திருவிளையாடல் புராணம்
56 Posts • 25K views
திருவிளையாடல் புராணம் வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் பாகம்-6 மதுரையில் வெள்ளியம்பலம் அமைந்ததையும், வெள்ளியம்பலத்தில் மாணிக்க பீடம் ஏற்பட்டதையும், அதன்மீது இறைவனார் ஆடிய திருநடனம் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. சிவனின் ஐந்து சபைகளுள் ஒன்றான வெள்ளியம்பலம் மதுரையில் ஏற்பட்ட வரலாற்றினை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் ஆறாவது படலம் ஆகும். திருமண விருந்துண்ண அழைத்தல் உலகத்தின் இறைவனான சுந்தர பாண்டியருக்கும், உமையம்மையாகிய தடாதகைக்கும் மதுரையம்பதியில் திருமணம் இனிது நிறைவேறியது. திருமணம் முடிந்தவுடன் திருமணத்திற்கு வந்திருந்த மன்னர்கள், தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட எல்லோரையும் விருந்துண்ண சுந்தர பாண்டிய‌னார் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பினை ஏற்று எல்லோரும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி விருந்துண்ண வந்தனர். பதஞ்சலி, வியாக்கிரதபாதர் ஆகியோரின் வேண்டுதல் திருமண விருந்தில் பங்கேற்க வந்தவர்களுள் பதஞ்சலியும், வியாக்கிரதபாதரும் அடங்குவர். இவ்விருவரும் தில்லை பொன்னம்பலத்தில் உள்ள தில்லை அம்பலவாணரின் திருநடனத்தினைக் வழிபட்ட பின்பு உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். அம்மை, அப்பனின் திருமணத்திற்காக மதுரை வந்திருந்தவர்கள், இறைவனான சுந்தர பாண்டியரிடம் “எங்களின் தந்தையே. நாங்கள் பொன்னம்பலத்தில் தாங்கள் ஆடியருளும் திருநடனத்தை தரிசித்த பின்புதான் தினமும் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டுளோம்.” என்று கூறினர். வெள்ளியம்பலத் தோற்றம் முனிவர்கள் கூறியதைக் கேட்ட சுந்தர பாண்டியனார் “உலகம் என்ற மனிதனுக்கு அழகிய தில்லை இதயம் என்றால் மதுரை துவாத சாந்தத் தானம் ஆகும். ஆதலால் தில்லை பொன்னம்பலத்தில் நிகழ்த்திய திருநடனத்தை இம்மதுரைப்பதியில் யாம் செய்து காட்டுவோம்.” என்று கூறினார். அதனைக் கேட்ட முனிவர்கள் இருவரும் “கருணைக் கடலே உலகம் என்ற மனிதனுக்கான ஏனைய உறுப்புக்கள் யாவை?” என்று வினவினர். அதற்கு இறைவனாரும் “உலகனைத்தும் உருவமாகிய விராடபுருடன் என்னும் மனிதனுக்கு, செல்வம் நிறைந்த திருவாரூர் மூலஆதாரமாகும். திருவானைக்காவல் சுவாதிட்டானம் (மறைவிடம்) ஆகும். திருவண்ணாமலை மணிப்பூரகம் (நாபி) ஆகும். நீங்கள் வணங்கிவரும் தில்லை அநாகதம் (இதயம்) ஆகும். திருக்காளத்தி ஒப்பில்லாத கண்டம் (விசுத்தி) ஆகும். காசித்தலம் ஆஞ்ஞை (புருவ மத்தியம்) ஆகும். கயிலைமலை பிரமரந்திரம் (சுழிமுனையின் உச்சியாகிய இடம்) ஆகும். இம்மதுரையம்பதி துவாத சாந்தம் (உச்சிக்கு மேற் பன்னிரெண்டு அங்குல அளவில் உள்ள பாகம்) ஆகும்.” என்று கூறினார். பின் முனிவர்களோடு திருக்கோவிலினுள் சென்றார். அங்கே பொன்னாலாகிய விமானத்தின் கீழ்புறத்தில் வெள்ளியம்பலம் தோன்றியது. அதன்மேல் மாணிக்க பீடம் ஒன்று தோன்றியது. இறைவனாரின் திருநடனம் ஒளிவீசிக் கொண்டிருந்த வெள்ளியம்பல மாணிக்க பீடத்தின் மேல் பாரின் இருளை அகற்றும் ஒளிக்கதிர் போல் அடியர்களின் அஞ்ஞானமாகிய இருளை விரட்டும் பொருட்டு ஞானஒளியின் வடிவாய் சிவபெருமான் தோன்றினார். திருநந்தீஸ்வரர் மத்தளம் கொட்ட, திருமால் இடக்கை என்னும் இசைக்கருவியை வாசிக்க, தும்புரு, நாரதர் இருவரும் இசைப்பாட்டு பாடினர். கலைமகள் சுருதி கூட்ட, பிரம்மதேவர் யாழினை மீட்டி கீதங்கள் பாடினார். சிவகணங்கள் மொந்தை, தண்ணுமை என்னும் கருவிகளை முழங்கினர். இறைவனார் பெரிய விழிகளைக் கொண்ட முயலகன் மேல் அவன் விழிகள் பிதுங்குமாறு முதுகின் மேல் வலது காலினை ஊன்றி காட்சியளித்தார். இறைவனாரின் வலது மேற்கையில் உடுக்கையும், இடதுமேற்கையில் தீச்சுவாலையும் காணப்பட்டது. அவரின் வலகீழ்கை அடைக்கலம் தந்தவாறும், இடதுகீழ்க்கை குஞ்சித பாதத்தைக் காட்டியாவாறும் இருந்தன. அவரின் கூந்தல் மற்றும் ஆடைகள் காற்றில் அசைந்தவாறு இருந்தன. அழகிய கண்களைக் கொண்ட உமையம்மை ஒருபுறம் ஒதுங்கி நிற்க, அவ்வம்மையைப் பார்த்த வண்ணம் இதழ்களில் புன்னகையை ஏந்தி இறைவனார் திருநடனம் புரிந்தார். இறைவனாரின் திருநடனத்தினை காணுதல் சுந்தரபாண்டியனார் ஆடல்வல்லானாக வெள்ளியம்பலத்தில் ஆடிய நடனத்தைக் கண்ட முனிவர்களாகிய பதஞ்சலியும், வியாக்கிரதபாதரும் நெஞ்சுருகி நின்றனர். தங்களின் பிறவிப்பயனை அடைந்துவிட்டோம் என்று எண்ணினர். பதஞ்சலி, வியாக்கிரதபாதர் மட்டுமல்லாது திருமணத்திற்கு வருகை புரிந்த பிற முனிவர்கள், அரசர்கள், தேவர்கள், கந்தவர்கள், கிம்புருடர்கள், யோகிகள் உட்பட எல்லோரும் இறைவனாரின் திருக்கூத்தினை கண்டு களித்தனர். முனிவர்கள் ஆடல்வல்லானை நோக்கி “உலக இயக்கங்களுக்கு காரணமானவரே, தாங்களின் திருநடனத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து விட்டோம். அடியேன்களின் வேண்டுகோளினை ஏற்று வெள்ளியம்பலத்தில் தாங்கள் ஆடிய திருநடனத்திற்கு முதல் வணக்கம்” என்றனர் “ஊழிமுதல்வனே, உயிர்களின் பிறவிக்கடலினை தீர்ப்பவனே, அடியார்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைக்கும் எங்கள் தந்தையே உங்களுக்கு வணக்கம். இறைவனாரின் இடதுபாகத்தில் உறைந்திருக்கும் உமையம்மைக்கு வணக்கம்” என்று பலவாறு போற்றி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர். இறைவனின் திருஉள்ளம் இறைவனின் திருநடனத்தினைக் கண்டு மகிழ்ந்து போற்றிய பதஞ்சலி, வியாக்கிரதபாதர் ஆகியோர்களை நோக்கி இறைவனார் “நல்லது. நீங்கள் விரும்பியது யாது?” என்று வினவினார். அதனைக் கேட்ட இருவரும் “எங்களின் இறைவா. தாங்கள் இவ்வெள்ளியம்பலத்தினுள் எப்போதும் திருநடனத்தினை நிகழ்த்தி உயிர்களை மாயையிலிருந்து விடுபடச்செய்து அவைகளுக்கு நற்கதி அளிக்க வேண்டும்.” என்று வேண்டினர். அதற்கு இறைவனார் “செந்தமிழை வளர்த்து ஓங்கச் செய்யும் இப்பாண்டிய நாடு செய்த தவப்பயனின் காரணமாக நீங்கள் விரும்பிய வரத்தினை அளித்தோம்” என்று அருளினார். பதஞ்சலி முனிவர் இறைவனாரிடம் “முக்காலமும் ஆனவரே, ஆதியே, எம்பெருமான தங்களின் திருநடனத்தைக் நேரே கண்டு களித்த அனைவருக்கும் இப்பூமியில் மீண்டும் பிறவாத ஒப்பற்ற சிவகதியை அடைய அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினார். சிவபெருமானும் அதற்கு இசைந்து அருள்புரிந்தார். இதனைக் கேட்ட சிவகணத்தவர் சிவபெருமானை கொண்டாடி மகிழ்ந்தனர். முனிவர்கள் ஆனந்தம் அடைந்தனர். வெள்ளியம்பலத்தில் இறைவனின் திருநடனத்தை தரிச்சிப்பதன் பலன் மார்கழிமாத திருவாதிரை முதல் அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பொற்றாமரையில் நீராடி, வெள்ளியம்பலத் திருநடனத்தை தரிசனம்செய்து அங்கேயேதங்கி திருவைந்தெழுத்தை நூற்றுஎட்டுமுறை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் எண்ணிய வரங்களை எல்லாம் பெறலாம். இப்படலம் கூறும் கருத்து ஆடலும் பாடலுமாக நாம் வாழ்வை ஆனந்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இப்படலம் உணர்த்துகின்றது. உற்றார் உறவினருடன் கூடி நல்ல முறையில் வாழ்வை அனுபவிக்கத் தெரிய வேண்டும் என்பதை வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் சொல்கிறது. தொடரும் திருச்சிற்றம்பலம் 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #திருவிளையாடல் புராணம் #சிவபுராணம் #திருவிளையாடல் #🕉ஓம் நமசிவாய 🕉
13 likes
9 shares
திருவிளையாடல் புராணம் தடாதகையாரின் திருமணப் படலம் பாகம்-5 தடாதகையாரின் திருமணப் படலம் அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சிக்கு சொக்கநாதரான சோமசுந்தரருடன் நடந்த திருமணம் பற்றி விளக்கிக் கூறுகிறது. மீனாட்சியின் திக் விசயம், போர் வீரம், தடாதகை சிவபிரானிடம் கொண்ட காதல் ஆகியவற்றை இப்படலத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் ஐந்தாவது படலம் ஆகும். சோமசுந்தரர் அமைத்த இம்மையில் நன்மை தருவார் ஆலயம் ஏற்பட்ட விதம், இறைவனான சோமசுந்தரர் பாண்டிய நாட்டை ஆண்ட விதம் ஆகியவற்றையும் இப்படலம் குறிப்பிடுகிறது. இனி உலகத்தின் அன்னையான தடாதகையாரின் திருமணப் படலம் பற்றிப் பார்ப்போம். காஞ்சன மாலையின் ஏக்கம் உலக நாயகியான அங்கயற்கண்ணி அம்மை வளர்ந்தும் இறைவனின் திருவாக்கின்படி பாண்டிய நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று நீதிவழியில் ஆட்சி செய்தார். தடாதகையின் அன்னையான காஞ்சன மாலை தன் மகளின் ஆட்சித்திறனைப் பார்த்து மெய்சிலிர்த்தாள். திருமண வயதை தன் மகள் எட்டியதை உணர்ந்த அத்தாய் தன் மகளிடம் “அழகும் அறிவும் உடைய உனக்கு திருமணம் இன்னும் கைகூடவில்லையே” என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். காஞ்சன மாலை கூறியதை கேட்ட தாடதகை “அன்னையே நீங்கள் எண்ணிய எண்ணம் நடக்கும்போதுதான் நடக்கும். அதனால் நீங்கள் வருத்தங்கொள்ள வேண்டாம். நான் எட்டு திசைகளிலும் சென்று இப்பூவுலகம் முழுவதும் என் வெற்றியை நாட்டி வருவேன். நீங்கள் இங்கேயே காத்திருங்கள்” என்று கூறி விரைந்து போருக்கு புறப்பட ஆயத்தமானார். மீனாட்சி அன்னையின் திக் விசயம் எட்டு திசைகளையும் வெல்லும் நோக்கில் தம் பெரும் படையினருடன் தடாதகை போருக்கு புறப்பட்டார். நால்வகைப் படையினரோடு அமைச்சர்களும், சிற்றரசர்களும் தடாதகையைப் பின் தொடர்ந்தனர். அவர் வடநாடு, கீழ்நாடு, மேல்நாடு என எல்லா திசைகளிலும் உள்ள நாடுகளில் தன்னுடைய வெற்றிக் கொடியை நாட்டினார். பின் இந்திரலோகத்தை அடைந்தபோது இந்திரன் போர்களம் வராமலேயே நீங்கினான். இந்திரலோகத்தை தனதாக்கியபின் அம்மையார் திருகையிலையை நோக்கிச் சென்றார். திருகையாலயத்தில் சிவபிரானை தடாதகை காணல் திருகையாலயத்தை மீனாட்சி அம்மையார் அடைந்த செய்தியை திருநந்திதேவர் இறைவனான சிவபெருமானிடம் தெரிவித்தார். சிவபெருமானும் தம் சிவகணங்களை அனுப்பி தடாதகையுடன் போரிடச் செய்தார். சிவகணங்களுடன் நடந்த போரில் தடாதகை எளிதில் வெற்றி வாகை சூடினார். தடாதகையின் வெற்றியை திருநந்திதேவர் கயிலைநாதனிடம் தெரிவித்தார். இதனைக் கேட்ட சிவபெருமான் பிநாக வில்லைக் கையில் ஏந்தி இடப வாகனத்தில் போர்களத்துக்கு எழுந்தருளினார். இறைபரம்பொருளை நேரில் கண்டதும் தடாதகையின் தனங்களில் ஒன்று மறைந்தது. உடனே அவர் தன்னுடைய நினைவு வரப்பெற்றவராய் இறைவனின்பால் அன்பு மிகுந்து வெட்கத்தில் தலைகுனிந்தார். இக்காட்சியினை கண்ட அமைச்சர் சுமதிக்கு தடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கு நினைவுக்கு வந்தது. உடனே அவர் அங்கையற்கண்ணியிடம் “அம்மையே சிவபெருமானான இப்பேரழகனே தங்களின் மணவாளன்” என்று கூறினார். அதனைக் கேட்ட மீனாட்சி அம்மையார் பேரன்பு பெருக நின்றார். இறைவனார் தடாதகைக்கு அருளுதல் இறைவனார் “நீ திக்விசயத்தின்போது என்று புறப்பட்டாயோ அன்று முதல் யாமும் உம்மை தொடர்ந்து வந்தோம். உன்னை திங்கள்கிழமை அன்று நல்ல முகூர்த்தம் கூடிய பொழுதில் திருமணம் செய்ய வருவோம். நீ தற்போது உன் நகரமாகிய மதுரைக்கு செல்வாயாக” என்று திருவாய் மலர்ந்து அருளினார். இறைவனிடம் அன்பினையும், உயிரினையும் வைத்த அங்கயற்கண்ணம்மை தன் படைகளுடன் மதுரைக்குத் திரும்பினார். மீனாட்சி திருமணத்தை பற்றி அறிவித்தல் மதுரை திரும்பிய மீனாட்சி தன் அன்னையான காஞ்சன மாலையிடம் நடந்தவைகள் அனைத்தையும் கூறினார். இதனைக் கேட்டு மகிழ்ந்த காஞ்சன மாலை மீனாட்சியின் திருமணச் செய்தியை எல்லோருக்கும் தெரிவிக்கும்படி அமைச்சர்களிடம் கூறினார். மீனாட்சியின் திருமணம் பற்றி செய்தியானது யானையின் மீது அமர்ந்து மணமுரசு மூலம் பாண்டிய நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டு அரசர்களுக்கும் மீனாட்சி திருமணம் பற்றிய ஓலைகள் அனுப்பப்பட்டன. மீனாட்சியின் திருமணம் பற்றி அறிந்ததும் மக்கள் தங்கள் வீடுகளையும், நகரங்களையும் அலங்கரித்தனர். மீனாட்சியின் திருமணம் பற்றியே மதுரை மாநகர் முழுவதும் பேசப்பட்டது. திருமணத்திற்கான மண்டபம் பொன்னாலும், நவமணிகளாலும் உண்டாக்கப்பட்டது. திருமணத்திற்கு வருகை தருவோர் அமர இருக்கைகள் தயார் செய்யப்பட்டன. திருமணத்தை எல்லோரும் பார்த்து மகிழும் வண்ணம் திருமண மண்டபத்தின் நடுவில் மணமேடை அமைக்கபட்டு அலங்கரிக்கப்பட்டது. இறைவனார் மணமகனாக மதுரை நோக்கி புறப்படுதல் சிவபிரானின் திருமணச்செய்தியை அறிந்த தேவர்கள் அனைவரும் கையிலையை அடைந்து ‘அர அர’ என்று துதித்தனர். பின்னர் நந்திதேவரின் அனுமதியுடன் இறைவனை கண்டு வணங்கினர். குபேரன் இறைவனை அழகான மணமகனாக அலங்கரித்தார். குண்டோதரன் குடைபிடிக்க இறைவனார் இடப வாகனத்தில் ஏறி மதுரை நகரின் வெளியே எழுந்தருளினார். இறைவனை வரவேற்றல் இறைவனான சிவபெருமான் மதுரை நகரின் புறத்தே எழுந்தருளி இருப்பதை அறிந்த காஞ்சன மாலை பாண்டிய நாட்டு அமைச்சர்களுடன் சென்று அவரை வரவேற்றாள். காஞ்சன மாலை இறைவனாரிடம் “உலக இயக்கத்திற்கு காரணமானவரே, தாங்கள் தடாதகை பிராட்டியாரை மணம் செய்து பாண்டிய நாட்டை ஆள வேண்டும்” என்று விண்ணப்பித்தாள். இறைவனும் “அவ்வாறே ஆகுக” என்று காஞ்சன மாலைக்கு அருள்பாலித்தார். பின் மதுரைநகரில் அமைந்திருந்த திருமண மேடைக்கு இறைவன் எழுந்தருளினார். இறைவனின் அழகினைப் பார்த்த மதுரை மக்கள் சுந்தரனான இந்த ஈஸ்வரனே மீனாட்சியை மணம்புரிய வந்தான் என்று எண்ணினர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் உலக அன்னையான மீனாட்சிக்கு பெண்கள் அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்து வந்து மணமகனான சுந்தரேஸ்வரரின் அருகில் அமர்த்தினர். திருமால் மீனாட்சியை தாரை வார்த்து சொக்கருக்கு கொடுக்க மீனாட்சி சொக்கநாதர் திருமணம் இனிது நிறைவேறியது. பின்னர் இறைவன் காஞ்சன மாலைக்கு கொடுத்த வாக்கின்படி மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இன்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இறைவனார் நடுவூர் என்னும் ஊரினை உருவாக்கினார். அதில் இன்மையிலும் நன்மை தருவார் என்னும் சிவாலயத்தை ஏற்படுத்தினார். பின் இம்மையிலும் நன்மை தருவாரை வழிபாடு நடத்தினார். எல்லோருக்கும் நற்பேற்றினை வழங்கும் இறைவனனான சிவபெருமான் வழிபட்ட இடம் என்ற பெருமையை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலையே சாரும். இக்கோவில் தற்போது மதுரையின் நடுவே அமைந்துள்ளது. பின் சிவபிரானார் பாண்டிய நாட்டின் அரசனாக நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்தார். இப்படலம் கூறும் கருத்து இறைவனின் மீது கொண்ட பேரன்பானது அவரை சொந்தமாக்கும் என்பதை காஞ்சன மாலை மூலம் இப்படலம் விளக்குகிறது. தொடரும் திருச்சிற்றம்பலம் 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #திருவிளையாடல் #சிவபுராணம் #திருவிளையாடல் புராணம் #🕉ஓம் நமசிவாய 🕉
15 likes
11 shares
திருவிளையாடல் புராணம் தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் பாகம்-4 தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் நான்காவது படலம் ஆகும். இப்படலம் அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சியின் அவதாரம் மற்றும் அவர் மதுரையை ஆட்சி செய்த விதம் பற்றி விளக்கிறது. மீனாட்சி அம்மையின் அவதாரம் மதுரையில் நிகழ்ந்த காரணத்தை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இனி தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் பற்றிப் பார்ப்போம். மலயத்துவசன் குழந்தை வரம் வேண்டுதல் மலயத்துவசன் பாண்டிய நாட்டை சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவன் சூரசேனன் என்னும் சோழ அரசரின் மகளான காஞ்சன மாலையை திருணம் செய்தான். ஆனால் இத்தம்பதியருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதனால் மலயத்துவசன் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். தொண்ணூற்று ஒன்பது யாகங்கள் முடிந்த நிலையில் இந்திரன் “இப்பாண்டியன் நூறு யாகங்களை முடிப்பானாகில் நொடிப்பொழுதில் இந்திரப்பதவி அவனுக்கு போய்விடும்” என்று எண்ணி மலயத்துவசன் முன் தோன்றினான். “பாண்டியனே நீ நற்புத்திரப்பேற்றினை விரும்பினாய். ஆதலால் உலக இன்பத்தை அளிக்கக் கூடியதும் நற்புத்திரபேற்றினை வழங்கக்கூடிய மகயாகத்தினைச் (புத்திர காமேஷ்டி) செய்” என்று கூறி தன்னுலகத்தை அடைந்தான். பாண்டியனும் இந்திரனின் வழிகாட்டுதலின்படி மகயாகத்தைத் தொடங்கினான். அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சி தோன்றுதல் தலையின் இடதுபுறத்தில் கொண்டையுடன் கையில் கிளிகொண்டு காலில் சதைங்கை அணிந்து, முகம்நிறைய புன்னகையைச் சிந்தியவாறே மூன்று வயதினை ஒத்த சிறுமியாக உலகநாயகியான உமையம்மை மூன்று தனங்களுடன் தோன்றினார். அக்குழந்தையின் கண்கள் மீன்களைப் போன்று நீண்டு அழகாக இருந்தன. ஆதலால் அக்குழந்தை பின்னாளில் அங்கயற்கண்ணி என்றும் போற்றப்பட்டாள். அவள் தன் சின்னஞ்சிறு திருவடிகளால் தளிர் நடை நடந்து காஞ்சன மாலையின் மடியில் போய் அமர்ந்தாள். தன்னுடைய சின்னச்சிறிய செவ்விதழ்களால் காஞ்சனமாலையை “அம்மா” என்று மழலை மொழியில் அழைத்தாள். அதனைக் கண்டதும் காஞ்சன மாலை குழந்தை வடிவில் இருந்த உலக அன்னையை வாரி எடுத்து அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். மலயத்துவசனின் துயரம் குழந்தையைக் கண்ட மலயத்துவசன் மனதில் மகிழ்ச்சி கொண்டான். இருப்பினும் கவலை ஒன்று அவனை வாட்டியது. புத்திரபேற்றினை விரும்பி மகயாகத்தினை செய்த தனக்கு தான் விரும்பியபடி ஆண்மகவு தோன்றாமல் மூன்றுதனங்களுடன் கூடிய பெண்மகவு தோன்றியதுதான் அவனுடைய கவலை ஆகும். சொக்கநாதரின் திருவாக்கு மலயத்துவசன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சோமசுந்தரக் கடவுளை வழிபட்டான். தன்னுடைய மனக்குறையை இறைவனிடம் விண்ணப்பித்தான். இறைவனும் அவ்வரசனுக்கு மட்டும் கேட்குமாறு திருவாக்கு ஒன்றினைக் கூறினார். “பாண்டியனே, கலங்காதே. உன்னுடைய அன்பு புதல்விக்கு தடாதகை எனப் பெயரிட்டு எல்லா கலைகளையும் கற்பித்து அவளுக்கு ராணியாக முடிசூட்டு. அவளுக்கு ஏற்ற கணவனை அவள் காணும்போது அவளுடைய ஒரு தனம் தானே மறைந்து விடும். எனவே மனம் வருத்தம் கொள்ள வேண்டாம்” என்று சொக்கநாதர் கூறினார். இறைவனின் திருவாக்கினை கேட்ட மலயத்துவசன் கவலை நீங்கி மனத்தெளிவு பெற்றான். மீனாட்சிஅம்மை மதுரையில் தோன்றக் காரணம் மீனாட்சியம்மையின் திருவதாரம் நிகழ்ந்ததை அகத்தியர் மற்ற முனிவர்களுக்கு கூறினார். அம்முனிவர்கள் அகத்தியரிடம் “தக்கனும் மலையரசனும் பல நாட்கள் வருந்தி தவம் இயற்றியே உலக அன்னையை தம் மகள்களாகப் பெற்றனர். அப்படியிருக்க தற்போது அன்னை பாண்டியனின் திருமகளாக இப்பூமியில் இறைவனை விட்டுவிட்டு தனியே தோன்றக் காரணம் என்ன?” என்று வினவினர். அதற்கு அகத்தியர் “விச்சுவாவசு என்ற கந்தவர்வனின் மகளான விச்சாவதி உமையம்மையிடம் மிக்க விருப்பம் கொண்டு இருந்தாள். ஒரு நாள் தனது தந்தையிடம் “உமையம்மையின் அருளைப் பெற வழிபட வேண்டிய தலம் யாது?” என்று கேட்டாள். அதற்கு விச்சுவாவசுவும் “துவாத சந்தம் எனப்படும் மதுரையம்பதியே சிறந்த இடம்” என்று கூறினார். விச்சாவதியும் மதுரையை அடைந்து பலவிரதமுறைகளை மேற்கொண்டு தை மாதத்தில் அங்கயற்கண்ணி அம்மையின் சந்நதியை அடைந்து யாழினை இசைத்து அம்மன் பற்றிய இனிய பாடல்களை பாடினாள். அப்போது அங்கையற்கண்ணி அம்மை மூன்று வயது குழந்தையாக விச்சாவதிக்கு காட்சி தந்தாள். விச்சாவதியிடம் உமையம்மை “உன் விருப்பம் யாது?” என்று கேட்டாள். விச்சாவதியும் “தாயே நின் திருவடியில் நீங்காத அன்பினை நான் எப்போதும் பெற்றிருக்க வேண்டும்.” என்று கேட்டாள். அம்மை மேலும் “இன்னும் வேண்டுவது யாது?” என்று வினவினாள். அதற்கு விச்சாவதி “அம்மையே தற்போது காட்சி தருகின்றன திருவுருவத்திலேயே அடியேனிடத்தில் தோன்றி கருணை கூர்ந்திருக்கும்படி திருவருள் புரிய வேண்டும்.” என்று கேட்டாள். அதனை கேட்ட அன்னையானவள் “பாண்டியனின் மரபிலேயே மலயத்துவசன் தோன்றுவான். நீ அவனுடைய மனைவியாய் வருவாய். யாம் அப்போது இத்திருவுருவத்தியேயே உம் தவப்புதல்வியாய் உம்மிடம் வருவோம்” என்று அருளினார். விச்சாவதியின் தவப்பயனால் உலக அன்னை மதுரையம்பதியில் தடாதகை பிராட்டியாராகத் தோன்றினாள்.” என்று கூறினார். தடாதகை பிராட்டியார் குமரிப் பருவம் எய்தல் தன்னுடைய குழந்தை மற்றும் மனைவியுடன் அரண்மனை திரும்பிய மலயத்துவசன் தனக்கு குழந்தைப்பேறு வாய்க்கப் பெற்றதை உலகெங்கும் அறிவிக்கச் செய்தான். தடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கினை மன்னன் தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் சுமதியிடம் மட்டும் சொன்னான். அக்குழந்தைக்கு இறைவனின் திருவாக்குப்படி தடாதகை என்னும் பெயரினைச் சூட்டினான். தடாதகை என்பதற்கு மாறுபட்டவள் என்பது பொருள் ஆகும். தடாதகை பிராட்டியாரும் போர் கலைகள் உள்ளிட்ட எல்லா கலைகளையும் கற்று குமரிப்பருவத்தை எய்தினாள். பாண்டிய நாட்டு அரசியாக திருமுடி சூட்டுதல் தடாதகை பிராட்டியார் குமரிப் பருவத்தை அடைந்ததும் மலயத்துவசன் தன் அமைச்சரான சுமதி என்பவரிடம் இறைவனின் திருவாக்கினைக் கூறினான். பின் அமைச்சருடன் கலந்தாலோசித்து நல்லதொரு நாளில் தடாதகை பிராட்டியாருக்கு பாண்டிய நாட்டு அரசியாக திருமுடி சூட்டினான். சில நாட்களில் மலயத்துவசன் விண்ணுலகத்தை அடைந்தான். கன்னிநாடு தடாதகை பிராட்டியாரும் தான் கற்ற கல்வியின்படி நாட்டினை சிறப்புற ஆட்சி செய்தார். மீனானது பார்வையாலே தன் குஞ்சுகளுக்கு உணவினை ஊட்டி பாதுகாப்பது போல தடாதகை பிராட்டியாரும் தம் குடிமக்களைப் பாதுகாத்து அரசாண்டார். மீன் போன்ற கண்களைக் கொண்டு அரசியாக அரசாண்டதால் இவ்வம்மை மீனாட்சி என்றும், அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார். (அம் + அயல்+ கண்ணி = அங்கயற்கண்ணி. அம் என்றால் அழகிய, கயல் என்றால் மீன், கண்ணி என்றால் கண்களை உடையவள். அழகிய மீன்போன்ற கண்களை உடையவள்). தடாதகை பிராட்டியார் கன்னிப் பருவத்தில் முடிசூடி பாண்டிய நாட்டை ஆண்டமையால் பாண்டியநாடு ‘கன்னிநாடு’ என்னும் பெயர் பெற்றது. இப்படலம் கூறும் கருத்து அன்புமிக்க தன் அடியவரிடத்தும் அவர்களின் அன்பின் பொருட்டு இறைவன் தோன்றுவார். தடாதகை பிராட்டியார் பாண்டிய நாட்டின் அரசியாகி மதுரை அரசாட்சி செய்தன் மூலம் ஆணுக்குப் பெண் சமம் என்பதை இப்படலம் தெளிவாக்குகிறது. தொடரும் திருச்சிற்றம்பலம் 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #திருவிளையாடல் #சிவபுராணம் #திருவிளையாடல் புராணம் #🕉ஓம் நமசிவாய 🕉
9 likes
13 shares