கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 21.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
ஸ்ரீபத்ம நாபர் கலியரசனுக்கு உபதேசித்தல்
=====================
பாலரியச் சான்றோர் படுந்துயரங் கண்டிருந்து
மாலதிகக் கோபமுடன் மாநீ சனைப்பார்த்து
கேளடா சூத்திராவுன் கிளையோடே மாளுதற்கு
வாளடா சான்றோரை வம்புசெய்து வாறதுதான்
உன்றனக்கு முன்கிளைகள் உள்ளோர்க்கும் நாள்தோறும்
என்றனக்கும் நன்மை இன்பமுடன் செய்துவரும்
சாணாரை நீயும் தடிமுறண்டு செய்கிறது
வாணாள்க் கிடறு வருமடா மாநீசா
.
விளக்கம்
=========
இப்படியெல்லாம் ஆண்மைமிகு சான்றோர்கள் அவதிப் படுவதை உணர்ந்த மகாவிஷ்ணு ஆற்றவொண்ணாக் கோபம் கொண்டார். அந்த கோபத்தின் வெளிப்படாக திருவாங்கூர் மன்னனாகிய கலியரசனுக்குக் காட்சி கொடுத்த மகாவிஷ்ணு, அந்த மன்னனைப் பார்த்து சூதுமதித் தலைவா, நான் இங்கே சொல்லுவதைக் கவனமாகக் கேள்.
.
நீ சான்றோர்களுக்கு சதாகாலமும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறாய். அவர்களைச் சாமானியர்கள் என்று எண்ணாதே. அவர்களுக்கு நீ செய்து கொண்டிருக்கும் கெடுதல்களே நீ என் குலத்தோடு அழிவதற்கு ஆயுதமாக அமையும்.
.
உனக்கும், உன்னுடைய மூதாதையர்களுக்கும் எனக்கும் தினந்தோறும் சலிப்பே இல்லாமல் ஊழியங்கள் செய்து கொண்டிருக்கும் சான்றோர்களுக்கு நீ தீங்கு செய்வதால் உன்னுடைய இனத்தோருக்கும் உனக்கும் வாழ்நாளுக்கு பங்கம் உண்டாகும்.
.
.
அகிலம்
========
முன்னுகத்தில் கேளு முகமைந்து கொண்டோனும்
உன்னோடும் பிறவி ஒருயேழு உண்டுமடா
ஒண்ணாம் யுகத்துக்கு உற்ற குறோணியடா
மண்ணெல்லாங் குறோணி வந்தெடுத்து விழுங்குகையில்
பூதக் குருமுனிவன் புத்திசொன்னா னவ்வுகத்தில்
நீதமுடன் கேளாமல் நீசனவன் மாண்டான்காண்
.
விளக்கம்
=========
கலியரசா இதற்கு முன்புள்ள யுகங்களிலெல்லாம் நீ எவ்வாறு பிறந்தாய் யார் யார் உனக்குப் புத்தி போதித்தார்கள், நீ எப்படி மாண்டாய் என்ற விவரங்ளை வரிசையாகக் கூறுகிறேன் கேள்.
.
உனக்கு இப்பிறவியோடு ஏழு பிறவிகளை ஐமுகத்தவனாகிய சிவபெருமான் அருளியிருக்கிறார்.
.
முதல் யுகமாகிய நீடிய யுகத்தில் நீ குறோணி என்னும் கொடிய அசுரனாகப் பிறந்தாய். அப்போது இந்த மண்ணகத்தையே உன்னகமாக்கத் துணிந்தாய். அப்போது பூதக் குரு முனிவர் அங்கு வந்து உனக்குப் புத்தி சொன்னார். அந்நீதிப் போதனையை நீசா நீ நிந்தித்ததால் அழிந்தாய்.
.
அகிலம்
=========
அடுத்த யுகமதிலே அக்குண்டோம சாலினுக்குக்
கடுத்தமுள்ள கோவிரிஷி கடியபுத்தி சொன்னான்காண்
கேளா தேமாண்டான் கிளையோடே யந்நீசன்
.
விளக்கம்
==========
இரண்டாம் யுகமான சதிர்யுகத்தில் குண்டோமசாலி என்னும் கொடிய அரக்கனாகப் பிறந்தாய். அப்போது கோவிரிஷி என்பவர் உனக்கு மிகவும் உயர்வான உபதேசங்களைப் போதித்தார். அந்த உபதேசங்களை உதாசினப்படுத்தியதால் அவ்வுகத்தில் செத்தாய்.
.
.
அகிலம்
========
பாழாகிப் பின்னும் பதிந்தமூன் றாம்யுகத்தில்
மல்லோசி வாகனென்று வந்த இருவருக்கும்
நல்லபெல ரோமரிஷி நாடிமிகப் புத்திசொன்னான்
கேளாதே மாண்டான் கிரேதா யுகந்தனிலே
.
விளக்கம்
==========
மூன்றாம் யுகமான நெடியயுகத்தில் தில்லை மல்லாலன், மல்லோசி வாகனன் ஆகிய இரண்டு அரக்கர்களாகப் பிறந்தாய். அப்போது உனக்கு ரோமரிஷி வந்து பல புத்திமதிகளைப் போதித்தார். அந்த புத்திமதிகளைத் தாழ்மையுடன் கேளாததினால் உன் குலத்தோடு நீயும் ஒழிந்தாய்.
.
.
அகிலம்
========
தாழாத சூரபற்பன் தம்பி யவன்றனக்கும்
வீரவா குதேவர் விரைந்துமிகப் புத்திசொன்னார்
தாராமல் சூரன் தன்கிளையோ டேமாண்டான்
அவ்வுகத்தில் வந்த அசுர னிரணியற்குச்
செவ்வுகந்த சிங்கம் செப்பினதே புத்தியது
சற்றுமவன் கேளாமல் தான்மாண்டா னவ்வசுரன்
.
விளக்கம்
==========
நான்காம் யுகமான திரேதாயுகத்தில் சூரபத்மன், சிங்கமுகா சூரன் என்று இரண்டு பெரும் அசுரர்களாகப் பிறந்தாய். அப்போது வீரவாகு தேவர் வந்து அறிவுரை கூறினார். அந்த அறிவுரைகளை அவமதித்து ஆணவத்தோடு இறந்தாய். அதே யுகத்தில் மீண்டும் இரணியன் என்ற அரக்கனாகப் பிறந்தாய். அப்போது உனக்கு மகனாகப் பிறந்த செவ்வுகந்த சிங்கமாகிய பிரகலாதன் உனக்குப் புத்தி சொன்னான். அந்த நல்லுரைகளுக்கு நீ செவி கொடுக்காமல் செத்தாய்.
.
.
அகிலம்
========
பத்தத் தலையான பார அரக்கனுக்குத்
தம்பிவி பீஷணனும் தான்சொன்னான் புத்தியது
வம்பிலவன் கேளாமல் மாண்டான் கிளையோடே
.
விளக்கம்
==========
ஐந்தாம் யுகமான கிரேதாயுகத்தில் பத்துத் தலைகளையுடைய இராவணன் என்னும் அரக்கனாகப் பிறந்தாய். அப்போது உனக்குத் தம்பியாகப் பிறந்த விபீசணன் உனக்கு வேண்டிய அறிவுரைகளையெல்லாம் எடுத்துரைத்தான். தம்பியின் சொல் கேளாமல் வம்பாக மாண்டாய்.
.
.
அகிலம்
========
பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தான் மறுயுகத்தில்
மன்னுகந்த பீஷ்மரும் வாழ்த்திமிகப் புத்திசொன்னார்
கேளாமல் மாண்டான் கேடுகெட்ட மாபாவி
.
விளக்கம்
==========
ஆறாம் யுகமாகிய துவரபர யுகத்தில் துரியோதனனாகப் பிறந்தாய். அப்போது பீஷ்மர் உனக்கு வாழ வழிகாட்டி வாழ்த்துரைத்து வகைவகையாய்ப் புத்தி புகட்டினார். அதையும் கேளாமல் உன் அகங்காரத்தால் மடிந்தாய்.
.
.
அகிலம்
========
தாழம லுன்றனக்கு தற்சொரூபத்தோ டிருந்து
நாரா யணராய் நானுதித்து உன்றனக்குச்
சீரான புத்தி செப்புகிறேன் கேளடவா
உன்கிளையும் நீயும் உற்றார்பெற் றார்களுடன்
தன்கிளையோ டெநீயும் தரணியர சாளவென்றால்
சாதி தனிலுயர்ந்த சான்றோ ரவர்களுக்கு
நீதி யுடனிறைகள் இல்லாமல் நீக்கிவைத்துக்
காளி வளர்த்தெடுத்த கண்மணிக ளானோர்க்கு
ஊழியமுந் தவிருநீ உலகாள வேணுமென்றால்
அல்லாமல் சான்றோரை அன்னீத மாயடித்தால்
பொல்லாத நீசா புழுக்குழிக் குள்ளாவாய்
.
விளக்கம்
==========
இவ்வாறு இதற்குமுன்பு ஆறு யுகங்களில் உன்னுடைய ஆணவத்தினாலும், அடாவடித் தனத்தினாலும் உன் மரணத்தை நீயே வரவழைத்துக் கொண்டாய். எனவே, ஏழாம் யுகமான இந்தக் கலியுகத்தில் கொஞ்சங்கூட நெஞ்சில் பயமோ, பணிவோ இல்லாமல் பஞ்சமா பாதகங்களைப் புரிந்து கொண்டிருக்கும் உனக்கு, நானே நேரடியாக, என்னுடைய இயல்பான ரூபத்தில் நாராயணனாகவே உன் முன்னால் தோன்றி உனக்கு நன்மை பயக்கத்தக்க ஒழுங்கான புத்திமதிகளைச் சொல்லுகிறேன். இனியாவது என் சொல்லை அனுசரித்து, திருந்தி நல்லரசனாக இருந்து நாட்டை ஆளு.
.
உன்னுடைய குலத்தோரும், நீயும், உன்னுடைய உறவினர்களும், உன்னைப் பெற்றவர்களும் இந்த மண்ணுலகில் வாழ வேண்டுமானால், மனுக் குலத்தில் உயர் பிறப்பாகிய சான்றோர்களிடம் நியாயமாக நடந்துகொள். அவர்களின் மீது வேண்டுமென்றே நீ விபரீதமாகத் திணித்திருக்கும் வரிச் சுமையை நீக்கிவிடு.
நீ இந்த உலகத்தில் வாழவேண்டுமானால் சான்றோர்களை கீழான தொழில்களைச் செய்ய ஏவுகிறாயே அதையும் அடியோடு விட்டுவிடு. இதுமட்டுமல்லாமல் சான்றோர்களை நீ அநியாயமாக அடித்தால் பொல்லாதவனே உனக்கும் புழுக்குழிதான் கிட்டுமடா.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008}