Rationalist
997 views • 3 months ago
என் பாலஸ்தீன பயணமும் ஈரானின் பெண்களும்...
ஈரான் பற்றிய மற்றுமொரு தொடர் பிரச்சாரம் அங்கே உள்ள பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பது, ஈரானில் அறிவியல், பொறியியல் மற்றும் ஆய்வு புலங்களில் 70% பெண்கள் மட்டுமே உள்ளனர், இது உலகின் சராசரியை விட பல மடங்கு அதிகம்.
இதனை விட ஈரானில் நான் இருந்த சுமார் ஒரு மாத காலம் பல்கலைக்கழகங்கள், பாராளுமன்றம், ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், விமான நிலையங்கள் என ஈரானின் பொது வெளிகள் முழுவதும் பெண்களை பார்த்திருக்கிறேன், அவர்களுடன் பழகியிருக்கிறேன்.
அங்கே ஒட்டு மொத்த பெண்களும் கடுமையான அடக்குமுறைக்குள் தான் வாழ்கிறார்கள் என்பது எல்லாம் மேற்கத்திய ஊடகங்களில் பிரச்சாரம், அங்கே புர்கா என்பது கட்டாயம் கிடையாது. அங்கே தலைமுடியை மட்டுமே மறைக்க வேண்டும் என்றும் அதற்கான தலைக்கவசமான ஹிஜாப் மட்டும் தான் வழியுறுத்தப்படுகிறது. இந்த ஹிஜாப்பிலும் பல வகைகள் அங்கே உள்ளது. அங்கேயும் இந்த ஹிஜாப்பும் அணியமாட்டோம் என்று போராடும் குழுக்களும் இருக்கிறது என்பதையும் அங்கே இருந்த போது அறிந்தேன்.
கலர் கலராய் விதவிதமாய் ஹிஜாப்களை அங்கு பார்த்து நானே அரை டஜன் ஹிஜாப்களை வாங்கியும் வந்தேன், அவற்றில் சில என் தோழிகள் பார்த்து நாங்கள் இங்கே இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது துப்பட்டாவை சுத்துசுத்து என சுத்தி தலைமுடியில் தூசுபடியாமல் இருக்க கட்டுகிறோம், இது மிகவும் வசதியாக இருக்கிறது என்று சென்னையிலேயே அனைத்தையும் வாங்கிக் கொண்டார்கள். நிச்சயம் இங்கே நான் அதனை பரிந்துரைத்து எல்லாம் இதனை எழுதவில்லை மாறாக அங்கே இந்த தலைமுடியை மூடிவைத்தல் என்பதை ஒரு பண்பாட்டு நடைமுறையாக வைத்திருக்கிறார்கள். குஜராத், ராஜஸ்தான் சென்றால் அங்கே உள்ள இந்து பெண்கள் இதே போல் தங்கள் தலைமுடியை மூடிவைத்திருக்கும் அதே போலான பண்பாட்டு நடைமுறையை வைத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியலாம்.
நான் இந்தியாவில் இருந்து பாலஸ்தீனத்திற்கு தரைவழியாக சென்ற போது பாகிஸ்தானில் இருந்து நாங்கள் சாகேதான் நகரத்தின் வழியே தான் ஈரானுக்குள் நுழைந்தோம் அங்கே எங்களுக்கு விமான நிலையத்திலேயே பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது, அங்கிருந்து நாங்கள் துருக்கிக்குள் நுழையும் வரை சுமார் இரண்டு வாரங்கள் எங்கள் சர்வதேச குழுவினரை ஒட்டு மொத்தமாக பார்த்துக் கொண்டது பெண்கள் குழுவினர் தான். பெரும் பகுதி பல்கலைக்கழக மாணவிகளான அவர்கள் அனைவருமே மிகச் சரளமாக ஆங்கிலம் பேசினார்கள். அவர்கள் அனைவருமே எங்களுடன் உரையாடியபடி இருந்தார்கள், எங்கள் மூன்று பேருந்துகளிலுமே பேருந்துக்கு நான்கு பேர் பொறுப்பாளர்களாக இருந்தார்கள். சாகேதான், கெர்மான், இஸ்பகான், கோம், தெஹ்ரான், தப்ரீஸ் என ஈரானில் சுமார் 2500 கிமீ தூரம் பயணித்தோம்.
எங்கள் பயணத்தின் ஒருங்கிணைப்பாளர்களான பெண்கள் தான் அந்த பயணத்தில் எங்களை தங்களின் குடும்பத்தாரை போல் பார்த்துக் கொண்டார்கள். எங்களுடன் யார் உரையாடினாலும் எங்களின் மொழிப்பெயர்ப்பாளர்களாக இருந்தார்கள், ஒவ்வொரு பல்கலைகழகத்திலும் எங்களை அங்குள்ள வெவ்வேறு கல்விப் புலங்களுக்கு அழைத்துச் சென்றார்கள், ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் எங்களுக்கு அந்த ஊரின் மேயர் தலைமையில் வரவேற்பு நடக்கும், அந்த அந்த ஊரில் பிரமுகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என அனைவருடன் எங்களை உரையாடச் செய்வார்கள். இவர்கள் இல்லையெனில் நாங்கள் அத்தனை பொருட்களை ஒவ்வொரு ஊரிலும் பெற்று பாலஸ்தீனத்தின் காசாவிற்கு கொண்டு சேர்த்திருக்க முடியாது.
தெஹ்ரானில் அன்றைய ஈரான் ஜனாதிபதி அஹ்மதிநெஜாத் எங்களை வரவேற்றார், மிக முக்கிய உரைய நிகழ்த்தினார். அன்றைய இரவு பாராளுமன்றத்தில் எங்களை அழைத்துச் சென்றார், அங்குள்ள மஜ்லிஸில் வைத்து எங்களை அரசு விருந்தினர்களாக அறிவித்து பல பரிசுகள் கொடுத்தார், அன்று அஹ்மதிநெஜாத் உரையாற்றுகிற நேரம் பெரும் முழக்கங்களை எழுப்பியது அங்கிருந்து பெண்கள் குழுவினர் தான்.
எங்களை சுற்றிலும் பணி படர்ந்து மலைகள் ஊடே ஒரு சர்வதேச எல்லை நுழைவாயிலின் வழியே ஈரானிலிருந்து துருக்கிக்குள் நுழையும் போது, நான் என் வசம் இருந்த பொருட்களில் ஏதேனும் ஒன்றை அவர்களுக்கு நினைவுப் பரிசாக கொடுக்க முயன்ற போது அதனை எல்லாம் காசாவில் உள்ள எங்கள் சகோதரர்கள்/சகோதரிகளுக்கு கொடுங்கள் என்று விடைபெற்றுச் சென்றார்கள். அங்கே எங்களை வழியனுப்பி வைக்கையில் அவர்கள் கண்களில் இருந்து வழிந்தோடிய கண்ணீரை இந்த நிமிடமும் என்னால் மறக்க இயலாது.
இன்றைக்கு தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் ஈரான் பற்றிய அடிப்படை கூட அறியாதவர்கள், ஈரானில் பெண்களுக்கு சுதந்திரமே இல்லை என்று முழங்குகிறதை பார்க்கையில், இதை நான் பதிவு செய்யவில்லை எனில் என் மனசாட்சிக்கு விரோதமான செயலாக அது மாறிவிடும் என்பதால் உடனடியாக இதனை எழுத அமர்ந்தேன்...
-எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்
#ஈரான் #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
7 likes
12 shares