கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 23.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
மகாவிஷ்ணுவின் புத்திமதிகளும் கலிநீசனின் மறுப்புரையும்
====================
மாயவரே நீர்கேளும் வாய்த்தசான் றோர்களைத்தான்
ஆயரே நீரும் அபுருவமாய்ச் சொன்னீரே
சாதிகட் கீழான சாணார்கள் தங்களுக்கு
வீரியமா யித்தனையும் விவரித்துச் சொன்னீரே
சாணார்க்கு வைத்த தலைவீத முள்ளஇறை - என்
வாணா ளழிந்திடினும் மாற்றிவைக்கப் போறதில்லை
என்சீவ னுள்ளளவும் ஏற்றசா ணான்தனக்கு
வன்பான ஊழியங்கள் மாற்றிநான் வைப்பதில்லை
நீர்தா னுமிந்த நிலைபேர்ந்து சாணாரின்
ஊரா னதிலே உறைந்திருக்கப் போனாலும்
கேட்பதில்லை சாணாரின் கேள்விநான் கேட்பதில்லை
தாட்பதல்லால் சாணாரின் சங்கடங்கள் கேட்பதில்லை
என்றந்த நீசன் இத்தனையு மாயருடன்
தாவியு ரைக்கச் சாற்றுவா ரச்சுதரும்
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணுவி்ன் புத்திமதிகளையெல்லாம் கேட்ட பின்பும் மகாவிஷ்ணுவிடம் கலியரசன் சொல்லுகிறான்... மாயவா, நீர் சான்றோர்களின் சிறப்புகளைப்பற்றி மிகப் பெருமையாகச் சொன்னீர். சகல சாதிகளிலும் தாழ்ந்த சாதியான அந்த பராரிகளுக்காக விரிவாக விளக்கிப் பரிந்துரைத்தீர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக நான் விதித்துள்ள வரிகளை என் உயிரை இழக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டாலும் மாற்றப் போவதில்லை.
என்னுடைய உயிர் உள்ள காலம்வரை சான்றோர்களுக்கு நான் விதித்த வம்பான ஊழியர்களையும் நிறுத்தல் செய்யப் போவதில்லை. நீர் ஒருவேளை இந்த இடத்தை விட்டு எழுந்து சாணார்கள் கும்பலாக வாழுகின்ற ஊரில் குடியிருக்கப் போய் விட்டாலும் நீர் சொல்லுவதை நான் கேட்கப்போவதில்லை.
.
அவர்களைப் பற்றி கூறுவதை அடியோடு நிறுத்திவிடும். அவர்களுக்கு என்னென்ன வகையிலெல்லாம் கெடுதல் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வேனே அல்லாமல், அவர்களின் துன்பங்களைத் துடைப்பதற்கோ அனுதாபப்படுவதற்கோ நான் ஆளில்லை என்று மகாவிஷ்ணுவிடம் கலியரசன் பதிலளித்தான். அதைக் கேட்ட மகாவிஷ்ணு சொல்லுகிறார்...
.
.
அகிலம்
========
பாவி யுனது பவிசெல்லாந் தான்மாறி
ஆவிக்கு நரகம் ஆவதற்கோ என்னோடே
இந்த மொழியுரைத்தாய் ஏனடா மாநீசா
உன்றனுட ஊருவிட்டு ஓடிப்போ வென்றனையே
ஆனாலுஞ் சாணார்க்கு அடியும்பல ஊழியமும்
மானாந்திர இறையும் மாற்றிவை யென்றுரைத்தார்
அப்போது நீசன் அச்சுதரைத் தான்பார்த்து
வெப்போடு கோப வெகுளியாய்த் தானுரைப்பான்
மாலைகா லைநேரம் மாயவனே உன்றனக்குச்
சீலமுள்ளப் பூசை செய்துவ ருவதற்கு
நித்தமொரு நூறுபொன் நினக்குச் செலவுமுண்டே
அத்தனையுங் கிட்டிடுமோ அவனிறைகள் தான்தடுத்தால்
அல்லாம லென்றனக்கு ஆயிரத்தி நூறுபொன்
எல்லாத் திருப்பதிக்கும் என்றனக்கும் வேணுமல்லோ
என் வேலையாக இருக்கின்ற பேர்களுக்குப்
பொன்பதி னாயிரந்தான் போடணுமே சம்பளங்கள்
இப்பொன்னுக் கெல்லாம் யானெங்கே போவேனடா
அப்பொன்னுக் கெல்லாம் அவனை யடித்தல்லவோ
வேண்டித்தா னித்தனையும் விதானிக்க வேணுமல்லோ
ஆண்டியுன் சொல்லை யான்கேட்க ஞாயமுண்டோ
என்னோடு தானிருந்து இந்தமொழி சொன்னாயே
உன்னோடு யென்றனக்கு உறவென்ன நீபோடா
முன்னெல்லாம் நீதான் உதவியோ யென்றனக்கு
இந்நிலத்தை விட்டு எங்கானா லும்போடா
அதுக்கந்த நீசன் அடடா என்றிடவே
பொதுக்கென்ற கோபமதைப் புந்திதனி லடக்கிச்
சொல்லுவார் பின்னும் சீவனம்போ லுள்ளபுத்தி
.
விளக்கம்
=========
அட பாதகா உன்னுடைய பதவியும், பகட்டும், செல்வமும் சிறப்பும், அதிகாரமும், ஆடம்பரமும் வேரோடும் வேரடி மண்ணோடும் அகன்றுபோய் உன்னுடைய உயிருக்கு நரகம் கிட்டுவதற்காகவோ என்னிடம் இப்படியெல்லாம் பேசுகிறாய்?
.
ஏன்டா மகா நீசனே, என்னை இந்த இடத்தை விட்டு ஓடிவிடு என்று சொல்லிவிட்டாய். ஓடிவிடுகிறேன். ஆனால் சான்றோர்களுக்கு நீ அன்றாடம் கொடுத்து கொண்டிருக்கும் அடிகளையும், அவர்கள் மீது அபாண்டமாகத் திணிக்கப்பட்டிருக்கும் தெண்டமான ஊழியங்களையும் மாதந்தோறும் நீ அவர்களிடம் வசூலித்து வருகின்ற வரிகளையும் இன்றோடு மாற்றிவிடு என்று கலியரசனிடம் மகாவிஷ்ணு கூறினார்.
.
அப்போது மகாவிஷ்ணுவைக் கோபத்தோடு பார்த்துக் கலியரசன், மாயவனே உனக்கு காலையிலும், மாலையிலும் முறையான பூசை செய்வதற்கு தினந்தோறும் எனக்கு நூறு பொன் செலவாகிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி என்னுடைய சமஸ்தானத்திற்குள்ளிருக்கும் எல்லா ஆலயங்களுக்கும் இன்னும் சொல்லப்போனால் என்னுடைய ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகளுக்கும் ஏனைய எல்லா ஊழியர்களுக்கும் மாதம் தவறாமல் பத்தாயிரம் பொன் சம்பளமாகக் கொடுத்தாக வேண்டும்.
.
இத்தனை செலவுகள் எனக்கிருக்கும் நிலையில் சாணார்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வரிகளை நிறுத்தல் செய்யென்று தடுக்கிறாயே, நான் செய்துவரும் மேற்கூறிய செலவுகளுக்கு என்ன செய்வேன்? இதற்கெல்லாம் அவர்களைப் துன்புறுத்தி வசூலித்தால்தானே எனக்குண்டான இந்த செலவினங்களைச் சரிக்கட்ட முடியும்.
.
நீ பத்மநாபனாக என் நிலத்தில் வருவதற்கு முன்பெல்லாம் எனக்கு உதவியாக நீதான் இருந்தாயா? உன்னுடைய உதவியில்லாமல் என்னால் இயங்க முடியாதா? என்னுடைய இந்த இடத்தை விட்டு நீ எங்கு வேண்டுமானாலும் போடா என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் வசை பாடினான் நீசன்.
.
கலியரசன் உரைத்த கடுமையான, காரசாரமான அவமதிப்பான வார்த்தைகள் மாயோனாகிய மகாவிஷ்ணுவின் மனதை மிகவும் புண்படுத்தியது. எனவே கோபம் கொப்பளித்தது. என்றாலும் தன் புத்தியில் அடக்கிக் கொண்டு கலியரசனைக் கருணையோடு பார்த்து அவனுக்கு உயிரோட்டமான பல போதனைகளை மீண்டும் போதிக்கலானார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்