D Muthu Prakash, Kanchipuram 💐
827 views
16 days ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.01.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======= தவமேற்கொண்டிருக்கும் சிவபெருமானை மகாவிஷ்ணு சந்தித்தல் ===================== அப்போது மாயவரை ஆதி யாவிப்பிடித்து இப்போ திதுவரையும் எங்கேநீர் போனீர்காண் என்றுதான் ஈசர் எய்த்திளைத்துச் சொல்லிடவே அன்றுதான் ஈசுரரை அரியாவித் தான்சேர்த்து பாண்டவர்க் குபகாரம் பண்ணி யிருந்ததுவும் வீண்டதுரி யோதனனை வெற்றிகொண்ட செய்தியதும் பொருப்பேறிப் பொய்ச்சடலம் போட்டுஸ்ரீ ரங்கமதில் இருப்பதுவுஞ் சொல்லி எனைவருத்துவா னேனென்றார் அப்போ தரனார் ஆதிமா லோடுரைப்பார் இப்போது கலியன் இராச்சியத்தி லேபிறந்து பதிநாலு லோகமதும் பாரஇருள் மூடினதால் இதுநாள் வரையும் யானுமும்மைக் காணாமல் மனங்கலங்கிப் பேய்க்கணங்க மாலையிட்டு நானிருந்தேன் கனங்கொண்ட மாயவரே கயிலையிருள் மாற்றுமென்றார் நல்லா யிருக்குதுகாண் நவின்றதெல்லாங் கேட்பதற்கு எல்லா மிருக்கட்டென்(று) ஈசுரரே உம்முடைய கழுத்தில் தரித்ததையும் கழற்றி யெறியுமென்றார் வழுத்திடவே ஈசர் மாலை தனைக்கழற்றி கோபத்தா லக்கினியில் குறியா யெறிந்தனரே . விளக்கம் ========== நந்திதேவரின் வேண்டுகோளுக்கிணங்கி, எருக்கம்பூ மாலையை அணிந்துகொண்டு மகாவிஷ்ணுவின் வருகைக்காக தவமிருக்கும் சிவபெருமான், மகாவிஷ்ணுவைக் கண்டதும் மகாவிஷ்ணுவைக் கட்டியணைத்துக்கொண்டு, வேதனை கலந்து விம்மலோடும், ஏக்கம் நிறைந்த பெருமூச்சோடும் இதுநாள் வரை எங்கே போயிருந்தீர் என்று கேட்டார். அதைக் கேட்ட மகாவிஷ்ணுவோ, சிவபெருமானை இன்னும் இறுக அணைத்துக் கொண்டு, அவர் பஞ்சபாண்டவர்களுக்கு உதவியாக இருந்து, அரக்கனாகிய துரியோதனனை அழித்து வெற்றி பெற்ற செய்திகளையும், பர்வதா மலையில் தம்முடைய கிருஷ்ண அவதார உடலை உகுத்து வைத்துவிட்டு ஸ்ரீரங்கமாபதியில் சென்றமர்ந்த விவரங்களையும் விளக்கமாக விவரித்துக் கூறிவிட்டு, என்னை இப்பொழுது இங்கே வரவழைப்பதற்கான காரணம் என்னவென்று சிவபெருமானிடம் கேட்டார். . அப்போது சிவபெருமான், மாயப்பெருமானே ! இப்போது கலியரக்கன் பூலோகத்தில் பிறந்து, பதினான்கு உலகிலும் விஷமத்தனமாக வியாபித்து விட்டான். எனவே, கலியிருள் எல்லா லோகங்களையும் இருளடையச் செய்து விட்டது. ஆகவே, இதுநாள் வரைக்கும் நான் உம்மைக் காண முடியாமலாகிவிட்டது. எனவே, மனம் கலங்கிய நான் பேய்கணங்கள் பெருமையாக சூடுகின்ற எருக்கம்பூ மாலையை அணிந்துகொண்டு தங்களின் வருகைக்காக தவமாக இருக்கிறேன். மகிமைகளுக்கெல்லாம் மகிமையாக மிளிரும் மாயப்பெருமாளே இந்தக் கயிலையைக் கவ்வியிருக்கின்ற கலியிருளை உடனே மாற்றித் தந்தருளும் என்றார். . அதைக் கேட்ட மகாவிஷ்ணு, மகாதேவா தாங்கள் சொல்வதையெல்லாம் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது. அதெல்லாமிருக்கட்டும், முதலில் உங்கள் கழுத்தில் கிடக்கும் எருக்கம் பூ மாலையை கழற்றி எறியுங்கள் என்று கூறினார். மகாவிஷ்ணுவின் அந்த அழுத்தமான வார்த்தைக்கு இசைந்த சிவபெருமான், தன் கழுத்தில் கிடந்த எருக்கம்பூ மாலையைக் கழற்றிக் கோபத்தோடு அக்னி குண்டத்திலே எறிந்தார். . அகிலம் ======== பேய்கள் பிறப்பு =============== வேகத்தால் மாலை வெடித்ததுகாண் பேய்க்கணம்போல் கொள்ளைகொண்ட பேய்கள் கோடாமுக் கோடியுமாய்த் துள்ளிக் குதித்துச் சுற்றிக் குதித்தாடும் அப்போது பேய்கள் அரனா ரடிவணங்கி இப்போது ஈசுரரே எங்கள்பசி தீர்த்து மந்திர சாலம் மாய்மால மாரணமும் தந்திர சாலம் சர்வதுமே தாருமையா கொல்லச்சாவு சங்கிலியும் கொன்றவரைத் தானெழுப்ப வெல்லப்பிழை சங்கிலியும் வெடிப்பாக வேதாரும் ஈசுரரும் தேவர்களும் எங்கபடத் துள்ளாக வீசுபல வரங்கள் விடையாகத் தாருமையா . விளக்கம் ========== சிவபெருமான் நெருப்பில் எறிந்த அந்த எருக்கம்பூ மாலை வெடித்துச் சிதறின. அதிலிருந்து மூன்று கோடிக்கு மேற்பட்ட பேய்க்கணங்கள் உருவெடுத்து துள்ளிக் குதித்தன. அத்துடன் நின்றுவிடாமல் சிவபெருமானின் திருவடியில் தெண்டனிட்டு, சிவபெருமானே, எங்களுக்கு இப்போது மந்திரசாலம் முதலான மாய்மால மாரணங்களையும் ஏனைய தந்திர வித்தைகளையும் தந்தருளி எங்களுடைய பசியைத் தீர்த்தருள வேண்டும். பிறரைக் கொல்லுவதற்கான சாவுச் சங்கிலியும், செத்தவரைப் பிழைக்க வைப்பதற்கான வெற்றிகரமான பிழைச்சங்கிலியும் பிறர் வியக்கத்தக்கதாகத் தந்தருளும். . அதுமட்டுமல்ல தாங்களும் தேவர்களும் எங்களுடைய கபட நாடகத்திற்குள் அகப்பட்டு, துன்புறுவதற்கான பல்வேறு வரங்களை எங்களுக்குத் தந்து எங்களை அனுப்புங்கள் என்று பேய்களெல்லாம் சிவபெருமானிடம் முறையிட்டன. . . அகிலம் ======== அப்போது பேய்கள் அதுகேட்ட தத்தனையும் இப்போது கொடுக்க ஈசுரருஞ் சம்மதித்து மாலோடும் வேதா மறையவனோடுங் கேட்பார் கேட்டிருந்த நாரணரும் கிருபையுட னீசுரரைத் தேட்டமுடன் பார்த்துச் செப்புவா ரம்மானை ஈசுரரே பேய்களுக்கு இவ்வரங்க ளீந்தாக்கால் வீசுங்காண் லோகமதை விழுங்குங்கா ணிப்பேய்கள் தூயவரே பேய்கேட்ட சுத்தவர மத்தனையும் ஞாயமில்லை யென்று நானுரைக்கப் போகாது ஆனாலும் பேய்களுக்கு அருள்வீரா லிவ்வரங்கள் ஞானாந்திர மான நாரத மாமுனியை வருத்தியே பேய்களுக்கு வரங்கொடுத் தவன்கையிலே இருத்தி யணைவைத்து ஏழ்ப்பியும் பேய்களைத்தான் பேய்களுட பேரில் பிழைத்ததுதான் குற்றமென்றால் தேயக்கலி மாளுகையில் சிவவடகை லாசமதில் முனிசிறையும் பேய்களுக்கு உயிரழிவு மென்றுசொல்லித் துனிவான முனியுடனே சொல்லி யனுப்புமென்றார் அப்போது ஈசுரரும் அந்தமுனியை வருத்தி 1020 இப்படியே சொல்லி ஏழ்ப்பித் தனுப்பிடவே மாமுனியுஞ் சம்மதித்து வரம்வேண்டிப் பேய்களுந்தான் தாமுனிந்து பூலோகம் தன்னிலே வந்திடுமாம் . விளக்கம் ========== சிவபெருமானோ, அந்தப் பேய்கள் கேட்ட வரங்களைக் கொடுக்க எண்ணமுற்று, தமது எண்ணத்தை மகா விஷ்ணுவிடமும், பிரம்மதேவனிடமும் சொல்லி ஆலோசித்தார். சிவபெருமான் சொல்வதைக் கேட்ட மகாவிஷ்ணுவோ, சிவபெருமானைக் கனிவோடு பார்த்துச் சொல்கிறார். மகாதேவா, இந்தப் பேய்கள் கேட்ட வரங்களைக் கொடுத்தோமேயானால், அந்த அவலமான பேய்கள் இந்த உலக நியதிகளை நிலை குலையச் செய்து மக்களை நிம்மதி இல்லாமல் ஆக்கிவிடும். . கள்ளங் கபடமறியாத கருணாகரரே ! இந்தப் பேய்கள் கேட்கும் வலிமையான வரங்களெல்லாம் நீதி நியாயங்களுக்கு நேர் மாறானவை என்று அந்தப் பேய்களிடம் நான் இப்போது இங்கே சொன்னேனேயானால் அவை இங்கிருந்து போகாது. . ஆகவே, இந்தப் பேய்கள் கேட்ட வரத்தைத் தாங்கள் கொடுப்பதாக இருந்தால் ஞானத்திற்கே கருவூலமாகத் திகழும் நாரத மாமுனிவரை சாட்சியாக முன்னிலைப்படுத்தி அந்த பேய்கள் இந்த வரத்தை அட்டூழியங்களுக்குப் பயன்படுத்திவிடாதபடி அவைகளிடம் சத்தியம் வாங்கி வரத்தைக் கொடுத்து நாரத மாமுனியிடம் அந்தப் பேய்களை ஒப்படையுங்கள். . அதுமட்டுமல்ல, சத்தியத்தை மீறி அந்தப் பேய்கள் செயல்படுமேயானால், கேடான இந்தக் கலி அழியத் தொடங்கும்போது நாரதமாமுனிக்கு சிவபெருமானின் திவ்விய தேசமாகிய வட கயிலாசத்தில் சிறை சிக்கும் என்பதையும், அந்தப் பேய்களுக்கு முடிவுகாலம் ஏற்படும் என்பதையும் எச்சரித்து அனுப்புங்கள் என்று மகாவிஷ்ணு, சிவபெருமானிடம் சொன்னார். . மகாவிஷ்ணுவின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட சிவபெருமான், உடனே நாரதமுனிவரை வரவழைத்து மகாவிஷ்ணு சொன்னது போலவே எல்லா விவரங்களையும் சொல்லி பேய்களை நாரத மாமுனிவரின் பொறுப்பில் ஒப்படைத்தார். நாரத மாமுனிவரும் அதற்குச் சம்மதித்து விடைபெற்றார். பேய்களோ தமக்கு முழுச் சுதந்திரம் அருளப்படவில்லையே என்ற கோபத்தோடு பூலோகத்திற்கு வந்து சேர்ந்தன. . அகிலம் ========= கலியை அகற்ற ஈசன் வேண்டுவதும் மகாவிஷ்ணுவின் அறிவுரையும் ============================================================================ பேய்ப்பூ லோகமதில் போயிடவே ஈசுரரும் ஆயனா ரோடே அருளுவா ரன்போரே கயிலை யிருளைக் கடத்திவைக் காதிருந்தால் அகில மதிலிருப்பு அல்லவே அச்சுதரே அப்போது மாயவனார் ஆதி தனைநோக்கி இப்போது நீங்கள் எல்லோரு மிக்கவேதாம் நன்றான ஆண்டிகள்போல் நற்றா வடங்களிட்டுப் பண்டார வேசமதாய்ப் பதிந்திருங்கோ வென்றுசொல்லி நடந்தார் சீரங்க நகரிதனி லெம்பெருமாள் மாயனுரை மாறாமல் வாய்த்தமே லோகமுள்ளோர் ஈசர்முத லாண்டியென இருந்தார்கா ணம்மானை ஆனதால் கலியன் அங்கே யனுவிலகி மான மனுப்போலே வாழ்ந்திருந்தா ரம்மானை . விளக்கம் ========== நாரத மாமுனிவர், பேய்களை அழைத்துச் சென்றதுமே, சிவபெருமான் மகாவிஷ்ணுவைப் பார்த்து, மாயவரே ! தாங்கள் கயிலையங்கிரியைச் சூழ்ந்திருக்கும் கலிமாயையை உடனே அகற்றாதிருந்தால், உலகத்தில் யாரும் நிம்மதியாக இருக்க இயலாமல் போய் விடுமே என்றார். . சிவபெருமான் இவ்வாறு சொன்னதும், அவரைப் பார்த்து மகாவிஷ்ணு சொல்லுகிறார், மகாதேவா, தாங்களும் இங்கிருக்கும் எல்லாரும், நல்லதையே நாடுகின்ற பண்புடைய சன்னாசிகளைப் பொல், காவி உடையணிந்து ருத்திராட்ச மாலையுடன் பண்டாரக் கோலம் தாங்கி பவ்வியமாக இருங்கள். அப்படி இருந்தீர்களேயானால் கலியின் கபடப் பார்வை உங்களைப் பாதிக்காது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஸ்ரீரங்க மாபதிக்குப் புறப்பட்டார். . மாயனாகிய மகாவிஷ்ணுவின் அந்த உபாய உரையை உள்வாங்கிய சிவபெருமானும், மேலோகத்தவர்களும் பண்டாரக் கோலம் தாங்கி பவ்வியமாக இருந்தார்கள். ஆகவே, கலியின் கொடூரம் அவர்களைத் தாக்கவில்லை. எனவே, அவர்களின் தகுதிக்கும், தான, மானங்களுக்கும் எவ்வித ஊனமும் இல்லாமல் மண்ணகத்து மக்களைப்போல் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். . கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு முற்று பெற்றது. தொடரும்… அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்