந்த நடனம் ஆடுகிறார் நடராஜன்.
தில்லையில் ஆனி உத்திரத்தன்று சூரிய உதய வேளையில், யானைகள் இழுக்கும் தேர்போல அமைக்கப்பட்டுள்ள ராஜசபையின் முன்மண்டபத்தில், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும் அன்னை சிவகாமசுந்தரிக்கும் வெகுசிறப்பாக ஆனித் திருமஞ்சனம் நடைபெறும்.
பின்னர், சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீநடராஜப் பெருமான்
ராஜசபையில் அருள்பாலிக்கிறார்.
இதேபோல் திருவாரூரில் அருள்புரியும் ஸ்ரீதியாகராஜருக்கும்
அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஆனி மாதத்தில் ஒரே நாளில் சிதம்பரமும் திருவாரூரும் திருவிழாக் கோலம் காணும்.
அந்நாளில் நடராஜப் பெருமானுக்கும் தியாகராஜப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
இருவரும் அன்று தேரில்
பவனி வருவார்கள்.
திருவீதி உலா முடிந்ததும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள்.
ஆனித் திருமஞ்சனத்தின்போது அளிக்க வேண்டிய அபிஷேக ஆராதனைப் பொருட்களும்,அதன் பலனகளும்
ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம்.
அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
கங்கை தீர்த்தம் அளித்தால் நம் பாவங்கள் நசியும்; எண்ணெய் அளித்தால் சுகம் கிட்டும்; மாப்பொடி அளித்தல் கடனைப் போக்கும்; நெல்லி முள்ளி பொடி அளித்தால் நோய் நீங்கும்; பஞ்சகவ்யம் அளித்தால் மனதில் தூய்மை உண்டாகும்; இளநீர் அளித்தால் சுகமான வாழ்வு கிட்டும்; தேன் அளித்தால் மகிழ்ச்சி உண்டாகும்; பால் அளித்தால் ஆயுள் வளரும்; தயிர் அளித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; நெய் அளித்தால் மோட்சம் கிடைக்கும்; கரும்புச்சாறு அளித்தால் உடல்பிணியைப் போக்கும்; சந்தனம் அளித்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்; பன்னீர் அளித்தால் பணத் தட்டுப்பாடு இருக்காது; பஞ்சாமிர்தம் தயாரிக்க பழங்கள் அளித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.
ஆனித்திருமஞ்சன சிவ வழிபாட்டின் பலன்:
பொதுவாக சிவபெருமானை வழிபட்டால் நமக்கு நல்லறிவு கிட்டும்.
இதனால் எது நல்லது- எது தவறு என்பதைப் பகுத்தறியலாம்.
உடலில் பதட்டம் இருக்காது. அமைதியான வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் சிவதரிசனம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.
அதுவும் ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்று அருளாளர்கள் சொல்கிறார்கள். 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #ஆனி திருமஞ்சனம் #இன்று ஆனி உத்திரம் ஆனி திருமஞ்சனம் #தில்லை நடராஜர்🙏🙏🙏🙏🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
16 likes
17 shares