கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 18.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
கலிநீசனின் காட்டாட்சி.
=========================
வாயக் கலிநீசன் வையகத்தை யாண்டிருக்க
நீசனிட்ட சாபம் நீதிச்சான் றோர்களுக்கு
மாயவினை போலே வளைந்ததுகா ணன்போரே
தம்பி தமையனுக்குச் சத்துருப்போல் தானாகி
வம்புக்குங் கோளு மாநீச னோடுரைத்து
அடிக்கவே கைக்கூலி அவனுக்கே தான்கொடுத்து
முடிக்கும் வரையும் முறைமுறைக்கோள் சொல்லிடுவான்
இப்படியே சான்றோர் இவர்கள்நிரப் பில்லாமல்
அப்படியே நீசனுட அன்னீதத்தால் வேறாய்
பிரிந்துதான் சான்றோர் பெருத்த கிலேசமுற்றார்
அறிந்துதான் நீசர் அவர்கள்தொக் காச்செனவே
தாலிக்கு ஆயம் சருகு முதலாயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்காயம்
தாலம தேறும் சான்றோ ருக்காயம்
தூலமுட னரிவாள் தூருவட் டிக்காயம்
தாலமதுக் காயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிகஇறை வைத்தனனே
.
விளக்கம்
=========
சான்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னலை எப்படி துடைப்பது என்ற சிந்தனையில் மகாவிஷ்ணு ஈடுபட்டிருக்கும் அந்தக் காலகட்டத்தில் கலியரசன் இட்ட சாபம், சான்றோர் குல மக்களை மாய வினைபோல் வளைந்து கொண்டது.
.
கலிநீசக் குலங்களெல்லாம், சான்றோர்களைப் பிரித்தாளம் சூழ்ச்சியை கையாளத் தொடங்கி வெற்றியும் கண்டனர். எனவே சான்றோர்களுக்குள் இருந்த ஒற்றுமை சர்வ சாதாரணமாகச் சீர்குலைந்தது.
.
தன் கூடிப்பிறந்த அண்ணனுக்குத் தம்பி சத்துருவாகச் சமைந்தான். சகோதரர்களுக்குள் சண்டையை மூட்டி விட்டு விட்டு, அவர்களைச் சமாதானப்படுத்தும் சமர்த்தர்களைப் போல் பாவனை செய்த கலிநீசர்கள் அண்ணன், தம்பி இருவரில் ஒருவரை இனிமேல் எழும்பி நடக்கவே முடியாத அளவில் அடித்துத் தம் பழியுணர்வைத் தீர்த்துக் கொண்டனர்.
.
கலிநீசக் குலத்தோரின் கபட நாடகத்தை, குடும்பத்திற்குள் ஊடுருவி உருக்குலைக்கும் ஊதாரித் தனத்தை, கோளுரைத்துக் கோளுரைத்தே பகைமூட்டும் பாதகச் செயலை கள்ளங் கபடமில்லாத சான்றோர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி கலிநீசக் குலத்தோர் பாசாங்கு பல செய்தார்கள். அண்ணனை அடிப்பதற்கு தம்பியிடமும், தம்பியை அடிப்பதற்கு அண்ணனிடமும் கூலி வாங்கினர்.
.
இவ்வண்ணமாகத் தம்முடைய ஒற்றுமையைப் பற்றி சான்றோர்கள் சிந்திக்கவே முடியாத வண்ணம் கலிநீசர்களுடைய அநியாய நீதிகளை அறங்கேற்றினர். ஆகவே, சான்றோர்களின் ஒற்றுமை சிதறடிக்கப்பட்டது. எனவே, சான்றோர்கள் தனித் தனியாகப் பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள்.
.
இந்நிலை சான்றோர்களை துன்புறுத்த நினைத்தத் துரோகக் கும்பலுக்கு துணையாக அமைந்தது. பழி வாங்க துடித்த பாதகர்களுக்குப் பரிசாக இருந்தது. யார் எவ்வகையில் இன்னல் விளைவித்தாலும், இடையூறு செய்தாலும் ஏனென்று கேட்க நாதியற்ற நடைபிணம் போலாக்கப்பட்ட சான்றோரை, நாளுக்கு நாளாகத் துன்பங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டன.
.
சான்றோர்களின் பிரிவினையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட நீசக் குலத்தோர் சான்றோர்கள் மீது பலதரப்பட்ட வரிகளை விதித்தனர். மங்கையின் கழுத்தில் மணவாளன் சூட்டும் தாலிக்கு வரி, வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, கிளி, புறா போன்ற உயிரினங்களுக்கு வரி, வீட்டிலிருக்கும் கம்பு தடி, ஏனைய உபகரணங்களுக்கு வரி, பனைமரம் ஏறும் தொழிலுக்கு வரி, பனைமரம் ஏறுவோர் தம் மார்பகத்தில் அணியும் தோல் கச்சைக்கு வரி, அரிவாள், படுப்பட மரத்திற்கு வரி, சான்றோர்களின் நிலத்தில் ஆலமரம் நின்றால் அதற்கு வரி, இப்படி எண்ணற்ற வரிகளைக் கலியரசன் விதித்தான்.
.
.
அகிலம்
========
வட்டிக்கும் ஆயம் வலங்கைசான் றோர்கருப்புக்
கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே
பாழிலே சான்றோர்க்குப் படுநீசன் கொள்ளுகின்ற
ஊழியங்க ளெல்லாம் உரைக்கக்கே ளன்போரே
பனைகேட் டடிப்பான் பதனீர்கேட் டேயடிப்பான்
கனத்த கற்கண்டு கருப்புக்கட்டிக் கேட்டடிப்பான்
நாருவட்டி யோலை நாள்தோறுங் கேட்டடிப்பான்
வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான்
நெடுமட்டைக் கேட்பான் நெட்டோலை தான்கேட்பான்
கொடுவா வெனவே கூழ்பதனீர் கேட்டடிப்பான்
சில்லுக் கருப்புக்கட்டி சீரகமிட்டே வூற்றிக்
கொல்லைதனில் சான்றோரைக் கொண்டுவா என்றடிப்பான்
மீச்சுக் கருப்புக்கட்டி மிளகுபல காரமிட்டு
வீச்சுடனே கொண்டு வீட்டில்வா வென்றடிப்பான்
வட்டிக் கருப்புக்கட்டி மணற்கருப்புக் கட்டியொடு
வெட்டக் கருப்புக்கட்டி வெண்கருப்புக் கட்டியொடு
தோண்டிக்கும் பாய்க்கும் சுமடதுக் குமோலை
வேண்டியதெல் லாமெடுத்து விரைவில்வா என்றடிப்பான்
காலைப் பதனீர் கண்முற்றா நொங்குகளும்
மாலைப் பதனீர் வற்றக்கா யும்பதனீர்
கொதிக்கும் பதனீர் கொண்டுவா என்றடிப்பான்
விதிக்குகந்த சான்றோர் விரைவாய்க் கொடுத்திடவே
இத்தனையும் வேண்டி இவன்கொண்டு போனாலும்
பத்தியுள்ள சான்றோர்க்குப் படுந்துயர மாறாதே
பனையிலுள்ள வஸ்து பலநாளு மிப்படியே
வினைகொண்ட பாவி வேண்டியவன் போனாலும்
சான்றோர்க்கு நன்மை சற்றுசெய்ய வேணுமென்று
மாண்டோர் கணீசன் மனதில்வைக்க மாட்டானே
உய்கொண்ட சான்றோர் உடம்புருகுந் தேட்டையெல்லாம்
நொய்கொண்ட நீசன் நோகப் பறித்தானே
.
விளக்கம்
==========
சான்றோர்களின் வீட்டில் இருக்கும் பனை ஓலையிலான பெட்டிகளுக்கும், கருப்புக்கட்டி முதலான தின்பண்டங்களுக்கும் வரி விதித்து வசூலிக்கும் அதிகாரிகள் மற்றும் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தும் மேட்டுக்குடியினர்களெல்லாம் தமக்கு வீடு கட்டுவதற்குத் தேவையான பனைமரங்களை வெட்டி வகைப்படியாக்கிக் கொண்டுவா என்று சான்றோர்களை அடித்து துன்புறுத்தி ஆனையிடுவார்கள்.
.
தம் குடும்பத்திற்குத் தேவையான பதனீரை அன்றாடம் கொண்டு தர வேண்டும் என்று கட்டளையிடும்போதே கம்பு தடிகளால் அடிப்பார்கள். பனங்கற்கண்டு, நாருப்பெட்டி, நுங்கு, தோட்டங்களை வேலிியிட்டு வைப்பதற்கான நீளமான பனை மட்டை, அதற்கான ஓலை காய்ச்சிய சில்லுக் கருப்புக்கட்டி, சுக்கு, மிளகு சீரகமிட்டுக் காய்ச்சி சின்னதாய் ஊற்றிய மீச்சுக் கருப்புக்கட்டி, பெரிய பெரிய ஓலைப்பெட்டிகளில் ஊற்றிய கருப்புக்கட்டி பானையில் ஊற்றிப் பக்குவப்படுத்தப்பட்ட சரல் கருப்புக்கட்டி, வெட்டக் கருப்புக்கட்டி, வெண்ணிறத்திலான பழங்கருப்புக் கட்டி, தோண்டி செய்வதற்கும், பாய் முடைவதற்குமான ஓலை முதலானவற்றையெல்லாம் உடனே கொண்டுவா என்று உத்தரவிடும்போதே அடிப்பான்.
.
அதுமட்டுமல்ல, காலைப் பதனீரோடு கண்முற்றா நுங்குகளும் மாலைப் பதனீரும், வற்றக் காய்த்த பதனீரும் கொண்டு வா என்று கோபத்தோடு அடிப்பான். நீசக் குலத்தோரின் நெட்டூரமான இத்தனை விதிகளுக்கும் உட்பட்டு, அடிபணிந்து வாழ்ந்த சான்றோர்கள், சற்றேனும் தாமதமின்றி வகை வகையாக அந்த அநியாயப் பாவிகளின் வீட்டுக் கொல்லைப்புறம் வழியாகக் கொண்டு கொடுத்தார்கள்.
.
இப்படி அந்த நீசர்கள் கேட்பதையெல்லாம் கொண்டு கொடுத்தபோதிலும், இறைவன் மீது பற்றுள்ள சான்றோர்கள் படும் துயரம் மாறவில்லை. தன் பனையிலுள்ள பொருட்களை எல்லாம் நீண்ட நெடுநாள்களாகக் கொண்டு சென்று கொடுத்த போதிலும், அந்தக் கொடுங்கலியர்கள் சான்றோர்களுக்குச் சிறிய அளவு நன்மை கூட செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. என்றாலும் தம் உடம்பு உருக்கும்படியாக வருத்திப் பாடுபட்டு சம்பாதித்த செல்வங்களையெல்லாம் அந்தப் பாதகர்கள் உறிந்து உறிந்து உண்டனர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩