
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 23.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
மகாவிஷ்ணுவின் புத்திமதிகளும் கலிநீசனின் மறுப்புரையும்
====================
மாயவரே நீர்கேளும் வாய்த்தசான் றோர்களைத்தான்
ஆயரே நீரும் அபுருவமாய்ச் சொன்னீரே
சாதிகட் கீழான சாணார்கள் தங்களுக்கு
வீரியமா யித்தனையும் விவரித்துச் சொன்னீரே
சாணார்க்கு வைத்த தலைவீத முள்ளஇறை - என்
வாணா ளழிந்திடினும் மாற்றிவைக்கப் போறதில்லை
என்சீவ னுள்ளளவும் ஏற்றசா ணான்தனக்கு
வன்பான ஊழியங்கள் மாற்றிநான் வைப்பதில்லை
நீர்தா னுமிந்த நிலைபேர்ந்து சாணாரின்
ஊரா னதிலே உறைந்திருக்கப் போனாலும்
கேட்பதில்லை சாணாரின் கேள்விநான் கேட்பதில்லை
தாட்பதல்லால் சாணாரின் சங்கடங்கள் கேட்பதில்லை
என்றந்த நீசன் இத்தனையு மாயருடன்
தாவியு ரைக்கச் சாற்றுவா ரச்சுதரும்
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணுவி்ன் புத்திமதிகளையெல்லாம் கேட்ட பின்பும் மகாவிஷ்ணுவிடம் கலியரசன் சொல்லுகிறான்... மாயவா, நீர் சான்றோர்களின் சிறப்புகளைப்பற்றி மிகப் பெருமையாகச் சொன்னீர். சகல சாதிகளிலும் தாழ்ந்த சாதியான அந்த பராரிகளுக்காக விரிவாக விளக்கிப் பரிந்துரைத்தீர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக நான் விதித்துள்ள வரிகளை என் உயிரை இழக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டாலும் மாற்றப் போவதில்லை.
என்னுடைய உயிர் உள்ள காலம்வரை சான்றோர்களுக்கு நான் விதித்த வம்பான ஊழியர்களையும் நிறுத்தல் செய்யப் போவதில்லை. நீர் ஒருவேளை இந்த இடத்தை விட்டு எழுந்து சாணார்கள் கும்பலாக வாழுகின்ற ஊரில் குடியிருக்கப் போய் விட்டாலும் நீர் சொல்லுவதை நான் கேட்கப்போவதில்லை.
.
அவர்களைப் பற்றி கூறுவதை அடியோடு நிறுத்திவிடும். அவர்களுக்கு என்னென்ன வகையிலெல்லாம் கெடுதல் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வேனே அல்லாமல், அவர்களின் துன்பங்களைத் துடைப்பதற்கோ அனுதாபப்படுவதற்கோ நான் ஆளில்லை என்று மகாவிஷ்ணுவிடம் கலியரசன் பதிலளித்தான். அதைக் கேட்ட மகாவிஷ்ணு சொல்லுகிறார்...
.
.
அகிலம்
========
பாவி யுனது பவிசெல்லாந் தான்மாறி
ஆவிக்கு நரகம் ஆவதற்கோ என்னோடே
இந்த மொழியுரைத்தாய் ஏனடா மாநீசா
உன்றனுட ஊருவிட்டு ஓடிப்போ வென்றனையே
ஆனாலுஞ் சாணார்க்கு அடியும்பல ஊழியமும்
மானாந்திர இறையும் மாற்றிவை யென்றுரைத்தார்
அப்போது நீசன் அச்சுதரைத் தான்பார்த்து
வெப்போடு கோப வெகுளியாய்த் தானுரைப்பான்
மாலைகா லைநேரம் மாயவனே உன்றனக்குச்
சீலமுள்ளப் பூசை செய்துவ ருவதற்கு
நித்தமொரு நூறுபொன் நினக்குச் செலவுமுண்டே
அத்தனையுங் கிட்டிடுமோ அவனிறைகள் தான்தடுத்தால்
அல்லாம லென்றனக்கு ஆயிரத்தி நூறுபொன்
எல்லாத் திருப்பதிக்கும் என்றனக்கும் வேணுமல்லோ
என் வேலையாக இருக்கின்ற பேர்களுக்குப்
பொன்பதி னாயிரந்தான் போடணுமே சம்பளங்கள்
இப்பொன்னுக் கெல்லாம் யானெங்கே போவேனடா
அப்பொன்னுக் கெல்லாம் அவனை யடித்தல்லவோ
வேண்டித்தா னித்தனையும் விதானிக்க வேணுமல்லோ
ஆண்டியுன் சொல்லை யான்கேட்க ஞாயமுண்டோ
என்னோடு தானிருந்து இந்தமொழி சொன்னாயே
உன்னோடு யென்றனக்கு உறவென்ன நீபோடா
முன்னெல்லாம் நீதான் உதவியோ யென்றனக்கு
இந்நிலத்தை விட்டு எங்கானா லும்போடா
அதுக்கந்த நீசன் அடடா என்றிடவே
பொதுக்கென்ற கோபமதைப் புந்திதனி லடக்கிச்
சொல்லுவார் பின்னும் சீவனம்போ லுள்ளபுத்தி
.
விளக்கம்
=========
அட பாதகா உன்னுடைய பதவியும், பகட்டும், செல்வமும் சிறப்பும், அதிகாரமும், ஆடம்பரமும் வேரோடும் வேரடி மண்ணோடும் அகன்றுபோய் உன்னுடைய உயிருக்கு நரகம் கிட்டுவதற்காகவோ என்னிடம் இப்படியெல்லாம் பேசுகிறாய்?
.
ஏன்டா மகா நீசனே, என்னை இந்த இடத்தை விட்டு ஓடிவிடு என்று சொல்லிவிட்டாய். ஓடிவிடுகிறேன். ஆனால் சான்றோர்களுக்கு நீ அன்றாடம் கொடுத்து கொண்டிருக்கும் அடிகளையும், அவர்கள் மீது அபாண்டமாகத் திணிக்கப்பட்டிருக்கும் தெண்டமான ஊழியங்களையும் மாதந்தோறும் நீ அவர்களிடம் வசூலித்து வருகின்ற வரிகளையும் இன்றோடு மாற்றிவிடு என்று கலியரசனிடம் மகாவிஷ்ணு கூறினார்.
.
அப்போது மகாவிஷ்ணுவைக் கோபத்தோடு பார்த்துக் கலியரசன், மாயவனே உனக்கு காலையிலும், மாலையிலும் முறையான பூசை செய்வதற்கு தினந்தோறும் எனக்கு நூறு பொன் செலவாகிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி என்னுடைய சமஸ்தானத்திற்குள்ளிருக்கும் எல்லா ஆலயங்களுக்கும் இன்னும் சொல்லப்போனால் என்னுடைய ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகளுக்கும் ஏனைய எல்லா ஊழியர்களுக்கும் மாதம் தவறாமல் பத்தாயிரம் பொன் சம்பளமாகக் கொடுத்தாக வேண்டும்.
.
இத்தனை செலவுகள் எனக்கிருக்கும் நிலையில் சாணார்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வரிகளை நிறுத்தல் செய்யென்று தடுக்கிறாயே, நான் செய்துவரும் மேற்கூறிய செலவுகளுக்கு என்ன செய்வேன்? இதற்கெல்லாம் அவர்களைப் துன்புறுத்தி வசூலித்தால்தானே எனக்குண்டான இந்த செலவினங்களைச் சரிக்கட்ட முடியும்.
.
நீ பத்மநாபனாக என் நிலத்தில் வருவதற்கு முன்பெல்லாம் எனக்கு உதவியாக நீதான் இருந்தாயா? உன்னுடைய உதவியில்லாமல் என்னால் இயங்க முடியாதா? என்னுடைய இந்த இடத்தை விட்டு நீ எங்கு வேண்டுமானாலும் போடா என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் வசை பாடினான் நீசன்.
.
கலியரசன் உரைத்த கடுமையான, காரசாரமான அவமதிப்பான வார்த்தைகள் மாயோனாகிய மகாவிஷ்ணுவின் மனதை மிகவும் புண்படுத்தியது. எனவே கோபம் கொப்பளித்தது. என்றாலும் தன் புத்தியில் அடக்கிக் கொண்டு கலியரசனைக் கருணையோடு பார்த்து அவனுக்கு உயிரோட்டமான பல போதனைகளை மீண்டும் போதிக்கலானார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 22.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
ஸ்ரீபத்ம நாபர் கலியரசனுக்கு உபதேசித்தல் தொடர்ச்சி...
=====================
கற்புள்ள சாணாத்தி கதறியுன்னைச் சாபமிட்டால்
அற்படியும் உன்கோட்டை அழிந்துபொடி யாகுமடா
சாணாத்தி யுன்னைச் சாங்கமுடன் சபித்தால்
வாணாளழியு முன்றன் வம்மிசங்கள் தாமுடியும்
தீத்தழலில் விந்து சிக்கி மிகப்பிறந்த
பார்த்தன் வழிக்குலங்கள் பகைந்துநிந் தித்துண்டால்
கோட்டை யிடியுமடா கோத்திரங்கள் தாமுடியும்
நாட்டை முடிக்குமடா நல்லசா ணாத்திகற்பு
சேனை யழியுமடாவுன் செல்வமது குன்றுமடா
வான மிடிந்துன் வம்மிசத்தைக் கொல்லுமடா
திடம்பெரிய சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால்
கடல்வந்துன் சீமைதனை கட்டா யழிக்குமடா
ஊக்கமுள்ள சான்றோர்க்கு ஊழியங்க ளில்லையென்று
ஆக்கமுடன் பறைதான் அடித்தவனி தானறிய
அல்லாதே போனால் அரசாள மாட்டாய்நீ
.
விளக்கம்
==========
கற்பு நெறியுள்ள காரிகைகள் மனம் நொந்து உனக்கு சாபமிட்டால் உன்னுடைய கோட்டைக் கொத்தளங்களெல்லாம் பொடி பொடியாகத் தகர்ந்துவிடும். உன் வாழ்நாள் குறையும். உன் குலமெல்லாம் பூண்டோடு ஒழியும்.
.
அயோக வனத்திலுள்ள அமிர்த கங்கைக் கரையில் நான் நெருப்புச் சுவாலையாகத் தோன்றியபோது, அதை விந்துவென தன் கருவறையில் ஏந்திய கன்னியர்கள் பெற்றெடுத்த என்னுடைய வழிக்குலங்கள் உன்னைப் பகைத்து உதாசினப் படுத்திவிட்டார்களேயானால் உன்னுடைய கோட்டைகள் இடியும், கொத்தளங்கள் சாயுமடா.
.
உத்தமமான பெண்மணிகளின் கற்பு நன்றிகெட்ட உன் நாட்டை அழிக்கும். சேனை அழியும், செல்வம் பாழாகும். வானம் இடிந்து உன் வம்மிசத்தைக் கொல்லுமடா. சக்தி வாய்ந்த பெண்களின் நித்திய நிந்தனையால் உன் நாட்டை ஆழிப் பேரலைகள் அள்ளிக் கொண்டு போகுமடா. எனவே இனிமேல் ஊக்கமும் உயர்வும் ஒருங்கிணைந்த சான்றோர்களுக்கு ஏற்கெனவே இருந்து வந்த ஊழியங்கள் யாவையும் ரத்து செய்து விட்டேன் என்று உலகமறியும்படியாக உடனே பறைசாற்று, இல்லையேல் இனி நீ அரசாளமாட்டாய்.
.
.
அகிலம்
========
நல்லான சான்றோர்க்கு நாட்டு மிறைதவிர்த்து
இறைகூலி தானம் இட்டுக் கொடுத்தவர்க்குத்
தரைமீது நன்றாய்த் தழைத்திருக்க வைக்காட்டால்
குஞ்சரமு முன்னுடைய கொத்தளமுந் தானிடித்து
வஞ்சகமா யுன்றனக்கு வலியகர்மஞ் சுற்றுமடா
கர்ம வியாதிகளாய்க் கண்டமா லையுடனே
வர்மம்வந்து சிக்குமடா மாநீசா நீகேளு
தெய்வச் சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால்
பொய்வகையால் கர்ம போகத்தால் நீமடிவாய்
என்றுநா ராயணரும் ஏற்றபுத்தி சொல்லிடவே
அன்றுஅந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான்
.
விளக்கம்
==========
மேன் மக்களான சான்றோர்களுக்கு, கலியரசனாகிய நீ இதுநாள் வரையில் விதித்து வசூலித்த வரிகளையெல்லாம் நிறுத்தல் செய்வதோடு அவர் உனக்கும் உன் குலத்தோருக்கும், உன்னுடைய அரசாங்க அதிகாரிகளுக்கும் கண்டிப்பாகச் செய்து தான் ஆகவேண்டும் என்பன போன்ற ஊழிய வேலைகளையும் இத்தோடு முடித்துவிடு.
.
சான்றோர்கள் இந்தப் பூமியில் பெருமையோடு வாழ வேண்டும். அப்படி அவர்களை வாழ விடாவிட்டால், உன்னுடைய யானைப் படைகள் முதலான கொத்தளங்கள் யாவும் இடிந்து விடும்.
.
அதுமட்டுமல்ல காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உன்னுடைய கர்மவினைகளெல்லாம் வஞ்சகமாய் உன்னை வந்து சூழ்ந்துகொள்ளும். கர்மவியாதிகளான கண்ட மாலையுடன் வறுமையும் வந்துன்னை முத்தமிடும்.
.
பொல்லாத கலிநீசா நான் பேசுவதை இன்னும் கேளு, பூலோகத்தில் பிறந்திருக்கும் தேய்வக்குலப் பெண்கள் வேதனையோடும், வெம்மிய குமுறலோடும் அன்றாடம் உன்னை சபித்துச் சாபமிட்டுக் கொண்டேயிருந்தால், நீ திருட்டுத்தனமான செய்கைகளினாலும், முன் ஜென்ம ஊழ்வினைப் பயனாக ஏற்படுகின்ற அகங்காரம், மமகாரங்களால் உண்டாகும் கர்ம விகாரத்தினால் ஸ்ரீபோகப் புணர்ச்சி உனக்குத் தருகின்ற நோயினால் நீ சாவாய் என்று மாயோனாகிய மகாவிஷ்ணு, அந்தக் கலியரசனுக்கு ஏற்ற பல புத்திமதிகளையும் சொல்லி, மீறினால் என்ன நடக்கும் என்பதையும் எடுத்துரைத்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர்
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 21.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
ஸ்ரீபத்ம நாபர் கலியரசனுக்கு உபதேசித்தல்
=====================
பாலரியச் சான்றோர் படுந்துயரங் கண்டிருந்து
மாலதிகக் கோபமுடன் மாநீ சனைப்பார்த்து
கேளடா சூத்திராவுன் கிளையோடே மாளுதற்கு
வாளடா சான்றோரை வம்புசெய்து வாறதுதான்
உன்றனக்கு முன்கிளைகள் உள்ளோர்க்கும் நாள்தோறும்
என்றனக்கும் நன்மை இன்பமுடன் செய்துவரும்
சாணாரை நீயும் தடிமுறண்டு செய்கிறது
வாணாள்க் கிடறு வருமடா மாநீசா
.
விளக்கம்
=========
இப்படியெல்லாம் ஆண்மைமிகு சான்றோர்கள் அவதிப் படுவதை உணர்ந்த மகாவிஷ்ணு ஆற்றவொண்ணாக் கோபம் கொண்டார். அந்த கோபத்தின் வெளிப்படாக திருவாங்கூர் மன்னனாகிய கலியரசனுக்குக் காட்சி கொடுத்த மகாவிஷ்ணு, அந்த மன்னனைப் பார்த்து சூதுமதித் தலைவா, நான் இங்கே சொல்லுவதைக் கவனமாகக் கேள்.
.
நீ சான்றோர்களுக்கு சதாகாலமும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறாய். அவர்களைச் சாமானியர்கள் என்று எண்ணாதே. அவர்களுக்கு நீ செய்து கொண்டிருக்கும் கெடுதல்களே நீ என் குலத்தோடு அழிவதற்கு ஆயுதமாக அமையும்.
.
உனக்கும், உன்னுடைய மூதாதையர்களுக்கும் எனக்கும் தினந்தோறும் சலிப்பே இல்லாமல் ஊழியங்கள் செய்து கொண்டிருக்கும் சான்றோர்களுக்கு நீ தீங்கு செய்வதால் உன்னுடைய இனத்தோருக்கும் உனக்கும் வாழ்நாளுக்கு பங்கம் உண்டாகும்.
.
.
அகிலம்
========
முன்னுகத்தில் கேளு முகமைந்து கொண்டோனும்
உன்னோடும் பிறவி ஒருயேழு உண்டுமடா
ஒண்ணாம் யுகத்துக்கு உற்ற குறோணியடா
மண்ணெல்லாங் குறோணி வந்தெடுத்து விழுங்குகையில்
பூதக் குருமுனிவன் புத்திசொன்னா னவ்வுகத்தில்
நீதமுடன் கேளாமல் நீசனவன் மாண்டான்காண்
.
விளக்கம்
=========
கலியரசா இதற்கு முன்புள்ள யுகங்களிலெல்லாம் நீ எவ்வாறு பிறந்தாய் யார் யார் உனக்குப் புத்தி போதித்தார்கள், நீ எப்படி மாண்டாய் என்ற விவரங்ளை வரிசையாகக் கூறுகிறேன் கேள்.
.
உனக்கு இப்பிறவியோடு ஏழு பிறவிகளை ஐமுகத்தவனாகிய சிவபெருமான் அருளியிருக்கிறார்.
.
முதல் யுகமாகிய நீடிய யுகத்தில் நீ குறோணி என்னும் கொடிய அசுரனாகப் பிறந்தாய். அப்போது இந்த மண்ணகத்தையே உன்னகமாக்கத் துணிந்தாய். அப்போது பூதக் குரு முனிவர் அங்கு வந்து உனக்குப் புத்தி சொன்னார். அந்நீதிப் போதனையை நீசா நீ நிந்தித்ததால் அழிந்தாய்.
.
அகிலம்
=========
அடுத்த யுகமதிலே அக்குண்டோம சாலினுக்குக்
கடுத்தமுள்ள கோவிரிஷி கடியபுத்தி சொன்னான்காண்
கேளா தேமாண்டான் கிளையோடே யந்நீசன்
.
விளக்கம்
==========
இரண்டாம் யுகமான சதிர்யுகத்தில் குண்டோமசாலி என்னும் கொடிய அரக்கனாகப் பிறந்தாய். அப்போது கோவிரிஷி என்பவர் உனக்கு மிகவும் உயர்வான உபதேசங்களைப் போதித்தார். அந்த உபதேசங்களை உதாசினப்படுத்தியதால் அவ்வுகத்தில் செத்தாய்.
.
.
அகிலம்
========
பாழாகிப் பின்னும் பதிந்தமூன் றாம்யுகத்தில்
மல்லோசி வாகனென்று வந்த இருவருக்கும்
நல்லபெல ரோமரிஷி நாடிமிகப் புத்திசொன்னான்
கேளாதே மாண்டான் கிரேதா யுகந்தனிலே
.
விளக்கம்
==========
மூன்றாம் யுகமான நெடியயுகத்தில் தில்லை மல்லாலன், மல்லோசி வாகனன் ஆகிய இரண்டு அரக்கர்களாகப் பிறந்தாய். அப்போது உனக்கு ரோமரிஷி வந்து பல புத்திமதிகளைப் போதித்தார். அந்த புத்திமதிகளைத் தாழ்மையுடன் கேளாததினால் உன் குலத்தோடு நீயும் ஒழிந்தாய்.
.
.
அகிலம்
========
தாழாத சூரபற்பன் தம்பி யவன்றனக்கும்
வீரவா குதேவர் விரைந்துமிகப் புத்திசொன்னார்
தாராமல் சூரன் தன்கிளையோ டேமாண்டான்
அவ்வுகத்தில் வந்த அசுர னிரணியற்குச்
செவ்வுகந்த சிங்கம் செப்பினதே புத்தியது
சற்றுமவன் கேளாமல் தான்மாண்டா னவ்வசுரன்
.
விளக்கம்
==========
நான்காம் யுகமான திரேதாயுகத்தில் சூரபத்மன், சிங்கமுகா சூரன் என்று இரண்டு பெரும் அசுரர்களாகப் பிறந்தாய். அப்போது வீரவாகு தேவர் வந்து அறிவுரை கூறினார். அந்த அறிவுரைகளை அவமதித்து ஆணவத்தோடு இறந்தாய். அதே யுகத்தில் மீண்டும் இரணியன் என்ற அரக்கனாகப் பிறந்தாய். அப்போது உனக்கு மகனாகப் பிறந்த செவ்வுகந்த சிங்கமாகிய பிரகலாதன் உனக்குப் புத்தி சொன்னான். அந்த நல்லுரைகளுக்கு நீ செவி கொடுக்காமல் செத்தாய்.
.
.
அகிலம்
========
பத்தத் தலையான பார அரக்கனுக்குத்
தம்பிவி பீஷணனும் தான்சொன்னான் புத்தியது
வம்பிலவன் கேளாமல் மாண்டான் கிளையோடே
.
விளக்கம்
==========
ஐந்தாம் யுகமான கிரேதாயுகத்தில் பத்துத் தலைகளையுடைய இராவணன் என்னும் அரக்கனாகப் பிறந்தாய். அப்போது உனக்குத் தம்பியாகப் பிறந்த விபீசணன் உனக்கு வேண்டிய அறிவுரைகளையெல்லாம் எடுத்துரைத்தான். தம்பியின் சொல் கேளாமல் வம்பாக மாண்டாய்.
.
.
அகிலம்
========
பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தான் மறுயுகத்தில்
மன்னுகந்த பீஷ்மரும் வாழ்த்திமிகப் புத்திசொன்னார்
கேளாமல் மாண்டான் கேடுகெட்ட மாபாவி
.
விளக்கம்
==========
ஆறாம் யுகமாகிய துவரபர யுகத்தில் துரியோதனனாகப் பிறந்தாய். அப்போது பீஷ்மர் உனக்கு வாழ வழிகாட்டி வாழ்த்துரைத்து வகைவகையாய்ப் புத்தி புகட்டினார். அதையும் கேளாமல் உன் அகங்காரத்தால் மடிந்தாய்.
.
.
அகிலம்
========
தாழம லுன்றனக்கு தற்சொரூபத்தோ டிருந்து
நாரா யணராய் நானுதித்து உன்றனக்குச்
சீரான புத்தி செப்புகிறேன் கேளடவா
உன்கிளையும் நீயும் உற்றார்பெற் றார்களுடன்
தன்கிளையோ டெநீயும் தரணியர சாளவென்றால்
சாதி தனிலுயர்ந்த சான்றோ ரவர்களுக்கு
நீதி யுடனிறைகள் இல்லாமல் நீக்கிவைத்துக்
காளி வளர்த்தெடுத்த கண்மணிக ளானோர்க்கு
ஊழியமுந் தவிருநீ உலகாள வேணுமென்றால்
அல்லாமல் சான்றோரை அன்னீத மாயடித்தால்
பொல்லாத நீசா புழுக்குழிக் குள்ளாவாய்
.
விளக்கம்
==========
இவ்வாறு இதற்குமுன்பு ஆறு யுகங்களில் உன்னுடைய ஆணவத்தினாலும், அடாவடித் தனத்தினாலும் உன் மரணத்தை நீயே வரவழைத்துக் கொண்டாய். எனவே, ஏழாம் யுகமான இந்தக் கலியுகத்தில் கொஞ்சங்கூட நெஞ்சில் பயமோ, பணிவோ இல்லாமல் பஞ்சமா பாதகங்களைப் புரிந்து கொண்டிருக்கும் உனக்கு, நானே நேரடியாக, என்னுடைய இயல்பான ரூபத்தில் நாராயணனாகவே உன் முன்னால் தோன்றி உனக்கு நன்மை பயக்கத்தக்க ஒழுங்கான புத்திமதிகளைச் சொல்லுகிறேன். இனியாவது என் சொல்லை அனுசரித்து, திருந்தி நல்லரசனாக இருந்து நாட்டை ஆளு.
.
உன்னுடைய குலத்தோரும், நீயும், உன்னுடைய உறவினர்களும், உன்னைப் பெற்றவர்களும் இந்த மண்ணுலகில் வாழ வேண்டுமானால், மனுக் குலத்தில் உயர் பிறப்பாகிய சான்றோர்களிடம் நியாயமாக நடந்துகொள். அவர்களின் மீது வேண்டுமென்றே நீ விபரீதமாகத் திணித்திருக்கும் வரிச் சுமையை நீக்கிவிடு.
நீ இந்த உலகத்தில் வாழவேண்டுமானால் சான்றோர்களை கீழான தொழில்களைச் செய்ய ஏவுகிறாயே அதையும் அடியோடு விட்டுவிடு. இதுமட்டுமல்லாமல் சான்றோர்களை நீ அநியாயமாக அடித்தால் பொல்லாதவனே உனக்கும் புழுக்குழிதான் கிட்டுமடா.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008}
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 20.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
பண்டுநீ சன்பித்த படுசாபந் தன்னாலே
விண்டுரையா வண்ணம் விசையடக்கித் தாழ்ந்திருந்தார்
இப்படியே ஊழியங்கள் எண்ணலக்கில் லாதபடி
அப்படியே சான்றோர் அவனூழி யங்கள்செய்து
அல்லாமல் நீசன் ஆர்க்கமுள்ள சான்றோர்க்கு
வல்லாண்மை யான வரிசை யிறைகள்வைத்துக்
கரிவிறை பாட்டஇறை கண்டபாட் டஇறையும்
தரிசிறை காணாத தரைப்பாட் டஇறையும்
ஆமிசங்க ளில்லாத அன்னீத வம்பிறையும்
நேமித்து வைத்து நிலையுள்ளச் சான்றோரை
அடித்துக் கைகெட்டி ஆண்பெண் வரைக்குமிட்டு
இடித்தடைத்துப் பட்டினிகள் இரவுபகல் போட்டுப்
பெண்ணா ணுடைய பெருமை மிகக்குலைத்து
மண்ணாண்ட சான்றோரை வரம்பழித்து மாநீசன்
சாணாரைக் கண்ணில் தான்காண வொட்டாமல்
வீணாட்டஞ் செய்து விரட்டி யடித்துமிகப்
பம்பழித்துச் சாணாரைப் பலசாதி யின்கீழாய்த்
தும்பழித்து வேலை தூறுபடக் கொண்டனனே
பறையன் புலையன் பகல்வரான் போகுமிடம்
மறையொத்த சான்றோர் வந்தால் பிழையெனவே
முக்காலி கட்டி முதுகி லடித்துமிக
மிக்கான பொன்பணங்கள் வேண்டினான் பிழையெனவே
சாணான்தன் வஸ்து தரணி தனக்குயிராம்
ஆனாலுஞ் சான்றோர்க்கு அடியொருநாள் மாறாது
.
விளக்கம்
==========
முன்னாளில் ஆண்ட நீசன் சபித்த கொடூரமா சாபத்தினால், விளக்கிச் சொல்ல முடியாத அளவில் பலதரப்பட்ட கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருந்த சான்றோர்கள் தம்முடைய விவேகத்தையும், வீரத்தையும் ஏனைய எல்லா சக்திகளையும் அட்கிவைத்த வண்ணம், பொறுமையாக இருந்து நீசனிடும் வேலைகளையெல்லாம் ஊழியமாகச் செய்து கொடுத்தனர்.
.
நடுத்தர வசதி வாய்ப்போடும், வறுமைக்கோட்டிற்குக் கீழேயும் வாழுகின்ற சான்றோர் மக்களை இப்படியெல்லாம் வாட்டி வதைத்தனர் கலி நீசக் குலத்தோர். அதே சமயம் கலிநீச மன்னனோ அன்றைய நாளில் வசதி வாய்ப்புகளோடு சீமானாக வாழ்ந்து கொண்டிருந்த சான்றோர்களுக்கெல்லாம் வலுக் கட்டாயமாக வரி விதித்தான்.
.
அவர்கள் வளர்க்கும் குதிரைகளுக்கு அதை வாங்கும் விலையைவிட அதிக வரி. தோட்டத்தில் விளையும் தேங்காய் மாங்காய் போன்ற பொருள்களை வியாபாரிகளுக்குப் பாட்டம் கொடுத்து வருகின்ற வருமானத்தில் பாதி தொகையை வரியாகச் செலுத்த வேண்டும்.
.
விளைந்தவற்றைப் பாட்டம் கொடுக்காதிருந்தால் அதற்கு மதிப்பீடு செய்து, அந்த மதிப்பீட்டில் முக்கால் பங்கு தொகையை வரியாகச் செலுத்த வேண்டும். இதற்குக் கண்டபாட்ட வரி என்று பெயர்.
.
வருமானமே வராத தரிசு நிலத்திற்கும் வரி, சான்றோர்கள் தம் நிலத்தை விவசாயம் செய்ய யாருக்கேனும் கொடுத்திருந்தால் அதற்கு வருமானத்தில் கால் பகுதியை வரியாகச் செலுத்த வேண்டும் இந்த வரிக்கு தரைப் பாட்ட வரி என்று பெயர்.
.
இப்படி எந்த வித நியாயமும் இல்லாமல் தட்டிக் கேட்பார் எவருமில்லை என்ற வில்லஙகமான துணிவோடு ஏறுக்கு மாறான வரிகளையெல்லாம் விதித்தான். இந்த வரிகள் பற்றிய விளக்கங்களையும் விவரத்தையும் கேட்கும் சான்றோரை ஆண் பெண் என்று பாராமல் அடித்து, இரவும் பகலும் உணவு கொடுக்காமல் பட்டினிப் போட்டு அவர்களின் மதிப்பையும், மரியாதையையும், பெருமையையும் சீர்குலைத்தான்.
.
நாடாண்ட சான்றோர்கள் நயவஞ்சகனின் ஆட்சியினால் கடுந்துயரப்பட்டனர் என்றாலும் அவர்கள் தம் கண்களில் பட்டாலே பாவம் தொட்டாலே தீட்டு என்ற நிலையினை உருவாக்கி விரட்டி அடித்தனர். எல்லாக் குலத்தை விடவும் சான்றோர்கள் தாழ்மையுற்றவர்களைப் போன்று துன்புறுத்தப்பட்டனர்.
.
கலிநீசக் குலத்தோரால் தாழ்ந்த சாதி, அடிமை இனம், பகலில் ஊருக்குள் உலவக்கூடாத பிறவி என ஒதுக்கப்பட்டவர்களெல்லாம் நடமாடும் இடத்தில் கூட வேதங்களுக்கு நிகரான சான்றோர்கள் சென்றால் குற்றம் என்று கூறி முக்காலிக்குள் கட்டி வைத்து முதுகில் அடித்து, அதற்கு அபராதமாக பொன்னையும் பணத்தையும் மிக அதிகமாக வசூலித்தனர். இப்படி எத்தனையோ வழிகளில் சான்றோர்களைத் துன்புறுத்தி வாங்கிய பணத்தாலும் பொருளாலும் உலகில் கலிநீசக் குலங்கள் வயிறு வளர்த்து வாழ்ந்தபோதிலும் அந்த நீசகுலத்தோரால் சான்றோர்களுக்கு அடி மட்டுமே ஓயவேயில்லை.
.
.
அகிலம்
========
கோவில் சிவாலயங்கள் கூடங்கள்சிங் காசனங்கள்
நாவுலகுங் கள்ளாய் நாடி யிருந்தாலும்
சாணான்கள் ளேறியெனச் சண்டாள நீசனெல்லாம்
வீணாகச் சாணாரை விரட்டி யடிப்பான்காண்
சாணுடம்பு கொண்டு தரணிமிக ஆண்டாலும்
வீணுடம்பு கொண்டோர் விரித்துரைத் தோராமல்
சாணான்சா ணானெனவே சண்டாள நீசனெல்லாம்
கோணா துளத்தோரைக் கோட்டிசெய் தேயடித்தான்
.
விளக்கம்
==========
கோயில்கள் முதலாக மாட மாளிகை, கூட கோபுரம் நாட்டை ஆளுகின்ற அரவசைகள் என்று உலகில் எந்த நிலையில் வாழ்பவர்களானாலும் பதனீரையும், அதன் மூலமாகும் கள்ளையும் குடித்துக் குடித்தே கொண்டாடிக்கொண்டிருக்கும் நீசர்கள் அந்த பதனீரைப் பக்குவமாகப் பனையிலிருந்து இறக்குகின்ற சான்றோர்களை மட்டும் களளேறி என்று பழித்துக் கூறினர். பனையேறி என விரட்டியடித்தார்கள்.
.
உலகில் மனிதனாகப் பிறவி எடுத்தவர்களெல்லாம் எண் சாண் உடம்புடையோராகவே இருந்தபோதிலும், வீணர்களாகிய அந்த மாமிசப் பிண்டங்கள் தம்முடைய உடல் கூறு தத்துவத்தையும், சாணான் என்ற சொல் மனித பிறவி அனைத்தையும் குறிக்கும் வார்த்தையல்லவா என்பதைப் பற்றியும் சற்று கூட பகுத்து உணர்ந்து பாராமல், சான்றோர்களைக் கண்டால் மட்டுமே அவர்களை சாணான் சாணான் என்று வசையாகப் பேசி, நீதி நெறிமுறைகளிலிருந்து சற்றும் வளைந்து கொடுக்காத சான்றோர்களை அந்த நீசர்கள் பரிகசித்தே அடித்தனர்.
.
.
அகிலம்
========
தரணிதனில் வந்து தலையெடுத்த யாவருக்கும்
மரணம் வரைக்கும் வந்துதித்த அன்றுமுதல்
சேனைமிக வூட்டுதற்கும் தெய்வச்சான் றோரமிர்தம்
ஈனம தில்லாமல் யாபேர்க்கு மீந்தாலும்
பொல்லாத நீசன் பொறுதியுள்ளச் சான்றோரை
கல்லாதான் கூடிக் காணவிடா தேயடித்தான்
நீசன் குடியிருக்க நிறைந்தமணி மேடையெல்லாம்
வாசமுடன் சான்றோர் வஸ்துவல்லா லாகாது
அப்படியே சான்றோர் அவருதவி செய்திடினும்
எப்படியுஞ் சான்றோர் இடுக்கமது மாறவில்லை
எவரெவர்க்குஞ் சான்றோர் ஈந்துமிக வந்தாலும்
அவர்களுக்கு நீசன் அனுப்போ லுறவுமில்லை
.
விளக்கம்
==========
உலகில் குழைந்தைகள் பிறந்தவுடன் முதல் உணவாகச் சேனை ஊட்டுவதற்கும், அவர்கள் இறப்பதுவரை அருந்துவதற்கும், விண்ணவர்களாகயிருந்து மண்ணகத்தில் பிறந்த சான்றோர்கள் பூலோகச் சொரபானமாகிய பதனீர் என்னும் அமுதத்தை அந்த நீச குலத்தோருக்குக் கொடுத்தாலும் கற்றறிவோ இல்லாத கலிக் குலத்தோர் பொறுமையின் புகலிடமான சான்றோர்களைத் தம் கண்களில் காணவிடாதபடி கதறக் கதற அடித்தார்கள்.
.
அந்த நீசர்கள் குடியிருக்கும் வீடுகளை உருவாக்குவதற்கு, சான்றோர்களின் பொருட்கள் இல்லாமல் முடியாது. எந்த நிலையிலும் சான்றோர்களின் உதவி இல்லாமல் வாழ வழியற்றி அந்த நீசக் குலத்தோரின் நிலையுணர்ந்த சான்றோர்கள், நீசர்கள் செய்யும் அட்டூழியங்களைச் சகித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அந்த நீசர்கள் கேட்கும் பொருளையெல்லாம் கொடுத்தாலும் சான்றோர்களின் சங்கடங்கள் மாற்றப்படுவதாக இல்லை.
.
இப்படி எந்த நிலையில், எந்த அளவில் யாருக்குச் சான்றோர்கள் உதவினாலும், கொடுத்தாலும் அந்த நீசர்களுக்கும் சான்றோர்களுக்கும் எள் முனை அளவுகூட எவ்வகை உறவுமே இல்லை.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 19.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
இப்படியே சான்றோர் இவர்தேடுந் தேட்டையெல்லாம்
அப்படியே நீசன் அவன்பறித்துத் தின்றாலும்
ஞாயமுள்ளச் சான்றோர் நாமமது கேட்டதுண்டால்
நீசக்குலத் தோர்விரட்டி நெடுந்தூரங் கொண்டடிப்பார்
பின்னுமந்தச் சான்றோரைப் பொல்லாதான் கொள்ளுகின்ற
அன்னீத மெல்லாம் அருளக்கே ளாயிளையே
உப்பா லுவரா உபய மெடுத்தவரை
ஒப்பமுள்ள சான்றோரை ஊழியங்கள் கொண்டடிப்பான்
குளம்வெட்டச் சொல்லிக் கூலி கொடுக்காமல்
களம்பெரிய சான்றோரைக் கைக்குட்டை போட்டடிப்பான்
சாணார்கள் தம்பனையில் தான்முளைத்த ஓலையெல்லாம்
வீணாக நீசன் வெட்டித்தா என்றடிப்பான்
வெட்டிக் கொடுத்தாலும் வெற்றியுள்ளச் சான்றோரைக்
கட்டிக் சுமவெனவே கைக்குட்டை போட்டடித்து
சுமந்து போனாலும் தொகையெண் ணமுங்கேட்டுப்
பவந்து மொழிபேசிப் பணமுமிகக் கேட்டடிப்பான்
ஐயையோ சான்றோரை அந்நீசன் செய்ததெல்லாம்
வையமது கொள்ளாதே மாதேவுன் னோடுரைத்தால்
.
விளக்கம்
==========
நீண்ட காலமாக சான்றோர்களின் சம்பாத்தியத்தை அந்த நீசக் குலத்தோர் உண்டு கொணடிருந்தும் நியாயம் நீதிகளில் நிலை புரளாத சான்றோர்களின் பெயரைக் கேட்டாலே அந்த நீச குலதோர்கள் ஓட அடித்து விரட்டினார்கள்.
.
இதுமட்டுமல்ல, இன்னும் அந்தச் சான்றோர் மக்களை பொல்லாத நீசக் குலங்கள் படுத்திய பாட்டையெல்லாம் இங்கே எடுத்துரைக்கிறேன். அதையும் கேள். உப்பு மூட்டைகளை ஊழியமாக சுமக்கச்செய்து அதற்கு இதுதான் கூலி என்று சவுக்கால் சான்றோரை அடித்து அனுப்பினார்கள். குளம் குட்டைகளை வெட்டச் சொல்லி, வெட்டி முடித்ததும் கூலி கொடுக்காமல் கூலிக்குப் பதிலாக சவுக்கால் அடித்தனர்.
.
சான்றோர்களி்ன் நிலங்களில் நிற்கும் பனைமரத்திலுள்ள ஓலைகளையெல்லாம் முளைக்க முளைக்க வெட்டித் தர வேண்டும் என்று கேட்டனர். அப்படியே வெட்டிக் கொடுத்தால் அதை தலைச் சுமையாக எங்கள் வீட்டிற்கு கொண்டுவா என்று அடித்தனர். அவர்களின் உத்தரவுப்படியே சுமந்து கொண்டு கொடுத்தாலும் அந்த ஓலைகளை எண்ணிப் போடு என்றடித்தனர். எண்ணிப்போட்டால் என்னமோ அவனுடைய தோட்டத்திலிருந்த ஓலையைச் சான்றோர்கள் திருடிவிட்டது போன்ற பாவனையில், தொகை சேரவில்லை, குறைந்த ஓலைக்கு உண்டான பணத்தை தந்துவிட்டுப்போ என்று தரங்கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்தனர்.
.
ஐயகோ அந்த அடாவடித்தனமான அந்தப் பாதகர்கள் சான்றோர்களுக்குச் செய்த கொடுமைகளை வரிசைப்படுத்திச் சொல்வதானால் இந்த வையகத்தில் நம்முடைய வாழ்நாள் பற்றாது.
.
அகிலம்
========
ஈசருக்கும் வேதா இவர்களுக்குந் தேவாதி
வாச முடன்பதறி வணங்கிநின்ற வேலையைப்போல்
நேசமுள்ள சான்றோர் நெடுநாளு மேபதறி
நீசனுக்குச் செய்த நிசவேலை யொக்குமல்லோ
.
விளக்கம்
==========
சிவபெருமானுக்கும், பிரம்மதேவருக்கும் தேவ லோகத்தவர்களெல்லாம் எவ்வண்ணமாக பயபக்தியோடு பணிவிடை செய்வார்களோ, பணிந்து நடப்பார்களோ, அதற்குச் சமமாக ஆண்டாண்டு காலமாக அந்த நீசக் குலத்தோருக்கு இறைவன் மீது பக்தியும், தேசத்தின்பேரில் நேசமும், கொண்ட சான்றோர்கள் பணிவிடை பலபுரிந்து பயந்து, பதுங்கி பணிந்து நடந்தார்கள்.
.
.
அகிலம்
========
ஈப்புலிபோல் நீசன் ஈயைப்போ லேசான்றோர்
நாய்ப்புலிபோல் நீசன் நல்லாடு போல்சான்றோர்
கீரியைப்போல் நீசன் கிராணம்போ லேசான்றோர்
பாரியைப்போல் நீசன் படுத்தினான் சான்றோரை
.
விளக்கம்
==========
கோபத்தால் உறுமும் வாய் பிளந்த புலியைப் போன்று நீச குலத்தோரும், அந்த வாய்க்குள் அகப்பட்ட ஈக்களைப்போல் சான்றோரும், வேட்டைக்கு விரைகின்ற நாயைப் போலும், உணவுக்காக உயிர்ப்பலி கொள்ளும் புலியைப் போன்றும், செயல்பட்ட கலிநீசகுலத்தோரின் மத்தியில், ஆடு பதுங்குவதைப் போல் சான்றோர்கள் பம்மினார்கள். மனதால் விம்மினார்கள். கீரியைப்போல் நீச குலத்தோரும், கீரியைக் கண்ட சர்ப்பம் நிலை குலைவதைப்போல் சான்றோர்கள் நிலை குலைந்தனர். நிம்மதி இழந்தனர். தாலி கட்டிய மனைவியை தரங்கெட்ட தறுதலைக் கணவர்கள் அடிமையென நினைத்து அராஜகம்புரிவதைப் போல் சான்றோர்களை அந்த நீசக் குலத்தோர் கசக்கிப் பிழிந்து அவர்களின் வியர்வையில் குளித்தனர். இரத்தத்தை மூட்டைப் பூச்சிபோல் உறுஞ்சினர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 18.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
கலிநீசனின் காட்டாட்சி.
=========================
வாயக் கலிநீசன் வையகத்தை யாண்டிருக்க
நீசனிட்ட சாபம் நீதிச்சான் றோர்களுக்கு
மாயவினை போலே வளைந்ததுகா ணன்போரே
தம்பி தமையனுக்குச் சத்துருப்போல் தானாகி
வம்புக்குங் கோளு மாநீச னோடுரைத்து
அடிக்கவே கைக்கூலி அவனுக்கே தான்கொடுத்து
முடிக்கும் வரையும் முறைமுறைக்கோள் சொல்லிடுவான்
இப்படியே சான்றோர் இவர்கள்நிரப் பில்லாமல்
அப்படியே நீசனுட அன்னீதத்தால் வேறாய்
பிரிந்துதான் சான்றோர் பெருத்த கிலேசமுற்றார்
அறிந்துதான் நீசர் அவர்கள்தொக் காச்செனவே
தாலிக்கு ஆயம் சருகு முதலாயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்காயம்
தாலம தேறும் சான்றோ ருக்காயம்
தூலமுட னரிவாள் தூருவட் டிக்காயம்
தாலமதுக் காயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிகஇறை வைத்தனனே
.
விளக்கம்
=========
சான்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னலை எப்படி துடைப்பது என்ற சிந்தனையில் மகாவிஷ்ணு ஈடுபட்டிருக்கும் அந்தக் காலகட்டத்தில் கலியரசன் இட்ட சாபம், சான்றோர் குல மக்களை மாய வினைபோல் வளைந்து கொண்டது.
.
கலிநீசக் குலங்களெல்லாம், சான்றோர்களைப் பிரித்தாளம் சூழ்ச்சியை கையாளத் தொடங்கி வெற்றியும் கண்டனர். எனவே சான்றோர்களுக்குள் இருந்த ஒற்றுமை சர்வ சாதாரணமாகச் சீர்குலைந்தது.
.
தன் கூடிப்பிறந்த அண்ணனுக்குத் தம்பி சத்துருவாகச் சமைந்தான். சகோதரர்களுக்குள் சண்டையை மூட்டி விட்டு விட்டு, அவர்களைச் சமாதானப்படுத்தும் சமர்த்தர்களைப் போல் பாவனை செய்த கலிநீசர்கள் அண்ணன், தம்பி இருவரில் ஒருவரை இனிமேல் எழும்பி நடக்கவே முடியாத அளவில் அடித்துத் தம் பழியுணர்வைத் தீர்த்துக் கொண்டனர்.
.
கலிநீசக் குலத்தோரின் கபட நாடகத்தை, குடும்பத்திற்குள் ஊடுருவி உருக்குலைக்கும் ஊதாரித் தனத்தை, கோளுரைத்துக் கோளுரைத்தே பகைமூட்டும் பாதகச் செயலை கள்ளங் கபடமில்லாத சான்றோர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி கலிநீசக் குலத்தோர் பாசாங்கு பல செய்தார்கள். அண்ணனை அடிப்பதற்கு தம்பியிடமும், தம்பியை அடிப்பதற்கு அண்ணனிடமும் கூலி வாங்கினர்.
.
இவ்வண்ணமாகத் தம்முடைய ஒற்றுமையைப் பற்றி சான்றோர்கள் சிந்திக்கவே முடியாத வண்ணம் கலிநீசர்களுடைய அநியாய நீதிகளை அறங்கேற்றினர். ஆகவே, சான்றோர்களின் ஒற்றுமை சிதறடிக்கப்பட்டது. எனவே, சான்றோர்கள் தனித் தனியாகப் பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள்.
.
இந்நிலை சான்றோர்களை துன்புறுத்த நினைத்தத் துரோகக் கும்பலுக்கு துணையாக அமைந்தது. பழி வாங்க துடித்த பாதகர்களுக்குப் பரிசாக இருந்தது. யார் எவ்வகையில் இன்னல் விளைவித்தாலும், இடையூறு செய்தாலும் ஏனென்று கேட்க நாதியற்ற நடைபிணம் போலாக்கப்பட்ட சான்றோரை, நாளுக்கு நாளாகத் துன்பங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டன.
.
சான்றோர்களின் பிரிவினையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட நீசக் குலத்தோர் சான்றோர்கள் மீது பலதரப்பட்ட வரிகளை விதித்தனர். மங்கையின் கழுத்தில் மணவாளன் சூட்டும் தாலிக்கு வரி, வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, கிளி, புறா போன்ற உயிரினங்களுக்கு வரி, வீட்டிலிருக்கும் கம்பு தடி, ஏனைய உபகரணங்களுக்கு வரி, பனைமரம் ஏறும் தொழிலுக்கு வரி, பனைமரம் ஏறுவோர் தம் மார்பகத்தில் அணியும் தோல் கச்சைக்கு வரி, அரிவாள், படுப்பட மரத்திற்கு வரி, சான்றோர்களின் நிலத்தில் ஆலமரம் நின்றால் அதற்கு வரி, இப்படி எண்ணற்ற வரிகளைக் கலியரசன் விதித்தான்.
.
.
அகிலம்
========
வட்டிக்கும் ஆயம் வலங்கைசான் றோர்கருப்புக்
கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே
பாழிலே சான்றோர்க்குப் படுநீசன் கொள்ளுகின்ற
ஊழியங்க ளெல்லாம் உரைக்கக்கே ளன்போரே
பனைகேட் டடிப்பான் பதனீர்கேட் டேயடிப்பான்
கனத்த கற்கண்டு கருப்புக்கட்டிக் கேட்டடிப்பான்
நாருவட்டி யோலை நாள்தோறுங் கேட்டடிப்பான்
வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான்
நெடுமட்டைக் கேட்பான் நெட்டோலை தான்கேட்பான்
கொடுவா வெனவே கூழ்பதனீர் கேட்டடிப்பான்
சில்லுக் கருப்புக்கட்டி சீரகமிட்டே வூற்றிக்
கொல்லைதனில் சான்றோரைக் கொண்டுவா என்றடிப்பான்
மீச்சுக் கருப்புக்கட்டி மிளகுபல காரமிட்டு
வீச்சுடனே கொண்டு வீட்டில்வா வென்றடிப்பான்
வட்டிக் கருப்புக்கட்டி மணற்கருப்புக் கட்டியொடு
வெட்டக் கருப்புக்கட்டி வெண்கருப்புக் கட்டியொடு
தோண்டிக்கும் பாய்க்கும் சுமடதுக் குமோலை
வேண்டியதெல் லாமெடுத்து விரைவில்வா என்றடிப்பான்
காலைப் பதனீர் கண்முற்றா நொங்குகளும்
மாலைப் பதனீர் வற்றக்கா யும்பதனீர்
கொதிக்கும் பதனீர் கொண்டுவா என்றடிப்பான்
விதிக்குகந்த சான்றோர் விரைவாய்க் கொடுத்திடவே
இத்தனையும் வேண்டி இவன்கொண்டு போனாலும்
பத்தியுள்ள சான்றோர்க்குப் படுந்துயர மாறாதே
பனையிலுள்ள வஸ்து பலநாளு மிப்படியே
வினைகொண்ட பாவி வேண்டியவன் போனாலும்
சான்றோர்க்கு நன்மை சற்றுசெய்ய வேணுமென்று
மாண்டோர் கணீசன் மனதில்வைக்க மாட்டானே
உய்கொண்ட சான்றோர் உடம்புருகுந் தேட்டையெல்லாம்
நொய்கொண்ட நீசன் நோகப் பறித்தானே
.
விளக்கம்
==========
சான்றோர்களின் வீட்டில் இருக்கும் பனை ஓலையிலான பெட்டிகளுக்கும், கருப்புக்கட்டி முதலான தின்பண்டங்களுக்கும் வரி விதித்து வசூலிக்கும் அதிகாரிகள் மற்றும் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தும் மேட்டுக்குடியினர்களெல்லாம் தமக்கு வீடு கட்டுவதற்குத் தேவையான பனைமரங்களை வெட்டி வகைப்படியாக்கிக் கொண்டுவா என்று சான்றோர்களை அடித்து துன்புறுத்தி ஆனையிடுவார்கள்.
.
தம் குடும்பத்திற்குத் தேவையான பதனீரை அன்றாடம் கொண்டு தர வேண்டும் என்று கட்டளையிடும்போதே கம்பு தடிகளால் அடிப்பார்கள். பனங்கற்கண்டு, நாருப்பெட்டி, நுங்கு, தோட்டங்களை வேலிியிட்டு வைப்பதற்கான நீளமான பனை மட்டை, அதற்கான ஓலை காய்ச்சிய சில்லுக் கருப்புக்கட்டி, சுக்கு, மிளகு சீரகமிட்டுக் காய்ச்சி சின்னதாய் ஊற்றிய மீச்சுக் கருப்புக்கட்டி, பெரிய பெரிய ஓலைப்பெட்டிகளில் ஊற்றிய கருப்புக்கட்டி பானையில் ஊற்றிப் பக்குவப்படுத்தப்பட்ட சரல் கருப்புக்கட்டி, வெட்டக் கருப்புக்கட்டி, வெண்ணிறத்திலான பழங்கருப்புக் கட்டி, தோண்டி செய்வதற்கும், பாய் முடைவதற்குமான ஓலை முதலானவற்றையெல்லாம் உடனே கொண்டுவா என்று உத்தரவிடும்போதே அடிப்பான்.
.
அதுமட்டுமல்ல, காலைப் பதனீரோடு கண்முற்றா நுங்குகளும் மாலைப் பதனீரும், வற்றக் காய்த்த பதனீரும் கொண்டு வா என்று கோபத்தோடு அடிப்பான். நீசக் குலத்தோரின் நெட்டூரமான இத்தனை விதிகளுக்கும் உட்பட்டு, அடிபணிந்து வாழ்ந்த சான்றோர்கள், சற்றேனும் தாமதமின்றி வகை வகையாக அந்த அநியாயப் பாவிகளின் வீட்டுக் கொல்லைப்புறம் வழியாகக் கொண்டு கொடுத்தார்கள்.
.
இப்படி அந்த நீசர்கள் கேட்பதையெல்லாம் கொண்டு கொடுத்தபோதிலும், இறைவன் மீது பற்றுள்ள சான்றோர்கள் படும் துயரம் மாறவில்லை. தன் பனையிலுள்ள பொருட்களை எல்லாம் நீண்ட நெடுநாள்களாகக் கொண்டு சென்று கொடுத்த போதிலும், அந்தக் கொடுங்கலியர்கள் சான்றோர்களுக்குச் சிறிய அளவு நன்மை கூட செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. என்றாலும் தம் உடம்பு உருக்கும்படியாக வருத்திப் பாடுபட்டு சம்பாதித்த செல்வங்களையெல்லாம் அந்தப் பாதகர்கள் உறிந்து உறிந்து உண்டனர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 17.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
காவலாய் நீரிருந்து காட்டிக்கொடுத் தீரேயென்று
கோபித்தான் சான்றோரைக் கூறழியப் பேசியவன்
சாபித்தான் சான்றோர்க்குச் சத்தியில் லாநீசன்
என்குடும்பத் தோர்கள் இராச்சியத்தை யாளுமட்டும்
உன்குடும்பத் தோர்கள் ஊழியங்கள் செய்துமிக
அழுந்தப்படு வாரெனவும் அந்நீசன் சான்றோர்க்கு
விழுந்த மொழியாய் விரைந்துரைத்தா னேநீசன்
சொல்லியந்த நீசன் சோர்ந்திறந்தா னவன்றன்
வல்லி யுடன்பிறந்த மகன்தேசம் ஆண்டிருந்தான்
நீசனுட சாபம் நீணிலத்தில் சான்றோர்க்கு
மாய வலையாய் வளைந்ததுகா ணன்போரே
.
விளக்கம்
==========
என்னுடைய மெய்க்காபாளர்களாக இருந்துகொண்டே என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டீர்களே, என் சாவுக்குக் காரணமாகிவிட்டீர்களே என்று மன்னனின் மனம் தகித்தது. கடலில் உறுதி இல்லாத நிலையில் உண்மை புரியாமல் தவித்தது. உனவே, என்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்த நாட்டை ஆளுகின்ற காலம் வரை, உன்னுடைய இனத்தவர்கள், மிகக் கேவலமான ஊழியங்கள் செய்து, மனம் குமுறும்படியாகத் துன்பப்படுத்துவார்கள் என்று சாபமிட்டுக்கொண்டு மன்னன் உயிர் துறந்தான்.
.
மன்னன் உயிர் துறந்த மறு கணமே, மன்னனின் சகோதரியின் மகன் அந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசு புரிந்தான். சான்றோரைப் பழி வாங்க வேண்டும் என்று நீண்ட காலமாக வஞ்சங் கொண்டிருந்த வஞ்சகர்கள் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் மன்னனிடம் சான்றோருக்கு எதிராக சூதுரைகளைப் போதித்தனர். இறந்துபோன மன்னன் இறுதிக் காலத்தில் இட்ட சாபத்தை நிறைவேற்றும்படி நினைவூட்டினர்.
.
மன்னனும் அதற்கு இசைந்தான். சான்றோருக்குத் தீங்கு விளைவிக்கும் பற்பல கொடிய சட்டங்களைப் பிறப்பித்தான். வெற்றிக்கு வித்தாக, விவேகத்தின் சொத்தாக, நன்றியின் இருப்பிடமாய், தியாகத்தின் உறைவிடமாய், பொறுமையின் புகலிடமாய் வாழ்ந்து வந்த சான்றோர்கள் சகல வகையிலும் புறக்கணிக்கப்பட்டார்கள். வரிக் கொடுமை அவர்களை வாட்டி வதைத்தது. கூலியில்லா வேலை அவர்களைக் கொடுமைப் படுத்தின. மொத்தத்தில் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்தனர் என்றாலும் இவர்களின் நிழல் பட்டாலே தீட்டு என்ற நிலை உருவாயிற்று.
.
.
அகிலம்
========
சான்றோர்கள் அனுபவிக்கும் துன்பங்களை மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் தெரிவித்தல் :
==========================================================================
தேவ ரதையறிந்து திருமா லிடமேகி
மேவலர்கள் வந்து விளம்பினா ரப்போது
மாயவரே எங்கள் வழியில்வாழ் சான்றோர்க்குப்
பாவிநீ சன்சபித்த பழிசாபங் கேட்டீரோ
சாபத்துல்ப மெல்லாம் தானுரைத்தா ரச்சுதற்குத்
தாமத் திருமேனி தானுரைப்பார் தேவருக்கு
மன்னதியத் தேவர்களே வாய்த்தபுகழ் சான்றோர்க்கு
அந்நீசன் சாபம் அதுவுங் குறிதான்காண்
வம்புள்ள நீசன் வழக்கெல்லா மேற்பதற்கு
அன்புள்ள சான்றோர்க்கு அவனிட்ட சாபமது
எத்தனை குற்றம் இவர்செய்து போட்டாலும்
அத்தனையும் நீசன் அவனேற்கக் காரியந்தான்
நல்லதுகாண் தேவர்களே நாடுஞ்சான் றோர்களுக்குத்
தொல்லைவந்தா லுந்தீர தொகைவைத்த லக்குமுண்டு
சோழனுக்குச் சான்றோர் செய்தநன்றி மெத்தவுண்டு
வேழமிட் டிருப்பேரை வெட்டினான் பாரறிய
நீசனுக்குச் சான்றோர் நித்திரைக ளில்லாமல்
வாசல்நடை காத்ததற்கோ வலுதுயரச் சாபமிட்டான்
எல்லா மறிவார் ஈசர்முதல் லோகம்வரை
வல்லாண் மையான வாயத்ததே வாதிகளே
நாமென்ன செய்வோம் நாட்டில்விதி வந்ததற்குப்
போமென்னத் தேவருக்குப் பெரியோன் விடைகொடுத்து
மாயவரு மங்கே மனஞ்சடைத்துத் தானிருந்தார்
.
விளக்கம்
==========
கலிநீச மன்னின் சாபத்தால் சான்றோர்களுக்கு அநியாயமாக ஏற்பட்ட அவலங்களை அறிந்த தேவர்களெல்லாம் மகாவிஷ்ணுவை நாடிச்சென்று, சுவாமி, பூலோகத்தில் எங்கள் வம்சா வழிகளான சான்றோர்களுக்கு, காரணமே இல்லாமல் கலிநீசன் சபித்த சாபத்தைப் பற்றி அறிந்தீர்களா? என்று வினவியவாறே நடந்தேறிய உண்மைச் சம்பவங்களையும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் எடுத்துரைத்தார்கள்.
.
தேவர்கள் உரைத்த செய்தியை அறிந்த மகாவிஷ்ணு, மேன்மை மிகுந்த தேவர்களே, புகழ் வாய்ந்த சான்றோர்களுக்கு அந்தக் கலிநீசனிட்ட சாபமானது கலி அழிவதற்கோர் அறிகுறி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வம்பான அந்தக் கலியன் தன்னுடைய அழிவிற்கு என்ன காரணம் என்று எதிர்வாதம் செய்தால் அவன் ஏதுமறியா சான்றோருக்கு இட்ட இந்தச் சாபம் சாட்சியாக வந்து நிற்கும்.
.
சான்றோர்கள் ஒருவேளை குற்றமே செய்திருந்தால் கூட, அத்தனை குற்றங்களையும் சகித்துக் கொள்ள வேண்டிய அளவிற்கு கலிநீசனுக்குச் சான்றோர் நன்மை புரிந்திருக்கிறார்கள். ஆனால் எது நடந்தாலும் அது நன்மைக்கே நடந்துள்ளது. என்மீது எப்போதும் நாட்டமாக இருக்கும் சான்றோர்களுக்கு எத்தனை துன்பங்களை கலிநீசன் கொடுத்தாலும், அந்தத் துன்பங்கள் அடியோடு அகலுவதற்கான காலமும் வழிவகைகளும் உண்டு.
.
தேவர்களே சான்றோர்கள் சோழ மன்னனுக்குச் செய்த உதவிகள் அளவில் அடங்காது. அப்படியிருந்தும், சான்றோர்களுக்கு நன்றிக்கடன் செய்யவேண்டிய சோழன் நன்றி மறந்தவனாய், இந்த உலகம் அறியும்படியாக, சான்றோரில் இரண்டுபேரின் தலையை யானைக்காலால் இடறச் செய்து கொன்றான்.
.
அதுபோல், இந்த கலியரசனுக்காக ஊண், உறக்கமில்லாமல், கலியரசனின் எதிரிகளின் மூச்சு கூட கற்றோடு கலந்து, அந்த மாநீசனின் மாளிகைக்குள் புகுந்துவிடா வண்ணம் கடமை உணர்வோடு, மெய்க் காப்பாளர்களாக அவனுடைய வாசல் நடை காத்துவந்த சான்றோருக்கு விதி வயத்தால் செத்தொழியும் நேரத்தில் வேந்தன் அந்தக் கலிநீசன் கடுமையாக சாபமிட்டிருக்கிறான்.
.
சான்றோரின் நிலையையும், சாபத்தின் செயலையும் ஈசனும் உணர்வார். இவ்வுலக மக்களும் அறிவர். இந்த கலியுகத்திற்கு இப்படியோர் விதி வந்துள்ளதே என்று தான் நாம் நம்மை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டுமே அல்லாமல் என்ன செய்ய முடியும். வல்லமையும் வாய்மையும் ஒருங்கே அமைந்துள்ள உத்தமமான தேவாதிகளே நீங்களெல்லாரும் உங்கள் உறைவிடத்திற்குச் செல்லுங்கள் என்று தேவர்களையெல்லாம் ஆறுதல் கூறி அனுப்பிவைத்த மகாவிஷ்ணு மனச்சுமையோடு இருந்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 16.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
மெய்க் காப்பாளர்களாகச் சான்றறோர்.
=====================
வைக்கும் பொழுதில் மாயவரைத் தானோக்கிச்
செய்க்கும் பெரிய திருமாலே யென்றனக்குக்
கைக்குள்ளே ஏவல் கருத்தாகச் செய்வதற்கு
மெய்க்குணம்போ லுள்ள விதமான சாதியொன்று
வருவித்து என்றனுட மணிவாசல் காத்திருக்கத்
தருவித்து நல்ல சாதியொன் றென்றுரைத்தான்
அப்போது மாயன் அதற்கேது சொல்லலுற்றார்
இப்போது உன்றனக்கு ஏவல் தொழில்கள்செய்ய
ஆகின்ற பேரை அழைத்துக்கோ என்றுரைத்தார்
வேகுன்ற நீசன் விளம்புவா னமைச்சருடன்
ஆரைக் கொடுவரலாம் அருகில்விட்டு வேலைசெய்ய
ஏரையொத்த மந்திரியே இயம்பு மெனக்கேட்டான்
அப்போது மந்திரிகள் அந்நீசனுக் குரைப்பார்
இப்போது வேறொருவர் இருந்தாலா காதெனவே
நல்லவகை யான நாடுஞ்சான் றோர்களைத்தான்
வல்லவகை யாலும் வருவித்து வைப்பீரால்
ஆகுமந்தச் சாதியென்று அந்நீசனுக் குரைத்தார்
வேகும் பொழுதில் வெற்றிசான் றோர்களுக்கு
ஆள்விட்டு வருத்தி அதிக நிதிகொடுத்து
வாள்கொடுத்து ஆயுத பாணி மிகக்கொடுத்துப்
பட்டயமுங் கொடுத்துப் பாரயிறை கூலிவிட்டுச்
சட்டைக்குல் லாகொடுத்துத் தலைப்பா மிகக்கொடுத்து
வாசல் மணிமேடை வகையாகக் காரெனவே
வாசமொழிக் கலியன் மாய்கையால் சான்றோர்கள்
ஊழி விதியால் உடையோனை நெஞ்சில்வைத்துக்
காளி வளர்த்த கண்மணிகள் காத்திருந்தார்
.
விளக்கம்
==========
இப்படி நாட்டு மக்களுக்குக் கேடு விளைவிக்கும் பல திட்டங்களை வகுத்து வைத்த கலிநீசன், மகாவிஷ்ணுவை நினைத்து எல்லா வகையான வெற்றிகளுக்கும் வித்தகனாகத் திகழுகின்ற திருமாலே, என்னுடைய உத்தரவுகளை மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்டு, எனக்கு விசுவாசமாக உழைக்கின்ற சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட வம்மிசத்தார் யாரேனும் இருந்தால் அவர்களை என்னுடைய மாளிகையைக் காவல்புரிவதற்கு வருவித்து தந்தருளும் என்று வேண்டினான்.
.
அப்போது அவனுக்குத் தரிசனம் கொடுத்த மகாவிஷ்ணு, மன்னவனே இப்போது உனக்கு ஏவல் புரிவதற்கு ஏற்றவர்களை நீயே அழைத்துக்கொள் என்று அருளினார். உடனே அந்த நீசன், தன் அமைச்சர்களை அழைத்து, கலப்பை நிலத்தைப் பண்படுத்துவதுபோல் அரசுக்குப் பண்பான ஆலோசனைகளை வழங்கிப் பண்படுத்தும் அமைச்சர்களே, எனக்கு மெய்க் காப்பாளர்களாக யாரை நேமிக்கலாம் என்று கூறுங்கள் என்றான்.
.
உடனே அமைச்சர்கள் அனைவரும் சேர்ந்து, மன்னவா, இது பகைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கும் நேரம். எனவே, இப்பணிக்கு ஏனோதானோ என்று யாரையும் நேமித்துவிடலாகாது. ஆகவே, எப்பொழுதும் நல்லவற்றையே நாடுகின்ற சான்றோர்களே இந்த வேலைக்கு ஏற்புடையவர்கள். அவர்களை எப்படியாவது வருவித்து இந்த வேலையைக் கொடுத்தால் அவர்கள் தங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று அமைச்சர்கள் கலிநீசனிடம் சொன்னார்கள்.
.
அமைச்சர்களி்ன் ஆலோசனைக்கு உட்பட்ட நீசன் உடனே ஆள் அனுப்பி சான்றோர்களை வருவித்து பெருமளவில் சம்பளம் கொடுத்து, உடைவாள் முதலான ஆயுதங்களையும் அதிக அளவில் கொடுத்து, சிறப்பான பட்டயமும் கொடுத்து அவர்கள் அது காலம் வரை அரசாங்கத்திற்குச் செலுத்திக் கொண்டிருந்த வரி முதலியவற்றையும் ரத்து செய்து, சான்றோரே இன்று முதல் என்னுடைய அரச மணிமேடைக்கு மெய்க் காவலர்களாக முறையாக வாசலில் காவல்புரியுங்கள் என்றான்.
.
வசியமொழி பேசுங் கலியனின் மாயசால வார்த்தைகளால் மனம் உருகிய சான்றோர்கள் இதுவும் நம்முடைய தலைவிதிதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டு, இறைவனை நினைத்தவண்ணம் காளி வளர்த்த கண்மளிகள் கலிநீசனின் மணியரங்கைக் காத்து வந்தனர்.
.
.
அகிலம்
========
கலிநீசன் மரணமும் சான்றோருக்கு சாபமும்
அப்படியே காத்திருந்து அவர்வருகும் வேளையிலே
முப்படியே வந்த முழுக்கலியன் தோசமதால்
அந்தநீ சன்தனக்கு அழிவுவரும் வேளையிலே
இந்தச் சான்றோர்கள் இவர்தூக்கம் வைத்திடவே
நீசனுட வம்மிசத்தோர் நேரக்கூறே யறிந்து
வாசமிட்டு நீசனையும் வதைத்தாரே யவ்வினத்தோர்
சீவன்போ கும்வேளைச் செப்புவான் சாபமொன்று
.
விளக்கம்
=========
மகாளி வளர்த்த மக்கள், மன்னனின் மணியரங்கைக் கண் துயிலாமல் காத்து வந்தனர். சான்றோர்களின் கடமை உணர்வும், சான்றோர்களிடம் மன்னன் வைத்திருந்த மகத்தான நம்பிக்கையும் மன்னனின் உறவினர் மற்றும் குலத்தினரின் கண்களை உறுத்தியது. எனவே மெய்க்காப்பாளர்களாக இருக்கும் சான்றோர்களின் மீது ஏதேனும் ஓர் பெரும்பழியைச் சுமத்த வேண்டும் எனக் கங்கணங் கட்டிக் காத்திருந்தனர்.
.
முப்பிறவிப் பயனால் அம்மன்னன் அகால மரணம் அடைய வேண்டிய விதியும் இருந்தது. அதற்கான வேளையும் வந்தது. கடமை தவறாத மெய்க்காப்பாளர்களான சான்றோரின் கண்களை நித்திராதேவி முத்தமிட்டாள். எனவே சான்றோர்கள் தம்முடைய கடமை நழுவி தூக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டு ஆழ்ந்த நித்திரையில் மூழ்கினர்.
.
இத்தருணம், காத்திருந்த கலிநீச மன்னின் குலத்தவருக்கு ஏதுவாகிவிட்டது. சான்றோர்கள் அணிந்திருந்த ஆடைபோன்று தாமும் ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு, மன்னனின் உறவினர் சிலர் மன்னன் நித்திரை செய்து கொண்டிருக்கும் மணியரங்கினுள் நுழைந்து மன்னனை உடைவாளால் வெட்டினர். வெட்டுண்ட மன்னன் வேதனையால் துடித்தான். சீவன் போகும் வேளையில், தன் மரணத்திற்குக் காரணம் சான்றோர்தான் என்று நினைத்தான். சாபத்தினை விதைத்தான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 15.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
இப்படியே வைத்த இவன்வேத மானதுக்குள்
அப்படியே மற்றோரை அகப்படுத்த வேணுமென்று
பணமா னதைக்கொடுத்துப் பகட்டினான் மானிடரைச்
சிணமாக மானிடவர் சேர்ந்தா ரவன்வேதமதில்
இப்படியே வேதமொன்று இவன்பலத்தா லுண்டாக்கி
அப்படியே தானிருக்க அவனேது தானினைப்பான்
ஆணுவங்கள் சேனை ஆயுதங் கள்வெகுவாய்
வாணுவங்கள் ரெம்ப வம்மிசத்தோ ரெம்பரெம்ப
படையாலு மற்றொருவர் பணத்தாலும் நம்மையுந்தான்
தடைசெய்து நம்மைத் தடுப்பவரா ரென்றுசொல்லி
ஆரா ரெதிரியென்று அவன்பார்த் திருக்கையிலே
பூராய மாயொருவன் போதித்தா னவன்றனக்குச்
சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும்
வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த
தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே
வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே
வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில்
பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன்
மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து
குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே
சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும்
வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால்
அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து
இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே
ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு
மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல்
மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை
ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே
சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று
அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு
வந்தானே யந்த மாநீசன் தன்பேரில்
.
விளக்கம்
==========
இப்படி அந்த வெண்ணீசன் ஏற்படுத்திய வேதங்களை எல்லாம் மக்கள் மறுப்பு தெரிவிக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பணத்தையும், ஏனைய பொருட்களையும் கொடுத்துப் பெருமளவு மக்களைத் தன் வயமாக்கிக் கொண்டான். மக்களும் மிகவும் எளிதாக அவனுடைய செயல்பாடுகளுக்கு உடன்பட்டனர். இவ்வணமாக வெண்ணீசனுடைய சக்தியினாலும், யுக்தியினாலும் வேதம் ஒன்றை உருவாக்கிவிட்டான்.
இந்நிலையில் அந்த வெண்ணீசனுக்குப் படைகளும், ஆயுதங்களும் ஏனய செல்வங்களும் பெருகின. வகை தொகையில்லாத அளவில் வம்சா விருத்தியும் பெற்றிருந்தான். எனவே தம்முடைய திட்டங்களை எதிர்ப்பதற்கோ, தடை செய்வதற்கோ, எவர் ஒருவராலும் முடியாது. அதற்கான படை பலமும், பணபலமும் எவரிடமும் இல்லை என்ற ஆணவம் அவனிடம் குடி கொண்டது.
.
இப்படித் தனக்கு நிகர் யாருமில்லை என்ற மமதையில் அவன் இருக்கும்போது, பாரதபூமியின் தென்புலத்தின் பூர்வீகத்தை பற்றி ஆராய்ந்து அறிந்த, விசித்திரமான விருப்பமுடைய ஒரு விஷமி அந்த வெண்ணீசனை அணுகிச் சொல்கிறான். செந்துரையே, பாரத நாட்டின் தென்புலத்தில் சோழன், சேரன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் வலிமை வாய்ந்த முடி மன்னர்களாக ஐம்பத்தாறு தேசங்களும் வியக்கத்தக்க நிலையில் ஆட்சிபுரிந்து வந்தனர்.
.
அப்பொழுது, தாசி குலத்தில் பிறந்த அடியவள் ஒருத்தி பிறை போன்ற கண்களுடன் மிக அழகாக இருந்தாள். அவளுடைய வயிற்றில் சொற்களால் விளக்க முடியாத வகையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் பிறந்ததே மாயச் செயலாகத் தான் இருக்க முடியும்.
.
அவன் பிறந்து வளர்ந்து குடுமி வளர்ந்து வாலிப பருவமாய் இருந்து கொண்டிருக்கும் பொது, அன்றொரு காலத்தில் காளி இட்ட சாபத்தின்படி இம்மூன்று நாட்டையும் ஆள்வதற்கு ஒரே சமயத்தில் முறைப்படியான வாரிசு இல்லாமல் ஆகி விட்டது. எனவே, அந்த மூன்று நாட்டையும் அந்தத் தாசி பெற்ற மகன் கைப்பற்றிற ஆண்டு கொண்டிருக்கிறான்.
.
அதைப்பற்றி கேட்க, மானமும் வீரமும் உள்ள மனிதர்கள் யாரும் முன்வரவில்லை. இப்படி எதிர்ப்பே இல்லாத காரணத்தால் தன்னுடைய மாய சக்தியினால் அந்த தாசியின் மகன் மூவேந்தர்களின் நாட்டையும் சேர்த்து நியாயமில்லாமல் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே, இத்தருணத்தில் நாம் அங்குப் படையெடுத்துச் சென்றால் அந்த மூன்று நாட்டையும் நமது வசமாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறினான். இதைக்கேட்ட வெண்ணீசன் வெகுண்டெழுந்து, படைதிரட்டிப் பயணித்தான்.
.
.
அகிலம்
========
வெண்நீசன் படையெடுத்து வந்து தோல்வியுறல்
====================================================
செந்தார மாயன் சேனை வருவதையும்
அறிந்தே நீசன்தனக்கு அச்சுதருஞ் சொல்லலுற்றார்
வெறிந்தமுள்ள நீசன் வேண்டும் படைகூட்டி
நசுறாணி யான நல்லவெண் ணீசனுக்குத்
துசுவான மாநீசன் திருமாலின் தன்னருளால்
எற்றுக் கொடாமல் இவன்வெற்றி கொண்டனனே
மற்றுமந்த நீசன் மாறியவன் போயிருந்தான்
அப்போது அந்த அன்னீத மாநீசன்
இப்போது படையை யாம்வெற்றி கொண்டோமென்று
கோட்டைபின்னு மிட்டுக் கொடிய விருதுகட்டித்
தாட்டிமையா யுலகில் சட்டமது வைத்தனனே
.
விளக்கம்
==========
வெள்ளை நீசன் படையெடுத்து வருகிறான் என்பதை உணர்ந்த மகாவிஷ்ணு அச்செய்தியை கலி நீசனுக்கு அறிவித்தார். அததால் தன்னைச் சுதாரித்துக்கொண்ட கலிநீசன், மிக ஆவேசமாகத் தன் படைகளையெல்லாம் திரட்டி, நசுறாணி எனப்படும் வெள்ளை நீசனின் படைகளை எப்படி வெற்றி கொண்டான் என்பதை யாரும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத அளவில் போர் புரிந்து, மகாவிஷ்ணுவின் அருளால் வெற்றி வாகை சூடினான்.
.
இந்த வெற்றியே அந்தக் கலிநீசனை இன்னும் கொடியவனாக்கி. இப்பொழுது எதிரியின் படையை நாம் வெற்றி கொண்டுவிட்டோம் என்ற ஆணவத்தோடு, இன்னும் பல கோட்டை மதில்களைக் கட்டி அந்தக் கோட்டையில் தாம் வெற்றி பெற்றதற்கான அடையாளக் கொடியைப் பறக்கவிட்டதோடு, அகந்தையின் உச்சக் கட்டமாக அநியாயமான பல சட்டங்களை நாட்டு மக்கள் மீது திணித்து வைத்தான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 13.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
அப்போது நாராயணர் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது உனக்கு இங்கிருந் தால்மதலை
கிட்டாது காசிதனில் கீர்ந்த நதிக்கரையில்
திட்ட முடன்தவசு செய்யப்போ யங்கிருந்தால்
மதலையுட துயரம் மாறுங்கா ணுன்றனக்குப்
பதலைமொழி நீசனுக்குப் பகர்ந்தார்கா ணம்மானை
.
விளக்கம்
==========
கலிவயப்பட்ட மன்னனின் நிலைகண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, அந்த மன்னனின் கனவில் தோனிறி, மன்னா, இப்போது இங்கே இருந்தால் உனக்கு குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, நீ காசியிலுள்ள புனிதமான நதிக்கரையில் அமர்ந்திருந்து கடுமையாகத் தவம் செய்யவேண்டும். அப்படித் தவம் செய்தால்தான் உனக்குக் குழந்தை இல்லை என்ற கவலை தீரும் என்றும் உபதேசித்தார்.
.
.
அகிலம்
========
கலிநீசன் குழந்தை வேண்டி தவமிருத்தல்
============================================
கேட்டந்த நீசன் கெட்டிதா னென்றுசொல்லி
நாட்டுக்குச் சீட்டெழுதி நருட்களையுந் தான்வருத்திப்
போனானே நீசன் புகழ்பெரிய காசிதனில்
சேனா பதிகள் திக்கெங்குஞ் சூழ்ந்துநிற்க
நீசன் தவசு நிற்க வொருமறையோன்
வாசக் குழலோடு மருவினன்கா ணம்மானை
கண்டந்த நீசன் காமம் பொறுக்காமல்
தண்டுமீ றிக்காமம் சலத்தில் விழுந்ததுவே
இரைநமக் கென்று எட்டியொரு கொக்காவி
விரைவாய் விழுங்க மிகுத்தகர்ப்ப முண்டாகித்
தண்ணீரில் பிள்ளை தான்பெற்று தம்மானை
வெண்ணிற மான மிகுத்தபிள்ளை தான்மிதந்து
போகும் பொழுதில் புனலரிஷி மாமுனிவன்
தாப முடன்சிசுவை தானெடுத்தா னம்மானை
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணுவின் போதனையால் மனம் மகிழ்ந்த மாநீசன், இதுவுமோர் நன்மைக்கே என நினைத்து, தன்னுடைய நாட்டு மக்களுக்கெல்லாம் அழைப்பு ஓலை அனுப்பி, அனைவரையும் வருவித்து, அவர்களிடமெல்லாம் தாம் தவமிருக்கச் செல்லும் செய்தியைச் சொல்லி விடைபெற்று, புனிதப் பயணமாகக் காசிக்குப் பயணித்து, அங்கேயுள்ள புனித நதிக்கரையில் சேனாதிபதிகள் அடங்கிய படைப்பரிவாரங்களின் பாதுகாப்போடு தவம் மேற்கொண்டான்.
.
அவன் தவம் இருந்துகொண்டிருக்கும் இடத்திற்கு எதிரில் இருந்த ஓர் ஆசரமத்தில் தங்கியிருந்த வேதியன் ஒருவன், தன் மனைவியுடன் இல்லற இன்பத்தில் ஈடுபட்டிருந்ததை, குழந்தை வேண்டித் தவத்தில் அமர்ந்திருக்கும் நீசன் கண்டு நிலை தடுமாறினான். அந்த நீசனின் உடலில் ஊடுருவிய காமம் அவனுடைய நீண்ட தவத்தை நிலைகுலையச் செய்தது. எனவே, அவனுடைய விந்து கலிதமாகி அந்த புனித நதி நீரில் விழுந்தது.
.
அந்த நதிக்கரையில், தனக்கு இரை வேண்டிக் காத்திருந்த ஒரு கொக்கு, கலிநீசனின் விந்துவை இரை எனக் கருதி அவ்விந்துவை விரைவாக எடுத்து விழுங்கியது. அதனால் அந்தக் கொக்கு கர்ப்பமாகி உடனே தன் குழந்தையைத் தண்ணீரில் பெற்றது.
.
கொக்கு பெற்ற அந்த மனிதக் குழந்தை, வெண்மை நிறமுடையதாய் ஆற்றில் மிதந்து வந்து கொண்டிருப்பதை, அங்கே ஆசிரமம் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த புனல் ரிஷி கண்டெடுத்தார்.
.
.
அகிலம்
========
கொக்கு பெற்ற பிள்ளையை புனல் ரிஷி வளர்த்தல்.
=====================
மதலை தனையெடுத்து வளர்த்துப் பருவமதில்
குதலை தனையாற்றில் குளியோட நீச்சலதும்
தோணியே றுந்தொழிலும் சுருக்குக்கப் பலேற்தொழிலும்
ஆணிப்பொன் முத்து அதுவளருந் தலமும்
வெள்ளித் தலமும் மிகுத்தபொன் னுத்தலமும்
உள்ளவித்தை யான உற்றரச வாதமுதல்
கள்ள உபாயக் கபடுபலத் தந்திரமும்
வெள்ளை நீசன்தனக்கு விதமா யவர்வருத்திச்
செங்கோ மட்டியெனத் தேசநசு ராணிகளில்
பெண்கள் ரண்டுபேரைப் பேறாய் மணமகித்து
இருத்தினான் மாமுனிவன் ஏற்றசெங் கோமட்டியில்
.
விளக்கம்
=========
புனல் ரிஷி நதியில் கண்டெடுத்த அந்த வெள்ளைக் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்தார். அந்தக் குழந்தையின் பாலிய பருவத்திலேயே நீச்சல் கற்றுக் கொடுத்தது மற்றுமின்றி தோணி, பாய்மரக் கப்பல்களில் பயணிக்கும் தொழில்களையும் கற்றுக் கொடுத்தார்.
.
அத்துடன், இரும்பு, பொன், முத்து, வெள்ளி போன்ற வஸ்துக்கள் கிடைக்கும் இடங்களை அறியும் வித்தைகளையும், இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை முதல், கள்ளம், கபடு, தந்திரங்கள் ஆகிய தீய பல வித்தைகளையும் விதவிதமாய் அந்த வெண்ணீசனுக்குக் கற்றுக் கொடுத்து, செங்கோமட்டி என்னும் நாட்டில் நகராணி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை அந்த வெண்ணீசனுக்கு மணமுடித்து, செங்கோமட்டி நாட்டிலே குடியமர்த்தினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚












