கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 13.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
அப்போது நாராயணர் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது உனக்கு இங்கிருந் தால்மதலை
கிட்டாது காசிதனில் கீர்ந்த நதிக்கரையில்
திட்ட முடன்தவசு செய்யப்போ யங்கிருந்தால்
மதலையுட துயரம் மாறுங்கா ணுன்றனக்குப்
பதலைமொழி நீசனுக்குப் பகர்ந்தார்கா ணம்மானை
.
விளக்கம்
==========
கலிவயப்பட்ட மன்னனின் நிலைகண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, அந்த மன்னனின் கனவில் தோனிறி, மன்னா, இப்போது இங்கே இருந்தால் உனக்கு குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, நீ காசியிலுள்ள புனிதமான நதிக்கரையில் அமர்ந்திருந்து கடுமையாகத் தவம் செய்யவேண்டும். அப்படித் தவம் செய்தால்தான் உனக்குக் குழந்தை இல்லை என்ற கவலை தீரும் என்றும் உபதேசித்தார்.
.
.
அகிலம்
========
கலிநீசன் குழந்தை வேண்டி தவமிருத்தல்
============================================
கேட்டந்த நீசன் கெட்டிதா னென்றுசொல்லி
நாட்டுக்குச் சீட்டெழுதி நருட்களையுந் தான்வருத்திப்
போனானே நீசன் புகழ்பெரிய காசிதனில்
சேனா பதிகள் திக்கெங்குஞ் சூழ்ந்துநிற்க
நீசன் தவசு நிற்க வொருமறையோன்
வாசக் குழலோடு மருவினன்கா ணம்மானை
கண்டந்த நீசன் காமம் பொறுக்காமல்
தண்டுமீ றிக்காமம் சலத்தில் விழுந்ததுவே
இரைநமக் கென்று எட்டியொரு கொக்காவி
விரைவாய் விழுங்க மிகுத்தகர்ப்ப முண்டாகித்
தண்ணீரில் பிள்ளை தான்பெற்று தம்மானை
வெண்ணிற மான மிகுத்தபிள்ளை தான்மிதந்து
போகும் பொழுதில் புனலரிஷி மாமுனிவன்
தாப முடன்சிசுவை தானெடுத்தா னம்மானை
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணுவின் போதனையால் மனம் மகிழ்ந்த மாநீசன், இதுவுமோர் நன்மைக்கே என நினைத்து, தன்னுடைய நாட்டு மக்களுக்கெல்லாம் அழைப்பு ஓலை அனுப்பி, அனைவரையும் வருவித்து, அவர்களிடமெல்லாம் தாம் தவமிருக்கச் செல்லும் செய்தியைச் சொல்லி விடைபெற்று, புனிதப் பயணமாகக் காசிக்குப் பயணித்து, அங்கேயுள்ள புனித நதிக்கரையில் சேனாதிபதிகள் அடங்கிய படைப்பரிவாரங்களின் பாதுகாப்போடு தவம் மேற்கொண்டான்.
.
அவன் தவம் இருந்துகொண்டிருக்கும் இடத்திற்கு எதிரில் இருந்த ஓர் ஆசரமத்தில் தங்கியிருந்த வேதியன் ஒருவன், தன் மனைவியுடன் இல்லற இன்பத்தில் ஈடுபட்டிருந்ததை, குழந்தை வேண்டித் தவத்தில் அமர்ந்திருக்கும் நீசன் கண்டு நிலை தடுமாறினான். அந்த நீசனின் உடலில் ஊடுருவிய காமம் அவனுடைய நீண்ட தவத்தை நிலைகுலையச் செய்தது. எனவே, அவனுடைய விந்து கலிதமாகி அந்த புனித நதி நீரில் விழுந்தது.
.
அந்த நதிக்கரையில், தனக்கு இரை வேண்டிக் காத்திருந்த ஒரு கொக்கு, கலிநீசனின் விந்துவை இரை எனக் கருதி அவ்விந்துவை விரைவாக எடுத்து விழுங்கியது. அதனால் அந்தக் கொக்கு கர்ப்பமாகி உடனே தன் குழந்தையைத் தண்ணீரில் பெற்றது.
.
கொக்கு பெற்ற அந்த மனிதக் குழந்தை, வெண்மை நிறமுடையதாய் ஆற்றில் மிதந்து வந்து கொண்டிருப்பதை, அங்கே ஆசிரமம் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த புனல் ரிஷி கண்டெடுத்தார்.
.
.
அகிலம்
========
கொக்கு பெற்ற பிள்ளையை புனல் ரிஷி வளர்த்தல்.
=====================
மதலை தனையெடுத்து வளர்த்துப் பருவமதில்
குதலை தனையாற்றில் குளியோட நீச்சலதும்
தோணியே றுந்தொழிலும் சுருக்குக்கப் பலேற்தொழிலும்
ஆணிப்பொன் முத்து அதுவளருந் தலமும்
வெள்ளித் தலமும் மிகுத்தபொன் னுத்தலமும்
உள்ளவித்தை யான உற்றரச வாதமுதல்
கள்ள உபாயக் கபடுபலத் தந்திரமும்
வெள்ளை நீசன்தனக்கு விதமா யவர்வருத்திச்
செங்கோ மட்டியெனத் தேசநசு ராணிகளில்
பெண்கள் ரண்டுபேரைப் பேறாய் மணமகித்து
இருத்தினான் மாமுனிவன் ஏற்றசெங் கோமட்டியில்
.
விளக்கம்
=========
புனல் ரிஷி நதியில் கண்டெடுத்த அந்த வெள்ளைக் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்தார். அந்தக் குழந்தையின் பாலிய பருவத்திலேயே நீச்சல் கற்றுக் கொடுத்தது மற்றுமின்றி தோணி, பாய்மரக் கப்பல்களில் பயணிக்கும் தொழில்களையும் கற்றுக் கொடுத்தார்.
.
அத்துடன், இரும்பு, பொன், முத்து, வெள்ளி போன்ற வஸ்துக்கள் கிடைக்கும் இடங்களை அறியும் வித்தைகளையும், இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை முதல், கள்ளம், கபடு, தந்திரங்கள் ஆகிய தீய பல வித்தைகளையும் விதவிதமாய் அந்த வெண்ணீசனுக்குக் கற்றுக் கொடுத்து, செங்கோமட்டி என்னும் நாட்டில் நகராணி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை அந்த வெண்ணீசனுக்கு மணமுடித்து, செங்கோமட்டி நாட்டிலே குடியமர்த்தினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚