திருவண்ணாமலை மாவட்டம் கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 56) மற்றும் அவரது மனைவி சுலோச்சனா (55) ஆகியோர், சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையே, சுலோச்சனாவுக்கு வேதநாயகம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இந்தத் தொடர்பை பற்றி அறிந்த கணவர் ராஜா, தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதன் காரணமாக, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு, குடும்பத்தில் அமைதி குலைந்து வந்தது.
இந்தச் சூழலில், நேற்று மாலை ராஜா, சொந்த ஊர் செல்வதற்காக போரூர் சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தத்தில் தனது மனைவிக்காக காத்திருந்தார். அப்போது, அவரது மனைவி சுலோச்சனா, தனது கள்ளக்காதலன் வேதநாயகம் மற்றும் அவரது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக சென்றுள்ளார்.
கள்ளக்காதலனுடன் மனைவியை பார்த்த ராஜா கடும் ஆத்திரமடைந்தார். பின்னர், ஓடிச்சென்று தனது பையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து, மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இந்தத் தாக்குதலில் சுலோச்சனாவின் மண்டை உடைந்து, அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, சுலோச்சனாவுடன் வந்த வேதநாயகம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ராஜாவை சரமாரியாக தாக்கியதில், அவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, கணவன் – மனைவி இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வானகரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போரூர் சுங்கச்சாவடி போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #🔴இன்றைய முக்கிய செய்திகள்