Failed to fetch language order
பாண்டுரங்கன் 🙏🙏🙏🌹
160 Posts • 54K views
தெவிட்டாத விட்டலா - 4 வித்யாநகர வாசம் 🌼🌼🌼🌼🌼🌼 விட்டலனிடம் வித்யாநகர் ராஜா என்ன கோரிக்கை விடுத்தான்? தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா.? ராஜா வேறு ஒரு உலகத்தில் சஞ்சரித்தான். ''விட்டலா, உனது திவ்ய தரிசனத்தை அனுபவித்த பிறகு உன்னை விட்டு பிரிய மனமில்லையே. என்னோடு நீ என் வித்யா நகருக்கு வந்துவிடேன். எனக்கென்னமோ இங்கேயே பண்டரிபுரத்தில் உன்னோடு ஐக்யமாக ஆசைதான். இருந்தபோதிலும் எனக்கு வித்யாநகர் என்று ஒரு ஊர் இருக்கிறதே. அங்கு நான் ராஜ்ய பரிபாலனம் செய்யவேண்டிய கடமை அழுத்துகிறதே" "ராமராஜா, தாராளமாக நான் உன்னோடு வருகிறேன். ஆனால் ஒன்றிரண்டு நிபந்தனைகள் உண்டே. நான் உன்னோடு வரும் பட்சத்தில் வழியில் நீ எங்கும் என்னைத் தரையில் வைக்கக் கூடாது. அப்படி எங்காவது என்னைத் தரையில் வைத்தால் அதுவே நான் தங்கும் இடமாகிவிடும். மற்றொரு விஷயம். நான் உன்னோடு வித்யாநகரம் வந்தால், என்று நீ ஏதாவது அநீதி இழைக்கிறாயோ அன்றே, அக்கணமே, நான் திரும்ப பண்டரிபுரம் சென்று விடுவேன். கவனம் வைத்துக்கொள். " சரி என்று ராஜா ஒப்புக்கொண்டான். ''விட்டலா விட்டலா" என்று நெஞ்சம் குமுறுவதைத்தவிர, ராஜா விட்டலனை பண்டரிபுரத்திலிருந்து வித்யாநகருக்கு இடம் மாற்றி எடுத்து செல்வதை, ஆலய நிர்வாகிகளோ பக்தர்களோ எதிர்க்கவோ தடுக்கவோ ஒன்றும் செய்ய வழியின்றி கையைப் பிசைந்து நின்றனர். பாண்டுரங்கன் வித்யா நகரம் சென்று விட்டான். ஆடி மாசம் ஏகாதசியன்று ''ஜே ஜே'' என்று கூட்டம் பாண்டுரங்கன் கோவில்களில் நெரியும். வர்காரிகள் என்று அழைக்கப்படும் விடோபா பக்தர்கள் மகாராஷ்டிராவிலிருந்தும் வட கன்னட தேசங்களிலிருந்தும் ஏராளமாக வருவார்களல்லவா?. பாவம் அத்தனை பேருக்கும் பெரும் ஏமாற்றம். விட்டலன் இல்லையா என்று வாடினர்.விஷயமறிந்து பலர் வருவதேயில்லை. பண்டரிபுரம் வெறிச்சோடியிருக்கும் நிலையில் வர்காரி பக்தர்களில் சிலர் கூட்டம் போட்டு மன வியாகூலத்தைச் சொல்லி அழுதனர். அந்த கூட்டத்தில் பானுதாசர் என்ற விட்டல பக்தரும் இருந்தார். பாண்டுரங்கனை எப்படியாவது ராம ராஜாவிடமிருந்து மீட்டு வித்யாநகரிலிருந்து மீண்டும் பண்டரிபுரம் பெற்று வரவேண்டும். யார் அந்த பொல்லாத ராஜாவிடம் போவது?. எப்படி விட்டலனை மீட்பது? "நான் இப்போதே வித்யாநகர் போகிறேன். ராஜாவைச் சந்திக்கிறேன். எப்பாடு பட்டாவது விட்டலனோடு வருவேன்" என்று சபதமிட்டு பானுதாசர் கிளம்பினார். பல நாள் நடந்து வித்யாநகர் அடைந்தார். சிலரைக் கேட்டு ராஜா அரண்மனை எங்கிருக்கிறது? விட்டலன் எங்கு இருக்கிறான் என்று எல்லாம் விசாரித்தார் .விட்டலன் ராஜாவின் அரண்மனைக்குள் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டு அதில் சிறை இருக்கிறான். தினமும் ராஜாவின் பூஜை தரிசனம் எல்லாம் ஆனபின் கதவு பூட்டப்படும். வேறு யாரும் வந்து தரிசிக்க வழியில்லை. இந்த விஷயம் பானுதாசர் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போலானது. "என்ன பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து இரவு பகல் தரிசனம் செய்யப்படும் விட்டலன் ஒரு ராஜாவின் இருட்டரையிலா? கோவிலுக்கு பாதுகாப்பு அதிகம். யாரும் நெருங்க முடியாதே. ராஜாவின் அரண்மனைக்கு அன்று இரவே பானுதாசர் சென்றார். அவர் அதிர்ஷ்டம் யாரும் அறியாமல் உள்ளே நுழைந்தார். நடு நிசி. காவல்காரன் தூங்கிக்கொண்டிருந்தான் கோவில் வாசலில். அவர் போய் நின்றதும் கதவு தானாகவே திறந்து கொண்டது. தாயைப் பிரிந்த கன்று போல பானுதாசர் விட்டலனிடம் உள்ளே ஓடினார். சிரித்துக்கொண்டு நின்ற அவனை ஆரத் தழுவி கொண்டார். கண்ணீர் உகுத்தார். "ஏன் இப்படிச் செய்தாய். நாங்கள் எல்லாரும் என்ன பாவம் பண்ணினோம். எங்களுக்கு ஏன் இந்த தண்டனை சொல்?" " நானா வந்தேன்?. இந்த ராமராஜாவும் என் பக்தர்களில் ஒருவன். ஆசையோடு அன்போடு உண்மையான பக்தி பரவசத்தோடு என்னைத் தூக்கிக்கொண்டு அல்லவோ வந்துவிட்டான். நானும் உங்களை எல்லாம் பார்க்க முடியவில்லையே என்று ஏங்கிக்கொண்டு தான் இங்கு நிற்கிறேன்".. "என்னோடு வருகிறாயா உன்னைத் தூக்கிக்கொண்டு போகட்டுமா?" " நாளை நான் உன்னோடு வருகிறேன். நீ இப்போது போய் ஸ்ரம பரிகாரம் பண்ணிக்கொள் பானுதாசா!" என்று விட்டலன் பானுதாசரை அனுப்புமுன் தன் கழுத்தில் இருந்த ஒரு விலையுயர்ந்த வைரமாலையை விட்டலன் பானு தாசருக்கு அணிவித்தான். பானுதாசர் திரும்பினார். ஒரு சத்திரத்தில் தங்கினார். மறுநாள் காலை ஒரு ஆற்றங்கரையில் ஸ்நானம் செய்துவிட்டு நதிக்கரையில் அமர்ந்து விட்டல த்யானத்தில் ஈடுபட்டார். அன்று காலை வழக்கம்போல் ராஜா பொழுது விடிந்ததும் முதல் தரிசனத்துக்கு விட்டலன் கோவிலுக்கு வந்தான். விட்டலனைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தவன் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தான். தான் முதல்நாள் அணிவித்த ராஜ பரம்பரையைச் சேர்ந்த வைரமாலை விட்டலனின் கழுத்தில் காணோமே! யார் வந்து இருக்க முடியும்? .எப்படி காணாமல் போனது? கீழே தேடினான். சுற்று முற்றும் பார்த்தான். காவலாளி கோவில் பக்கம் வெளியாள் யாரும் வரவில்லை என்று சத்யம் செய்தான். ராஜா கட்டளையிட மின்னல் வேகத்தில் வித்யாநகர் முழுதும் படை வீரர்கள் சென்று விசாரித்தனர். நேற்று ஒரு வெளியூர் ஆள் விட்டலன் கோவில் பற்றியும் ராஜாவின் அரண்மனையை பற்றியும் விசாரித்தான் என்று சொல்லக்கேட்டு பானுதாசரின் அங்க அடையாளங்கள் விசாரித்து தெரிந்துகொண்டு வீரர்கள் அவரைத் தேடியபோது தான் அவர் ஒரு ஆற்றங்கரையில் தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவர் கழுத்தில் மின்னிய வைர மாலையைக் கண்டதும் அரசனின் சேவகர்கள் அவரை குண்டுகட்டாகக் கட்டி ராஜாவிடம் கொண்டு சேர்த்தனர். பானுதாசரின் கழுத்தில் விட்டலனின் வைரமாலையைக் கண்ட அடுத்த கணமே ராஜா நெருப்பென கொதித்தான். பானுதாசர் ராஜாவை பார்த்ததும் "ராஜா நான் ஒன்றுமறியாதவன். இது விட்டலன் அணிவித்தது. இதன் விலையெல்லாம் எனக்கு தெரியாது" என்று அமைதியாக பதிலளித்தார். அவரை மேலே பேசவிடாமல் ராஜா கடுங்கோபத்தோடு "இந்த ஆளை உடனே கழுவேற்றுங்கள்" என்று ஆணையிட்டான். "மகாராஜா, நான் ஒரு விட்டல பக்தன் உங்களைப் போலவே! உங்கள் தண்டனையை நிரபராதியான நான் ஏற்றுகொள்கிறேன். ஆனால் கடைசி கடைசியாக ஒரே ஒரு தரம் என் விட்டலனை தரிசிக்க அருளவேண்டும்" என்று பணிவோடு பானுதாசர் கெஞ்சியவுடன் மனம் இளகினான் ராஜா. விட்டலன் முன் நின்ற பானுதாசர் கண்ணீர் பொங்க "விட்டலா இது உன் விளையாட்டு தானே? உன்னைக் காண வந்து, உன்னிடம் நான் ஏன் நீ எங்களோடு பண்டரிபுரத்திலேயே இருக்ககூடாதா? என்று உரிமை கொண்டாடப் போக திருட்டுப்பட்டம் கட்டி என்னை தூக்குமேடைக்கு அனுப்புகிறாய்!!. உனக்கு அங்கு வர விருப்பம் இல்லை, இங்கே ராஜ போகத்தில் தான் இருக்கவேண்டு மென்றால் ஏன் என்னோடு வர விருப்பம் என்று சொன்னாய்?. இனி யார் உன்னை காண வந்தாலும் உன்னை அங்கு வருகிறாயா என்று அழைத்தாலும் இப்படி தான் மரண தண்டனை கொடுப்பாயா?'' விட்டலின் இதழ்களில் மெல்லிய புன்னகை. 'விட்டலா நீ சிரிக்கலாம். நான் சீரியசாக சொல்றேன். எத்தனை ஜன்மம் எடுத்தாலும் நான் உன்னையே தேடி வருவேன். உன்னையே என் மனசு பூரா நிரப்பிக்கொள்வேன் இது சத்தியம். சந்தேகமே வேண்டாம்." பானுதாசரை வீரர்கள் இழுத்துச் சென்றார்கள் கோவிலிலிருந்து. கழுவேற்ற கூரான கழுமரம் தயாராகிவிட்டது. ராஜாவே கோபமாக தண்டனை நிறைவேறுவதை பார்வையிட வந்தான். பானுதாசரைத் தூக்கி கழுவேற்றும் தருணம் அந்த கழுமரம் அழகிய தாமரை மலராக மாறி அவரை ஏற்றுக்கொண்டது. அதன் மீது சுகமாக அமர்ந்தார் பானுதாசர். ராஜாவும் மற்றவர்களும் அசந்து போய் சிலையாயினர் என்ன ஆச்சர்யம் இது?! பானுதாசர் உண்மையிலேயே ஒரு மகான் என்று உணர்ந்த ராஜா அவர் காலடியில் விழுந்தான். பானு தாசரும் ராஜாவும் விட்டலனை தரிசிக்க ஓடினார்கள். "பாண்டுரங்கா, தீன ரக்ஷகா,ஆபத் பாந்தவா" என்று விட்டலனின் கால்களை அணைத்துக் கொண்டார் பானுதாசர். இப்போது விட்டலனே "வாருங்கள் பானுதாசரே நாம் பண்டரிபுரமே செல்வோம்" என்றான். ராஜா அலறினான். "விட்டலா, என்னை விட்டு, வித்யா நகரை விட்டு போகாதே" என்றான். ''ராமராஜா, நீ பூர்வ ஜன்மத்தில் செய்த புண்யத்திற்காக இதுவரை நான் இங்கு இருக்க வேண்டி வந்தது. உன் சொல்லைத் தட்ட முடிய வில்லை. மேலும் நீ மறந்து விட்டாயா நமது ஒப்பந்தத்தை? "சுவாமி நான் என்ன அபராதம் செய்தேன் எப்போது வாக்கு மறந்தேன்?" என்று அழுதுகொண்டே ராஜா கேட்டான். "நீ எப்போது அநீதி இழைக்கிறாயோ அப்போதே நான் பண்டரிபுரம் செல்வேன் என்று சொன்னேனே மறந்து விட்டாயா. பனுதாசர் தான் நிரபராதி என்று முறையிட்டபோதும் அவருக்கு மரண தண்டனை வழங்கி அதை மேற்பார்வையிட நீ காத்திருந்தாய். நான் குறுக்கிட்டு அவரை காப்பாற்ற வேண்டியதாயிற்று" இனி நான் பண்டரிபுரம் செல்ல தடையில்லை. ராஜா சிலையென கண்களில் நீர்வீழ்ச்சியோடு நின்றான். "என்ன யோசிக்கிறாய் பானுதாசா!, என்னை எப்படி ஒரு ஆளாக தூக்கி செல்வது என்றா ? கவலைப்படாதே. என் உருவத்தை ஒரு சிறிய விக்ரஹமாக மாற்றிக் கொள்கிறேன். உன் பையில் போட்டு எடுத்துக்கொண்டு போ" பானுதாசர் பண்டரிபுரம் நடந்தார் சந்திரபாகா நதி வந்தது. ஆற்றங்கரையில் வழக்கம்போல் பையை வைத்துவிட்டு ஸ்நானம் செய்து விட்டல நாம ஸ்மரணம் செய்தார் கரைக்கு வந்தபோது பையிலிருந்த விட்டலன் தன்னுடைய பெரிய உருவத்துக்கு வந்து சிலையாக நின்றான். "என்ன விட்டலா இப்படி மாறிவிட்டாய்? எப்படி நான் உன்னை தூக்கிக்கொண்டு போக முடியும்?" "பானுதாசரே, நீர் போய் கோவிலில் அறிவித்துவிடும், நான் வந்தாயிற்று என்று, அவர்கள் பார்த்து வேண்டியதை செய்யட்டும்" கோவில் அதிகாரிகளும் பக்தர்களும், முனிவர்களும், வர்காரிகளும் கோலாகலமாக பண்டரிநாதனை மேள தாளங்களுடன் அலங்கரித்து வாண வேடிக்கைகளோடு ஊர்வலமாக வந்து விட்டலன் யதா ஸ்தானம் வந்து சேர்ந்தான் . இறைவன் அன்புக்கு அடிமை. உண்மை பக்தியோடு அவனை அணுகினால் சொன்னதை செய்வான். இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #ஸ்ரீ பாண்டுரங்கன் தரிசனம் #🙏பெருமாள் #பாண்டுரங்கன் 🙏🙏🙏🌹
11 likes
12 shares
தெவிட்டாத விட்டலா - 2 🌼🌼🌼🌼🌼🌼 பரிஹாரம் இதோ ஏகநாத் வந்துவிட்டார் இன்றைய விட்டலன் கதையில். ஏக்நாத் ஒரு சிறந்த பாண்டுரங்க பக்தர் என்பது உங்களுக்கு தெரியும். தெரியாதவர்களுக்கும், தெரிந்து மறந்து போனவர்களுக்கும் மீண்டும் இதை ஞாபகப்படுத்துவது எனது கடமையாகிறதே! . ஏக்நாத் ஒருநாள் இரவு அகல் விளக்கின் ஒளியில் பாகவதம் படித்துக்கொண்டு ரசித்து ராகத்தோடு பாடிக்கொண்டு அதோடு ஒன்றியிருந்தார். நேரமாகிவிட்டதால் இருள் கவிந்து விட்டது. யாரோ கதவைத் தட்டினது கேட்டு கதவைத் திறந்து பார்த்தால் ஒரு பையன். கச்சலாக 11 அல்லது 12 வயது ஆகிருதி. சிவந்த உடம்பில் ஒத்தை பூணல். ஏழ்மை அவனது இடுப்பு துண்டின் கிழிசலில் தெரிந்தது. "யாரப்பா நீ? என்ன வேண்டும்?" "நீங்கள் தான் ஏக்நாத் ஸ்வாமியா?" அவர் தலையாட்டின மறுகணம் தடால் என்று அந்த பையன் அவர் காலடியில் விழுந்தான் "சுவாமி உங்களைப்பற்றி ஊரில் கேள்விப்பட்டேன். உதவி செய்வீர்கள் என்று நம்பி வந்திருக்கிறேன். எனக்கு பெற்றோர் இல்லை. வெளி தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன். உங்களிடம் சிஷ்யனாக இருக்க ரொம்ப விருப்பம். தாங்கள் இந்த ஏழையை ஏற்றுக்கொள்வீர்களா?" "உனக்கு என்னிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறதப்பா?" "சுவாமி நீங்கள் எனக்கு வேதம் மந்திரம் எல்லாம் கற்றுக் கொடுங்களேன்" "உன் தாய் தந்தையர் எங்கிருக்கிறார்கள் ?" "யாருமில்லை இப்போது. நீங்கள் தான் சகலமும்" . "நீ எந்த ஊரப்பா?" "சுவாமி நான் துவாரகையை சேர்ந்தவன். என் பெயர் கண்டீய கிருஷ்ணன். பையன் அன்று முதலே ஏக நாதரின் சிஷ்யனானான். இல்லை, இல்லை, அவர் பிள்ளையாகவே ஆனான். அவருக்கும் அவர் மனைவிக்கும் வலது கை அவன்.! பூ தொடுப்பது, பூஜைக்கு ஏற்பாடு செய்வது. கடைக்கு சென்று காய்கறி வாங்குவது. வீடு துடைப்பது, பெருக்குவது, துணி துவைப்பது. கை கால் பிடித்து விடுவது சர்வமும் அவனே. அன்று ஏக்நாதரின் அப்பா ஸ்ராத்தம். வீட்டில் ஸ்ராத்த சமையல் நடந்து கொண்டிருந்தது. தெருவில் சில குடியானவ ஜனங்கள் போய் கொண்டிருந்தனர். நல்ல பசியில் அவர்கள் உணவு எங்கே கிடைக்கும் என்று அலைந்து கொண்டிருந்த வேளையில் கம கம என்று சமையல் வாசனை ஏக்நாதரின் வீட்டிலிருந்து வந்தாள் நின்று ரசித்து சுவாசிக்க மாட்டார்களா?. " இந்த மாதிரி சாப்பாடு நமக்கு எந்த ஜன்மத்தில் கிடைக்க போகிறது?" என்று ஒருவன் சொன்னது அதற்கு, "ஆமாம், நாம் எல்லாம் கொடுத்து வைக்காத பாவிகள் ஆச்சே. நமக்கு எப்படி அய்யா இது கிடைக்கும்" என்று மற்றொருவன் சொன்னது அத்தனையுமே உள்ளே ஏக நாத்தின் காதில் விழுந்தது. "விட்டலா இது என்ன சோதனை" . மனங்கனிந்து வேண்டி அவர்களை உள்ளே கூப்பிட்டார். வயிறு நிறைய ஸ்ராத்த சமையல் பூரா அவர்கள் அத்தனை பேருக்கும் உபசாரத்தோடு அளித்தார். "பகவானே நீங்கள் நீடூழி வாழவேண்டும்". என்று மனமார வாழ்த்தி அவர்கள் சென்றனர். ஸ்ராத்தத்துக்கு வந்த பிராமணர்கள் இதைக்கண்டு கோபித்து வெளியேறி, ஊரில் இந்த செய்தி பரவி ஊர்க்கார பிராமணர்கள் ஆத்திரங் கொண்டார்கள். "எப்படிய்யா, ஸ்ராத்தம் பண்றதுக்கு முன்னாடி, பிராமணர்கள் சாப்பிடறதுக்கு முன்னாலே குடியானவர்களுக்கு அந்த சமையலை போட்டே?" இது சாஸ்திர விரோதம் என்று தெரியாதா உனக்கு" "சுவாமிகளே, பசி என்று வந்தவர்களுக்கு அன்னதானம் பண்ண ஜாதி மத பேதம் எல்லாம் இல்லை என்று தோன்றியது. அவர்களை விட்டல ஸ்வரூபமாகத்தான் பார்த்தேன்" "இதெல்லாம் விதண்டா வாத பேச்சு" . ஊர்க்கட்டுப்பாடு பண்ணி இனி எந்த பிராமணரும் ஏக்நாத் வீட்டில் தண்ணீர் கூட குடிக்க கூடாது. அவருக்கு யாரும் எந்த வீட்டிலும் அனுமதி, ஆகாரமோ கொடுக்ககூடாது. பேச்சு வார்த்தையோ வைத்து கொள்ளகூடாது என்று தண்டித்தனர். அன்று ஸ்ராத்தமாச்சே. பித்ரு கார்யம் நடந்தாகவேண்டுமே? மறுபடியும் எல்லோரும் குளித்து விட்டு சமையல் தயாராகி விட்டது. எந்த பிராமணர் வருவார் சாப்பிட? எப்படி மூன்று தலைமுறைக்கு பிண்டம் போட?, பித்ரு மகாவிஷ்ணு ஸ்வரூபமாக எவருக்கு உணவு இடுவது? ஏகநாதர் "விட்டலா" என்று துடித்தார். இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிஷ்யன் கண்டிய கிருஷ்ணன் சொன்னான். " குருவே பேசாமல் மூன்று கூர்ச்சங்களை இலைக்கு எதிரே போடுங்கள் அதுவே பித்ருக்களாகிவிடும். போஜனம் செய்யும் " என்றான். "டே சின்ன பயலே, உனக்கு இது விளையாட நேரமாடா? " "இல்லை குருவே, ஸாஸ்த்ரமே இதைத்தான் சொல்கிறது. மனத்தில் பித்ருக்களை வேண்டி அந்த கூர்ச்சத்தில் அவர்களை ஆவாஹனம் பண்ணி கூப்பிடுங்களேன். வருவார்கள்'' அவ்வாறே ஏகநாதர் தனது அப்பாவை நினைத்து , தாத்தா, முப்பாட்டன் எல்லோரையும் மாதா வர்க்கம் எல்லோரையும் அழைத்து ஒரு கூர்ச்சங்கள் இட்டு த்யாநித்தார். இலையின் முன்னே விட்டலனே வந்து அமர்ந்து உணவை உண்டான்!! . மற்ற கூர்ச்சங்களுக்கு என்று இந்த்ராதி தேவர்கள் வந்து ஏகநாதருடைய மூதாதைகளாக ஆவிர்பவித்து உணவு உண்டு ஆசீர்வாதம் வழங்கினர். விட்டலனும் மற்ற தேவர்களும் பிராமணர்களாக வந்து ஆசிர்வாத மந்த்ரம் உச்சரித்தது மற்ற வீடுகளில் உள்ள பிராமணர்களின் காதிலும் விழுந்ததே. அவர்கள் ஏக்நாத் வெளியூரிலிருந்து யாரோ சில பிராமணர்களை வரவழைத்து ஸ்ராத்தம் நடத்துகிறார். ஊர் கட்டுப்பாடு தெரியாத அவர்களும் வந்திருக்கிறார்கள். வெளியே வரட்டும் ,அவர்களோடு கச்சேரி வைத்துக்கொள்ளலாம்'' என்று காத்திருந்தனர். யாரும் வரவில்லை என்றறிந்து கண்டிய கிருஷ்ணனிடம் " யார் ஸ்ராத்தத்துக்கு வந்தார்கள்?" என்று கேட்டனர் " ஒருத்தரும் வரவில்லையே" என்றான் பையன். சரி குரல் மாற்றி கிருஷ்ணனும் ஏக்நாத்தும் தான் மந்திரங்களை உச்சரித்தனர் என்று எண்ணி அவர்கள் திரும்பினார்கள். சில மாதங்களுக்கு பிறகு பிராமணர்கள் ஒன்று கூடி, ஏக்நாத் தக்க பிராயச்சித்தம் பரிஹாரம் பண்ணினால் மீண்டும் பிராமண சமூகத்தில் ஏற்றுகொள்ளப்படலாம் என்று அபிப் ராயம் தெரிவித்தனர். "என்ன பரிஹாரம்?" ஒவ்வொரு பிராமணரும் ஒரு லிஸ்ட் தந்தார். அவர்கள் பரிகாரத்துக்கு கேட்ட தானம் அயிட்டங்கள் என்ன தெரியுமா? தங்கத்திலே பசு, வீடு, நிலங்கள், பணம், ஆபரணங்கள். இன்னும் பல. ஏகநாதர் இவற்றுக் கெல்லாம் எங்கே போவார்?. இருக்கும் வீடு முதலிய சகலமும் விற்றுத்தர முன்வந்தார். ஆனால் கண்டிய கிருஷ்ணன் தடுத்தான். "இந்த பிராமணர்கள் உங்களை ஓட்டாண்டியாக்கி விட ப்ளான் போட்டிருக்கிறார்கள். நம்பவேண்டாம். இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டாம்" . என்றான். ஏக்நாத் கிருஷ்ணன் சொல்லை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. தனது சொத்து பூரா தானமாக அளித்து பிராமணர்களும் அவருக்கு பிராயச்சித்தம் பண்ண தயாரானார்கள் கிருஷ்ணன் இதெல்லாம் பார்த்துக்கொண்டே கோபமாக இருந்த அந்த நேரம் பார்த்து ஒரு குஷ்ட ரோகி அங்கே வந்தான் "யார் நீ எதற்கு இங்கு வந்தாய்?" என்று பிராமணர்கள் கேட்க "இங்கு ஏக் நாதர் யார்? அவரிடம் ஒரு பரிஹாரம் பண்ணிக்கொள்ள வந்திருக்கிறேன்" என்றான் அவன். "ஏக்நாதரே எங்களிடம் இப்போது பரிஹாரம் பண்ணிக்கொள்கிறார்!!. நீ வேண்டுமானால் எங்களிடமே என்ன பரிஹாரமோ பண்ணிக்கொள்" என்றனர் "இல்லை இல்லை ஏகநாதர் ஒருவரால் தான் என் குறையை தீர்க்கமுடியும். பகவான் த்ரியம்பகேஸ்வரரின் ஆக்ஞை இது. உங்களைப்போல பல பேரிடம் சென்று தோல்வியும் பண நஷ்டமும் அடைந்தது தான் மிச்சம். வியாதி குணமாகவே இல்லை." கண்டிய கிருஷ்ணன் பிராமணர்கள் காது பட அந்த குஷ்டரோகியிடம் கேட்டான். ''ஏகநாதரிடம் என்ன பிராயச்சித்தம் பெறவேண்டும்?" "ஏக நாதர் பாதத்தை அலம்பி அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக்கொண்டு ஒரு வாய் தீர்த்தம் அருந்தினால் தான் என் உடலை பாதித்த குஷ்ட நோய் தீரும்'' என்று த்ரியம்பகேஸ்வரர் கனவில் சொன்னாரே? "அய்யா, நான் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் ரொம்ப சாதரணமானவன். நானே ஒரு பாபி" என்றார் ஏக நாத். "அதெல்லாம் இல்லவே இல்லை. இது த்ரயம்பகேஸ்வரர் ஆக்ஞை. மீராதிர்கள். என் வாழ்வை சீராக்க வேண்டியது உங்கள் கடமை" என்றான் குஷ்டரோகி. "நாங்கள் இருக்கும்போது ஏகநாதர் உங்களுக்கு பரிஹாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்" என்றனர் பிராமணர்கள். "நீங்கள் மறுத்தால் இதோ இந்த கோதாவரியில் விழுந்து உயிரை மாய்த்து கொள்வேன். த்ரியம்பகேஸ்வரர் கட்டளையை மீறினது இல்லாமல், என் உயிர் போன பாபமும் உங்களை சேரும்" என்று பிராமணர்களை எச்சரித்தான் குஷ்டரோகி. பிராமணர்களும் ஏக்நாத்துக்கு செய்துகொண்டிருந்த ப்ராயச்சித்த மந்திரத்தை நிறுத்தினார்கள். முதலில் ஏகநாதர் இந்த ஏழை குஷ்டரோகியை எப்படி நிவர்த்திக்கிறார் என்று பார்ப்போம் என்று காத்திருந்தனர். குஷ்டரோகி, கண்டிய கிருஷ்ணன் ஜலம் விட அவர் காலை பூஜித்து அலம்பி அந்த ஜலத்தை குடித்த அடுத்த கணமே அவன் உடல் பொன்னிறமாக மாறி அவன் ஒரு அழகிய வாலிபனாக மிளிர்ந்தான். பிராமணர்கள் இந்த அதிசயத்தில் சிலையாயினர் "பிராமணர்களே, அவர் ஏழைகளுக்கு அன்னதானமிட்டதை தெய்வங்களே ஏற்றுக்கொண்டபோது இன்னும் நீங்கள் என் குருநாதருக்கு பரிஹாரம் செய்ய ஏற்றவர்களா என்று யோசித்து செய்யுங்கள். உங்களை பெரும் பாவம் பற்றிக்கொள்ளும். விட்டலன் நிந்தனைக்கு ஆளாவீர்கள் ஜாக்ரதை" என்று பிராமணர்களை எச்சரித்தான் கண்டிய கிருஷ்ணன். ஆடிப்போய்விட்ட பிராமணர்கள் ஏக நாதர் காலில் விழுந்து வணங்கி அவர் மன்னித்தருள வேண்டினர். ஏகநாதர் மீது விதிக்கப் பட்ட ஊர்க்கட்டுப்பாடு தானாகவே விலகியது. கண்டிய கிருஷ்ணனும் தனது வேலை முடிந்தது என்று பண்டரிபுரம் திரும்பினான். அவன் கோவிலில் போய் இடுப்பில் கை வைத்துகொண்டு மற்ற பக்தர்களுக்காக நிற்கவேண்டாமா? இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #ஸ்ரீ பாண்டுரங்கன் தரிசனம் #பாண்டுரங்கன் 🙏🙏🙏🌹 #🙏பெருமாள் #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻
13 likes
1 comment 12 shares