கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 22.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
ஸ்ரீபத்ம நாபர் கலியரசனுக்கு உபதேசித்தல் தொடர்ச்சி...
=====================
கற்புள்ள சாணாத்தி கதறியுன்னைச் சாபமிட்டால்
அற்படியும் உன்கோட்டை அழிந்துபொடி யாகுமடா
சாணாத்தி யுன்னைச் சாங்கமுடன் சபித்தால்
வாணாளழியு முன்றன் வம்மிசங்கள் தாமுடியும்
தீத்தழலில் விந்து சிக்கி மிகப்பிறந்த
பார்த்தன் வழிக்குலங்கள் பகைந்துநிந் தித்துண்டால்
கோட்டை யிடியுமடா கோத்திரங்கள் தாமுடியும்
நாட்டை முடிக்குமடா நல்லசா ணாத்திகற்பு
சேனை யழியுமடாவுன் செல்வமது குன்றுமடா
வான மிடிந்துன் வம்மிசத்தைக் கொல்லுமடா
திடம்பெரிய சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால்
கடல்வந்துன் சீமைதனை கட்டா யழிக்குமடா
ஊக்கமுள்ள சான்றோர்க்கு ஊழியங்க ளில்லையென்று
ஆக்கமுடன் பறைதான் அடித்தவனி தானறிய
அல்லாதே போனால் அரசாள மாட்டாய்நீ
.
விளக்கம்
==========
கற்பு நெறியுள்ள காரிகைகள் மனம் நொந்து உனக்கு சாபமிட்டால் உன்னுடைய கோட்டைக் கொத்தளங்களெல்லாம் பொடி பொடியாகத் தகர்ந்துவிடும். உன் வாழ்நாள் குறையும். உன் குலமெல்லாம் பூண்டோடு ஒழியும்.
.
அயோக வனத்திலுள்ள அமிர்த கங்கைக் கரையில் நான் நெருப்புச் சுவாலையாகத் தோன்றியபோது, அதை விந்துவென தன் கருவறையில் ஏந்திய கன்னியர்கள் பெற்றெடுத்த என்னுடைய வழிக்குலங்கள் உன்னைப் பகைத்து உதாசினப் படுத்திவிட்டார்களேயானால் உன்னுடைய கோட்டைகள் இடியும், கொத்தளங்கள் சாயுமடா.
.
உத்தமமான பெண்மணிகளின் கற்பு நன்றிகெட்ட உன் நாட்டை அழிக்கும். சேனை அழியும், செல்வம் பாழாகும். வானம் இடிந்து உன் வம்மிசத்தைக் கொல்லுமடா. சக்தி வாய்ந்த பெண்களின் நித்திய நிந்தனையால் உன் நாட்டை ஆழிப் பேரலைகள் அள்ளிக் கொண்டு போகுமடா. எனவே இனிமேல் ஊக்கமும் உயர்வும் ஒருங்கிணைந்த சான்றோர்களுக்கு ஏற்கெனவே இருந்து வந்த ஊழியங்கள் யாவையும் ரத்து செய்து விட்டேன் என்று உலகமறியும்படியாக உடனே பறைசாற்று, இல்லையேல் இனி நீ அரசாளமாட்டாய்.
.
.
அகிலம்
========
நல்லான சான்றோர்க்கு நாட்டு மிறைதவிர்த்து
இறைகூலி தானம் இட்டுக் கொடுத்தவர்க்குத்
தரைமீது நன்றாய்த் தழைத்திருக்க வைக்காட்டால்
குஞ்சரமு முன்னுடைய கொத்தளமுந் தானிடித்து
வஞ்சகமா யுன்றனக்கு வலியகர்மஞ் சுற்றுமடா
கர்ம வியாதிகளாய்க் கண்டமா லையுடனே
வர்மம்வந்து சிக்குமடா மாநீசா நீகேளு
தெய்வச் சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால்
பொய்வகையால் கர்ம போகத்தால் நீமடிவாய்
என்றுநா ராயணரும் ஏற்றபுத்தி சொல்லிடவே
அன்றுஅந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான்
.
விளக்கம்
==========
மேன் மக்களான சான்றோர்களுக்கு, கலியரசனாகிய நீ இதுநாள் வரையில் விதித்து வசூலித்த வரிகளையெல்லாம் நிறுத்தல் செய்வதோடு அவர் உனக்கும் உன் குலத்தோருக்கும், உன்னுடைய அரசாங்க அதிகாரிகளுக்கும் கண்டிப்பாகச் செய்து தான் ஆகவேண்டும் என்பன போன்ற ஊழிய வேலைகளையும் இத்தோடு முடித்துவிடு.
.
சான்றோர்கள் இந்தப் பூமியில் பெருமையோடு வாழ வேண்டும். அப்படி அவர்களை வாழ விடாவிட்டால், உன்னுடைய யானைப் படைகள் முதலான கொத்தளங்கள் யாவும் இடிந்து விடும்.
.
அதுமட்டுமல்ல காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உன்னுடைய கர்மவினைகளெல்லாம் வஞ்சகமாய் உன்னை வந்து சூழ்ந்துகொள்ளும். கர்மவியாதிகளான கண்ட மாலையுடன் வறுமையும் வந்துன்னை முத்தமிடும்.
.
பொல்லாத கலிநீசா நான் பேசுவதை இன்னும் கேளு, பூலோகத்தில் பிறந்திருக்கும் தேய்வக்குலப் பெண்கள் வேதனையோடும், வெம்மிய குமுறலோடும் அன்றாடம் உன்னை சபித்துச் சாபமிட்டுக் கொண்டேயிருந்தால், நீ திருட்டுத்தனமான செய்கைகளினாலும், முன் ஜென்ம ஊழ்வினைப் பயனாக ஏற்படுகின்ற அகங்காரம், மமகாரங்களால் உண்டாகும் கர்ம விகாரத்தினால் ஸ்ரீபோகப் புணர்ச்சி உனக்குத் தருகின்ற நோயினால் நீ சாவாய் என்று மாயோனாகிய மகாவிஷ்ணு, அந்தக் கலியரசனுக்கு ஏற்ற பல புத்திமதிகளையும் சொல்லி, மீறினால் என்ன நடக்கும் என்பதையும் எடுத்துரைத்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர்