Failed to fetch language order
ஸ்ரீ பாண்டுரங்கன் தரிசனம்
28 Posts • 26K views
தெவிட்டாத விட்டலா - 4 வித்யாநகர வாசம் 🌼🌼🌼🌼🌼🌼 விட்டலனிடம் வித்யாநகர் ராஜா என்ன கோரிக்கை விடுத்தான்? தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா.? ராஜா வேறு ஒரு உலகத்தில் சஞ்சரித்தான். ''விட்டலா, உனது திவ்ய தரிசனத்தை அனுபவித்த பிறகு உன்னை விட்டு பிரிய மனமில்லையே. என்னோடு நீ என் வித்யா நகருக்கு வந்துவிடேன். எனக்கென்னமோ இங்கேயே பண்டரிபுரத்தில் உன்னோடு ஐக்யமாக ஆசைதான். இருந்தபோதிலும் எனக்கு வித்யாநகர் என்று ஒரு ஊர் இருக்கிறதே. அங்கு நான் ராஜ்ய பரிபாலனம் செய்யவேண்டிய கடமை அழுத்துகிறதே" "ராமராஜா, தாராளமாக நான் உன்னோடு வருகிறேன். ஆனால் ஒன்றிரண்டு நிபந்தனைகள் உண்டே. நான் உன்னோடு வரும் பட்சத்தில் வழியில் நீ எங்கும் என்னைத் தரையில் வைக்கக் கூடாது. அப்படி எங்காவது என்னைத் தரையில் வைத்தால் அதுவே நான் தங்கும் இடமாகிவிடும். மற்றொரு விஷயம். நான் உன்னோடு வித்யாநகரம் வந்தால், என்று நீ ஏதாவது அநீதி இழைக்கிறாயோ அன்றே, அக்கணமே, நான் திரும்ப பண்டரிபுரம் சென்று விடுவேன். கவனம் வைத்துக்கொள். " சரி என்று ராஜா ஒப்புக்கொண்டான். ''விட்டலா விட்டலா" என்று நெஞ்சம் குமுறுவதைத்தவிர, ராஜா விட்டலனை பண்டரிபுரத்திலிருந்து வித்யாநகருக்கு இடம் மாற்றி எடுத்து செல்வதை, ஆலய நிர்வாகிகளோ பக்தர்களோ எதிர்க்கவோ தடுக்கவோ ஒன்றும் செய்ய வழியின்றி கையைப் பிசைந்து நின்றனர். பாண்டுரங்கன் வித்யா நகரம் சென்று விட்டான். ஆடி மாசம் ஏகாதசியன்று ''ஜே ஜே'' என்று கூட்டம் பாண்டுரங்கன் கோவில்களில் நெரியும். வர்காரிகள் என்று அழைக்கப்படும் விடோபா பக்தர்கள் மகாராஷ்டிராவிலிருந்தும் வட கன்னட தேசங்களிலிருந்தும் ஏராளமாக வருவார்களல்லவா?. பாவம் அத்தனை பேருக்கும் பெரும் ஏமாற்றம். விட்டலன் இல்லையா என்று வாடினர்.விஷயமறிந்து பலர் வருவதேயில்லை. பண்டரிபுரம் வெறிச்சோடியிருக்கும் நிலையில் வர்காரி பக்தர்களில் சிலர் கூட்டம் போட்டு மன வியாகூலத்தைச் சொல்லி அழுதனர். அந்த கூட்டத்தில் பானுதாசர் என்ற விட்டல பக்தரும் இருந்தார். பாண்டுரங்கனை எப்படியாவது ராம ராஜாவிடமிருந்து மீட்டு வித்யாநகரிலிருந்து மீண்டும் பண்டரிபுரம் பெற்று வரவேண்டும். யார் அந்த பொல்லாத ராஜாவிடம் போவது?. எப்படி விட்டலனை மீட்பது? "நான் இப்போதே வித்யாநகர் போகிறேன். ராஜாவைச் சந்திக்கிறேன். எப்பாடு பட்டாவது விட்டலனோடு வருவேன்" என்று சபதமிட்டு பானுதாசர் கிளம்பினார். பல நாள் நடந்து வித்யாநகர் அடைந்தார். சிலரைக் கேட்டு ராஜா அரண்மனை எங்கிருக்கிறது? விட்டலன் எங்கு இருக்கிறான் என்று எல்லாம் விசாரித்தார் .விட்டலன் ராஜாவின் அரண்மனைக்குள் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டு அதில் சிறை இருக்கிறான். தினமும் ராஜாவின் பூஜை தரிசனம் எல்லாம் ஆனபின் கதவு பூட்டப்படும். வேறு யாரும் வந்து தரிசிக்க வழியில்லை. இந்த விஷயம் பானுதாசர் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போலானது. "என்ன பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து இரவு பகல் தரிசனம் செய்யப்படும் விட்டலன் ஒரு ராஜாவின் இருட்டரையிலா? கோவிலுக்கு பாதுகாப்பு அதிகம். யாரும் நெருங்க முடியாதே. ராஜாவின் அரண்மனைக்கு அன்று இரவே பானுதாசர் சென்றார். அவர் அதிர்ஷ்டம் யாரும் அறியாமல் உள்ளே நுழைந்தார். நடு நிசி. காவல்காரன் தூங்கிக்கொண்டிருந்தான் கோவில் வாசலில். அவர் போய் நின்றதும் கதவு தானாகவே திறந்து கொண்டது. தாயைப் பிரிந்த கன்று போல பானுதாசர் விட்டலனிடம் உள்ளே ஓடினார். சிரித்துக்கொண்டு நின்ற அவனை ஆரத் தழுவி கொண்டார். கண்ணீர் உகுத்தார். "ஏன் இப்படிச் செய்தாய். நாங்கள் எல்லாரும் என்ன பாவம் பண்ணினோம். எங்களுக்கு ஏன் இந்த தண்டனை சொல்?" " நானா வந்தேன்?. இந்த ராமராஜாவும் என் பக்தர்களில் ஒருவன். ஆசையோடு அன்போடு உண்மையான பக்தி பரவசத்தோடு என்னைத் தூக்கிக்கொண்டு அல்லவோ வந்துவிட்டான். நானும் உங்களை எல்லாம் பார்க்க முடியவில்லையே என்று ஏங்கிக்கொண்டு தான் இங்கு நிற்கிறேன்".. "என்னோடு வருகிறாயா உன்னைத் தூக்கிக்கொண்டு போகட்டுமா?" " நாளை நான் உன்னோடு வருகிறேன். நீ இப்போது போய் ஸ்ரம பரிகாரம் பண்ணிக்கொள் பானுதாசா!" என்று விட்டலன் பானுதாசரை அனுப்புமுன் தன் கழுத்தில் இருந்த ஒரு விலையுயர்ந்த வைரமாலையை விட்டலன் பானு தாசருக்கு அணிவித்தான். பானுதாசர் திரும்பினார். ஒரு சத்திரத்தில் தங்கினார். மறுநாள் காலை ஒரு ஆற்றங்கரையில் ஸ்நானம் செய்துவிட்டு நதிக்கரையில் அமர்ந்து விட்டல த்யானத்தில் ஈடுபட்டார். அன்று காலை வழக்கம்போல் ராஜா பொழுது விடிந்ததும் முதல் தரிசனத்துக்கு விட்டலன் கோவிலுக்கு வந்தான். விட்டலனைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தவன் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தான். தான் முதல்நாள் அணிவித்த ராஜ பரம்பரையைச் சேர்ந்த வைரமாலை விட்டலனின் கழுத்தில் காணோமே! யார் வந்து இருக்க முடியும்? .எப்படி காணாமல் போனது? கீழே தேடினான். சுற்று முற்றும் பார்த்தான். காவலாளி கோவில் பக்கம் வெளியாள் யாரும் வரவில்லை என்று சத்யம் செய்தான். ராஜா கட்டளையிட மின்னல் வேகத்தில் வித்யாநகர் முழுதும் படை வீரர்கள் சென்று விசாரித்தனர். நேற்று ஒரு வெளியூர் ஆள் விட்டலன் கோவில் பற்றியும் ராஜாவின் அரண்மனையை பற்றியும் விசாரித்தான் என்று சொல்லக்கேட்டு பானுதாசரின் அங்க அடையாளங்கள் விசாரித்து தெரிந்துகொண்டு வீரர்கள் அவரைத் தேடியபோது தான் அவர் ஒரு ஆற்றங்கரையில் தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவர் கழுத்தில் மின்னிய வைர மாலையைக் கண்டதும் அரசனின் சேவகர்கள் அவரை குண்டுகட்டாகக் கட்டி ராஜாவிடம் கொண்டு சேர்த்தனர். பானுதாசரின் கழுத்தில் விட்டலனின் வைரமாலையைக் கண்ட அடுத்த கணமே ராஜா நெருப்பென கொதித்தான். பானுதாசர் ராஜாவை பார்த்ததும் "ராஜா நான் ஒன்றுமறியாதவன். இது விட்டலன் அணிவித்தது. இதன் விலையெல்லாம் எனக்கு தெரியாது" என்று அமைதியாக பதிலளித்தார். அவரை மேலே பேசவிடாமல் ராஜா கடுங்கோபத்தோடு "இந்த ஆளை உடனே கழுவேற்றுங்கள்" என்று ஆணையிட்டான். "மகாராஜா, நான் ஒரு விட்டல பக்தன் உங்களைப் போலவே! உங்கள் தண்டனையை நிரபராதியான நான் ஏற்றுகொள்கிறேன். ஆனால் கடைசி கடைசியாக ஒரே ஒரு தரம் என் விட்டலனை தரிசிக்க அருளவேண்டும்" என்று பணிவோடு பானுதாசர் கெஞ்சியவுடன் மனம் இளகினான் ராஜா. விட்டலன் முன் நின்ற பானுதாசர் கண்ணீர் பொங்க "விட்டலா இது உன் விளையாட்டு தானே? உன்னைக் காண வந்து, உன்னிடம் நான் ஏன் நீ எங்களோடு பண்டரிபுரத்திலேயே இருக்ககூடாதா? என்று உரிமை கொண்டாடப் போக திருட்டுப்பட்டம் கட்டி என்னை தூக்குமேடைக்கு அனுப்புகிறாய்!!. உனக்கு அங்கு வர விருப்பம் இல்லை, இங்கே ராஜ போகத்தில் தான் இருக்கவேண்டு மென்றால் ஏன் என்னோடு வர விருப்பம் என்று சொன்னாய்?. இனி யார் உன்னை காண வந்தாலும் உன்னை அங்கு வருகிறாயா என்று அழைத்தாலும் இப்படி தான் மரண தண்டனை கொடுப்பாயா?'' விட்டலின் இதழ்களில் மெல்லிய புன்னகை. 'விட்டலா நீ சிரிக்கலாம். நான் சீரியசாக சொல்றேன். எத்தனை ஜன்மம் எடுத்தாலும் நான் உன்னையே தேடி வருவேன். உன்னையே என் மனசு பூரா நிரப்பிக்கொள்வேன் இது சத்தியம். சந்தேகமே வேண்டாம்." பானுதாசரை வீரர்கள் இழுத்துச் சென்றார்கள் கோவிலிலிருந்து. கழுவேற்ற கூரான கழுமரம் தயாராகிவிட்டது. ராஜாவே கோபமாக தண்டனை நிறைவேறுவதை பார்வையிட வந்தான். பானுதாசரைத் தூக்கி கழுவேற்றும் தருணம் அந்த கழுமரம் அழகிய தாமரை மலராக மாறி அவரை ஏற்றுக்கொண்டது. அதன் மீது சுகமாக அமர்ந்தார் பானுதாசர். ராஜாவும் மற்றவர்களும் அசந்து போய் சிலையாயினர் என்ன ஆச்சர்யம் இது?! பானுதாசர் உண்மையிலேயே ஒரு மகான் என்று உணர்ந்த ராஜா அவர் காலடியில் விழுந்தான். பானு தாசரும் ராஜாவும் விட்டலனை தரிசிக்க ஓடினார்கள். "பாண்டுரங்கா, தீன ரக்ஷகா,ஆபத் பாந்தவா" என்று விட்டலனின் கால்களை அணைத்துக் கொண்டார் பானுதாசர். இப்போது விட்டலனே "வாருங்கள் பானுதாசரே நாம் பண்டரிபுரமே செல்வோம்" என்றான். ராஜா அலறினான். "விட்டலா, என்னை விட்டு, வித்யா நகரை விட்டு போகாதே" என்றான். ''ராமராஜா, நீ பூர்வ ஜன்மத்தில் செய்த புண்யத்திற்காக இதுவரை நான் இங்கு இருக்க வேண்டி வந்தது. உன் சொல்லைத் தட்ட முடிய வில்லை. மேலும் நீ மறந்து விட்டாயா நமது ஒப்பந்தத்தை? "சுவாமி நான் என்ன அபராதம் செய்தேன் எப்போது வாக்கு மறந்தேன்?" என்று அழுதுகொண்டே ராஜா கேட்டான். "நீ எப்போது அநீதி இழைக்கிறாயோ அப்போதே நான் பண்டரிபுரம் செல்வேன் என்று சொன்னேனே மறந்து விட்டாயா. பனுதாசர் தான் நிரபராதி என்று முறையிட்டபோதும் அவருக்கு மரண தண்டனை வழங்கி அதை மேற்பார்வையிட நீ காத்திருந்தாய். நான் குறுக்கிட்டு அவரை காப்பாற்ற வேண்டியதாயிற்று" இனி நான் பண்டரிபுரம் செல்ல தடையில்லை. ராஜா சிலையென கண்களில் நீர்வீழ்ச்சியோடு நின்றான். "என்ன யோசிக்கிறாய் பானுதாசா!, என்னை எப்படி ஒரு ஆளாக தூக்கி செல்வது என்றா ? கவலைப்படாதே. என் உருவத்தை ஒரு சிறிய விக்ரஹமாக மாற்றிக் கொள்கிறேன். உன் பையில் போட்டு எடுத்துக்கொண்டு போ" பானுதாசர் பண்டரிபுரம் நடந்தார் சந்திரபாகா நதி வந்தது. ஆற்றங்கரையில் வழக்கம்போல் பையை வைத்துவிட்டு ஸ்நானம் செய்து விட்டல நாம ஸ்மரணம் செய்தார் கரைக்கு வந்தபோது பையிலிருந்த விட்டலன் தன்னுடைய பெரிய உருவத்துக்கு வந்து சிலையாக நின்றான். "என்ன விட்டலா இப்படி மாறிவிட்டாய்? எப்படி நான் உன்னை தூக்கிக்கொண்டு போக முடியும்?" "பானுதாசரே, நீர் போய் கோவிலில் அறிவித்துவிடும், நான் வந்தாயிற்று என்று, அவர்கள் பார்த்து வேண்டியதை செய்யட்டும்" கோவில் அதிகாரிகளும் பக்தர்களும், முனிவர்களும், வர்காரிகளும் கோலாகலமாக பண்டரிநாதனை மேள தாளங்களுடன் அலங்கரித்து வாண வேடிக்கைகளோடு ஊர்வலமாக வந்து விட்டலன் யதா ஸ்தானம் வந்து சேர்ந்தான் . இறைவன் அன்புக்கு அடிமை. உண்மை பக்தியோடு அவனை அணுகினால் சொன்னதை செய்வான். இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #ஸ்ரீ பாண்டுரங்கன் தரிசனம் #🙏பெருமாள் #பாண்டுரங்கன் 🙏🙏🙏🌹
11 likes
12 shares
தெவிட்டாத விட்டலா - 3 அபூர்வ விட்டல தரிசனம் 🌼🌼🌼🌼🌼🌼🌼 இன்று ஒரு சுவாரசியமான கதை காத்திருக்கிறது. பண்டரி புரத்தில் ஒரு பிராமணர். அவர் ஒரு தீவிர விட்டல பக்தர். குடும்பம் பெரியது என்பதால் அவருக்கு பணத்தை தேடுவதற்கும் இடையிடையே நேரம் தேவைப்பட்டது. ஏழை பிராமணர்களுக்கு எப்போவுமே யார் கிட்ட போனால் நிறைய தக்ஷிணை கிடைக்கும் என்ற ஆவல், தீராத எதிர்பார்ப்பு உண்டே? ஒரு நாள் யாத்திரைக்கு கிளம்பிவிட்டார். போகும் வழியில் விட்டல பஜனையும் ஆச்சு. குடும்பத்திற்கு கையில் ஏதோ கொஞ்சம் திரவியமும் கிடைத்தது . வித்யா நகர் என்று ஒரு ஊர் வந்து சேர்ந்தார். அந்த ஊருக்கு ராஜாவின் பெயர் ராமராஜா என்பவர். சிறந்த பக்திமான் மேலும் நிறைய தான தர்மங்கள் செய்பவர் என்று கேள்விப்பட்டு அவரை பார்க்க அவர் அரண்மனை வந்தார். அப்போது ராஜா பூஜை செய்யும் நேரம். காவலாளி " யார் நீங்கள்?" என்றான் "நான் பண்டரிபுரத்திலிருந்து ஒரு விட்டல பக்தன் வந்திருக்கிறேன்.என்று ராஜாவிடம் சொல்லு" உள்ளே சென்று திரும்பிய காவலாளி அவரை ராஜாவிடம் அழைத்து சென்றான். .ராஜா அவரை உபசரித்தான். ' நான் அருகே இருக்கும் அம்பிகையின் ஆலயம் சென்று தரிசனம் செய்து அங்கு அம்பாளுக்கு தானே பூஜை செய்து விட்டு புசிப்பது வழக்கம். தாங்களும் தரிசனத்துக்கு வாருங்கள்" '' ராஜா உபசரிப்போடு அவரை அழைத்து சென்றான். செல்லும் வழியில் ஒரு பெரிய நந்தவனம். "இதோ இந்த நந்தவனத்தில் தான் அம்பிகைக்கு தேவையான பூஜைக்குகந்த புஷ்பங்கள் தரும் செடி கொடி மரம் எல்லாம் வளர்க்கிறேன் .இது போன்ற செழிப்பான நந்தவனம் எங்குமே இருக்காதே! பார்த்திருக்க மாட்டீர்கள் அல்லவா?'' "ஆமாம் ராஜா" "இதோ கோவில் தெரிகிறது பாருங்கள்'. தக தக பள பள வென்று. முழுதும் வெள்ளியாலேயே சுவர்கள் கட்டப்பட்ட பிரம்மாண்டமாக அந்த அம்பிகை கோவில் உள்ளே நிறைய பிராமணர்கள் வேதகோஷம். பூஜைக்கு எல்லாம் ரெடியாக இருந்தது. அம்பாள் உயரமாக நின்று நிறைய ஆபரணங்கள் அலங்கார பட்டு வஸ்திரங்களோடு ஜக ஜோதியாக தரிசனம் தந்தாள் ராஜா பூஜைக்கு அமர்ந்தார் விஸ்தாரமாக பூஜை நடந்து நெய்வேத்யம் முடிந்து அனைவருக்கும் கை நிறைய பிரசாத விநியோகமும் ஆனது. ராஜாவும் பிராமணரும் சாப்பிட்டு முடிந்த பிறகு ராஜா பிராமணரை கேட்டான். " இது போல உசத்தியான கோவில், அம்பாள், அலங்கார பூஜைகள் எல்லாம் எங்காவது பார்த்ததுண்டா? நீங்கள் வசிக்கும் பண்டரிபுரத்தில் இப்படி எல்லாம் சிறப்பாக விட்டலனுக்கு பூஜை உண்டா?" "எதோ பாவம் சில ஏழை பிராமணர்கள் சேர்ந்து பூஜை பண்ணி அங்கே விட்டல நாம சங்கீர்த்தனங்கள் செய்து வருவதால் இந்த அளவுக்கு செல்வ செழிப்பாக அங்கே பூஜைகள் எப்படி நடக்க முடியும் இல்லையா?" பிராமணருக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது. விட்டல பக்தரல்லவா? . வராதா பின்னே ? "என்ன? விட்டலனும் பண்டரிபுர ஆலயமும் அவ்வளவு மட்டமாக போய்விட்டதா? '' : "ராஜா, நீங்கள் பண்டரிபுரம் சென்று விட்டலனை தரிசனம் பண்ணினது உண்டா? "இன்னும் இல்லை" "அதால் தான் இவ்வாறு பேசுகிறீர்கள். விட்டலன் ஆலயம் பண்டரிபுரத்தில் தங்கத்தாலேயே கட்டப்பட்டது. நீங்கள் கட்டினது போல் வெறும் வெள்ளியால் அல்ல. இது நீங்கள் கட்டிய ஆலயம். அது தேவ சிற்பி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது. இங்கு நீங்கள் வழிபட்ட அம்பிகை அங்கு தினமும் வந்து விட்டலனை தரிசனம் செய்யுமுன் விட்டலன் சந்நிதியை தானே பெருக்கி சுந்தம் செய்கிறவள். இங்கு சில காசு ஆசை பிடித்த பிராமணர்கள் மட்டும் தானே வைத்திருக்கிறீர்கள் ? அது இந்திராதி முப்பத்தி முக்கோடி தேவர்களும் வந்து வணங்கி நிற்கும் புனித ஸ்தலம். சந்திர பாகா என்று ஒரு நதி ஓடுகிறதே கேள்விபட்டிருக்கிறீர்களா? அதில் ஸ்நானம் செய்தால் பல ஜென்மங்களின் பாவம் ஒழியும். இங்கு ஒரு சிறு தோட்டம் போல ஒரு நந்தவனம் காட்டினீர்கள் . அங்கே விட்டலன் ஆலயம் செல்லும் வழியில் காட்டில் நினைத்ததை எல்லாம் தரும் கல்ப தருக்களும் மனோபீஷ்ட செடி கொடி மரங்கள் நிறைய உண்டு. அங்கு ஒவ்வொரு பசுவுமே காமதேனு. சந்திர பாகாவில் கிடைக்கும் ஒவ்வொரு சாளிக்ராமமுமே நினைத்ததை தரும் விசேஷமான மனோபீஷ்ட சித்தி மந்திர கல். சமுத்ரத்தை பார்க்காதவனுக்கு அவன் ஊர் குட்டை பெரிய நீர் நிலையாகத்தானே தெரியும்" ஏதோ வெறி வந்தவன் மாதிரி பிராமணர் இவ்வாறு பொரிந்து தள்ளினதை கேட்ட ராஜாவுக்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் வந்தது. இந்த பிராமணனுக்கு கடுந்தண்டனை கொடுக்க முடிவெடுத்தான். "நீ சொல்வது உண்மையா" "நான் சொன்னது கொஞ்சம் தான்" ராஜா உடனே மந்திரியை அழைத்தான் பண்டரிபுரம் செல்ல ஏற்பாடுகள் செய்ய சொன்னான். ஒரு சிறிய படையே நிறைந்து விட்டது. ராஜாவின் பின்னால் பிராமணன் அழைத்து செல்லப் பட்டான் ஹே விட்டலா, நான் உன் மீது உள்ள பக்தியால் உன் ஆலயத்தை குறைத்து சொன்னதை தாங்கமுடியாமல் ஏதேதோ உளறிவிட்டேனே. ராஜா கிளம்பிவிட்டான். நான் சொன்னது போல் பண்டரிபுரம் இல்லையென்று தெரிந்தவுடன் என் கழுத்தை வெட்ட போகிறான். வெட்டட்டும்!, பரவாயில்லை உன்னை குறை கூறி அதை கேட்டுக்கொண்டிருப்பதை காட்டிலும் என் தலை போவதே சிறந்தது. இந்த ராஜாவுக்கு நீயே வழிகாட்டு" வழியெல்லாம் விட்டலனை தியானம் பண்ணிக்கொண்டே ராஜாவின் கூட்டத்தோடு நடந்தார் பிராமணர். ராஜாவின் சேனை பண்டரிபுரம் வந்து சேர்ந்தது. யானை மீது அமர்ந்திருந்ததால் தூரத்திலேயே விட்டலன் ஆலயம் கண்ணில் பட்டது. ராஜா திகைத்தான். "அடாடா!!, என்ன திவ்ய தரிசனம் இது? பிராமணன் சொன்னது போலவே இருக்கே!. தங்கத்தால் கட்டப்பட்ட கோவில் கோபுரம் கண்ணை குருடாக்குகிறதே!. சுற்றிலும் அடர்ந்த பசுமையான காடு நிறைய பூத்து குலுங்கும் வித விதமான புஷ்பங்கள், பழங்கள், வெள்ளி தகடாக ஜொலிக்கும் சந்திரபாகா நதியில் எண்ணற்ற வைஷ்ணவர்கள் நீரில் இருந்து நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்கிறார்கள். நதியில் தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் எல்லாம் ஸ்நானம் செய்வதையும் ராஜா பார்த்து அதிசயித்தான்.". ராஜா யானைமீதிருந்து கீழே இறங்கினான். நடந்து வந்த பிராமணரிடம் ஓடி வந்தான். "சுவாமி நீங்கள் சொன்னது அத்தனையும் அப்பட்ட உண்மை. உங்களால் தானே எனக்கு பண்டரிபுர யாத்ரை இன்று கிடைத்தது" பண்டரிபுரம் ஆலயம் செல்லுமுன் சந்திரபாகா நதியில் பிராமணருடன் ஸ்நானம் செய்தான் ராஜா. உள்ளே விட்டலன் சிரித்துக்கொண்டு காட்சி தந்தான். " என்ன அழகு என்ன திவ்ய ஆபரணங்கள்?" என்ன அலங்காரம்? . விட்டலனை சுற்றி அஷ்ட மகா சித்தி தேவதைகளும் ஒன்றாக கூடி பூஜை செய்கிறார்களே!!. அடடே அதோ என் இஷ்ட தேவதை அம்பிகையும் அவர்களோடு நின்று விட்டலனுக்கு பூஜை பணிவிடை செய்கிறாளே!" என்ன பாக்கியம் எனக்கு!. இதோ நாரதர் தும்புரு எல்லாம் நின்று கானம் பொழிகிறார்களே!" ராஜா திணறினான் ஆனந்தத்தில். பக்தனல்லவா? . விட்டலனை நமஸ்கரித்தான். பிராமணரை இறுக கட்டிக்கொண்டான் அவர் காலில் விழுந்தான். "விட்டலா!, என்னே உன் கருணை? . இந்த ஏழை பிராமணனின் வார்த்தை பொய்க்க கூடாது என்று என்னமாக நான் கற்பனை பண்ணியபடியே தரிசனம் கொடுத்தாய்? . நான் பாக்யவான்" என்று நெஞ்சுக்குள்ளேயே கதறினார் பிராமணர். அவர் காலடியிலேயே ராஜா உறுதி மொழி எடுத்தான். "இனி நீங்களே என் சத்குரு. இந்த பாபிக்கு கண் திறந்தீர்களே. நீங்கள் சொன்னதைவிட பல மடங்கு சொல்லமுடியாத அற்புதங்களை நான் இன்று கண்டு மகிழ்ந்தேன். இந்த பண்டரிபுரத்தை போன்று ஒரு தேவலோக ஸ்தலத்தை வேறெங்கு எவர் காண முடியும்?" என்றான் ராஜா. கடைசியாக ராஜா ஊருக்கு திரும்பு முன் விட்டலனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தான் அது என்ன என்பதை அடுத்த கதையில் பார்ப்போமா? இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #ஸ்ரீ பாண்டுரங்கன் தரிசனம் #பாண்டுரங்கன் 🙏🙏🙏🌹
22 likes
5 shares
தெவிட்டாத விட்டலா - 1 குதிரை வீரன் 🌼🌼🌼🌼🌼🌼 ஊருக்கு கோடியில் ஒரு வனாந்தர பிரதேசத்தில் ஒரு சிறு ஆஸ்ரமம். பெரிய கட்டிடம் என்று கனவு காண வேண்டாம். தொத்தல் குடிசை. மண் தரை. சூரிய பகவான் குடிசையின் ஓலை இடுக்கில் நுழைந்து எங்கும் திட்டு திட்டாக வெளிச்ச வட்டங்களைத் தெளித்திருந்தான். மழை காலத்தில் வருணன் எப்படி அந்த பழைய ஓலைக்குடிசை ஆஸ்ரமத்தின் உள்ளேயே வாசம் இருப்பான் என்று அப்புறம் மழை வரும்போது பார்த்துக் கொள்ளுவோம். இந்த ஆஸ்ரமத்தின் உள்ளே நிறைய தலைகள் ஆனந்த பக்தி பரவசத்தில் ஆடின. சிறிய அந்த கூடத்தில் விட்டலன் இடுப்பில் கையோடு துக்காராமின் அபங்கத்தில் திளைத்து கொண்டிருந்தான். முகலாய சாம்ரஜ்யத்திற்கே சிம்ம சொப்பனமாக இருந்த மராத்தியன் மகாவீரன் சத்ரபதி சிவாஜி மகாராஜாவும் அந்த கூட்டத்தில் தன்னை மறந்து சேர்ந்து பாடிக்கொண்டு விட்டல் நாம சங்கீர்த்தனத்தில் மூழ்கிக் கொண்டிருந்த போது ஒரு ஒற்றன் , மெதுவாக கூட்டத்தில் முண்டி இடித்து முன்னேறி சிவாஜி அருகில் சென்று அவர் காதில் சேதி சொன்னான். ''மகாராஜா, முகலாயர் படை வெளியே வந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இங்கிருப்பது தெரிந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இங்கிருந்து உடனே தப்பிக்கவேண்டும் '' சிவாஜியின் முகத்தில் சிந்தனை தேங்கியது. கவலையோடு துக்காராம் சுவாமிகளை அணுகி " குரு மகராஜ் சுவாமிஜி, இந்த இடத்தின் தூய்மையும் அமைதியும் கெட நான் விரும்பவில்லை. என் எதிரிகள் என்னைக் கொல்ல வந்து கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் இங்கு உபத்ரவமின்றி நான் உடனே புறப்படுகிறேன்." "மகாராஜ், விடோபாவின் அபங்கத்தில் பாதியில் நிறுத்தி வெளியேற கூடாது. முடியும் வரை சற்று காத்திருக்கலாமே." துக்காராமின் அன்பு கட்டளையை முடியாமல் "அவ்வாறே சுவாமிஜி" என்றார் சிவாஜி. விட்டல் அபங்கத்தில் ருசியும், தன்னுயிர் போகும்போது இறைவன் நாமத்திலே போகட்டுமே என்ற தியாக எண்ணம் தான் சிவாஜிக்கு. எந்த எதிர்ப்பும் இல்லாமல் முகலாயர் படையிடம் தன்னை ஒப்புவித்தால் மற்ற பக்தர்களுக்கு எந்த இடையூறும் இருக்காதல்லவா." சிவாஜி மீண்டும் அபங்க பஜனையில் கவலையின்றி ஈடுபட்டார். முகலாய சுல்தான், ஒற்றர்கள் மூலம் சிவாஜி தேஹூ என்ற அந்த கிராமத்தில் இருக்கிறார் என்று அறிந்து அவன் படைத் தலைவன் 2000 ஆயுதம் தாங்கிய படை வீரர்களோடு அந்த ஊரில் நுழைந்தான். வெகுகாலமாக பிடிக்க முடியாத சிவாஜி இந்த ஊரில் இன்று கட்டாயம் உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடி படுவது நிச்சயம். சுல்தானின் துரதிர்ஷ்டம் அவனுக்காக காத்திருந்ததே. ஊர் எல்லையிலேயே தக்க தருணத்தில் சிவாஜியின் குதிரைப்படை சுல்தானின் படையை எதிர் கொண்டது. ஒரு குதிரையின் மேல் சிவாஜி உருவிய வாளுடன் அவர்களை மோதி அழிப்பதை கண்டு அனைத்து படைகளும் சிவாஜியின் குதிரையை மட்டுமே குறி வைத்தன. தனி ஒருவனாக அவர்களை எதிர்ப்பது அறிவின்மை என்று உணர்ந்த சிவாஜி தனது வீரர்களிட மிருந்து விலகி காட்டுப்பாதையில் குதிரையை விரட்டவே அவரை தொடர்ந்து சுல்தானின் படை சென்றது. மின்னல் வேகத்தில் செல்லும் சிவாஜியை எவ்வளவோ முயன்றும் சுல்தான் படை நெருங்க முடியவில்லை. நேரம் நழுவியது. சூரியன் அஸ்தமனம் ஆகும் சமயம். சிவாஜிக்கு மலை எலி என்று பெயர் உண்டே. அந்த வனப் பகுதியின் அனை த்து மலைதொடர்களும் அத்துபடி. அதன் கணவாய்கள், குகைகள் அனைத்தும் அறிந்த சிவாஜி எங்கு சென்றார் எப்படி மாயமாக மறைந்தார் என்று தெரியாமல் ஏமாற்றத்தோடு படை வீரர்கள் திரும்பி சுல்தான் முன் தலையைத் தொங்க போட்டுகொண்டு நிற்க சுல்தானின் படைத்தலைவன் நெருப்பாக கொதித்துக் கொண்டிருந்தான்: "வெட்கமாயில்லை! ச்சே! நீங்கள் எல்லாம் வீரர்களா? 2000 பேர் சிறந்த குதிரை படை வீரர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள், ஒரு தனி மனிதனை பிடிக்க யோக்யதை இல்லை. அவமான சின்னங்களா" என்று திட்டு வாங்கி கொண்டிருக்கும் போது, ஆஸ்ரமத்தில் அபங்கம் முடிந்து அனைவரும் பிரசாதம் பெற்று சந்தோஷமாக அந்த பஜனை கூடத்திலிருந்து வெளியேறினர். சிவாஜி துக்காராம் காலில் விழுந்து வணங்கி எழுந்தபோது ஒரு ஒற்றன் ஓடோடி வந்து ''மகாராஜ் உங்கள் வீரத்தின் முன் முகலாய படை சுருண்டு ஓடி எங்கோ மலைப்பாதையில் சென்று விட்டது. உங்கள் குதிரையை அவர்களால் பிடிக்க முடியவில்லை. எப்படி அதற்குள் இங்கு வந்து விட்டீர்கள். நீங்கள் மின்னலை காட்டிலும் வேகமான தலைவர்” என்று புகழ்ந்தான். சிவாஜி திகைத்தார். ஒரு கணத்தில் சுரீர் என்று உரைத்தது. அவரது இரு கரங்களும் எதிரே சிரித்துக் கொண்டு இடுப்பில் கை கட்டி நின்ற விட்டலனை வணங்கின. கண்களில் கண்ணீர்ப் பெருக்கு நன்றி பெருக்காக வழிந்தது. விட்டலன் சிரித்தான். அவனைத்தான் சிவாஜி ரூபத்தில் குதிரை வீரர்கள் இன்னமும் மலைகளுக் கிடையில் தேடிக் கொண்டிருக்கிறார்களே! கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என்று சும்மாவா நமது முன்னோர்கள் சொன்னார்கள். தனது பக்தன் துக்காராமின் சிஷ்யன் சிவாஜியை விட்டலன் கைவிடுவானா? சிவாஜி தன்னை போற்றி பஜனையில் ஈடுபட்ட நேரம் தான் சிவாஜியாக சென்று போர் புரிந்தவனல்லவா? இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #ஸ்ரீ பாண்டுரங்கன் தரிசனம் #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #பாண்டுரங்கன் 🙏🙏🙏🌹
60 likes
27 shares